உம்முடைய மனைவியரில் உம்முடைய விருப்பப்படி சிலரை உம்மைவிட்டுத் தனிமைப்படுத்தி வைப்பதற்கும், நீர் விரும்புகின்றபடி வேறு சிலரை உம்முடன் வைத்துக் கொள்வதற்கும், நீர் தனிமைப்படுத்தி வைத்தவர்களில் எவரையாவது நீர் அழைத்துக் கொள்வதற்கும் அனுமதி இருக்கின்றது. (இந்த விவகாரத்தில்) உம் மீது எத்தகைய தவறுமில்லை. இதனால் இவர்கள் கண் குளிர்ந்தும் வருத்தமற்றும் இருப்பார்கள் என்பதையும், மேலும், எதனை நீர் அவர்களுக்கு அளித்தாலும் அதனைக் குறித்து அவர்கள் அனைவரும் திருப்தி கொள்வார்கள் என்பதையும் அதிகம் எதிர்பார்க்கலாம்.90 உங்களுடைய உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கறிவான். மேலும் அல்லாஹ் யாவும் அறிந்தவனாகவும், சகிப்புத் தன்மையுடையவனாகவும் இருக்கின்றான்.
அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் · திருவசனம் : 51
90. நபி(ஸல்) அவர்கள் தம் மீதான மகத்தான பொறுப்பை மனஓர்மையோடும் மனநிறைவோடும் நிறைவேற்றுவதற்கு உதவுகின்ற வகையில் நபிகளாரை குடும்ப வாழ்வின் குழப்பங்களிலிருந்து விடுவிப்பதுதான் இந்த வசனத்தின் நோக்கமாகும். தூய்மையான மனைவியரில் எவரிடம் வேண்டுமானாலும் எத்தகைய வழிமுறையை வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம் என்று வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ் நபிகளாருக்கு முழு அதிகாரங்களை வழங்கிவிட்டபிறகு இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் நபிகளாரை ஏதேனும் ஓர் வகையில் தொல்லை கொடுப்பதற்கோ தங்களுக்குள் போட்டி பொறாமை எனச் சண்டையிட்டவாறு நபிகளாருக்குச் சிக்கல்களை ஏற்படுத்து வதற்கோ சாத்தியம் இருக்கவில்லை. ஆனால் வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ்விடமிருந்து இந்த அதிகாரங்களைப் பெற்றுக்கொண்ட பிறகு நபி(ஸல்) அவர்கள் தம்முடைய மனைவியருக்கிடையில் முழுக்க முழுக்க நீதியுடனும் நியாயத்துடனும் நடந்துகொண்டார்கள். எவருக்கும் எவரை விடவும் முன்னுரிமை அளிக்கவில்லை.
மேலும் ஒவ்வொருவருக்கும் இன்ன நாள் என்று முறை வைத்துச் சரிசமமாக அவர்களிடம் செல்வார்கள். நபிமொழி வல்லுநர்களில் அபூ ரஸீன் அவர்கள் மட்டுமே நபி(ஸல்) அவர்கள் நான்கு மனைவியருக்கு மட்டும் (அன்னை ஆயிஷõ(ரலி), அன்னை ஹஃப்ஸா(ரலி), அன்னை ஜைனப்(ரலி), அன்னை உம்மு சல்மா(ரலி)) இன்ன நாள் என்று பகிர்ந்து அளித்து முறை வைத்துச் சென்று வந்தார்கள். மற்ற மனைவியருக்காக எந்தவொரு முறையையும் நிர்ணக்கவில்லை என்று கருத்துரைத்திருக்கின்றார். ஆனால் மற்ற நபிமொழி வல்லுநர்களும் குர்ஆன் விரிவுரையாளர்களும் இதனை மறுக்கின்றார்கள். மேலும் இந்த அதிகாரங்கள் வழங்கப்பட்ட பிறகு நபி(ஸல்) அவர்கள் தம்முடைய எல்லா மனைவியரிடமும் முறை வைத்துச் சென்று வந்தார்கள் என்றும் எல்லோருடனும் சரிசமமாகவே நடந்துகொண்டார்கள் என்றும் வலுவான அறிவிப்புகளுடன் இந்த விவகாரத்துக்கான சான்றுகளையும் வழங்கி இருக்கின்றார்கள்.
புகாரி, முஸ்லிம், நஸாயீ, அபூதாவூத் போன்றோர் ‘இந்த வசனம் அருளப்பட்ட பின்பு நபி(ஸல்) அவர்கள் எங்களில் எவரேனுமோர் மனைவியின் முறைக்கான நாளில் வேறொரு மனைவியிடம் செல்லும் போது முறைக்குரிய மனைவியிடம் அனுமதி பெற்றே செல்வார்கள்’ என்கிற அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் கூற்றைப் பதிவு செய்திருக்கின்றார்கள். அபூபக்கர் ஜஸ்ஸாஸ் அவர்கள் அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் சொன்னதாக உர்வா பின் ஜுபைர் அவர்களின் பின்வரும் அறிவிப்பைப் பதிவு செய்திருக்கின்றார்: ‘எங்களுக்கு இடையில் நாள்களைப் பகிர்ந்து கொடுக்கும் போது நபி(ஸல்) அவர்கள் எங்களில் எவரையும் எவருக்குப் பதிலாகவும் முன்னுரிமை தந்ததில்லை. நபி(ஸல்) அவர்கள் தம்முடைய மனைவியரில் எவர் ஒருவரையும் சந்திக்காத நாளே அபூர்வமாகத்தான் இருக்கும். (எல்லா மனைவியரையும் சந்திப்பார்கள்) என்றாலும் எந்த மனைவியின் முறைக்கான நாளிலும் நபி(ஸல்) அவர்கள் அந்த மனைவியைத் தவிர வேறு ஒருவரைத் தொடக் கூட மாட்டார்கள்’.
அன்னை ஆயிஷா(ரலி) மற்றுமோர் அறிவிப்பையும் பகிர்ந்திருக்கின்றார்கள். அதாவது நபி(ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்வின் இறுதி நோய்க்கு ஆளாகியிருந்த சந்தர்ப்பத்தில் நடமாடுவதும் சிரமமானதாய் ஆகிவிட்டபோது நபிகளார்(ஸல்) தம்முடைய எல்லா மனைவியரிடமும் தம்மை ஆயிஷா(ரலி) அவர்களின் இல்லத்தில் தங்கிக் கொள்வதற்கு அனுமதி கேட்டார்கள். எல்லோரும் அனுமதி அளித்ததும் நபி(ஸல்) அவர்கள் தம்முடைய (வாழ்வின்) இறுதி நாள்களை அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் இல்லத்தில் கழித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தம்முடைய மனைவியரில் எந்தவொரு மனைவிக்கும் அவருடைய முறைக் கான நாளை ஒதுக்காமல் இருந்ததில்லை. இதில் விதிவிலக்காக அன்னை சவ்தா(ரலி) மட்டுமே இருந்தார்கள். அவர்கள் தம்முøடய முறைக்கான நாளை அன்னை ஆயிஷாவுக்குத் தந்துவிட்டிருந்தார்கள். ஏனெனில் அன்னை சவ்தா(ரலி) அப்போது வயது முதிர்ந்திருந்தார். இந்த இடத்தில் எவருடைய உள்ளத்திலும் (அல்லாஹ் காப்பாற்றுவானாக) வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் இந்த வசனத்தில் தம்முடைய தூதருக்கு தேவையற்ற சலுகை தந்திருப்பதாகவும் கண்ணித்துக்குரிய தூய்மையான மனைவியர் உரிமைப் பறிப்புக்கு ஆளாகியிருப்பதாகவும் ஐயப்பட்டுவிடக் கூடாது.
உண்மை என்னவெனில், எந்த மகத்தான நலன்களின் பொருட்டு மனைவியரின் எண்ணிக்கை தொடர்பான விவகாரத்தில் பொதுவான விதியிலிருந்து நபிகளாருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்ததோ, அதே நலன்களின் பொருட்டு நபிகளாரின் குடும்ப வாழ்விலும் மனநிறைவையும் நிம்மதியையும் உறுதிசெய்வதும், நபிகளாரைக் கவலையில் தள்ளிவிடக்கூடிய சாத்தியத்தைக் கொண்ட காரணங்களை முற்றாக ஒழிப்பதும் அவசியமாயிற்று. நபி(ஸல்) அவர்களைப் போன்ற மகத்துவமும் மாண்பும் நிறைந்த ஆளுமையின் வாழ்க்கைத் துணை என்கிற நற்பேறு கிடைத்ததும் அதன் காரணமாக அழைப்பு, பரப்புரை, சீர்திருத்தம் ஆகியவற்றைக் கொண்ட மகத்தான பணிகளில் இந்த உலகம் இருக்கின்ற வரையில் மனிதகுலத்தின் வெற்றிக்கான வழிவகையாக முத்திரை பதித்த பணிகளில் நபிகளாருக்குப் பக்கபலமாக நிற்கும் தோழமையாக மாறுவதற்கான வாய்ப்பு கிடைத்ததும்தான் கண்ணியத்துக்குரிய தூய்மையான மனைவியருக்குக் கிடைத்திருந்த மிகப் பெரும் சிறப்பு ஆகும்.
இந்த மகத்தான பொறுப்பை நிறைவேற்றுவதில் நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு அசாதாரணமான அளவுக்கு தியாகத்துடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருந்தார்களோ, மேலும் ஒட்டுமொத்த நபித்தோழர்களும் தம்மால் இயன்ற அளவுக்கு தியாகங்களைச் செய்தும் அர்ப்பணித்தும் இயங்கி வந்தார்களோ அவ்வாறே அர்ப்பணிப்பு உணர்வோடும் தியாக உள்ளத்துடனும் இயங்குவது கண்ணியத்துக்குரிய தூய்மையான மனைவியர் மீதும் கடமையாக இருந்தது. இதனால்தான் வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ்வின் இந்தத் தீர்ப்பை கண்ணியத்துக்குரிய தூய்மையான மனைவியர் அனைவரும் மனமுவந்து ஏற்றுக்கொண்டார்கள்.
(தொடரும்)