நம்பிக்கை கொண்டவர்களே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்து பின்னர் அவர்களைத் தொடுவதற்கு முன்பாக மணவிலக்குச் செய்துவிட்டால் நிறைவேற்றுமாறு நீங்கள் கோரக்கூடிய வகையில் உங்களுக்காக அவர்கள் மீது ‘இத்தா’ எதுவும் இல்லை. எனவே, அவர்களுக்குக் கொஞ்சம் பொருள்களைக் கொடுத்து நல்ல முறையில் அவர்களை அனுப்பி வைத்துவிடுங்கள்.85
அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் · திருவசனம் : 49
85. இது ஓர் ஒற்றை வசனம் ஆகும். தலாக் தொடர்பான ஏதோவொரு விவகாரம் உருவான போது இந்த ஒற்றை வசனம் அருளப்பட்டிருக்க வேண்டும். இதனால் முந்தைய உரைத் தொடருக்கும் இதற்குப் பின்னர் இருக்கின்ற உரைத் தொடருக்கும் இடையில் இது வைக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு இது வரிசைப்படுத்தப்பட்டிருப்பதே இது முந்தைய உரைத் தொடருக்குப் பிந்தைய நாள்களிலும் பிந்தைய உரைத் தொடருக்கு முந்தைய நாள்களிலும் அருளப்பட்ட வசனம் என்பதை வெளிப்படுத்துகின்றது.
இந்த வசனத்திலிருந்து உய்த்துணரப்பட்டுள்ள சட்டவிதிகளின் விவரம் வருமாறு:
1. (இந்த வசனத்தில் ‘இறைநம்பிக்கை கொண்ட பெண்கள்’ என்று குறிப்பாகச் சொல்லப்பட்டிருப்பதால் ‘வேதம் வழங்கப்பட்ட பெண்கள்’ தொடர்பான விவகாரத்தில் இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள சட்டம் பொருந்தாதோ என ஐயம் கொள்வதற்கான சாத்தியம் இருப்பதாகத் தோன்றினாலும் உம்மத்தின் அத்துணை ஆலிம் பெருமக்களும் இந்தச் சட்டவிதி வேதம் வழங்கப்பட்ட பெண்களுக்கும் பொருந்தும் என்பதில் ஒருமித்த கருத்து கொண்டிருக்கின்றார்கள்.
அதாவது வேதம் வழங்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஒரு முஸ்லிம் மணம் முடித்திருந்தாலும் இறைநம்பிக்கை கொண்ட பெண்ணை மணம் முடிக்கின்ற போது அவர் என்னென்ன சட்டங்களை அவளை தலாக் செய்வதற்கான சட்டம், அவளுக்குத் தரப்பட வேண்டிய மஹர் பற்றிய சட்டம், அவள் கழிக்க வேண்டிய இத்தத்துக்கான காலகட்டம், அவளுக்கு முத்ஆவகை தலாக் தருவதற்கான சட்டம் என அத்துணை சட்டங்களையும் கடைப்பிடிக்க வேண்டுமோ அவை அனைத்தும் அப்படியே அந்தச் சூழலிலும் பொருந்தும்.
இங்கு ஆலிம் பெருமக்கள் இன்னொரு முக்கியமான விஷயத்திலும் அதாவது இங்கு இறைவன் இறைநம்பிக்கை கொண்ட பெண்களை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதன் நோக்கம் உண்மையில் இறைநம்பிக்கை கொண்ட பெண்கள்தாம் முஸ்லிம்களுக்குப் பொருத்தமான வாழ்க்கைத் துணைவர்களாவர் என்கிற விஷயத்தின் பக்கம் கவனத்தை ஈர்ப்பதாகும் என்பதிலும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
நிச்சயமாக யூதப் பெண்களையும் கிறித்தவப் பெண்களையும் நிக்காஹ் செய்துகொள்வதற்கு அனுமதி உண்டுதான். என் றாலும் அது பொருத்தமானதோ, விரும்பத் தக்கதோ கிடையாது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் செய்தியை எடுத் துரைப்பதில் குர்ஆன் மேற்கொண்டுள்ள இந்தத் தொனியிலிருந்து வல்லமையும் மாண்பும் நிறைந்த இறைவன் இறை நம்பிக்கையாளர்கள் இறைநம்பிக்கை கொண்ட பெண்களை மணம் முடிப்பதையே விரும்புகின்றான் என்பது தெள்ளத் தெளிவாகி விடுகின்றது.
2. தொடுவதற்கு முன்பாக என்பதற்கு அகராதிப் பொருளின் அடிப்படையில் பார்க்கின்ற போது வெறுமனே தொடுதல் என்றே பொருள். ஆனால் இந்தச் சொல் உடலுறவு கொள்ளுதலை குறிப்பாக உணர்த்துகின்ற வகையில் இங்கு ஆளப்பட்டிருக்கின்றது. இந்த அடிப்படையில் வசனத்தைக் கருத்தில் கொள்கின்ற போது கணவன் மனைவியுடன் தனிமையில் இருந்த போதிலும், அதற்கும் மேலாக அவளைத் தொட்டிருந்தாலும் கூட அவளைத் தலாக் செய்கின்ற போது அந்தப் பெண் இத்தா எனும் காலகட்டத்தைக் கழிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று பொருளாகின்றது.
ஆனாலும் ஃபிக்ஹ் வல்லுநர்கள் கணவன் முழுமையான தனிமையில் (அதாவது உடலுறவு கொள்வதற்கான அனைத்து சாத்தியங்களையும் கொண்ட தனிமையான சூழலில்) பெண்ணுடன் இருந்துவிட்டால், அதன் பிறகு தலாக் கொடுக்கப்படுகின்றது எனில் இத்தா எனும் காலகட்டத்தைக் கடக்க வேண்டியது கட்டாயம் ஆகி விடும் என்றும் தனிமையில் சந்திப்பதற்கு முன்பு தலாக் கொடுக்கப்படுகின்ற போது மட்டுமே இத்தா காத்திருப்பு ரத்தாகும் என்று முன் எச்சரிக்கையின் பொருட்டு அறிவித்திருக்கின்றார்கள்.
3. தனிமையில் சந்திப்பதற்கு முன்பே தலாக் கொடுக்கப்பட்டு விடுகின்ற போது இத்தா எனும் காத்திருப்புக் காலம் ரத்தாகி விடுவதன் பொருள் என்னவெனில் அத்தகைய சூழலில் தலாக் கொடுத்துவிட்ட பிறகு மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்கின்ற உரிமை கணவனுக்கு எஞ்சி இருப்பதில்லை. மேலும் தலாக் நிகழ்ந்த உடனே எவரை வேண்டுமானாலும் மணம் முடித்துக் கொள்கின்ற உரிமை பெண்ணுக்கு கிடைத்துவிடுகின்றது. ஆனால் இந்த விதி தனிமையில் சந்திப்பு நிகழ்வதற்கு முன்பு கொடுக்கப்படுகின்ற தலாக்குக்கு மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தனிமையில் சந்திப்பதற்கு முன்பு கணவன் இறந்துவிட்டாலோ இத்தா காத்திருப்புக் காலம் ரத்து ஆவதில்லை. அதற்கு மாறாக சாதாரணமான சூழல்களில் தலாக் கொடுக் கப்பட்ட மணமான பெண் ஒருவர் இத்தா இருப்பதைப் போன்று நான்கு மாதங்கள் பத்து நாள்கள் கழிக்க வேண்டியிருக்கும். (இத்தா என்பது தலாக் சொல்லப்பட்ட பிறகோ கணவனை இழந்த பிறகோ பெண் ஒருவர் கழிக்கின்ற காத்திருப்புக் காலம் ஆகும். அந்தக் கால அவகாசம் நிறைவேறாத வரை அந்தப் பெண்ணுக்கு இரண்டாவது நிக்காஹ் ஆகுமாவதில்லை)
4. ‘உங்களுக்காக அவர்கள் மீது ‘இத்தா’ எதுவும் இல்லை’ என்கிற சொற்கள் பெண் மீது ஆணுக்குள்ள உரிமைதான் இத்தா என்பதை நிறுவுகின்றன. ஆனால் இது ஆணுக்கு மட்டுமே இருக்கின்ற உரிமை என்று இதற்குப் பொருள் அல்ல. உண்மையில் இதில் இன்னும் இரண்டு உரிமைகளும் அடங்கியிருக்கின்றன. ஒன்று குழந்தைகள் மீதான உரிமை. இரண்டாவது இறைவனின் உரிமை அல்லது சட்டத்தின் உரிமை. அது ஆணின் உரிமையாக இருப்பதற்குக் காரணம் என்னவெனில் அந்தக் காலகட்டத்தில் அவளைத் திரும்ப அழைத்துக் கொள்கின்ற உரிமை அவனுக்கு இருக்கின்றது. மேலும் இந்த இத்தா காலகட்டத்தின் போது அந்தப் பெண் கருவுற்று இருக்கின்றாரா இல்லையா என்பது வெளிப்பட்டு விடுவதைப் பொறுத்தே அவனுடைய குழந்தையின் வம்சத்துக்கான சான்று நிரூபணமாகும் என்கிற கட்டாயம்.
குழந்தையின் உரிமையும் இதில் அடங்கி இருப்பதற்கான காரணம் என்னவெனில் குழந்தைக்கு தாம் தந்தை வழி வம்சத்தைச் சேர்ந்தவன் அல்லது சேர்ந்தவள் என்பதற்கான சான்று நிரூபணமாவதைச் சார்ந்தே அதற்குக் கிடைக்க வேண்டிய சட்ட ரீதியான உரிமைகள் அனைத்தும் உறுதிசெய்யப்படும். மேலும் தாம் எந்த வம்சத்தைச் சேர்ந்தவராக இருக்கின்றோம் என்பது ஐயத்திற்கிடமின்றி நிரூபணமாவதைச் சார்ந்ததாகவே அதன் ஒழுக்க அந்தஸ்தும் இருக்கின்றது.
அடுத்து இறைவனின் உரிமை (சட்டத்தின் உரிமை) இதில் அடங்கி இருப்பதற்கான காரணம் என்னவெனில், மக்களுக்கு தம்முடைய உரிமைகள் குறித்தோ, தம்முடைய குழந்தைகளின் உரிமைகள் பற்றியோ அக்கறை இல்லாமல் போனாலும்கூட அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது அவசியம் என்றே இறைவனின் சட்டம் கருதுகின்றது. இதன் காரணமாகத்தான் எவரேனும் ஒருவர் தம்முடைய மனைவிக்கு ‘என்னுடைய மரணத்துக்குப் பிறகு அல்லது என்னிடமிருந்து தலாக் பெற்றுக் கொண்ட பிறகு உம் மீது என் தரப்பிலிருந்து எந்தவொரு இத்தாவும் கட்டாயமாகாது’ என்று பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டாலும் கூட எந்த நிலையிலும் ஷரீஅத் சட்டம் இத்தா ரத்து ஆவதை அனுமதிக்காது.
5. (அவர்களுக்குக் கொஞ்சம் பொருள்களைக் கொடுத்து நல்ல முறையில் அவர்களை அனுப்பிவிடுங்கள்) என்கிற இந்தச் சட்டத்தின் நோக்கத்தை இரண்டு வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு நிறைவேற்ற வேண்டியிருக்கும். நிக்காஹ்வின் போது மஹர் முடிவாகி இருக்க, தனிமையில் சந்திப்பதற்கு முன்பே தலாக் கொடுக்கப்பட்டு விடுகின்றது எனில் திருக்குர்ஆன் 2:237இல் சொல்லப்பட்டிருப்பதைப் போன்று அத்தகைய சந்தர்ப்பத்தில் மஹரில் பாதியைக் கொடுப்பது வாஜிப் (கட்டாயம்) ஆகும்.
இந்த வாஜிபான அளவைக் காட்டிலும் அதிகப்படியாகக் கொஞ்சம் கொடுப்பது கட்டாயம் இல்லை; ஆனால் விரும்பத்தக்கதாகும். எடுத்துக்காட்டாக, மஹரில் பாதியைக் கொடுப்பதோடு திருமண விழாவின் போது மணமகளுக்கு தாம் கொடுத்து அனுப்பிய ஆடையை அவளே வைத்துக் கொள்ள அனுமதிப்பது அல்லது திருமணத்தின் போது ஏதேனும் வீட்டுப் பொருள்களை அன்பளிப்பாக அனுப்பி இருந்தால் அவற்றைத் திரும்ப வாங்கிக் கொள்ளாமல் விட்டுவிடுவது முதலியன.
ஆனால் நிக்காஹ்வின்போது மஹர் என எதுவும் தீர்மானிக்கப்பட்டிருக்கவில்லையெனில் அத்தகையச் சூழலில் பெண்ணுக்கு கொஞ்சம் கொடுத்து அனுப்புவது வாஜிப் (கட்டாயம்) ஆகும். மேலும் திருக்குர்ஆன் 2:236இல் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போன்று இந்தக் ‘கொஞ்சம்’ என்பது மனிதனின் அந்தஸ்து, பெருளாதார பலம், வசதிவாய்ப்பு ஆகியவற்றுக்கு இயைந்ததாய் இருக்க வேண்டும்.
மஹர் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, எந்நிலையிலும் தலாக் கொடுத்து அனுப்புகின்ற போது முத்ஆ தலாக் பொருள் கொடுப்பது கட்டாயம் என்று ஆலிம் பெருமக்களில் ஒரு குழுவினர் கருத்துரைத்திருக்கின்றார்கள். (தலாக் கொடுத்து பெண்ணை அனுப்புகின்ற போது பெண்ணிடம் தருகின்ற பொருளுக்கு முத்ஆ தலாக் என்று இஸ்லாமிய ஃபிக்ஹு மரபில் சொல் கின்றார்கள்)
(தொடரும்)