நபியே! 80 (சத்தியத்திற்காகச்) சாட்சியம் பகருபவராகவும், 81 நற்செய்தி அறிவிப்பவராகவும், அச்சமூட்டி, எச்சரிக்கை செய்பவராகவும், அல்லாஹ்வின் பக்கம் அவனுடைய அனுமதியுடன் அழைப்பு விடுப்பவராகவும், சுடர் வீசும் விளக்காகவும் நாம் உம்மை அனுப்பியிருக்கின்றோம்.
· அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் · திருவசனங்கள் : 45 - 46
80. முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறிய பிறகு இப்போது இறைவன் தன் தூதரை விளித்து இதயத்துக்கு இதமாக ஆறுதல் அளிக்கின்ற விதத்தில் சில வாக்குகளை அருளுகின்றான். நாம் உமக்கு எத்துணை பெரும் உயர்வான, மேன்மையான அந்தஸ்துகளை அளித்திருக்கின்றோம். இந்த எதிரிகள் என்னதான் அவதூறு பரப்புரை புயலைக் கிளப்பினாலும் அவற்றால் எந்த ஊறும் நேராத அளவுக்கு உம்முடைய ஆளுமை மிக உயர்ந்த தரத்தில் மேலோங்கி நிற்கின்றது.
எனவே அவர்களின் இந்த இழிவான செயல்களைப் பார்த்து வேதனை அடைய வேண்டாம்; அவர்களின் அவதூறு பரப்புரைக்கு இம்மியளவு கூட மதிப்பு அளிக்க வேண்டாம். உம்மீது விதிக்கப்பட்டுள்ள பதவிசார் பொறுப்புகளை நிறைவேற்றியவாறு முன்னேறிச் செல்லுங்கள். அவர்களை விட்டுவிடுங்கள்; வாயில் வந்ததைச் சொல்லிக் கொண்டிருக்கட்டும் என நபிகளாருக்கு ஆறுதல் அளித்துள்ளான்.
அத்துடன் ஒட்டுமொத்த மனிதர்களுக்கும் இறைநம்பிக்கையாளர்கள், இறைமறுப்பாளர்கள் அனைவரும் அடங்கிய ஒட்டு öமாத்த மனிதர்களுக்கும் ‘நீங்கள் ஏதோ சாதாரணமான மனிதரை எதிர்கொண்டிருப்பதாக நினைக்காதீர். அதற்கு மாறாக மகத்துவமும் மாண்பும் நிறைந்த இறைவன் மிகப் பெரும் ஆளுமையை மிக மிக உயர்வான அந்தஸ்தில் செழித்தோங்கச் செய்துள்ளான்’ என்று சொல்லப்பட்டது.
81. நபியை ‘சான்று பகர்பவராக ஆக்குவது’ என்பது விரிவான பொருளைக் கொண்டிருக்கின்றது. இதில் மூன்று விதமான சான்றுகள் அடங்கி இருக்கின்றன. முதலாவதாக சொல் சான்று. அதாவது அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படைகளாய் இருக்கின்ற உண்மைகளும் கொள்கைகளும் அனைத்தும் சத்தியமானவை என்பதற்கான சாட்சியாக நபி உயர்ந்து நிற்க வேண்டும்; மேலும் அவை மட்டுமே சத்தியமானவை; அவற்றைத் தவிர மற்றவை அனைத்தும் அசத்தியமானவை என ஓங்கி முழங்க வேண்டும். இறைவனின் இருப்பும், அவன் தனித்தவனாக, ஏகனாக இருப்பதும், வானவர்களின் இருப்பும், வஹீ அருளப்படுதலும், மரணத்துக்குப் பிறகு உயிர் கொடுத்து எழுப்பப்படுகின்ற யதார்த்தமும், சுவனமும் நரகமும்
வெளிப்படுவதும் உலகத்துக்கு என்னதான் விந்தையானவையாகத் தோன்றினாலும், இவற்றை எடுத்துரைப்பவர்களை இந்த உலகம் கேலி செய்தாலும், பைத்தியக்காரர் என ஒதுக்கினாலும், அவற்றைக் குறித்தெல்லாம்
நபி இம்மியளவுகூட கவலைப்படாமல் இவையெல்லாமே முழுக்க முழுக்க சத்தியமே என்றும் இவற்றை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் தாம் வழிகேடர்கள் என்றும் ஓங்கி முழங்க வேண்டும். இதே போன்று இறைவன் அவருக்கு அறிவித்த ஒழுக்கம், பண்பாடு, நாகரிகம் தொடர்பான மாண்புகள், கருத்தோட்டங்கள், விதிமுறைகள், கொள்கைகள் ஆகிய அனைத்தையும் உலகமே ஒருமித்து அவற்றை தவறானவை என உரத்துச் சொன்னாலும், அவற்றுக்கு எதிரானவற்றை அல்லும் பகலும் கடைப்பிடித்தாலும் கூட அவற்றை மக்களுக்கு முன்னால் வெளிப்படையாக எடுத்துரைப்பதும், மேலும் அவற்றுக்கு நேர்முரணானவையாய் உலகில் நடைமுறையில் இருக்கக்கூடிய கருத்தோட்டங்கள், வழிமுறைகள் அனைத்தையும் முழுக்க முழுக்க தவறு என்று கண்டிப்பதும் கூட நபியின் வேலையாகும்.
இதே போன்று இறைவனின் ஷரீஅத்தில் என்னவெல்லாம் ஹலாலானதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றதோ ஒட்டுமொத்த உலகமே ஒன்றுதிரண்டு அதனை ஹராமானதாக நினைத்தாலும் சரியே அதனையெல்லாம் ஹலாலானதாக ஆகுமானதாக ஓங்கி அறிவிப்பதும், இறைவனின் ஷரீஅத்தில் ஹராமானதாக அறிவிக்கப்பட்டிருப்பதை ஒட்டுமொத்த உலகமே ஒன்றுதிரண்டு அதனை ஹலாலானதாக ஆகுமானதாக ஆக்கிக் கொண்டாலும் சரியே அதனை ஹராம் தான் என்று ஓங்கி முழங்குவதும் நபியின் வேலையாகும்.
இரண்டாவதாக, செயல்சான்று. அதாவது நபி தாம் எந்த வாழ்க்கை முறையை உலகத்தாருக்கு முன்னால் எடுத்துரைப்பதற்காகக் களம் இறங்கியிருக்கின்றாரோ அந்த வாழ்க்கை முறையின்படி தம்முடைய வாழ்வின் எல்லாத் துறைகளிலும் செயல்பட்டு ஒட்டுமொத்த வாழ்விலும் அதன்படி வாழ்ந்து காட்ட வேண்டும். அவர் எதனை தீமை என்று அறிவிக்கின்றாரோ அதன் நிழல்கூட தம்மீது இம்மியளவு கூட விழாத வகையில் அதிலிருந்து அவர் முற்றாக விலகி இருக்க வேண்டும். அவர் எதனை நன்மையானது என்று சொல்கின்றாரோ அது அதன் முழு வடிவிலும் வீச்சிலும் பொலிவோடும் பேரெழிலோடும் அவருடைய வாழ்விலும் நடப்பிலும் மிளிர வேண்டும்.
எதனை அவர் கடமை என்று அறிவிக்கின்றாரோ அதனை நிறைவேற்றுவதில் மற்றெல்லோரையும் விட அவர் முன்னணியில் நிற்க வேண்டும். அவர் எதனை பாவம் என்று சொல்கின்றாரோ அதிலிருந்து முற்றாக விலகியிருப்பதில் ஈடிணையற்றவராக அவர் ஓங்கி நிற்க வேண்டும். எந்த வாழ்வியல் சட்டங்களை அவர் இறைவனின் சட்டங்களாக அறிவிக்கின்றாரோ அவற்றை நடைமுறைப்படுத்துவதில் எந்தக் குறையையும் வைத்திராதவராக அவர் மிளிர வேண்டும். தாம் விடுக்கின்ற அழைப்பிலும் செய்தியிலும் எந்த அளவுக்கு வாய்மையானவராக, அப்பழுக்கற்றவராக அவர் இருக்கின்றார் என்பதை உரத்துச் சொல்பவையாய் அவருடைய ஒழுக்கமும் நடத்தையும் அமைய வேண்டும். அவர் எந்த மார்க்கத்தின் பக்கம் உலக மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றாரோ அந்த மார்க்கப் போதனைகளின் அழகிய வடிவமாக அது எத்தகைய தரம் வாய்ந்த மார்ந்தர்களை செதுக்குகின்றது என்பதையும் எத்தகைய உயர்ந்த நடத்தையை உருவாக்குகின்றது என்பதையும் எத்தகைய வாழ்வியல் கோட்பாட்டை நடைமுறைப்படுத்த விரும்புகின்றது என்பøதயும் தெள்ளத்தெளிவாக புலப்படுத்துகின்ற நடைமுறை வடிவமாக அவருடைய இருப்பும் வாழ்வும் இருக்க வேண்டும்.
மூன்றாவதாக மறுமையில் சான்று. அதாவது மறுமை நாளில் இறைவனின் நீதிமன்றம் நிறுவப்படுகின்ற வேளையில் அந்த நேரத்தில் நபி எழுந்து நின்றுதம் மீது சுமத்தப்பட்டிருந்த தூதுச் செய்தியையும் அழைப்பையும் கூடுதலோ குறைவோ இன்றி மக்கள் வரையில் கொண்டு சேர்த்து விட்டதாகவும் மக்களுக்கு முன்னால் சொல்லாலும் செயலாலும் சத்தியத்தைத் தெளிவுபடுத்துவதில் எந்தக் குறையையும் வைக்கவில்லை என்றும் சான்று சொல்ல வேண்டும். அவருடைய அந்தச் சான்றின் அடிப்படையில்தான் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தகைய நற்கூலிக்கு உரித்தானவர்கள் என்பதும் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் எத்தகைய தண்டனைக்கு உரித்தானவர்கள் என்பதும் தீர்மானிக்கப்படும்.
இதிலிருந்தே சாட்சியாளர் என்கிற அந்தஸ்தில் அமர்த்தியவாறு இறைவன் இறைத்தூதர்(ஸல்) மீது எத்துணை பெரும் பொறுப்பைச் சுமத்தியிருந்தான் என்பதும், இத்தகைய மிக உயர்வான அந்தஸ்தில் அமர வைக்கப்படுகின்றவர் எத்துணை பெரும் ஆளுமையாக இருத்தல் வேண்டும் என்பதும் தெளிவாகின்றது. சத்திய மார்க்கத்துக்கான சொல் சான்றும் செயல் சான்றும் வழங்குவதில் நபிகளாரிடமிருந்து இம்மியளவுகூட குறை இருந்ததில்லை என்பது வெளிப்படை. அப்போதுதானே மறுமை நாளில் சத்தியச் செய்தியை முழுமையாகவும் செம்மையாகவும் மக்களுக்குத் தெளிவுபடுத்தி விட்டதாக நபிகளாரால் சான்று சொல்ல முடியும்; அப்போதுதானே மக்கள் மீது இறைவனின் வலுவான இறுதி ஆதாரம் நிலைபெறும். இல்லையேல் அல்லாஹ் காப்பாற்றுவானாக, இங்கு சத்தியத்துக்குச் சான்று வழங்குவதில் நபிகளாரின் தரப்பிலிருந்து ஏதேனும் குறை எஞ்சிவிட்டிருந்ததெனில் மறுமைநாளில் சாட்சியாளராக அவர்களால் எழுந்து நிற்பதும் சாத்தியமாகாது. மேலும் இறை மறுப்பாளர்களுக்கு எதிரான வழக்கும் நிலைபெறாமல் போய்விடும்.
சாட்சியாளர் என்பதற்கு மறுமை நாளில் மக்களின் செயல்கள் குறித்து நபிகளார்(ஸல்) சாட்சி சொல்வார்கள் என்பதாகச் சிலர் பொருள் விளக்கம் தந்திருக்கின்றார்கள். இந்த அடிப்படையில் மக்களின் செயல்கள் அனைத்தையும் நபிகளார்(ஸல்) பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்; மக்களின் செயல்களைப் பார்க்காமல் நபிகளாரால் எப்படி சான்று வழங்க முடியும்? என்பதை நிறுவுவதற்கும் முயன்றிருக்கின்றார்கள். ஆனால் குர்ஆனின் ஒளியில் பார்க்கின்ற போது இந்த விளக்கமும் கற்பிதமும் முழுக்க முழுக்க தவறானது என்பது தெளிவாகும். இந்த உலகத்தில் மனிதர்களின் செயல்கள் பற்றி சாட்சியம் சொல்வதற்கும் அதனை நிறுவுவதற்கும் வல்லோன் அல்லாஹ் முற்றிலும் மாறுபட்ட ஏற்பாட்டைச் செய்திருக்கின்றான் என்றே குர்ஆன் நமக்கு அறிவிக்கின்றது. இதற்காக வானவர்கள் ஒவ்வொரு மனிதருடைய வினைப்பட்டியலையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றார்கள் (பார்க்க: திருக்குர்ஆன் 50:1718; 18:149) மேலும் இதற்காக மனிதர்களின் உடல் உறுப்புகள் கூட சாட்சியம் கூறும் (பார்க்க: திருக்குர்ஆன் 36:65; 41:2021).
இறைத்தூதர்களைப் பொறுத்தவரை அவர்களின் பணி அடியார்களின் செயல்கள் குறித்து சாட்சி சொல்வதன்று. அதற்கு மாறாக அவர்கள் அடியார்கள் வரை சத்திய மார்க்கத்தைப் பற்றிய செய்தி எடுத்துரைக்கப்பட்டுவிட்டது என்பதற்குத் தான் சாட்சி சொல்வார்கள். குர்ஆன் தெள்ளத்தெளிவாக அறிவிக்கின்றது:
அல்லாஹ் எல்லா இறைத்தூதர்களையும் ஒன்று சேர்த்து ‘உங்களு(டைய அழைப்பு)க்கு அளிக்கப்பட்ட மறுமொழி என்ன?’ என்று கேட்கும் நாளில், ‘எங்களுக்கு எதுவும் தெரியாது. மறைவான உண்மைகள் அனைத்தையும் நன்கு அறிந்தவன் நீயே!’ என்று அவர்கள் (பணிந்து) கூறுவார்கள். (திருக்குர்ஆன் 5:109) மேலும் இதே தொடரில் ஈஸா(அலை) அவர்களைக் குறித்தும் அவரிடம்கிறித்தவர்களின் வழிகேடு தொடர்பாக வினவப்படும் போது அவர் பின்வருமாறு சொல்வார் எனக் குர்ஆன் குறிப்பிடுகின்றது:
‘நான் அவர்களோடு இருந்த காலம் வரை அவர்கள் மீது சாட்சியாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களுக்குச் சாட்சியாக இருந்தாய்.’ (திருக்குர்ஆன் 5:117)
படைப்பினங்களின் செயல்களுக்கு இறைத்தூதர்கள் சாட்சியாக மாட்டார்கள் என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. அப்படியானால் இறைத்தூதர்கள் எதற்குச் சான்று பகர்வார்கள்? இந்தக் கேள்விக்கும் குர்ஆன் தெள்ளத்தெளிவாக பதிலளிக்கின்றது.
‘மேலும் இவ்வாறே (முஸ்லிம்களான) உங்களை நாம் உம்மத்தன் வஸத்தன் சமநிலையுடைய சமுதாயமாக ஆக்கினோம் நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராயும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக!’ (திருக்குர்ஆன் 2:143)
‘அந்நாளில் ஒவ்வொரு சமுதாயத்தி லேயும் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடிய ஒருவரை அவர்களிலிருந்தே நாம் எழுப்புவோம். மேலும், இம்மக்களைக் குறித்து சாட்சி வழங்க உம்மை நாம் கொண்டு வருவோம்.’ (திருக்குர்ஆன் 16:89)
இதிலிருந்து மறுமை நாளில் இறைத்தூதரின் சாட்சியமும் எந்தச் சாட்சியத்தை வழங்குவதற்காக நபிகளாரின் சமுதாயமும் ஒவ்வொரும் சமுதாயத்தின் மீதான சாட்சியõளர்களும் அழைக்கப்படுவார்களோ அந்தச் சாட்சியமும் ஒத்த தன்மை கொண்டவையாகத்தான் இருக்கும் என்பது தெளிவாகின்றது. செயல்கள் தொடர்பான சாட்சியம் எனும் போது எல்லாச் சந்தப்பங்களிலும் எல்லா இடங்களிலும் இருக்க வேண்டியது அவசியமாகின்றது. படைப்புகள் வரை படைப்பாளனின் செய்தி சென்றடைந்து விட்டது எனச் சாட்சி சொல்வதற்காகத் தான் இந்தச் சாட்சியாளர்கள் அழைக்கப்படுவார்கள் எனில் அதே நோக்கத்துக்காக நபிகளாரும் அங்கு வருகை தருவார்கள் என்பது வெளிப்படை.
இந்தக் கருத்துக்கு வலுச் சேர்ப்பதாய் புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னு மாஜா, இமாம் அஹ்மத் போன்றோர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி), அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி), அபூதர்தா(ரலி), அனஸ் பின் மாலிக்(ரலி) உட்பட ஏராளமான நபித் தோழர்களிடமிருந்து பதிவு செய்துள்ள நபி மொழிகள் இருக்கின்றன. இவை அனைத்திலும் ஒருமித்த செய்தியாக இடம் பெற்றுள்ள குறிப்பு வருமாறு: ‘நபிகளார்(ஸல்) மறுமை நாளில் தம்முடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கொண்டு வரப்படுவதைப் பார்ப்பார்கள். ஆனால் அவர்கள் தம்மிடம் கொண்டு வரப்படாமல் வேறொரு திசையில் கொண்டு செல்லப்படுவதை அல்லது தள்ளப்படுவதைக் கவனிப்பார்கள். அவர்களைப் பார்த்து நபிகளார்(ஸல்), ‘இறைவா! இவர்கள் என்னுடைய தோழர்கள் ஆவர்!’ என்று சொல்வார்கள். அதனைக் கேட்டதும், ‘உமக்குப் பிறகு இவர்கள் என்னென்ன காரியங்களைச் செய்தார்கள் என்பதை நீர் அறிய மாட்டீர்’ என்று இறைவன் சொல்வான்’.
இந்தக் கருத்தைக் கொண்ட நபிமொழிகள் எந்த அளவுக்குப் பெரும் எண்ணிக்கையில் வெவ்வேறு அறிவிப்புகளில் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன எனில் இவற்றின் நலத்தைக் குறித்து ஐயங் கொள்வதற்கான எந்தச் சாத்தியமும் இல்லை. நபிகளார்(ஸல்) தம்முடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரும் செய்யக் கூடிய ஒவ்வொரு செயலுக்கும் சாட்சியாக இருப்பதற்கான சாத்தியம் அறவே இல்லை என்பதும் இதிலிருந்து தெள்ளத்தெளிவாக நிரூபண மாகிவிடுகின்றது. ‘இந்தச் சமுதாயத்தின் செயல்பாடுகள் பற்றிய விவரங்கள் நபிகளாருக்கு முன்னால் எடுத்துரைக்கப்படுகின்றன’ என்கிற நபிமொழியைப் பொறுத்தவரை அதுவும் இந்த நிரூபணத்துக்கு முரணானதாக இல்லை. ஏனெனில் நபிகளாருக்கு அவருடைய சமுதாயத்து நிலைமைகள் பற்றிய தகவல்களை இறைவன் தெரிவிக்கின்றான் என்பதுதான் அந்த நபிமொழி தருகின்ற செய்தி. தம்முடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொரு தனி மனிதரின் செயல்பாடுகளையும் நபிகளார் (ஸல்) நேரடியாகக் காண்கின்றார்கள் என்கிற பொருள் எங்கிருந்து வரும்?’
(தொடரும்)