நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நீங்கள் அவசியம் இரவில் விழித்தெழுந்து தொழுங்கள். ஏனெனில் இது உங்களுக்கு முந்தைய காலத்து உத்தமர்களின் வழிமுறையாகவும் அடை யாளமாகவும் இருக்கின்றது. மேலும் இதுதான் உங்களின் அதிபதியின் நெருக்கத்தைப் பெறுவதற் கான வழிவகையாகவும் இருக்கின்றது. மேலும் பாவங்களின் (பாதிப்புகளை) அழித்துவிடக் கூடியதாகவும் பாவச் செயல்களில் விழுவதிலிருந்து தடுக்கக்கூடியதாகவும் இருக்கின்றது’.
அறிவிப்பாளர் : அபூஉமாமா(ரலி) நூல் : திர்மிதி
இந்த நபிமொழியில் தஹஜ்ஜுத் தொழுகையின் அருள்வளங்கள், சிறப்புகள், நன்மைகள் குறித்து அழகாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை என்னவெனில் அதனை வாய்மையான உள்ளத்துடனும் எண்ணத் தூய்மையுடனும் நிறைவேற்ற வேண்டும்.
தஹஜ்ஜுத் தொழுகைக்கான நேரமே மனதுக்கு நிம்மதியளிப்பதாய், அமைதியும் நிசப்தமும் நிறைந்ததாய் இருக்கின்றது. இறை திருப்தியைப் பெறும் ஒற்றை நோக்கத்துடன் தூக்கத்தை உதறிவிட்டு, படுக்கையைத் துறந்து விட்டு எழுந்து நிற்கின்ற போது அளப்பரிய மனஓர்மையும் ஈடுபாடும் கிடைக்கின்றது. மனம் இம்மியளவு கூட இங்குமங்கும் அலைபாய் வதில்லை. மனம் இலயித்து வழிபாட்டின் சுவையை ருசிக்கின்ற நற்பேறு கிடைக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் பயிற்சிக்கான அற்புதமான வழியாகவும் அது இருக்கின்றது.
‘உண்மையில், இரவில் எழுந்திருப்பது மனதைக் கட்டுப்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாகவும் (குர்ஆனை) நேர்த்தியாக ஓதுவதற்கு மிகவும் ஏற்றதாகவும் இருக்கின்றது.’ (திருக்குர்ஆன் 73:6)
நபிகளாரை விளித்துச் சொல்லப்பட்டது: ‘இரவில் தஹஜ்ஜுத் தொழுகையைக் கடைப்பிடியும். இது நீர் செய்ய வேண்டிய அதிகப்படியான தொழுகையாகும். உம் இறைவன் உம்மை ‘மகாமே மஹ்மூத்’ எனும் அந்தஸ்துக்கு உயர்த்தலாம்.’ (திருக்குர்ஆன் 17:79)
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத்(அலை) அவர்களின் நோன்பாகும் என்றே நபிமொழிகளில் சொல்லப்பட்டுள்ளது. தாவூத் நபி அவர்கள் ஆண்டில் பாதி நாள்கள் நோன்பு நோற்பார்கள். தொழுகைகளிலும் தாவூத்(அலை) அவர்களின் தொழுகைதான் மகத்துவமும் வல்லமையும் நிறைந்த அல்லாஹ்வுக்கு விருப்பமானதாகும். அவர்கள் பாதி இரவு வரை உறங்குவார்கள். பிறகு எழுந்து தொழுதுவிட்டு மீண்டும் உறங்குவார்கள். நள்ளிரவில் விழித்தெழுகின்ற போது இரவின் மூன்றிலொரு பகுதி வரை தொழுது கொண்டிருப்பார்கள்’ என்றும் நபிமொழிகளில் (முஸ்லிம் 2145) சொல்லப்பட்டுள்ளது.
உங்களில் ஒருவர் இரவில் தொழுவதற்காக நின்றால் முதலில் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழட்டும். (முஸ்லிம் 1415). இதன் மூலமாக சோம்பல் அகன்றுவிடும். அதன் பிறகு அவர் புத்துணர்வுடன் நீண்ட ரக்அத்களைத் தொழுவது எளிதாகிவிடும். மற்றொரு நபிமொழியில் உங்களில் எவரேனும் ஒருவர் இரவில் விழித்தெழுந்திருக்க ஆனால் தூக்க மிகுதியால் குர்ஆனைத் தெளிவாக ஓத முடியாமல் போனால் தாம் எதை ஓதுகின்றோம் என்பது பற்றிய உணர்வும் அவருக்கு இல்லாமல் போனால் அவர் படுத்துக்கொள்ளட்டும்’ என்றும் சொல்லப்பட்டுள்ளது.