மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

குத்தகைக்கு விடலாமா?
நபிமொழி விளக்கம் * மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா, 1 - 15 டிசம்பர் 2024


நான் தாவூஸ்(தாபயி) அவர்களிடம் ‘விளைச்சலில் ஒரு பகுதியைப் பெற்றுக் கொள்வது என்கிற அடிப்படையில் நிலத்தை குத்தகைக்கு விடுவதை நீங்கள் நிறுத்திவிடுவதே நல்லது. நிலங்களை குத்தகைக்கு விடுவதை அன்பு நபிகளார்(ஸல்) தடுத்துள்ளார்கள் என்றே மக்கள் நினைக்கின்றார்கள்’ என்றேன்.

அவர் சொன்னார்: ‘அம்ரே! நான் உழுது பயிரிடுவதற்காக மக்களுக்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுகின்றேன். அத்துடன் அவர்களுக்கு உதவவும் செய் கின்றேன். ஏனெனில், ‘நிலத்தைக் குத்தகைக்கு விடுவதையும் எடுப்பதையும் நபி(ஸல்) அவர்கள் தடுக்கவில்லை. மாறாக, உங்களில் ஒருவர் தன் நிலத்தைக் குத்தகைக்கு விட்டு, அதன் அடிப்படையில் குறிப்பிட்ட குத்தகைத் தொகையை வாங்கிக் கொள்வதை விட, தன் சகோதரனுக்கு (இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அதைக்)கொடுத்து விடுவது சிறந்ததாகும்’ என்றுதான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என பேரரறிஞரான இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம் சொல்லியிருக்கின்றார்’.

அறிவிப்பாளர் : அம்ரு பின் தீனார் தாபயி(ரலி) நூல் : புகாரி (2330)


நபித்தோழர்களின் காலத்திலும் தாபயீன்களின் காலத்திலும் சிலர் ‘நிலத்தைக் குத்தகைக்கு விடுவதும், குத்தகைப் பணத்தை வசூலிப்பதும் பொருத்தமானதன்று எனக் கருதி வந்திருக்கின்றார்கள் என்கிற விவரத்தை இந்த நபிமொழியிலிருந்து அறிந்துகொள்ளலாம். நபி(ஸல்) அவர்கள் அதனை முற்றாகத் தடை செய் யவில்லை. அதற்கு மாறாக, குத்தகைக்குக் கொடுப்பதைவிட இலவசமாகக் கொடுப்பதே சிறப்பானது என்பதுதான் நபி(ஸல்) அவர்களின் எண்ணமாக இருந்தது.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் விளக்கத்திற்குப் பிறகு தாவூஸ் அவர்கள் தம்முடைய நிலத்தைக் குத்தகைக்குக் கொடுத்து வந்தது மட்டுமல்லாமல் குத்தகைக்கு எடுத்தவர்களுக்கு உழவுக்கான செலவுகளையும் தாமே ஏற்று வந்தது மட்டுமின்றி பயிர் வளர்ப்பின் பல்வேறு நிலைகளில் பொருளுதவியும் செய் து வந்தார்.

அதே சமயம் நிலத்தின் எந்தப் பகுதியில் எந்த அளவுக்கு விளைச்சல் கிடைக்கும் என்பது எவருக்கும் தெரியாத நிலையில் குறிப்பிட்ட பகுதியின் விளைச்சல் உமக்கும் குறிப்பிட்ட பகுதியின் விளைச்சல் எமக்கும் சாரும் என விளைச்சலை முன்கூட்டியே பகிர்ந்து கொள்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய் திருக்கின்றார்கள்.

ராஃபி(ரலி) அறிவிக்கின்றார்: ‘அன்ஸார்களில் எங்களிடம் தான் அதிகமாக நிலங்கள் இருந்தன. இந்நிலையில் நாங்கள் நிலங்களைக் குத்தகைக்குக் கொடுத்து வந்தோம். நிலத்தின் இந்தப் பகுதியின் விளைச்சல் எங்களுக்குரியது; நிலத்தின் அந்தப் பகுதியின் விளைச்சல் உங்களுக்குரியது என்று முன்கூட்டியேப் பேசி தீர்மானித்துக் கொண்டதன் அடிப்படையில் குத்தகைக்குக் கொடுத்து வந்தோம். இவற்றில் ஒரு பகுதியில் விளைச்சல் அமோகமாகவும் மற்ற பகுதியில் விளைச்சல் இல்லாமலே போனதும் உண்டு.

நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு நிலப்பகுதியைக் கூறுபோட்டு விளைச்சலைப் பகிர்ந்து கொள்கின்ற வழிமுறையைத் தடை செய் தார்கள்’ (நூல் : புகாரி, ஹதீஸ் எண் 2332, முஸ்லிம் ஹதீஸ் எண் 3143)

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்