நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: ‘என்னுடைய அடியான் என்னைச் சந்திக்க விரும்புகின்ற போது நானும் அவனைச் சந்திக்க விரும்புகின்றேன். மேலும் அவன் என்னைச் சந்திக்க விரும்பாத போது நானும் அவனைச் சந்திக்க விரும்புவது இல்லை.’
அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : மாலிக், புகாரி, நஸாயீ
இறைவனைச் சந்திக்க வேண்டும் என்கிற விருப்பம் இறைநம்பிக் கையின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். இறைவனும் இப்படிப்பட்ட அடியார்களை இறைவனைச் சந்திக்க வேண்டும் என்கிற தணியாத விருப்பத்தைக் கொண்ட அடியார்களைச் சந்திக்கவே விரும்புகின்றான்.
தொழுகைக்கான நேரம் வருகின்ற போது தொழுகைக்காகப் பள்ளிவாசலை நோக்கி நாம் விரைந்து செல்வதும், அந்தத் தருணத்திற்காகவே காத்திருப்பதும், அதற்காக நல்ல ஆடைகள் அணிந்து பொலிவுடன் பேரார்வத்துடன் செல்வதும், பள்ளிவாசலுக்குச் சென்று அங்கே தொழுகைக்கான நேரத்துக்காகக் காத்திருப்பதும் இவை எல்லாமே தொழுகை கூட ஒரு வகையில் இறைவனுடனான சந்திப்பு என்பதால்தான்.
ஆனால் உண்மையான சந்திப்போ இந்த உலக வாழ்க்கை முடிந்த பிறகுதான் சாத்தியமாகும். இதனால் எந்தவொரு நம்பிக்கையாளனும் மரணத்தை வெறுப்பதில்லை. அதற்குப் பதிலாக மரணத்தை நேசிக்கின்றான். ஏனெனில் இறைவனைச் சந்திப்பதற்கான வழிவகையாகத்தான் அவன் மரணத்தைப் பார்க்கின்றான்.
ஆனால் எவருக்கு இறைவனைச் சந்திக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருப்பதில்லையோ அவர் குறித்து இறைவனும் அலட்டிக் கொள்வதில்லை. இந்த மாதிரியான மனிதர்களைப் பொறுத்தவரை மரணம் என்பதே ஒரு விபத்து தான். இறைவனுடனான சந்திப்பாக அதனை உருவகப்படுத்த முடியாது.