மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

சூழலைச் சிதைப்பது பாவம்
நபிமொழி விளக்கம் * மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா, ஏப்ரல் 1-16, 2025



நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எவர் பெர்ரி மரத்தை (சத்து ரசம் நிறைந்த, சதைப் பற்றுள்ள விதைகள் உள்ள பழங்களைத் தருகின்ற மரம்) அறுக்கின்றாரோ அவரை இறைவன் தலைகீழாக நரகத்தில் வீசுவான்.’

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஹுபைஷ்(ரலி)
நூல் : அபூதாவூத்


இமாம் அபூதாவூத் அவர்கள் இந்த அறிவிப்பைப் பதிவு செய்த பிறகு பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்: இது மிகவும் சுருக்கமான நபிமொழி ஆகும். இதனுடைய முழுப் பொருள் என்னவெனில், காட்டில் வளர்ந்து வழிப்போக்கர்களுக்கும் விலங்குகளுக்கும் நிழலும் புகலும் கொடுத்து பயன் தருகின்ற மரத்தை எந்த விதமான நியாயமும் இல்லாமல், கொஞ்சங்கூட யோசிக்காமல், அநியாயமாக ஒருவர் அறுக்கின்றார் எனில் இறைவன் அவரைத் தலைகீழாக நரகத்தில் வீசுவான்.

இந்த உலகில் மனிதன் இருப்பதற்கு இடம் தேவை. அத்துடன் தூய்மையான சுற்றுச்சூழலும் அத்தியாவசியத் தேவை ஆகும். மனித சமூகம் மிகவும் தூய்மையானதாய், துப்புரவானதாய் இருந்தாக வேண்டும். எந்தவகையான தார்மிக, சித்தாந்த கசடுகளும் அதில் மருந்துக்கும் இருத்தலாகாது. திரும்பும் திசையெங்கும் அமைதியும் இணக்கமும் நிலவ வேண்டும். இதனைத்தான் இஸ்லாம் விரும்புகின்றது.

அத்துடன் இந்தப் பூமியில் வாழ்கின்ற மனிதர்களுக்கும் பிராணிகள் உள்ளிட்ட இதர உயிரினங்களுக்கும் எந்தவிதமான தொந்தரவோ, இடையூறோ இல்லாதவாறு அவர்களின் வசதி, இணக்கம் ஆகியவற்றை முடிந்த வரை கருத்தில் கொண்டே எதனையும் செய்ய வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகின்றது. மனித குலத்தின் நலன்கள், வளங்கள், பாதுகாப்பு ஆகிய வற்றைப் புறக்கணித்து எதனையும் செய்யக் கூடாது என்றே இஸ்லாம் அறிவுறுத்துகின்றது.

இன்றைய வளர்ச்சியடைந்த மனிதன் எந்த அளவுக்குத் தன்னலம் மிக்கவனாக, விளைவுகளைக் குறித்து கொஞ்சங்கூட அலட்டிக் கொள்ளாதவனாக, தொலைநோக்கின்றி செயல்பட்டுக்கொண்டிருக்கின்றான் என்பது வெள்ளிடை மலை. சுற்றுச்சூழல் மாசடைதல் என்பது மனிதகுலம் இந்த மண்ணில் நிலைத்திருப்பதற்கே மிகப் பெரும் ஆபத்தானது என்பதை அவன் மறந்திருக்கின்றான்.

சுத்தமான, குளுமையான, புத்துணர்வூட்டுகின்ற பூங்காற்றை இன்றைய நகரங்கள் மிக வேகமாக இழந்து வருகின்றன. சாலைகளிலிருந்தும் சந்தைகளிலிருந்தும் கிளம்புகின்ற ஓயாத இரைச்சலும் சத்தமும் காதுகளைச் செவிடாக்கி வருகின்றன. மாசு கலப்பினால் ஆறுகள் நஞ்சாறுகளாய், குளங்கள் சாக்கடைகளாய், பெருங்கடல்களே உயிர்க்கொல்லி கடல்களாய் மாறிவருகின்றன. நாவிற்கினிய பழங்கள்கூட மாசுபடுத்தப்பட்டுவிட்டதால் ஆரோக்கியத்தைத் தருவதற்குப் பதிலாக உடல்நலக்கேட்டுக்கு வித்திட்டுக் கொண்டிருக்கின்றன.

பழங்களைப் பெரும் விலையில் விற்று கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்ற பேராசையால் உந்தப்பட்டு, அவற்றை இயல்பாகப் பழுப்பதற்கும் விடாமல் கெமிக்கல் பொடியைத் தூவி செயற்கையான முறையில் அவற்றைப் பழுக்கச் செய்யப்படுகின்றன. இதனால் இயல்பான முறையில் பழுக்கின்ற பழங்களுக்கு இருக்கின்ற சுவையும் ருசியும் இனிமையும் செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட பழங்களில் இருப்பதே இல்லை.

போதாக்குறைக்கு இவற்றின் மீது தூவப்படுகின்ற வேதியியல் பொடிகளால் நச்சுத்தன்மை கொண்டதாய் இந்தக் கனிகள் மாறிவிடுகின்றன. இதனால் இவை உடல்நலத்திற்கே கேடாய் அமைந்துவிடுகின்றன. இறைப்பற்றும் மனிதநேயமும்தான் இறைவழிகாட்டுதலின் உயிர்நாடி. இந்த இறைவழிகாட்டுதலைப் புறக்கணித்துச் செயல் பட்டதால் இன்று சுற்றுச்சூழல் மாசடைந்து மிகப்பெரும் நெருக்கடியில் மனிதன் சிக்கியிருக்கின்றான். மனிதனின் கண்மூடித்தனமான செயல்பõடுகளின் விளைவாக இன்று ஓஸோன் படலத்தில் துளைகள் ஏற்பட்டிருக்கின்றன. நாளுக்கு நாள் இந்தத் துளைகள் அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக பயங்கரமான கதிர்கள் நேரடியாகப் பூமியைத் தாக்குகின்ற ஆபத்து அதிகரித்துள்ளது.

பொதுமக்களின் தேவைகளையும் பிராணிகளின் நலன்களையும் புறக்கணித்து பெர்ரி மரத்தை அறுத்துவிடுவது எந்த அளவுக்குத் தீய செயல் எனில், எந்த அளவுக்கு கொடூரமான செயல் எனில், எந்த அளவுக்கு இறைவனின் கோபத்தைக் கிளறுகின்ற செயல் எனில், இந்தச் செயலில் ஈடுபடு கின்றவன் தலைகீழாக நரகத்தில் வீசப் படுவான். ஒரு சாதாரண பெர்ரி மரத்தை வெட்டுவதற்கே இந்த நிலைமை எனில், ஒட்டுமொத்த பூமிப்பந்தையே அழிவுப் படுகுழியின் ஓரத்தில் கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றவர்களும், மனிதர்களின் உடல்நலம், பாதுகாப்பு, நலன்கள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் கொஞ்சங்கூட அலட்டிக்கொள்ளாமல் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்ற பல்வேறு விதமான தொழில்களில் ஈடுபடுகின்றவர்கள் எத்துணை பெரும் குற்றவாளிகளாய் அறிவிக்கப்படுவார்கள்? நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்