ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் முஸ்லிம்களாகவும், நம்பிக்கையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும், வாய்மையாளர்களாகவும், பொறுமையுடை
யோராகவும்,57 அல்லாஹ்வின் முன்னிலையில் பணிபவர்களாகவும்,58 தானதர்மம் செய்பவர்களாகவும்,59 நோன்பு நோற்பவர்களாகவும்,60 தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாப்பவர்களாகவும்61 இன்னும் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருபவர்களாகவும்62 இருக்கின்றார்களோ, திண்ணமாக, அவர்களுக்காக அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான்.
· அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் · திருவசனம் : 35
57. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிய நேரிய வழியில் நடக்கின்ற போதும், இறைவனின் மார்க்கத்தை நிலைநாட்டுகின்ற போதும் எத்தனை, எத்தனை சிரமங்கள் வந்தாலும், என்னென்ன ஆபத்துகள் சூழ்ந்தாலும், எப்படிப்பட்ட சிரமங்களைச் சந்திக்க நேர்ந்தாலும், எத்தகைய இழப்புகளுக்கு ஆளானாலும் அவர்கள் சத்தியப் பாதையில் உறுதியாக நிலைத்து நின்றவாறு அவையெல்லாவற்றையும் தீரத்துடன் எதிர்கொள்வார்கள். எந்தவொரு பயத்தாலும், எப்படிப்பட்ட பேராசையாலும், மனத்தில் குபுகுபுவென கிளம்பி வருகின்ற இச்சைகளின் எந்தவொரு இழுப்பாலும் கூட சத்தியப் பாதையிலிருந்து அவர்களை அப்புறப்படுத்திவிட முடியாது.
58. பெருமை, கர்வம், அகங்காரம், ஆணவம் ஆகிய அனைத்தை விட்டும் அப்பாற்பட்டவர்களாக அவர்கள் இருப்பார்கள். தாம் இறைவனின் அடிமையாக இருக்கின்றோம்; இறைவனுக்கு அடிமைப்பட்டு இருத்தலைத் தாண்டி அதற்கு மேலான எந்தöவாரு தகுதியும் தமக்கு இல்லை என்பதைப் பற்றிய முழுமையான விழிப்பு உணர்வை அவர்கள் தங்களின் நெஞ்சங்களில் பசுமையாக வைத்திருக்கின்றார்கள். இதனால் அவர்களின் உள்ளமும் உடலும் அல்லாஹ்வுக்கு முன்னால் எந்நேரமும் பணிந்தும் குனிந்தும்தாம் இருக்கின்றன. இறைவனைப் பற்றிய அச்சம்தான் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவர்களின் இதயங்களை ஆக்கிரமித்திருக்கும். இறைவனைப் பற்றிய அச்சமில்லாமலும் தன்னுடைய பெருமையாலும் ஆணவத்தாலும் கர்வத்தாலும் உந்தப்பட்டு ஆட்டம் போடுகின்ற மனிதர்களின் நடத்தையையும் அணுகுமுறையையும் அவர்களிடம் மருந்துக்கும் பார்க்க முடியாது. ஒன்றன் பின் ஒன்றாக பண்புகள் விவரிக்கப்படுகின்ற வரிசையைக் கருத்தில் கொள்வோமேயானால் இறைவனை மையமாகக் கொண்ட வாழ்வின் மலர்ச்சிகளை விவரித்த கையோடு இங்கு குறிப்பிடப்படுகின்ற ‘பணிவு’ அல்லாஹ்வின் முன்னிலையில் பணிந்து நடக்கிற பண்பு தொழுகையைத்தான் குறிக்கின்றது எனலாம். ஏனெனில், இதன் பிறகுதான் தானங்கள், நோன்பு ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.
59. ஃபர்ளான ஜகாத் தொகையைக் கொடுப்பது மட்டுமின்றி அதற்கும் மேலாக பொதுவான தானதர்மங்களும் இதில் அடங்கும். அதாவது அவர்கள் அல்லாஹ்வின் வழியில் திறந்த மனத்துடன் தாராளமாக செலவிடுபவர்களாக இருக்கின்றார்கள். அல்லாஹ்வின் அடியார்களுக்கு உதவி செய்வதில் தம்மால் இயன்ற இறுதி எல்லை வரை செல்வதில் அவர்கள் இம்மியளவுகூட தயக்கம் காட்டுவதில்லை. குறை வைப்பதில்லை. அவர்கள் வாழ்கின்ற பகுதிகளில்
எந்தவொரு அநாதையும், எந்தவொரு ஏழையும், எந்தவொரு நோயாளியும், எந்தவொரு பலவீனமõன, தேவையுள்ளவரும், துன்பத்தில் சிக்கியவரும் ஒருபோதும் ஆதரவின்றித் தவிப்பதில்லை. அது மட்டுமல்ல அல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்கான தேவை வருகின்ற போது அவர்கள் தம்முடைய செல்வத்தைத் தண்ணீராக வாரி இறைத்து விடத் தயங்குவதில்லை; ஒருபோதும் அந்த விஷயத்தில் கஞ்சத்தனத்துடனோ சிக்கனமாகவோ நடந்துகொள்வதில்லை.
60. இதில் ஃபர்ளான நோன்புகள், நஃபிலான நோன்புகள் ஆகிய இரண்டுமே அடங்கும்.
61. இதற்கு இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். இரண்டும் இங்கே பொருந்தும். முதலாவதாக, அவர்கள் தகாத உறவிலிருந்து முற்றிலும் விலகி இருக்கின்றார்கள். இரண்டாவதாக அவர்கள் நிர்வாணத்திலிருந்தும் தம்மைக் காப்பாற்றிக் கொள்கின்றார்கள். இங்கே இன்னொன்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். நிர்வாணம் என்பது ஒரு மனிதர் ஆடை எதுவும் இல்லாமல் திரிவது மட்டுமன்று. அதற்கும் மேலாக, உடலின் ஏற்ற இறக்கங்களையும் நெளிவு சுழிவுகளை அப்படியே அப்பட்டமாக உணர்த்துகின்ற, உடல் வாட்டத்தையும் அமைப்பையும் எடுப்பாக வெளிப்படுத்துகின்ற மெல்லிய, உடலோடு ஒட்டிய, இறுக்கமான ஆடைகளை அணிவதும் நிர்வாணத்தில் அடங்கும்.
62. அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்வதன் பொருள் என்னவெனில் மனிதனின் நாவில் வாழ்வின் எந்தவொரு விவகாரத்தின்போதும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எல்லா நேரங்களிலும் ஏதேனுமோர் வகையில் இறைவனின் பெயர் வந்துகொண்டே இருப்பதாகும்.
இந்த இயல்பும் தன்மையும் ஒருவருக்கு அவருடைய மனத்தில் இறைவனின் நினைப்பும் எண்ணமும் அழுத்தமாகவும் நிலையாகவும் பதியாத வரை உருவாகாது. மனிதனின் விழிப்பு உணர்வையும் (Conscious mind) தாண்டி அவனுடைய ஆழ்மனத்திலும் (Sub Conscious mind) நனவிலி நிலையிலும் (Un-Conscious mind) கூட இந்த நினைப்பும் எண்ண மும் ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிந்துவிடுகின்ற போது அவன் எதனைச் செய்தாலும் என்ன செய்தாலும் அவனுடைய சிந்தையிலும் சொல்லிலும் அல்லாஹ்வின் பெயரும் தவறாமல் இடம் பெற்றுவிடுகின்றது.
அவன் உணவு உண்ண அமர்ந்தாலும் அல்லாஹ்வின் பெயரைச் சொல்வான்; சாப்பிட்டு முடித்த பிறகு அல்லாஹ்வின் புகழை ஓங்கி முழங்குவான். உறங்கும் போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தே உறங்கத் தொடங்குவான். விழித்து எழுந்ததுமே அல்லாஹ்வின் பெயரைச் சொல்லியே எழுவான். அவன் பேசும் போதும் உரையாடும் போதும் அவனுடைய நாவிலிருந்து பிஸ்மில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், இன்ஷா அல்லாஹ், மாஷா அல்லாஹ் போன்றவையும் அவை போன்ற இறைநினைவு வாசகங்களும் சரளமாக வெளியாகிக் கொண்டே இருக்கும். தன்னுடைய ஒவ்வொரு விவகாரத்திலும் அவன் அல்லாஹ்வின் உதவியைக் கேட்டுக்கொண்டே இருப்பான். சின்னச் சின்ன வெற்றிகளின் போதும் பெரும் பெரும் சாதனைகளின்போதும் எல்லாச் சந்தர்ப்பங்களி லும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவாறு இருப்பான். ஆபத்துகள் எந்த வடிவில் வந்தாலும் அல்லாஹ்வின் அருளை யாசித்தவாறு இருப்பான். சிரமங்களின் போது அல்லாஹ்வின் பக்கமே திரும்புவான். தீமைகள் அவன் முன்னால் நடனம் ஆடுகின்ற போதும் சுண்டியிழுக்கின்ற போதும் அல்லாஹ்வை நினைத்தே அஞ்சி அகல்வான்.
பிழைகள் நிகழ்ந்துவிடுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்விடமே பாவமன்னிப்புக் கோருவான். எந்தப் பிரச்னையை எதிர்கொள்ள நேரிட்டாலும் என்னமாதிரியான தேவை பேருருவம் எடுத்தாலும் அல்லாஹ்விடமே முறையிடுவான். சுருங்கச் சொல்ல வேண்டுமெனில் அவன் நடக்கும்போதும் அமரும் போதும் உலக விவகாரங்களில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கின்ற போதும் எங்கேயும் எப்போதும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவனுடைய நாவிலிருந்து அல்லாஹ்வை நினைவுகூர்கின்ற வாசகங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கும். உண்மையில் சொல்லப் போனால் இதுதான் இஸ்லாமிய வாழ்வின் உயிர்நாடி ஆகும்.மற்ற வழிபாடுகள் அனைத்துமே ஏதேனுமோர் குறிப்பிட்ட நாளோடும் நேரத்தோடும் பிணைந்தவையாய் இருக்கின்றனன. அந்த நேரத்தில் அவற்றை நிறைவேற்றி முடித்த கையோடு மனிதனின் வேலை முடிந்து விடுகின்றது. ஆனால் இதுவோ எத்தகைய வழிபாடு எனில் இது எல்லா நேரங்களிலும் எல்லா வேளைகளிலும் நீடிக்கின்ற வழிபாடாகும். மனிதனின் இந்த நிலையான இறைத் தொடர்பும் உறவும்தான் அவனை அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழ்வதோடு பிணைத்து வைக்கின்றது.
இன்னும் சொல்லப் போனால் மற்ற வழிபாடுகளும் மார்க்கத்தின் பிற பணிகள் அனைத்தும்கூட இறைநினைவால்தான் மனிதனின் இதயம் குறிப்பிட்ட அறங்களை மேற்கொள்கின்ற நிமிடங்களில் மட்டுமே இறைவனை நினைக்கக்கூடியவையாய் இருக்கõமல், அதனையும் தாண்டி எங்கும் எப்போதும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இறைவனின் பக்கம் மீளக் கூடியவையாய், அவனுடைய நினைவால் நிலையாய் நிறைந்திருப்பவையாய் இருந்தால்தான் உயிர் பெறுகின்றன. இந்தப் பக்குவம் ஒருவருக்குக் கிடைக்கிற போது அவருடைய வாழ்வில் வழிபாடுகளும் மார்க்கப் பணிகளும் ஒரு செடி தனக்கு எல்லா வகைகளிலும் சாதகமான, இணக்கமான பருவச் சூழல்களையும் மண் வளத்தையும் கொண்ட இடத்தில் செழிப்பாக வளர்வதைப் போல சிறப்பாகவும் செம்மையாகவும் அமைந்துவிடுகின்றன.
அதற்கு நேர்மாறாக இந்த நிலையான இறைநினைவு இல்லாமல், வெறுமனே குறிப்பிட்ட நேரங்களிலும் காலங்களிலும் மட்டுமே இறைவனின் பக்கம் மீளும் வகையில் வழிபாடுகளும் மார்க்கப் பணிகளும் நிறைவேற்றப்படும் போது அந்த வழிபாடுகளும் மார்க்கப் பணிகளும் தனக்கு சாதகமாகவோ, இணக்கமாகவோ இல்லாத இடத்தில், மாறுபட்ட பருவச் சூழலுக்கும் மண் வளத்துக்கும் இடையில் தோட்டக்காரனின் தனிக் கவனத்தின் காரணமாகவே தாக்குப் பிடித்து வளர்கின்ற செடிகளைப் போன்றதாய் அமைந்துவிடுகின்றன. இதே கருத்தை அன்பு நபிகளாரும் தம்முடைய அமுதவாக்கு ஒன்றில் பின்வருமாறு தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்:
முஆத் பின் அனஸ் ஜஹ்னி(ரலி) அறிவிக்கின்றார்: ஒரு மனிதர் நபிகளாரிடம் வினவினார்: ‘இறைவனின் தூதரே! ஜிஹாத் செய்பவர்களில் மற்றெல்லாரை விடவும் மிக அதிகமாக நற்கூலியைப் பெறுபவர் யார்?’ நபிகளார்(ஸல்) விடையளித்தார்கள்: ‘அவர்களில் அல்லாஹ்வை மிக அதிகமாக நினைவுகூர்பவர்.’. அந்த மனிதர் தொடர்ந்து கேட்டார்: ‘இறைவனின் தூதரே! நோன்பாளிகளில் மற்றெல்லாரை விடவும் மிக அதிகமாக நற்கூலியைப் பெறுபவர் யார்?’. நபிகளார் (ஸல்) விடையளித்தார்கள்: ‘அவர்களில் அல்லாஹ்வை மிக அதிகமாக நினைவுகூர்பவர்’. தொடர்ந்து அந்த மனிதர் இதே போன்று தொழுகை, ஹஜ், தானதர்மம் போன்றவற்றை நிறைவேற்றுபவர்கள் குறித்தும் வினவினார். ஒவ்வொரு முறையும் நபி(ஸல்) அவர்கள் ‘அவர்களில் அல்லாஹ்வை மிக அதிகமாக நினைவுகூர்பவர்’ என்றே பதிலளித்தார்கள். (முஸ்னத் அஹ்மத்)
(தொடரும்)