மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

நபிகளாரின் மீது நல்வாழ்த்துகளைச் சொல்லுங்கள்!
மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : கூ. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், ஆகஸ்ட் 1-15, 2025


அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபியின் மீது ஸலவாத் எனும் நல்வாழ்த்துகளை அனுப்புகின்றார்கள்.105 நம்பிக்கை கொண்டவர்களே! நீங்களும் அவர்மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள்.106


அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் · திருவசனம் : 56


105. அல்லாஹ்வின் தரப்பிலிருந்து நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் எனும் நல் வாழ்த்துகளை அனுப்புவதன் பொருள் என்னவெனில் அவன் நபி(ஸல்) அவர்கள் மீது எல்லையில்லா பேரன்பு கொண்டிருக்கின்றான்; நபிகளாரைப் பாராட்டுகின்றான்; புகழ்கின்றான்; நபிகளாரின் பணிகளில் பரக்கத் எனும் அருள்வளத்தைத் தந்து அவற்றைச் செழித்தோங்கச் செய்கின்றான்; நபிகளாரின் பெயரை மேலோங்கச் செய்கின்றான்; நபி(ஸல்) அவர்கள் மீது தம்முடைய அருள்வளங்களின் பெருமழையைப் பொழியச் செய்கின்றான்.

வானவர்கள் தரப்பிலிருந்து நபிகளார் (ஸல்) மீது ஸலவாத் அனுப்புவதன் பொருள் என்னவெனில் அவர்கள் நபி(ஸல்) அவர்கள் மீது மிதமிஞ்சிய பேரன்பு வைத்திருக்கின்
றõர்கள்; நபிகளாருக்காக இறைவனிடம் மன்றாடுகின்றார்கள்; அல்லாஹ் நபிகளாருக்கு அதிகமதிகமான உயர்ந்த படித்தரங்களை அருள்வானாக என்றும், நபிகளாரின் மார்க்கத்தை மேலோங்கச் செய்வானாக என்றும், நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த ஷரீஅத் சட்டங்களைச் செழித்தோங்கச் செய்வாயாக என்றும், நபிகளாரை மகாமே மஹ்மூத் என்கிற மிக உயர்வான சிறப்பான இடத்தில் சேர்த்துக் கொள்வாயாக என்றும் அவர்கள் பிரார்த்திக்கின்றார்கள்.

இதற்கு முந்தைய, பிந்தைய வசனங்களை ஒரு பார்வை பார்க்கின்ற போது இந்த உரைத்தொடருக்கு நடுவே இந்தக் கருத்து எந்த நோக்கத்துடன் எடுத்துரைக்கப்படுகின்றது என்பதைத் தெள்ளத்தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகின்றது. அது எத்தகைய நேரம் எனில், இஸ்லாத்தின் எதிரிகள் இந்தத் தெள்ளத் தெளிவான சத்திய மார்க்கத்தின் எழுச்சியையும் வளர்ச்சியையும் பார்த்துப் பார்த்து வயிறெரிய அதனைத் தணித்துக் கொள்வதற்காக நபிகளாருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைச் சரமாரியாக வீசிக் கொண்டிருந்தார்கள்.

மேலும் இவ்வாறு அவதூறு சேற்றை வாரி இறைப்பதனால் நபிகளாரின் ஒழுக்கத்தின் எதன் காரணமாக இஸ்லாத்தின் வளர்ச்சியும் முஸ்லிம்களின் எழுச்சியும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போய்க் கொண்டிருக்கின்றதோ அந்த ஒழுக்க வலிமையின் தாக்கம் மந்தமாகி விடும் என்று அவர்கள் கணக்குப் போட்டார்கள். இந்த நிலைமையில்தான் இறைவன் இந்த வசனத்தை அருளி இறைமறுப்பாளர்களும் இணைவைப்பாளர்களும்  என்னுடைய நபியின் மீது அவதூறு வீசி மட்டம் தட்டுவதற்காக என்னென்ன வகையான முயற்சிகளை வேண்டுமானாலும் செய்து பார்த்துக் கொள்ளட்டும்; இறுதியில் அவர்கள் மண்ணைத்தான் கவ்வுவார்கள்.

ஏனெனில்  நான்  என்  நபியின்மீது மிகுந்த பரிவு உள்ளவனாக இருக்கின்றேன். ஒட்டுமொத்த பேரண்டத்தின் நிர்வாகமும் ஒழுங்கும் எந்த வானவர்கள் மூலமாக நிலைபெற்றிருக்கின்றதோ  அந்த  வான வர்கள் அனைவரும் என் நபிக்கு உறு துணையாக, நபியின் புகழ் பாடுபவர்களாக இருக்கின்றார்கள். நான் நபியின் பெயரையும் புகழையும் மேலோங்கச் செய்து கொண்டிருக்கின்ற போது, என்னுடைய வானவர்கள் என் நபியின் புகழ் பாடிக் கொண்டிருக்கின்ற போது, இறைமறுப்பாளர்களாலும் இணைøவப்பாளர்களாலும் நபியை இழிவுபடுத்துவதன் மூலமாக எதனைத்தான் அடைய முடியும்?

என்னுடைய அருள்வளங்களும், என்னுடைய கருணையும் கொடையும் நபியுடன் இருக்கின்ற போது, என்னுடைய வானவர்கள் இரவும் பகலும் ‘அகிலங்களின் அதிபதியே! முஹம்மத் நபியின் படித்தரங்களை மேன்மேலும் உயர்த்திக் கொண்டே இருப்பாயாக! அவருடைய மார்க்கத்தைச் செழித்தோங்கச் செய்வாயாக!’ என அவருக்காகப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்ற போது அவர்களால் தங்களின் ஒட்டை ஒடிசலான ஆயுதங்களால் என் நபியை என்ன செய்துவிட முடியும்?

106. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், முஹம்மத்(ஸல்) அவர்களின் மூலமாக நேர்வழி கிடைக்கப் பெற்றவர்களே! நீங்கள் அவருடைய சிறப்பையும் மாண்பையும் உணருங்கள். அவர் உங்களுக்குச் செய்துள்ள மகத்தான பேருதவிக்காக அவருக்கு நன்றி செலுத்துங்கள். அறியாமையின் இருள்களில் நீங்கள் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருந்தீர்கள்; அந்த மனிதர்தாம் உங்களுக்கு அறிவொளியை வழங்கினார். நீங்கள் ஒழுக்கக்கேடுகளின் அதல பாதாளங்களில் வீழ்ந்து கிடந்தீர்கள்; அவர்தாம்  உங்களை  அவற்றிலிருந்து மீட்டெடுத்தார். மேலும் உங்களை எந்த அளவுக்கு மாற்றியமைத்து மெருகூட்டினார் எனில் இன்று நல்லொழுக்கத்தின் வடிவமாய் மிளிர்கின்றீர்கள்.

நீங்கள்  காட்டுமிராண்டித்தனமான செயல்களிலும் மிருகத்தனமான நடத்தையிலும் சிக்கிக் கிடந்தீர்கள். அந்த மனிதர் உங்களை மிகவும் சிறப்பான மனிதப் பண்பாட்டைக் கொண்டு அழகுபடுத்தினார். உங்கள் மீது அவர் இத்துணை பேருதவிகளைச் செய்தார் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் இறைநிராகரிப்பின் உலகம் அந்த மனிதர் மீது பாய்ந்து பிராண்டத் துடிக்கின்றது. இல்லையேல் அவர் தனிப்பட்ட முறையில் வேறு எவருக்கும் எந்தவகையிலும் தீங்கு இழைத்ததில்லை.

இதனால்தான்  அவருக்கு  நீங்கள் செலுத்த வேண்டிய நன்றி எத்தகையதாய் ஜொலிக்க வேண்டுமெனில், நன்மையின் வடிவமாய் மிளிர்கின்ற அவர் மீது அந்த இறைமறுப்பாளர்கள் எந்த அளவுக்கு வன்மமும் குரோதமும் கொண்டிருக்கிறார்களோ அதற்கு இணையாக இன்னும் சொல்லப் போனால் அதற்கும் பன்மடங்கு அதிகமான அளவில் நீங்கள் அவரை நேசியுங்கள். அவர்கள் அவரை எந்த அளவுக்கு வெறுக்கின்றார்களோ அதே அளவுக்கு மட்டுமின்றி அதற்கும் மேலாக அதனை விட அதிகமாக நீங்கள் அவர்மீது அன்பு செலுத்துங்கள்; நலன் நாடுங்கள்.

அவர்கள் எந்த அளவுக்கு அவரை இழிவுபடுத்துகின்றார்களோ அதே அளவுக்கு மட்டுமல்ல, அதற்கும் மேலாக நீங்கள் அவருடைய புகழ் பாடுங்கள்; அவரைப் போற்றுங்கள். அவர்கள் எந்த அளவுக்கு அவருக்குக் கேடு விளைவிக்கத் துடிக்கின்றார்களோ நீங்கள் அதே அளவுக்கு மட்டுமின்றி அதற்கும் பன்மடங்கு அதிகமாக அவருடைய நலன் நாடுங்கள். மேலும் அவருக்காக வானவர்கள் இரவும் பகலும் செய்கின்ற அதே பிரார்த்தனையை ‘ஈருலுலகங்களின் அதிபதியே! உம்முடைய நபி எங்கள் மீது எவ்வாறு கணக்கற்ற அருள்வளங்களைப் பொழிந்திருக்கின்றாரோ அவ்வாறே நீயும் அவர் மீது கணக்கற்ற அருட்கொடைகளை வழங்குவாயாக! அவர்களின் அந்தஸ்தை எல்லோரையும் விட மிக அதிகமாக உயர்த்துவாயாக! மேலும் மறுமையிலும் உனக்கு நெருக்கமானவர்கள் அனைவரையும் விட அதிகமான நெருக்கத்தை நீ அவருக்கு அருள்வாயாக!’ என்று நீங்களும் பிரார்த்தியுங்கள்.

இந்த  வசனத்தில்  முஸ்லிம்களுக்கு இரண்டு  கட்டளைகள்  தரப்பட்டுள்ளன. ஒன்று ஸல்லூ அலைஹி. இரண்டாவது ஸல்லிமூ தஸ்லீமா. ஸலவாத் என்கிற சொல் அலா என்கிற வினையெச்சத்துடன் வருகின்றபோது அதற்கு மூன்று பொருள்கள் உண்டு. ஒன்று, ஒருவர் பக்கம் ஈர்க்கப்படுதல், அவரிடம் அன்புடன் திரும்புதல், அவர் பக்கம் சாய்தல். இரண்டு ஒருவரைப் புகழ்தல். பாராட்டுதல். மூன்று ஒருவருக்காகப் பிரார்த்தித்தல்.

இது வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ்வுக்காக இந்தச் சொல் ஆளப்படுகின்ற போது மூன்றாவது பொருள் பொருந்தாது என்பது வெளிப்படை. ஏனெனில் அல்லாஹ் வேறு எவரிடமும் பிரார்த்திப்பான் என்பது சற்றும் அறிவுக்குப் பொருந்தாத கருத்தோட்டமாகும். எனவே அல்லாஹ்வைத் தொடர்புபடுத்திப் பேசுகின்ற போது முதல் இரண்டு பொருள்களில் மட்டுமே இந்தச் சொல் ஆளப்படும். ஆனால் இந்தச் சொல் அடியார்களுக்காக ஆளப்படும் போது அவர்கள் வானவர்களானாலும் சரி, மனிதர்களானாலும் சரி மூன்று பொருள்களையும் கொள்கின்ற வகையில்தான் ஆளப்படும். அதில் அன்பு, நேசம், பாசம் ஆகியவையும் இருக்கும். புகழ்பாடுகின்ற, போற்றுகின்ற பொருளும் இருக்கும். அருள்வளங்களை யாசிக்கின்ற பிரார்த்திக்கின்ற பொருளும் இருக்கும்.
எனவே நபிகளாருக்காக ஸல்லூ அலைஹி செய்யுங்கள் என இறைநம்பிக்கையாளர்களுக்குத் தரப்பட்டுள்ள கட்டளையின் பொருள், ‘நம்பிக்கையாளர்களே! நீங்கள் அவரை நேசியுங்கள். அவர் மீது அன்பு செலுத்துங்கள். அவரின் புகழ் பாடுங்கள். அவரைப் போற்றுங்கள். அவருக்காகப் பிரார்த்தியுங்கள்’ என்பதாகத் தான் அமையும்.

ஸலாம் என்கிற சொல்லும் இரண்டு பொருள்களைக் கொண்டதாகும். ஒன்று எல்லாவகையான ஆபத்துகள், இழப்புகள், பின்னடைவுகள் போன்றவற்றிலிருந்து பாது காப்பாக இருத்தல். இதனை நாம் உருது மொழியில் சலாமதி என்கிற சொல்லைக் கொண்டு குறிப்பிடுகின்றோம். இரண்டாவது பொருள் சமாதானம், எதிர்ப்புத் துறப்பு என்பதாகும்.  ஆக  நபிகளாருக்காக ஸல்லிமு தஸ்லீமா செய்யுங்கள் என்பதற்கு ஒரு பொருள் என்னவெனில், ‘நீங்கள் அவருக்காக முழுமையான பாதுகாப்பையும், அமைதியையும், இணக்கத்தையும் வேண்டிப் பிரார்த்தியுங்கள்’ என்பதாகும். மேலும் இரண்டாவது பொருள் என்னவெனில், ‘நீங்கள் அவருக்கு முழுமையாக உங்களின் உடலாலும் உள்ளத்தாலும் ஒத்துழைப்புத் தாருங்கள். அவரை எதிர்ப்பதை விட்டு முற்றாக விலகி நில்லுங்கள். அவருக்கு வாய்மையாகக் கீழ்ப்படியுங்கள். பின்பற்றுங்கள்.’ என்பதாகும்.

இந்தக் கட்டளை அருளப்பட்டதும் ஏராளமான நபித்தோழர்கள் நபிகளாரை அணுகினார்கள். ‘இறைவனின் தூதரே! ஸலாம் சொல்வதன் வழிமுறையை நீங்கள் எங்களுக்குக் கற்பித்துக் கொடுத்திருக்கின்றீர்கள். (அதாவது தொழுகையின்போது அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வ ரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு நேரடி சந்திப்பின்போது அஸ்ஸலாமு அலைக்க யா ரஸுலுல்லாஹ்) ஆனால் தங்களின் மீது ஸலவாத் அனுப்புகின்ற வழிமுறை என்ன?’ இதற்குப் பதில் அளிக்கின்ற போது நபிகளார்(ஸல்) ஏராளமானோருக்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில்  தரூத்  வாசகங்களை (ஸலவாத் எனும் நல்வாழ்த்துகளை அனுப்புவதற்கான வாசகங்களைக்) கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
(தொடரும்)

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்