மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

ஒழுக்கமே உரைகல், ஒழுக்கத்தின் உயர்நிலை
நபிமொழி விளக்கம் * மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா, அக்டோபர் 16-31, 2024


ஒழுக்கமே உரைகல்


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் எவர் ஒழுக்கத்திலும் நடத்தையிலும் சிறந்தவரோ அவரே எனக்கு மிகவும் விருப்பமானவர்’.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி)
நூல் : புகாரி


ஜாபிர்(ரலி) அவர்களின் அறிவிப்பாக திர்மிதியில் பதிவாகியிருக்கின்ற இன்னொரு நபிமொழியில், ‘உங்களில் ஒழுக்கத்திலும் நடத்தையிலும் சிறந்தவர்கள்தாம் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள். மறுமையில் அவர்களின் இருப்பிடங்கள்தாம் எனக்கு மிகவும் அருகில் இருக்கும். உங்களில் அதிகமாக வாய்ப்பந்தல் போடுகின்றவர்களும், உள்ளார்ந்த தன்மை இல்லாமல் நாவன்மையுடன் பேசுகின்றவர்களும், பாசாங்குடன் நடந்து கொள்கின்ற பெருமைக்காரர்களும்தாம் என்னுடைய கோபத்திற்குரியவர்கள். மறுமையிலும் இவர்கள்தாம் என்னை விட்டு மற்றெல்லோரையும் விட வெகுதொலைவில் இருப்பார்கள்’ என்கிற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.


மனிதன் உண்மையில் ஓர் ஒழுக்கப் படைப்பாக இருக்கின்றான். அவன் நல்லவனா, கெட்டவனா என்பதை வரையறுக்கின்ற உரைகல் அவனுடைய ஒழுக்கம் தான். ஒழுக்கத்தில் சிறந்தவர்களாய், உயர்ந்தவர்களாய் இருப்பவர்களுக்கே அண்ணல் நபிகளாரின் நெருக்கமும் நேசமும் அன்பும் கிடைக்கும். அண்ணல் நபிகளாரின் நெருக்கமும், அன்பும் ஒருவருக்குக் கிடைத்துவிடுகின்றது எனில் அதனை விட சிறப்புக்குரியது வேறு என்னவாக இருக்க முடியும்? வெற்றிக்கான மிகப் பெரும் அடையாளமும் அதுதான் என்பதிலும் இருவேறு கருத்துகளுக்கு இடம் இல்லை.

ஒழுக்கத்தின் உயர்நிலை

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இரவு முழுவதும் (இறைவனுக்கு முன்னால்) நிற்பவர்கள், எல்லா நாள்களிலும் பகலில் நோன்பு நோற்பவர்கள் ஆகியோருக்கு இணையான தகுதிநிலையையும் சிறப்பையும் ஒரு நம்பிக்கையாளன் தன்னுடைய நன்னடத்தை மூலம் அடைந்து விடுகிறான்.’

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா(ரலி)
நூல் : அபூதாவூத்

நன்னடத்தை எந்த அளவுக்கு மிகவும் விரும்பத்தக்க பண்பு எனில் அதனை மேற்கொள்வதன் மூலம் ஏராளமான குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். இன்னும் சொல்லப்போனால் இரவுகளை வழிபாடுகளில் கழித்தும் பகற்பொழுதுகளில் நோன்பு நோற்றும் பேணுதலுடன் வாழும் வணக்கசாலிக்கு இணையான சிறப்பு நன்னடத்தையுள்ள நம்பிக்கையாளனுக்குக் கிடைத்து விடுகிறது.

நன்னடத்தையுள்ள நம்பிக்கையாளன் உண்மையில் எந்த நேரமும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து, வழிபடுகிற நிலையிலேயே இருப்பவனாவான். அவனுடைய உளத்தூய்மையும் ஆன்ம சுத்தியும் அவனுடைய மேன்மை மிகுந்த இயல்பும் எல்லா நேரமும் அவனை ஓர் உயர்ந்த ஆன்மிக அந்தஸ்திலும், ஒழுக்கத்திலும் நடத்தையிலும் மிக உயர்வான நிலையிலுமே பிணைத்து வைத்திருக்கும்.

நபிமொழி விளக்கம் * மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்