மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

அஞ்சுவதற்குத் தகுதியானவன் அவனே!
மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : கூ. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், நவம்பர் 16- 30, 2024



ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் முஸ்லிம்களாகவும், நம்பிக்கையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும், வாய்மையாளர்களாகவும், பொறுமையுடையோராகவும், அல்லாஹ்வின் முன்னிலையில் பணிபவர்களாகவும், தானதர்மம் செய்பவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாப்பவர்களாகவும் இன்னும் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருபவர்களாகவும் இருக்கின்றார்களோ, திண்ணமாக, அவர்களுக்காக அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான்.63

64 அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஏதேனும் ஒரு விவகாரத்தில் தீர்ப்பளித்துவிட்டால், பிறகு அந்த விவகாரத்தில் சுயமாகத் தீர்ப்பளிக்கும் அதிகாரம் இறைநம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும், இறைநம்பிக்கை கொண்டுள்ள எந்தப் பெண்ணுக்கும் கிடையாது. மேலும், எவன் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றானோ, அவன் வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்துவிட்டான்.65

மேலும் (நபியே!)66 அந்தச் சந்தர்ப்பத்தை நினைத்துப் பாரும்; எவர் மீது அல்லாஹ்வும் நீரும்உபகாரம் செய்திருந்தீர்களோ, அவரிடம் நீர் கூறிக்கொண்டிருந்தீர்; ‘உம்முடைய மனைவியைக் கைவிட்டு விடாதே! மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சு’. நீர் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உம்முடைய உள்ளத்தில் மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர். மேலும், நீர் மனிதர்களுக்கு அஞ்சிக் கொண்டிருந்தீர். ஆனால் அல்லாஹ் தான் நீர் அஞ்சுவதற்கு அதிகத் தகுதியுடையவன்! ஸைத் அவளுடைய விஷயத்தில் தம் நோக்கத்தை நிறைவேற்றிய பிறகு (மணவிலக்கு செய்யப்பட்ட) அவளை உமக்கு நாம் மணமுடித்து வைத்தோம் நம்பிக்கையாளர்களின் வளர்ப்பு மகன்கள் தம்முடைய மனைவியர் விஷயத்தில் தம் தேவையை நிறைவேற்றி விடும்போது (மணவிலக்கான) அப்பெண்களின் விவகாரத்தில் நம்பிக்கையாளர்க்கு எவ்வித இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக! மேலும், அல்லாஹ்வின் கட்டளையோ செயல்படுத்தப்பட வேண்டியதாகவே இருந்தது.

· அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் · திருவசனங்கள் : 35 - 37

63. இறைவனிடத்தில் உண்மையிலேயே மதிப்பும் மாண்பும் நிறைந்த பண்புகள் எவை என்பது குறித்து இந்த வசனத்தில் தெள்ளத்தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பண்புகள்தாம் இஸ்லாத்தின் அடிப்படையான மாண்புகள் (Basic Values) ஆகும். இவையனைத்தும் இந்த ஒற்றை வசனத்தில் இரத்தினச் சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இந்த மாண்புகளைப் பொறுத்தவரை ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. செயற்களத்தைப் பொறுத்தவரை திண்ணமாக இரு பாலினத்தாருக்கும் தனித்தனி களங்கள் உண்டு. வாழ்வின் சில துறைகளில் ஆண்கள் பாடுபட வேண்டியவர்களாய் இருக்கின்றார்கள் எனில், பெண்களும் வேறு சில துறைகளில் இயங்க வேண்டியவர்களாய் இருக்கின்றார்கள். இந்தப் பண்புகளும் மாண்புகளும் இரண்டு தரப்பினரிடமும் சரிசமமாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் அவ்விரு தரப்பினருக்கும் சமமான அந்தஸ்தும் அவர்களுக்குக் கிடைக்கின்ற நற் கூலியும் சரிசமமாக இருக்கும்.

அவர்களில் ஒரு தரப்பினர் அடுப்பையும் அம்மியையும் உரலையும் உலக்கையையும் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதாலும் இன்னொரு தரப்பினர் இந்த மண்ணில் இறைவனின் கலீஃபாவுக்குரிய பொறுப்பை ஏற்று ஷரீஅத் சட்டங்களை வகுக்கின்றார்கள் என்பதாலும் ஒரு தரப்பினர் வீட்டு வேலைகளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதாலும் இன்னொரு தரப்பினர் போர்க் களங்களுக்குச் சென்று இறைவனுக்காகவும் அவனுடைய மார்க்கத்துக்காகவும் இன்னுயிரைத் தருகின்றார்கள் என்பதாலும் அவ்விரு தரப்பினரின் அந்தஸ்திலும் அவர்களுக்குக் கிடைக்கப் போகின்ற நற்கூலியிலும் எந்த வேறுபாடும் ஒருபோதும் இருக்காது.

64. ஜைனப்(ரலி) அவர்களை நபிகளார்(ஸல்) மணமுடித்துக் கொண்டது தொடர்பாக அருளப்பட்ட வசனங்கள் இங்கிருந்து தொடங்குகின்றன.

65. இப்னு அப்பாஸ்(ரலி), முஜாஹித், கத்தாதா, இக்ரிமா, முகாதில் பின் ஹய்யான் ஆகியோரின் கூற்றுப்படி ஜைத்(ரலி) அவர்களை மணமுடித்துக் கொள்ளுமாறு அவர் சார்பாக ஜைனப்(ரலி) அவர்களுக்கு நபிகளார்(ஸல்) செய்தி அனுப்ப ஜைனப்(ரலி) அவர்களும் அவர்களின் உறவினர்களும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த போது இந்த வசனம் அருளப்பட்டது.

நபிகளாரின் இந்தச் செய்தியைக் கேட்டதும் ஜைனப்(ரலி) அவர்கள், ‘நான் அவரை விடச் சிறந்த வம்சத்தைச் சேர்ந்தவள்’ என்று சொல்லியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஜைனப்(ரலி) அவர்கள் பதிலளித்த போது ‘நான் அவரை எனக்காக விரும்பவில்லை. நான் குறைஷிகளின் கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவள்’ என்றும் சொன்னதாக இப்னு ஸஆத் அறிவிக்கின்றார். இதே போன்ற அதிருப்தியையும் விருப்பமின்மையையும் அவருடைய சகோதரர் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ்(ரலி) அவர்களும் வெளியிட்டிருந்தார். ஏனெனில் ஜைத்(ரலி) அவர்கள் நபிகளாரால் விடுதலை செய்யப்பட்ட அடிமையாக இருந்தார். ஜைனப்(ரலி) அவர்களோ நபிகளாரின் அத்தை (அதாவது உமைமா பின்து அப்துல் முத்தலிப்) அவர்களின் மகளார் ஆவார்.

இந்த அளவுக்குத் தனிச் சிறப்பும் உயர் அந்தஸ்தும் கொண்ட கோத்திரத்தைச் சேர்ந்த பெண்மணியாக ஜைனப்(ரலி) இருக்க, அதற்கும் மேலாக அவர் எவரோ அந்நியரும் அல்லர்; நபிகளாரின் சொந்த அத்தையின் மகளாக இருக்க, அவரைத் தம்மால் விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவருடன் மணமுடித்து வைப்பதற்காக நபிகளார்(ஸல்) தூது அனுப்பியிருக்கின்றார்களே என்பது தான் இவர்கள் அனைவருடைய கடுமையான ஆட்சேபமாக இருந்தது.
இந்த நிலையில்தான் இந்த வசனம் அருளப்பட்டது. இதனைக் கேட்டதும் ஜைனப்(ரலி) அவர்களும் அவர்களின் குடும்பத்தார் அனைவரும் எந்தவிதமான தயக்கமுமின்றி நபிகளாரின் ஆணைக்கு அடிபணிந்தார்கள். அதன் பிறகு நபிகளார்(ஸல்) அவ்விருவரின் நிக்காஹ்வை நடத்தி வைத்தார்கள். ஜைத்(ரலி) அவர்கள் சார்பாக நபிகளாரே பத்து தீனார்களையும் அறுபது திர்ஹம்களையும் மஹராக அளித்தார்கள். மணமக்களுக்கான ஆடைகளையும் அளித்தார்கள். மேலும் குடும்பம் நடத்துவதற்குத் தேவையான வீட்டுச் சாமான்களையும் உணவுப் பொருள்களையும் அனுப்பி வைத்தார்கள்.

இந்த வசனம் ஒரு விசேஷமான சந்தர்ப்பத்தில் அருளப்பட்டிருந்தாலும் கூட இந்த வசனத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ள சட்டம் இஸ்லாமிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையான விதியாக உள்ளது. ஒட்டுமொத்த இஸ்லாமிய வாழ்விலும் அது பொருந்துகின்றது. அதாவது ஏதேனுமோர் விவகாரத்தில் அல்லாஹ்வின் தரப்பிலிருந்தோ அல்லாஹ்வின் தூதரின் தரப்பிலிருந்தோ ஏதேனுமோர் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக நிறுவப்பட்ட
நிலையில், அந்த விவகாரத்தில் தம்முடைய சொந்தக் கருத்தின் படி நடப்பதற்கு எந்தவொரு முஸ்லிமுக்கும் சரி முஸ்லிம்களின் அரசாங்கத்துக்கும் சரி, முஸ்லிம்களின் நிறுவனம், நீதிமன்றம் அல்லது மக்களவை என எதுவானõலும் சரி எவருக்கும் எதற்கும் அதிகாரம் இருப்பதில்லை என்பதுதான் இந்த அடிப்படையான விதியின் சாரம் ஆகும்.

ஒருவர் முஸ்லிமாகிவிட்டார் எனில் அவர் இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் முன்னால் தம்முடைய சுய அதிகாரத்தை முற்றாகத் துறக்கின்றார் என்றுதான் பொருள். ஒரு தனிமனிதரோ ஒரு சமூகத்தாரோ முஸ்லிமாகவும் ஆகிவிடுகின்றார்கள், அதே சமயம் தமக்கென கொஞ்சம் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் செய்கின்றார்கள் எனில் அவை இரண்டுமே ஒன்றை யொன்று முறிக்கின்ற நடத்தைகளாகும்.இந்த நேர் முரணான இரண்டு விதமான போக்குகளையும் ஒருசேர மேற்கொள்வதை அறிவுள்ள எந்தவொரு மனிதரும் கற்பனை செய்தும் பார்க்க மாட்டார். ஒருவர் முஸ்லிமாக இருக்க வேண்டுமெனில் அவர் திண்ணமாக அல்லாஹ்வுக்கும் இறைத்தூதருக்கும் முன்னால் அடிபணிந்துதான் ஆக வேண்டும். எவரால் அப்படி பணிந்து போகவோ, அடிபணிந்து நடக்கவோ இயலாதோ அவர் தாம் முஸ்லிம் அல்லர் என்பதை ஏற்றுக்கொண்டாக வேண்டியிருக்கும். இந்த யதார்த்தத்தை அவர் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார் எனில், இல்லையில்லை நானும் முஸ்லிம்தான் என்று அவர் என்னதான் ஓங்கி முழங்கித் திரிந்தாலும் அல்லாஹ்வின் பார்வையிலும் படைப்புகளின் பார்வையிலும் அவர் நயவஞ்சகராகத் தான் அறிவிக்கப்படுவார்.

66. நபிகளாருடனான அன்னை ஜைனப்(ரலி) அவர்களின் திருமணம் நடந்து முடிந்திருக்க, அந்தத் திருமணத்துக்கு எதிராக நயவஞ்சகர்களும் யூதர்களும் இணை வைப்பாளர்களும் அவதூறு பரப்புரை புயலைக் கிளப்பிவிட்டிருந்த நேரத்தில் இங்கிருந்து வசன எண் 47 வரையிலான வசனங்கள் அருளப்பட்டன.எதிரிகளுக்கு    வேண்டுமென்றே வலிந்து நபிகளாரை அவமானப்படுத்துகிற ஒரே நோக்கத்துடனும், தம்முடைய வயிற்றெரிச்சலைத் தணித்துக் கொள்கிற விதத்திலும் பொய்களையும் புரட்டுகளையும் அவதூறுகளையும் வசைகளையும் மட்டுமே கொண்ட பரப்புரையை முடுக்கி விட்டிருந்த எதிரிகளுக்கு  உண்மை நிலையைத் தெளிவுபடுத்துகின்ற நோக்கத்துடன் இந்த அருளுரைகள் அருளப்படவில்லை.

அதற்கு மாறாக முஸ்லிம்களை அந்த அவதூறுப் பரப்புரையின் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதும், எதிரிகள் பரப்பியிருந்த பொய்களிலிருந்தும்  ஐயங்களிலிருந்தும் காப்பாற்றுவதும் தாம் உண்மையான நோக்கமாகும். இறைவனையே ஏற்க மறுப்பவர்களுக்கு இறைவனின் வாக்கு திருப்திப்படுத்தாது என்பது வெளிப்படை. அது இறைவாக்கு என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள்தாம் அதில் மனநிறைவு அடைவார்கள். எதிரிகள் கிளப்பிய ஆட்சேபங்களின் விளைவாக அந்த நல்லடியார்களின் இதயங்களில் ஐயமோ, அவர்களின் உள்ளங்களில் குழப்பமோ ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சம் அப்போது உருவாகி இருந்தது. இதனால் வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ் முதலில் இந்த விவகாரம் தொடர்பாக சாத்தியமான அத்துணை ஐயங்களையும்  தீர்த்துவிட்டான். அடுத்து இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் எத்தகைய அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றிய வழிகாட்டுதலை முஸ்லிம்களுக்கும் நபிகளாருக்கும் வழங்கிவிட்டான்.
(தொடரும்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்