..உங்களுடைய உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கறிவான். மேலும் அல்லாஹ் யாவும் அறிந்தவனாகவும், சகிப்புத் தன்மையுடையவனாகவும் இருக்கின்றான்.91 இதற்குப் பின்னர், வேறு பெண்கள் உமக்கு ஆகுமானவர்களல்லர். மேலும், இம்மனைவியருக்குப் பகரமாக நீர் வேறு மனைவியரை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அனுமதியில்லை. அவர்களின் அழகு உமக்கு மிகவும் பிடித்தமான தாயினும் சரியே!92 ஆயினும் உமக்கு அடிமைப் பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.93 அல்லாஹ் யாவற்றையும் கண்காணிப்பவனாய் இருக்கின்றான்’.
அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் · திருவசனங்கள் : 51, 52
91. கண்ணியத்துக்குரிய தூய்மையான நபி(ஸல்) அவர்களின் மனைவியருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைதான் இது. மேலும் மற்ற அனைவருக்கும்கூட இது பொருந்தும். கண்ணியத்துக்குரிய தூய்மையான மனைவியருக்கான எச்சரிக்கை என்னவெனில், அல்லாஹ்விடமிருந்து இந்தச் சட்டம் வந்த பிறகு அவர்கள் மனத்திலும் கூட வருத்தத்தைச் சுமந்தார்கள் எனில், அல்லாஹ்வின் பிடி யிலிருந்து தப்ப மாட்டார்கள்.
மேலும் மற்றவர்களுக்கு இதில் இருக்கின்ற எச்சரிக்கை என்னவெனில், அவர்கள் மனதிலும்கூட நபிகளாரின் குடும்ப வாழ்வு தொடர்பாக ஏதேனுமோர் ஐயத்தையோ, தவறான கருத்தையோ கொண்டிருப்பார்களேயானால், மனதின் ஓரத்தில் சிந்தனையின் விளிம்பில் ஏதேனுமொரு தவறான எண்ணத்தை வளர்த்துக் கொண்டிருந்தõர்களேயானால் அவர்களின் இந்தக் கள்ளத்தனம் அல்லாஹ்விடமிருந்து மறைந்து இருக்காது என்பதாகும். இதனுடன் அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்றான சகிப்புத் தன்மையும் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. அதிலிருந்து ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், நபிகளாரின் கண்ணியத்துக்குக் களங்கம் விளைவிக்கின்ற சிந்தனை மனதில் எட்டிப் பார்த்தாலும் அது தண்டனைக்குரியதே.
என்றாலும் ஒருவரின் உள்ளத்தில் எப்போதேனும் இந்த மாதிரியான சஞ்சலங்கள் எட்டிப் பார்க்க அவர் அதனை அப்படியே அகற்றி எறிந்துவிடுகின்றார் எனில், வல்லமையும் மாண்பும் நிறைந்த இறைவன் அவரை மன்னித்துவிடுவதற்கான சாத்தியமும் இருக்கின்றது என்பதை உணர்த்துகின்ற விதத்தில்தான் அல்லாஹ் சகிப்புத்தன்மையுடையவன் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
92. இதற்கு இரண்டு பொருள்கள் உண்டு. ஒன்று: ‘மேலே வசன எண் 50இல் நபிகளாருக்கு ஆகுமானவர்களாய் ஆக்கப்பட்ட பெண்களைத் தவிர வேறு எந்தவொரு பெண்மணியும் இப்போது நபிகளாருக்கு ஆகுமானவர்கள் அல்லர்.’ இரண்டு: ‘இப்போது உம்முடைய கண்ணியத்துக்குரிய தூய்மையான மனைவியர் சிரமத்திலும் நஷ்டத்திலும் உமக்கு உறுதுணையாக இருப்பதற்கு மனப்பூர்வமாக முன் வந்த நிலையில், மறுமைக்காக உலகத்தை அவர்கள் உதறித் தள்ளிவிட்டுள்ள நிலையில், நீர் அவர்களுடன் எவ்வாறு வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்பதையும் அவர்கள் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டிருக்க, அவர் களில் எவரேனும் ஒருவருக்குத் தலாக் கொடுத்துவிட்டு அவருக்குப் பதிலாக வேறொருவரை உம்முடைய மனைவியாக ஆக்கிக் கொள்வது உமக்கு ஆகுமானதல்ல.’
93. நிக்காஹ் செய்து கொண்ட மனைவியர் மட்டுமின்றி வலக்கரம் சொந்தமாக்கப்பட்ட பெண்களை அனுபவிப்பதற்கும் அனுமதி உண்டு என்பதையும் மேலும் அவர்களின் எண்ணிக்கைக்கு எந்த வரம்பும் கிடையாது என்பதையும் இந்த வசனம் தெள்ளத்தெளிவாக உணர்த்துகின்றது. இதே கருத்து அத்தியாயம் 4 அன்னிஸா வசன எண் 3, அத்தியாயம் 23 அல்முஃமினூன் வசன எண் 6, அத்தியாயம் 70 அல்மஆரிஜ் வசன எண் 30 ஆகிய வசனங்களிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வசனங்கள் அனைத்திலும் வலக்கரம் சொந்தமாக்கப்பட்ட பெண்கள் மணம் செய்து கொள்ளப்பட்ட மனைவியருடன் சேர்க்கப்படாமல் தனி இனமாக, வகையாகத் தாம் குறிப்பிடப்படுகின்றார்கள். மேலும் அவர்களுடன் திருமண உறவு வைத்துக் கொள்வது ஆகுமானதாய் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அது மட்டுமின்றி அத்தியாயம் அன்னிஸாவின் மூன்றாவது வசனத்தில் மணம் செய்துகொள்ளப்பட்ட மனைவியரின் உச்ச வரம்பு நான்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இறைவன் அந்த வசனத்திலும் வலக்கரம் சொந்தமாக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கைக்கு உச்சபட்ச வரம்பை விதிக்கவில்லை. மேலும் இது தொடர்பான இதர வசனங்களிலும் இது போன்ற எந்தவொரு வரம்பு குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. அதற்கு மாறாக இங்கு நபிகளாரை விளித்து, இதற்குப் பின்னர், வேறு பெண்களை மணம் முடிப்பதோ தற்போதைய மனைவியரை தலாக் செய்துவிட்டு வேறு பெண்களை மணம் முடிப்பதோ ஆகுமானதல்ல. அதற்கு மாறாக வலக்கரம் சொந்தமாக்கப் பட்ட பெண்கள் ஆகுமானவர்கள் ஆவர்’ என்று சொல்லப்படுகின்றது. இதிலிருந்து வலக்கரம் சொந்தமாக்கப்பட்ட பெண் களின் எண்ணிக்கைக்கு எந்தவிதமான உச்ச வரம்பும் விதிக்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது.
ஆனால் இறைவனின் ஷரீஅத்தின் இந்தச் சலுகை இனி கணக்குவழக்கு இல்லாமல் ஏராளமான அடிமைப்பெண்களை விலைக்கு வாங்கி உல்லாசமாக இருப்பதற்கான அனுமதியை செல்வந்தவர்களுக்குத் தருகின்றது என்று இதற்குப் பொருள் அல்ல. அதற்கு மாறாக உலக மோகத்தில் திளைத்து மன இச்சைகளை வழிபடுகின்ற ஆசாமிகள் இந்தச் சட்டத்திலிருந்து முறையற்ற ஆதாயம் தேடியிருக்கின்றார்கள் என்றுதான் சொல்ல முடியும். மக்களின் வசதிக்காகத்தான் சட்டம் வகுக்கப்பட்டது. அதிலிருந்து ஆதயாம் தேடுவதற்காக அல்ல.
இதற்கு எடுத்துக்காட்டாக ஒருவர் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்துகொள்ளலாம் என ஷரீஅத் அனுமதி அளிக்கின்றது. தம்முடைய மனைவியை தலாக் செய்கிற, அவளுடைய இடத்தில் வேறு ஒரு பெண்ணை மணம் முடித்துக் கொள்கின்ற உரிமையையும் ஷரீஅத் தந்துள்ளது. இந்தச் சட்டம் மனிதனின் தேவைகளைக் கருத்தில் கொண்டுதான் வகுக்கப்பட்டது. இப்போது ஒரு மனிதர் வெறுமனே தம்முடைய இச்சைகளைத் தணித்துக் கொள்வதற்காக, உல்லாசமாக வாழ்வதற்காக நான்கு பெண்களை மணம் முடிக்கின்றார்; அவர்களோடு சில காலம் வாழ்ந்த பிறகு அவர்களைத் தலாக் செய்துவிட்டு அவர்களின் இடத்தில் வேறு நான்கு பெண்களை மணம் முடித்துக் கொள்கின்றார் எனில் அது சட்டம் தருகின்ற சலுகையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஆதாயம் தேடுவதாகும். அதற்கு அந்த மனிதர்தான் பொறுப்பாவார். இறைவனின் சட்டம் பொறுப்பாகாது.
இதே போன்று போரின் போது கைது செய்யப்படுகின்ற பெண்களை அவர்களின் சமூகம் முஸ்லிம் கைதிகளை விடுவித்து அவர்களை மீட்டுக்கொள்வதற்கோ, ஃபித்யா கட்டணம் கொடுத்து மீட்டுக்கொள்வதற்கோ ஆயத்தமாகாத போது, அவர்களை அடிமைப் பெண்களாய் ஆக்கிக் கொள்வதற்கு ஷரீஅத் அனுமதிக்கின்றது. அரசு அவர்களை எந்த மனிதர்கள் வசம் ஒப்படைக்கின்றதோ அந்த மனிதர்களுக்கு அவர்களை அனுபவிப்பதற்கான உரிமையும் உண்டு. சமூகத்தில் ஒழுக்கச் சீர்கேடு பரவக் கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு.
மேலும் போரின் போது கைது செய்யப்படுகின்றவர்களின் எண்ணிக்கையை வரையறுக்க இயலாது என்பதால் ஒரு மனிதர் ஒரே நேரத்தில் எத்துணை அடிமைகளையும் எத்துணை அடிமைப் பெண்களையும் தம் வசம் வைத்திருக்கலாம் என இவர்களின் எண்ணிக்கைக்கான உச்ச வரம்பை சட்டரீதியாக வரையறுப்பதற்கும் சாத்தியம் இல்லாமல் போனது. ஓர் அடிமைக்கோ அடிமைப் பெண்ணுக்கோ அவர்களின் எஜமானனோடு ஒத்துப் போகாத போது ஒரே ஆளின் ஆளுகையின் கீழ் காலமெல்லாம் கழிக்க வேண்டிய கட்டாயம் அடிமை, எஜமானன் ஆகிய இரு தரப்பினருக்கும் வேதனை தரும் என்பதால் அவர்கள் வேறு ஒருவர் வசம் மாற்றப்படுவதை சாத்தியம் ஆக்குவதற்காகத்தான் அடிமைப்பெண்களையும் அடிமைகளையும் விற்கின்ற, விலை கொடுத்து வாங்குகின்ற நடைமுறை கூட ஆகுமானதாக்கப்பட்டிருந்தது. ஷரீஅத்தின் இந்த நெறிமுறைகள் அனைத்தும் மனித வாழ்வின் நிலைமைகள், தேவைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வசதிக்காக வேண்டித்தான் வகுக்கப்பட்டன. பணக்காரர்கள் தங்களின் உல்லாச சொகுசு வாழ்வுக்கான வழிவகையாக இவற்றை ஆக்கிக் கொள்கின்றார்கள் எனில், அதற்கான பழி அவர்களைத்தான் சேருமே தவிர ஷரீஅத் அதற்குப் பொறுப்பாகாது.
(தொடரும்)