மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

நல்ல முறையில் அனுப்புங்கள்!
மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : கூ. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், 16-31 மார்ச் 2025



நம்பிக்கை கொண்டவர்களே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்து பின்னர் அவர்களைத் தொடுவதற்கு முன்பாக மணவிலக்குச் செய்துவிட்டால் நீங்கள் நிறைவேற்றுமாறு கோரக்கூடிய வகையில் உங்களுக்காக அவர்கள் மீது ‘இத்தா’ எதுவும் இல்லை. எனவே, அவர்களுக்குக் கொஞ்சம் பொருள்களைக் கொடுத்து நல்ல முறையில் அவர்களை அனுப்பி வைத்துவிடுங்கள்.85

நபியே! நீர் மஹர் கொடுத்துவிட்ட உம்முடைய மனைவியரையும்86 அல்லாஹ்வினால் வழங்கப்பட்டு உமது கைவசத்தில் வந்துள்ள அடிமைப் பெண்களையும், உம்மோடு ஹிஜ்ரத் செய்த பெண்களாகிய உம் தந்தையின் சகோதரர்களின் மகள்கள், உம் தந்தையின் சகோதரிகளின் மகள்கள், உம் தாயின் சகோதரர்களின் மகள்கள், உம் தாயின் சகோதரிகளின் மகள்கள் ஆகியோரையும் திண்ணமாக நாம் உமக்கு ஆகுமாக்கியிருக்கின்றோம்...

· அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் · திருவசனம் : 49, 50


85 ஆம் அடிக்குறிப்பிற்கான 5 சட்ட விதிகளைக் கடந்த இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக...

86. நல்லமுறையில் அனுப்பி வைத்துவிடுவது என்பதன் பொருள் பெண்ணை அனுப்பும் போது அவளுக்குக் கொஞ்ச மாவது ஏதேனும் கொடுத்து அனுப்ப வேண்டும் என்பதோடு, அவளை நிந்திக்காமலும், சுடு சொற்களால் அவளுடைய மனதைப் புண்படுத்தாமலும் கண்ணியமான முறையில் அவளிடமிருந்து பிரிந்துவிட வேண்டும். ஒருவருக்கு பெண் பிடிக்காமல் போனாலோ அவளுடன் வாழ விரும்பாத அளவுக்கு அவளிடம் வேறு ஏதேனும் குறையைக் கண்டாலோ கண்ணியமான  மனிதரைப்  போன்று அவளைத் தலாக் செய்து அனுப்பிவிட வேண்டும். வேறு எவரும் அவளை மணம் முடித்துக் கொள்வதற்கு ஆயத்தமாகாத அளவுக்கு அவளுடைய குறைகளை மக்கள் மத்தியில் சொல்லிக் கொண்டு திரியவோ, தன்னுடைய புகார்களின் பட்டியலை வாசித்துக் கொண்டோ இருக்கக் கூடாது. தலாக்கை  நடைமுறைப்படுத்துவதை ஏதேனும் ஒரு பஞ்சாயத்து மன்றத்தின் அல்லது நீதிமன்றத்தின் அனுமதியோடு இறுக்கமாக முடிச்சுப் போடுவது இறைவனின் சட்டத்தின் விவேகத்துக்கும் நலன் சார்ந்த நெறிமுறைக்கும் முற்றிலும் நேர் எதிரான நடைமுறை என்பது குர்ஆனின் இந்தக் கட்டளையிலிருந்து தெள்ளத் தெளிவாக விளங்கிவிடுகின்றது. ஏனெனில் அத்தகைய சந்தர்ப்பங்களில் ‘நல்ல முறையில் அனுப்பி விடுவதற்கான’ எந்தவொரு சாத்தியமும் இருப்பதில்லை.

அதற்கு மாறாக ஆண் விரும்பாவிட்டாலும்கூட நிந்தனையும் பழிச்சொல்லும் அவமானமும் நடந்தே தீருகின்றது. அது மட்டுமின்றி ஏதேனுமொரு பஞ்சாயத்து மன்றமோ நீதிமன்றமோ அனுமதித்தாலேயொழிய தலாக் கொடுப்பதற்கான தன்னுøடய அதிகாரத்தைக் கணவனால் பயன்படுத்த முடியாது என்பதற்கான எந்தவொரு சாத்தியமும் வசனத்தின் சொற்களில் இருக்கவில்லை. இந்த வசனம் தலாக் செய்கின்ற அதிகாரத்தை திருமணமான ஆணுக்குத் தெள்ளத் தெளிவாகவும் திட்ட வட்டமாகவும் வழங்குகின்றது. மேலும் பெண்ணைத் தொடுவதற்கு முன்பாக அவன் அவளைக் கைவிட விரும்புகின்றான் எனில் கட்டாயமாக மஹரில் பாதியைத் தந்தாக வேண்டும் அல்லது தன்னுடைய வசதிக்கும் சக்திக்கும் ஏற்ப கொஞ்சம் கொடுத்து அனுப்ப வேண்டும் என்று இந்த வசனம் ஆணின் மீது பொறுப்பு சுமத்துகின்றது.

தலாக் செய்வதை விளையாட்டாக ஆக்கிக் கொள்வதைத் தடுப்பதற்காக ஆண் மீது பொருளாதாரச் சுமையை சுமத்துவதும், இவ்வாறாக தலாக் கொடுப்பதற்கான தன்னுடைய அதிகாரத்தை மிகவும் யோசித்தும் சீர்தூக்கிப் பார்த்தும் எச்சரிக்கையுணர்வோடு அவன் பயன்படுத்துவதை உறுதி செய்வதும்தான் இந்த வசனத்தின் நோக்கம் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. அது மட்டுமின்றி இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான அந்தரங்க விவகாரத்தில் ஏதேனுமொரு வகையான அந்நிய தலையீட்டுக்கான நிலைமைக்கு எவரும் தள்ளப்பட்டு விடக் கூடாது என்பதையும் இன்னும் ஒருபடி மேலாக தாம் தம்முடைய மனைவியை விட்டுப் பிரிவதற்கான காரணத்தை வேறு எவருக்கும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு கணவன் ஆளாகிவிடக்கூடாது என்பதையும் உறுதி செய்வது தாம் இந்த வசனத்தின் நோக்கம் என்பதும் தெளிவாகின்றது.

87. ‘ஒரே நேரத்தில் நான்கு மனைவியருக்கு மேல் திருமணம் செய்து கொள்வது தடை செய்யப்படுவதாக மற்றவர்களுக்கு அறிவித்த முஹம்மத்(ஸல்) அவர்கள் தாமே ஐந்தாவதாக ஒரு பெண்ணை மணந்து கொண்டது ஏனோ?’ என்று அந்த மக்கள் எழுப்பிய ஆட்சேபணைக்கான பதில் தான் இது. அன்னை ஜைனப்(ரலி) அவர்களுடனான திருமணத்தின் போது நபிகளாருக்கு நான்கு மனைவியர்கள் ஏற்கனவே இருந்தார்கள் என்பதுதான் இந்த ஆட்சேபணைக்கான அடிப்படையாகும். முதலாமவராக அன்னை சவ்தா(ரலி) இருந்தார்கள். அவர்களை ஹிஜ்ரிக்கு முந்தைய மூன்றாவது ஆண்டில் நபிகளார்(ஸல்) மணம் முடித்திருந்தார்கள். இரண்டாமவராக அன்னை ஆயிஷா(ரலி) இருந்தார்கள். அவர்களுடனான நிக்காஹ் ஹிஜ்ரிக்கு முந்தைய மூன்றாவது ஆண்டிலேயே நடந்திருந்தது. ஆனால் ஹிஜ்ரி முதலாம் ஆண்டில் ஷவ்வால் மாதம் முதல் நாள் அன்றுதான் நபிகளாரின் இல்லத்துக்கு வந்து இல்லறம் நடத்தத் தொடங்கியிருந்தார்கள். மூன்றாமவராக அன்னை ஹஃப்ஸா(ரலி) அவர்களை ஹிஜ்ரி மூன்றாவது ஆண்டில் ஷஅபான் மாதத்தில் மணம் முடித்திருந்தார்கள்.

நான்காமவராக அன்னை உம்மு ஸல்மா(ரலி) அவர்களை ஹிஜ்ரி நான்காம் ஆண்டில் ஷவ்வால் மாதத்தில் தம்முடைய மனைவியாக ஆக்கிக் கொண்டிருந்தார்கள். இவ்வாறாக அன்னை ஜைனப்(ரலி) அவர்கள் நபிகளாரின் ஐந்தாவது மனைவியாக இருந்தார்கள். இது தொடர்பாக இறைமறுப்பாளர்களும் இணை வைப்பாளர்களும்  எழுப்பிய  ஆட்சேபணைக்குப் பதிலளிக்கின்ற விதத்தில் இறைவன் ‘நபியே! நீர் மஹர் கொடுத்து மணம் செய்து கொண்டிருக்கின்ற இந்த ஐந்து மனைவியரும் உமக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளனர்’ என்று அறிவித்திருக்கின்றான். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் ‘பொதுவான முஸ்லிம்களுக்கு நான்கு மனைவியருக்கு மேல் திருமணம் முடிப்பது கூடாது என்று தடை விதித்ததும் நான் தான்; என்னுடைய தூதருக்கு இந்தத் தடையிலிருந்து விதிவிலக்கு அளித்திருப்பதும் நான்தான். அந்தத் தடையை விதிப்பதற்கான அதிகாரம் எனக்கு உரியது எனில், அதிலிருந்து விலக்கு தருவதற்கான அதிகாரம் எனக்கு ஏன் இருக்காது?’ என்பதுதான் இந்தப் பதிலில் பதிந்துள்ள பொருள் ஆகும்.

இறைமறுப்பாளர்களையும் இணைவைப் பாளர்களையும் திருப்திப்படுத்துவது இந்தப் பதிலின் நோக்கமாக இருக்கவில்லை. அதற்கு மாறாக இஸ்லாத்தின் எதிரிகள் எந்த முஸ்லிம்ளின் உள்ளங்களில் கெட்ட எண்ணங்களை விதைப்பதற்கு முயன்று கொண்டிருந்தார்களோ அந்த முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதுதான்  நோக்கமாக இருந்தது. ‘நான்கு மனைவிகள் மட்டுமே ஆகுமானது என்கிற பொதுவான சட்டத்திலிருந்து நபிகளார்(ஸல்) தம்மைத் தாமே விதிவிலக்காக்கிக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக நபிகளாருக்கு விதிவிலக்கு தருவதற்கான இந்தத் தீர்மானம் என்னுடையதே’ என்று இந்த வசனத்தின் மூலம் இறைவன் பிரகடனம் செய்துள்ளான்.
(தொடரும்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்