மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

ஜைத்(ரலி) அவர்களுக்குச் செய்த உபகாரம் என்ன?
மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : கூ. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், 1 - 15 டிசம்பர் 2024


மேலும் (நபியே!) அந்தச் சந்தர்ப்பத்தை நினைத்துப் பாரும்; எவர் மீது அல்லாஹ்வும் நீரும் உபகாரம் செய் திருந்தீர்களோ, அவரிடம் நீர் கூறிக்கொண்டிருந்தீர்; 67 ‘உம்முடைய மனைவியைக் கைவிட்டு விடாதே! மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சு’. 68 நீர் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உம்முடைய உள்ளத்தில் மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர். மேலும், நீர் மனிதர்களுக்கு அஞ்சிக் கொண்டிருந்தீர். ஆனால் அல்லாஹ் தான் நீர் அஞ்சுவதற்கு அதிகத் தகுதியுடையவன்! ஸைத் அவளுடைய விஷயத்தில் தம் நோக்கத்தை நிறைவேற்றிய பிறகு (மணவிலக்கு செய் யப்பட்ட) அவளை உமக்கு நாம் மணமுடித்துவைத்தோம் நம்பிக்கையாளர்களின் வளர்ப்பு மகன்கள் தம்முடைய மனைவியர் விஷயத்தில் தம் தேவையை நிறைவேற்றி விடும்போது (மணவிலக்கான) அப்பெண்களின் விவகாரத்தில் நம்பிக்கையாளருக்கு எவ்வித இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக! மேலும், அல்லாஹ்வின் கட்டளையோ செயல்படுத்தப்பட வேண்டியதாகவே இருந்தது.


· அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் · திருவசனம் : 37


67. இது ஜைத்(ரலி) அவர்களைக் குறிக்கும். பிந்தைய வசனங்களில் இது தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஜைத்(ரலி) அவர்கள் மீது அல்லாஹ் செய் த உபகாரம் என்ன? நபிகளார்(ஸல்) அவர்கள் செய் த உபகாரம் என்ன? இதனைப் புரிந்துகொள்வதற்கு ஜைத்(ரலி) அவர்களின் வரலாறு தொடர்பான குறிப்புகளை இங்கே சுருக்கமாகப் பகிர்வது அவசியமாகின்றது. ஜைத்(ரலி) அவர்கள் கல்ப் கோத்திரத்தைச் சேர்ந்த ஹாரிஸா பின் ஷராஹில் அவர்களின் மகனார் ஆவார். அவருடைய தாயார் சுஃதா பின்த் தலபா அவர்கள் தை கோத்திரத்தின் கிளையான பனூ மஅன் கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

ஜைத் அவர்கள் எட்டு வயதுச் சிறுவனாக இருந்த காலத்தில் அவருடைய தாயார் அவரை தம்முடன் தம்முடைய தாய் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு பனூ கைன் பின் ஜஸ்ர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் கூடாரங்கள் மீது தாக்குதல் தொடுத்தார்கள். பொருள்களையும் உடைமைகளையும் கொள்ளையடித்தார்கள். இவ்வாறு கொள்ளையடித்துச் சென்ற போது அவர்கள் தம்முடன் பிடித்துக் கொண்டு போன மனிதர்களில் ஜைத்(ரலி) அவர்களும் இருந்தார். பிறகு அவர்கள் அவரை தாயிஃப் நகரத்துக்கு அருகில் ஒகாஸ் சந்தைக்குக் கொண்டு சென்று விற்றுவிட்டார்கள்.

அன்னை கதீஜா(ரலி) அவர்களின் சகோதரர் மகனான ஹகீம் பின் ஹிஸாம் தான் அவரை விலை கொடுத்து வாங்கினார். அவரை விலைக்கு வாங்கிய ஹகீம் மக்காவுக்கு அவரைக் கொண்டு வந்து தம்முடைய அத்தை கதீஜா பிராட்டியாருக்கு அன்பளிப்பாகத் தந்து விட்டார்.

நபிகளாருக்கும் கதீஜா அம்மையாருக்கும் திருமணம் நடக்க, நபிகளார்(ஸல்) கதீஜா(ரலி) அவர்களின் வீட்டில் ஜைத்(ரலி) அவர்களைப் பார்த்தார்கள். அந்தச் சிறுவரின் பழக்கவழக்கங்கள், பண்புகள் அனைத்தும் நபிகளாருக்கு எந்த அளவுக்குப் பிடித்துப் போயின எனில் அவரைத் தமக்குக் கொடுத்துவிடும்படி அன்னை கதீஜாவிடம் விண்ணப்பித்து விட்டார்கள்.

இவ்வாறாக இந்த நற்பேறு பெற்ற சிறுவர் ஒழுக்கத்தின் உன்னதத்தைக் கொண்ட ஆளுமையிடம் (இன்னும் சில ஆண்டுகளில் வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ் தன்னுடைய தூதராக அறிவித்த ஆளுமையிடம்) வந்து சேர்ந்து விட்டார். அந்த நேரத்தில் ஜைத்(ரலி) அவர்களின் வயது 15.

சிறிது காலத்துக்குள்ளாக ஜைத்(ரலி) அவர்களின் தந்தைக்கும் சிறிய தந்தைக்கும் ‘தம்முடைய பிள்ளை மக்காவில்தான் இருக்கின்றான்’ என்கிற விவரம் தெரிந்துவிட்டது. அவர்கள் இருவரும் அவரைத் தேடிக் கொண்டே நபிகளாரின் இல்லத்துக்கே வந்துவிட்டார்கள். ‘நீங்கள் என்ன இழப்பீட்டுத் தொகை வேண்டுமானாலும் கேளுங்கள். நாங்கள் கொடுப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். எங்களின் பிள்ளையை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள்’ என்று விண்ணப்பித்தார்கள்.

நபிகளார்(ஸல்) சொன்னார்கள்: ‘நான் அந்தப் பையனை இப்போதே அழைக்கின்றேன். உங்களுடன் போவதா, இங்கேயே தங்கி இருப்பதா என்பதை அவரே தீர்மானித்துக் கொள்ளட்டும். அவர் உங்களுடன் போக விரும்பினால் நான் உங்களிடமிருந்து இழப்பீட்டுத் தொகை எதையும் பெற மாட்டேன். அவரை அப்படியே உங்களுடன் அனுப்பிவிடுவேன். ஆனால் அவர் என்னுடன் இருக்க விரும்பினால் என்னிடம் இருக்க விரும்புகின்ற மனிதரை வலுக்கட்டாயமாகத் துரத்துகின்ற ஆள் நான் அல்லன்’இதனைக் கேட்ட அவ்விருவரும் சொன்னார்கள்: ‘நீங்கள் நீதி, நியாயத்துக்கும் அதிகமாக சிறப்பான யோசனையைச் சொல்லி இருக்கின்றீர்கள். பையனை இப்போதே வரச் சொல்லுங்கள்’.

நபிகளார்(ஸல்) ஜைத்(ரலி) அவர்களைக் கூப்பிட்டு அனுப்ப, அவர் வந்ததும், அவரிடம், ‘உங்களுக்கு இந்த இரண்டு பெரியவர்களும் யார் என்பது தெரியுமா?’ என்று வினவினார்கள்.‘நிச்சயமாக! இவர்களை நான் நன்றாக அறிவேன். இவர் என்னுடைய தந்தை ஆவார். இவர் என்னுடைய சிறிய தந்தை ஆவார்’.

நபிகளார்(ஸல்) சொன்னார்கள்: ‘சரி. நீர் அவர்களிருவரையும் அறிவீர்கள். என்னையும்  அறிவீர்கள்.  இப்போது உங்களுக்கு முழுமையான சுதந்திரம் அளிக்கின்றேன். நீர் விரும்பினால் அவர்களிருவருடன் இப்போதே கிளம்பிச் செல்லலாம். நீர் விரும்பினால் என்னுடன் இங்கேயே தங்கி இருக்கலாம்.’

ஜைத்(ரலி) பதிலளித்தார்: ‘உங்களை விட்டு விட்டு வேறு எங்கும் போவதற்கு எனக்கு விருப்பமில்லை’.

அவருடைய தந்தையும் சிறிய தந்தையும் அவரைப் பார்த்துச் சொன்னார்கள்: ‘ஜைத் என்ன இது? நீ சுதந்திரத்துக்குப் பதிலாக அடிமைத்தனத்துக்கா முன்னுரிமை தருகின்றாய் ? உம்முடைய அப்பா, அம்மா, உற்றார், உறவினர் என அனைவரையும் துறந்து விட்டு அந்நியர்களுடன் வாழவா விரும்புகின்றாய் ?’

ஜைத்(ரலி) உறுதியாகச் சொன்னார்: ‘இந்த மனிதரிடம் பார்த்துணர்ந்த பண்புகளையும் நடத்தையையும் அனுபவித்துவிட்ட பிறகு இனி உலகத்தில் வேறு எவருக்கும் என்னால் முன்னுரிமை அளிக்க முடியாது’.

ஜைத்(ரலி) அவர்களின் இந்த உறுதியான பதிலைக் கேட்டு அவருடைய தந்தை யாரும் சிறிய தந்தையாரும் மனமகிழ்வோடு அவருடைய பதிலை ஏற்றுக் கொண்டார்கள். நபிகளார்(ஸல்) அந்தக் கணமே ஜைத்(ரலி) அவர்களை விடுதலை செய் துவிட்டார்கள். மேலும் அவரை ஹரமுக்கு உடன் அழைத்துச் சென்று அங்கு திரண்டிருந்த மக்கள் திரளுக்கு முன்னால் உரத்து அறிவித் தார்கள்: ‘நீங்கள் எல்லோரும் சாட்சியாக இருங்கள். இன்று முதல் ஜைத்(ரலி) என்னுடைய மகனார் ஆவார் என்னுடைய வாரிசு. என்னிடமிருந்து சொத்தில் இவருக்கும் பங்கு உண்டு. எனக்கும் அவருடைய சொத்தில் பங்கு உண்டு’. இதனால்தான் மக்கள் அவரை ஜைத் பின் முஹம்மத்(ரலி) என்று அழைக்கத் தொடங்கினார்கள். இந்த நிகழ்வுகள் அனைத்தும் நபிகளார்(ஸல்) இறைவனால் இறைத்தூதராக  நியமிக்கப்படுவதற்கு (அதாவது, ‘வளர்ப்பு மகன்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்து அழையுங்கள்’ (33:5) என்ற வசனம் இறங்குவதற்கு) முன்பு நடந்தவையாகும்.

இதன் பிறகு நபிகளாருக்கு முதன் முதலாக வஹி அருளப்பட்டு நபிகளார்(ஸல்) மீது தூதுத்துவப் பொறுப்பு சுமத்தப்பட்ட போது ஒரே ஒரு கணம் கூட தாமதிக்காமல் நபிகளாரின் நபித்துவ அழைப்பை உடனுக்குடன் ஏற்றுக் கொண்டவர்கள் நால்வர். முதலாமவர் அன்னை கதீஜா(ரலி). இரண்டாமவர் ஜைத்(ரலி). மூன்றாமவர் அலீ (ரலி). நான்காமவர் அபூபக்கர் சித்தீக்(ரலி).


அந்த நேரத்தில் ஜைத் அவர்களுக்கு வயது 30. நபிகளாருக்கு அருகில் நபிகளாருக்கு சேவையாற்றியவாறு பதினைந்து ஆண்டுகள் கடந்திருந்தன. ஹிஜ்ரத்துக்குப் பிறகு ஹிஜ்ரி நான்காம் ஆண்டில் நபிகளார்(ஸல்) தம்முடைய அத்தை மகளார் ஜைனப்(ரலி) அவர்களுடன் ஜைத் அவர்களை மணமுடித்து வைத்தார்கள். தம் சார்பாக மஹரையும் தந்தார்கள். வீடு அமைப்பதற்காக தேவையான பொருள்களையும் வழங்கினார்கள். இவையெல்லாவற்றையும்  உணர்த்துகின்ற விதத்தில்தான் ‘எவர் மீது அல்லாஹ்வும் நீரும் உபகாரம் செய் திருந்தீர்களோ’ என்கிற இறைவாசகங்கள் அமைந்திருக்கின்றன.

68. ஜைத்(ரலி) அவர்களுக்கும் ஜைனப் (ரலி) அவர்களுக்கும் இடையிலான உறவு கசந்து மோதல் போக்கு முற்றிவிட்டிருந்த காலத்திய விஷயம்தான் இது. தம் மனைவி குறித்து மீண்டும் மீண்டும் புகார் கூறிய பிறகு இறுதியில் ‘நான் அவரை தலாக் செய் துவிடுகின்றேன்’ என்று நபிகளாரிடம் கூறியிருந்தார் ஜைத்(ரலி). இறைவனும் இறைத்தூதரும் இட்ட கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஜைனப்(ரலி) ஜைத்(ரலி) அவர் களை மணம் முடித்துக் கொண்டார்.

என்றாலும் அவரால் தம்முடைய மனத்திலிருந்து ஜைத்(ரலி) ஒரு விடுதலை செய் யப்பட்ட அடிமை; தங்களின் குடும்பத்தாரால் வளர்க்கப்பட்டவர்; நான் அரபுலகிலேயே மதிப்பும் மரியாதையும் கண்ணியமும் நிறைந்த கோத்திரத்து குலச் செல்வியாக இருந்த நிலையிலும் என்னை விடக் கீழான அந்தஸ்தைக் கொண்ட மனிதருக்கு வாழ்க்கைப்பட்டு விட்டேன் என்பன போன்ற சிந்தனைகளை முற்றாகக் களையவே முடியவில்லை.

இந்த எண்ணங்களின் காரணமாக அவர் குடும்ப வாழ்வில் ஜைத்(ரலி) அவர்களை தமக்குச் சமமானவராக நினைக்கவே இல்லை. இந்த ஒரே காரணத்தினால் கணவன் மனைவிக்கு இடையில் கசப்பு உணர்வுகள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. ஆண்டு ஒன்று முடிந்து சில மாதங்களுக்குள்ளாகவே விவகாரம் விவாகரத்து வரை போய் விட்டது.
(தொடரும்)

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்