மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

நல்வாழ்த்தில் பொதிந்துள்ள குறிப்புகள்
மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : கூ. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், ஆகஸ்ட் 16-31, 2025



அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபியின் மீது ஸலவாத் எனும் நல்வாழ்த்துகளை அனுப்புகின்றார்கள். நம்பிக்கை கொண்டவர்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள்.106


அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் · திருவசனம் : 56


106ஆம் விளக்கக் குறிப்பின் கடந்த இதழ் தொடர்ச்சி

நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த தரூத் (நல்வாழ்த்துகள்) வாசகங்களில் பொதிந்துள்ள சில முக்கியமான குறிப்புகளை நல்ல முறையில் விளங்கிக் கொள்வது அவசியமாகும். அவற்றின் விவரம் வருமாறு:

முதலாவதாக,  இவையனைத்திலும் தமக்கு ஸலவாத் நல்வாழ்த்துகளை(தரூத்) அனுப்புவதற்கான  வழிமுறையை  நபி களாரே முஸ்லிம்களுக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள். அதாவது, ‘நீ முஹம்மத்(ஸல்) மீது ஸலவாத் சொல்வாயாக!’ என்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும்படிச்  சொல்லியிருக்கின்றார்கள். இதன் பின்னால் இருக்கின்ற தாத்பர்யத்தைச் சரியாக விளங்கிக் கொள்ளாத குறுமதியாளர்கள் சிலர் உடனே, ‘இதென்ன விந்தையாக இருக்கின்றது. வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ்தான் நபிகளார்(ஸல்) மீது ஸலவாத் சொல்லுங்கள்’ என்று நம்மைப் பார்த்து ஆணையிடுகின்றான். ஆனால் நாமோ ‘நீயே நபிகளாருக்கு ஸலவாத் சொல்வாயாக’ என்று அவனிடமே கோரிக்கை  வைக்கின்றோமே’  என்று ஆட்சேபத்தைக் கிளப்பிவிடுகின்றார்கள்.

இத்தனைக்கும் உண்மையில் இங்கு நபி(ஸல்) அவர்கள், ‘என் மீது ஸலவாத் நல் வாழ்த்துகளைச் சொல்லி அதனை முழுமையாக நிறைவேற்ற விரும்பினாலும் அது உங்களால் சாத்தியமாகாது. எனவே என் மீது ஸலவாத் சொல்லும்படி அல்லாஹ் விடமே பிரார்த்தியுங்கள்’ என்று உணர்த்தியிருக்கின்றார்கள். நம்மால் நபி களாரின் படித்தரங்களை உயர்த்த முடியாது என்பதும் அல்லாஹ்தான் அதற்கான ஆற்ற லையும் அதிகாரத்தையும்  கொண்டிருக்கின்றான் என்பதும் வெளிப்படை.

நபி(ஸல்) அவர்கள் நம் மீது பொழிந்துள்ள அருள்வளங்களுக்கு நம்மால் பகரமாக எதனையும் செய்ய முடியாது; அவற்றுக்கான நன்மைகளையும் நற்கூலிகளையும் வழங்குகின்ற ஆற்றல் படைத்தவன் அல்லாஹ் மட்டுமே. நம்மால் நபிகளாரின் புகழை மேன்மேலும் செழித்தோங்கச் செய்வதற்கும் நபிகளாரின் மார்க்கத்தை திரும்பும் திசையெங்கும் வளர்ந்தோங்கச் செய்வதற்கும் நாம் என்னதான் இடைவிடாமல் பாடுபட்டாலும்கூட அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ஒத்துழைப்பும் நாட்டமும் இல்லாமல் நம்மால் வெற்றிபெறவே இயலாது.

இன்னும் சொல்லப் போனால் நபி(ஸல்)அவர்கள் மீது பேரன்பு கொள்வதற்கும் பற்றும் பக்தியும் பிணைப்பும் ஏற்படுத்திக் கொள்வதற்கும் கூட அல்லாஹ்வின் உதவியும் அருளும் இன்றியமையாத தேவைகளாய்  இருக்கின்றன.  இல்லையேல் ஷைத்தான் என்னென்ன விதமான ஊசலாட்டங்களை நம் மனத்துக்குள் விதைத்து நம்மை நபிகளாரிடமிருந்து அப்புறப்படுத்திவிடுவதில் என்னென்ன வழிகளில் வெற்றி பெறுவான் என்பது யாருக்குத் தெரியும்?

எனவே நபிகளாருக்குத் ஸலவாத் சொல்வதில் முழுமையும் நிறைவும் அடைய வேண்டும்  எனில்,  அல்லாஹ்விடம் நபிகளாருக்கு ஸலவாத் சொல்வாயாக என்று பிரார்த்திப்பதைத்  தவிர  வேறு  வழி இல்லை. எவர் ‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின்’ என்று சொல்கின்றாரோ அவர் அல்லாஹ்வின் திருமுன் தன்னுடைய இயலாமையையும்  போதாமையையும் ஒப்புக் கொண்டவாறு, ‘இறைவா! உன்னுடைய நபி மீது ஸலவாத் நல்வாழ்த்துகள் சொல்வதில் என்னால் முழுமையையும் நிறைவையும் பெறவே இயலாது. நீயே என் சார்பாக அதனை நிறைவேற்றிவிடு. அதனை நிறைவேற்றுவதற்காக  என்னிடமிருந்து என்ன சேவையை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்’ என்று இறைஞ்சுகின்றான்.

இரண்டாவதாக, இந்தப் பிரார்த்தனையை தமக்கானதாக மட்டுமே ஆக்கிக் கொள்வதற்கு நபிகளாரின் பேரன்பும் பெருங்கிருபையும் நிறைந்த உள்ளம் ஒப்புக் கொள்வதில்லை. எனவே அதற்கும் மேலாக தம்முடன் தம்முடைய ‘ஆல்’, தம்முடைய துணைவியர், வழித்தோன்றல்கள் போன்றோரையும் அதில் சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். துணைவியர், வழித்தோன்றல்கள் ஆகியவற்றின் பொருள் தெளிவானது; வெளிப்படையானது.  ஆனால்  ‘ஆல்’  என்கிற சொல்லைப் பொறுத்தவரை அது வெறுமனே நபிகளாரின்  குடும்பத்தாரை  மட்டுமே குறிக்கின்ற  சொல்  கிடையாது.  அதற்கு மாறாக நபிகளாரைப் பின்பற்றி நடப்பவர்களும் நபிகளாரின் வழிமுறையை ஏற்றுக் கொண்டவர்களும் அதில் வந்துவிடுகின்றார்கள்.

அரபு மொழி அகராதியில் ‘ஆல்’, ‘அஹல்’ ஆகிய இரண்டு சொற்களுக்கும் இடையிலான பொருள் வேறுபாடு என்னவெனில், ஒருவரின் ‘ஆல்’ என்று குறிப்பிடும்போது அவரைப் பின்பற்றுபவர்கள், அவருடைய தோழர்கள், அவருடைய உதவியாளர்கள் அவர்கள் உறவினராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி வந்துவிடுகின்றார்கள். ஒருவரின் ‘அஹல்’ என்று குறிப்பிடும்போது அவருடைய உறவினர்கள், இரத்த பந்த சொந்தங்கள் அவர்கள் அவரைப் பின்பற்றுபவராக, உதவியாளர்களாக, ஒத்துழைப்பவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவரும் வந்துவிடுகின்றார்கள்.

திருக்குர்ஆனில் ஆலே ஃபிர்அவ்ன் என்கிற சொல் 14 இடங்களில் ஆளப்பட்டுள்ளது. அவற்றில் எந்தவொரு இடத்திலும் கூட ‘ஆல்’ என்கிற சொல் ஃபிர்அவ்னின் உறவினர்களை மட்டுமே குறிக்கவில்லை; அதற்கு மாறாக மூஸா(அலை) அவர்களை எதிர்த்து ஃபிர்அவ்னின் பக்கம் அவனுக்குத் துணை நின்றவர்களைத்தாம் அது குறிக்கும். (எடுத்துக்காட்டாக திருக்குர்ஆன் 2:49,50, 3:11, 7:130, 40:46).

நபிகளாரின் வழிமுறையை மேற்கொள்ளாதவர்கள் அவர்கள் என்னதான் நபிகளாரின் குடும்பத்தில் ஒருவராக இருந்தாலும் சரி ஆலே முஹம்மதின்(ஸல்) வட்டத்திலிருந்து வெளியேறிவிடுகின்றார். மேலும் நபிகளாரின் வழிமுறையை மேற் கொள்பவர் அவர் நபிகளாரின் தூரத்துச் சொந்தமாகக் கூட இல்லாமல் போனாலும் சரி ஆலே முஹம்மதின்(ஸல்) வட்டத்தைச் சேர்ந்தவராகிவிடுகின்றார். அதே சமயம் நபிகளாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் எவர்கள் நபிகளாரின் வழிமுறையைப் பின்பற்றுபவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்கள் வம்சத் தொடர்பு, நபிகளாரைப் பின்பற்றி நடத்தல் ஆகிய இரண்டு சிறப்புகளைக் கொண்டிருப்பதால் ஆலே முஹம்மத்(ஸல்)    நபிகளாரைப்  பின்பற்றுபவர்களில் மிக உயர்ந்த சிறப்பிடத்தைக் கொண்டவர்கள் ஆவர்.

(தொடரும்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்