மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

ஏலத்திற்கான அனுமதி
நபிமொழி விளக்கம் * மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா, நவம்பர் 1- 15, 2024



நபி(ஸல்) அவர்கள் (விரித்துப் படுப்பதற்கான) ஒரு போர்வையையும் ஒரு குவளையையும் பின்வருமாறு விற்பனை செய்தார்கள்; நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இந்த விரிப்பையும் குவளையையும் விலை கொடுத்து வாங்குபவர் யார்?’.

ஒருவர் எழுந்து சொன்னார்: ‘நான் இதனை ஒரு திர்ஹம் கொடுத்து வாங்கத் தயார்’. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இவற்றை ஒரு திர்ஹமுக்கும் அதிகமாக விலை கொடுப்பவர் யார்?’. ஒருவர் நபிகளாரிடம் இரண்டு திர்ஹங்கள் கொடுத்தார். நபிகளார்(ஸல்) அவ்விரண்டு பொருள்களையும் அவரிடம் விற்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ்(ரலி) நூல் : திர்மிதி, அபூதாவூத், இப்னு மாஜா


ஏலம் செய்து பொருள்களை விற்கின்ற வழிமுறையைக் கையாண்டு விற்றலிலும் வாங்கலிலும் ஈடுபடுவது கூடும் என்பது இந்த நபிமொழியிலிருந்து தெரிகின்றது.

நபி(ஸல்) அவர்கள் ஏலத்தின் மூலமாக இரண்டு பொருள்களை விற்ற இந்த நிகழ்வு பற்றிய கூடுதல் விவரங்கள் சுனன் அபூதாவூத், சுனன் இப்னு மாஜா ஆகிய நபிமொழித் தொகுப்பு நூல்களிலும் பதிவாகியிருக்கின்றன. அவற்றைப் பற்றிய விவரம் வருமாறு:

ஒரு ஏழை அன்சாரித் தோழர் நபிகளாரிடம் வந்து உதவி கேட்கின்றார். ‘உம்முடைய வீட்டில் பொருட்கள் ஏதேனும் இருக்கின்றனவா?’ என நபிகளார்(ஸல்) அந்தத் தோழரிடம் கேட்டார்கள். தம்மிடம் விரிப்பு ஒன்றும் குவளை ஒன்றும் இருப்பதாக அந்தத் தோழர் பதிலளித்தார். அவ்விரண்டையும் கொண்டு வருமாறு நபி(ஸல்) அவர்கள் அந்தத் தோழருக்கு உத்தரவிட்டார்கள்.

பிறகு அவ்விரண்டு பொருள்களையும் நபிகளார்(ஸல்) ஏலமிட்டார்கள். ஏலம் இடுகின்ற போது மன் யஸீத் (இதை விட அதிகமான விலை கொடுப்பவர் யார்?) என இரண்டு மூன்று முறை சொன்ன போது இன்னொரு தோழர் எழுந்து நபிகளாரிடம் இரண்டு திர்ஹம்களைக் கொடுத்தார்.

நபி(ஸல்) அவர்கள் அந்த அன்சாரித் தோழரிடம் அந்த இரண்டு திர்ஹம்களைக் கொடுத்து ஒரு திர்ஹமில் உம் குடும்பத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கிச்சென்று குடும்பத்தாருக்குக் கொடுத்துவிடும். இன்னொரு திர்ஹமில் கோடாலி ஒன்றை வாங்கிக் கொண்டு வாரும் என்று சொன்னார்கள்.

அந்தத் தோழர் கோடாலியைக் கொண்டுவந்தபோது நபி(ஸல்) அவர்கள் தமது புனிதமான கைகளால் அதனை மரக்கட்டை ஒன்றில் பொருத்தினார்கள். பிறகு அந்தக் கோடாலியை அந்தத் தோழரிடம் கொடுத்து இந்தக் கோடாலியை எடுத்துக்கொண்டு காட்டுக்குச் செல்லும். அங்கு விறகு வெட்டி அவற்றை விற்று விடும். பதினைந்து நாள்கள் வரை என்னை வந்து சந்திக்கக்கூடாது.அந்தத் தோழரும் அவ்வாறே நடந்துகொண்டார். எதுவரையெனில் அவரிடம் பத்து திர்ஹம்கள் சேர்ந்துவிட்டன. அதனைக் கொண்டு அவர் தமது குடும்பத்தாருக்காக துணிமணிகள், உணவு தானியங்கள் போன்றவற்றை வாங்கினார்.

அதன் பிறகு நபிகளாரிடம் வந்தார் அவர். நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ‘மக்களிடம் கையேந்தித் திரிவதை விட்டும், அவ்வாறு கையேந்துவதன் காரணமாக மறுமையில் உம்முடைய முகத்தில் அதற்கான வடுவும் அடையாளமும் இடப்படுவதை விட்டும் உழைத்துப் பொருளீட்டுகின்ற இந்த வழிமுறை சிறப்பானது.’

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்