அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம், ‘ஆபத்துமிக்கவையாக எனக்கு நீங்கள் எடுத்துரைத்த வற்றில் எல்லாவற்றையும் விட மிக அதிகமாக ஆபத்துமிக்கது எது’ எனக் கேட்டேன்.
சுப்யான்(ரலி) கூறுகின்றார்: நபி(ஸல்) அவர்கள் தம்முடைய நாவைப் பிடித்துச் சொன்னார்கள்: ‘இது’.
அறிவிப்பாளர் : சுப்யான் பின் அப்துல்லாஹ் ஸகஃபி(ரலி)
நூல் : திர்மிதி
நாவைத் தவறாகப் பயன்படுத்துவதால் விளைகின்ற குழப்பமும் கலகமும் மிகக் கொடியவை என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. அதனை எவரும் மறுக்கவும் மாட்டார்கள். ஒருவர் நாவால் மொழிகின்ற ஒவ்வொரு சொல்லும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதே. அது ஏற்படுத்துகின்ற பாதிப்பைப் பொறுத்து அது தேனாகவும் இனிக்கும்; விஷமாகவும் கொட்டும். தேனாக இனிக்குமா, விஷமாகக் கொட்டுமா என்பதைத் தீர்மானிப்பது நாவின் மூலம் சொற்களை மொழிகின்ற மனிதர்தான்.
இதனால்தான் நாவைப் பயன்படுத்துகின்ற விஷயத்தில் மிக மிக விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சொற்கள்தாம் இதயங்களை இணைக்கவும் செய்கின்றன. இதயங்களுக்கிடையே பிளவையும் பிணக்கையும் மூட்டவும் செய்கின்றன. சொற்கள்தாம் மனங்களை உடைக்கவும் செய்கின்றன. நெஞ்சங்களை நெகிழவும் செய்கின்றன. மனிதர்களை ஒன்றுசேர்ப்பதும் சொற்கள்தாம். மனிதர்களை ஒருவரைவிட்டு ஒருவர் விலகிப் போகச் செய்வதும் சொற்கள்தாம். அழ வைப்பதும் சொற்களே. சிரிக்க வைப்பதும் சொற்களே. சிந்திக்கத் தூண்டுவதும் சொற்களே.
உணர்வுகளைக் கிளறச் செய்து மனிதர்களை உசுப்புவதற்கும் இந்தச் சொற்களைப் பயன்படுத்த முடியும். கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற உணர்வுகளை இதமாக சாந்தப்படுத்துகின்ற ஆற்றலும் சொற்களுக்கு உண்டு. சில சமயம் மனிதனின் எழுதுகோலே அவனுடைய நாவாக ஆகிவிடுகின்றது. போர்பான் மன்னர்கள் (Bourbon Kings) பிரான்ஸ் நாட்டின் ஆற்றல் மிக்க எழுத்தாளர்களைக் கட்டுக்குள் வைத்திருந்திருப்பார்களேயானால் போர்பான் அரசுக்கு (House of Bourbon) இந்தப் பரிதாபகரமான நிலை ஏற்பட்டிருக்காது என நெப்போலியன் கூறினார்.
நாவால் சொல்லப்பட்டாலும் சரி, எழுதுகோல் மூலமாகக் காகிதத்தில் வெளிப்படுத்தப்பட்டாலும் சரி, சொற்களுக்கு இருக்கின்ற வலிமையையும் அவை ஏற்படுத்துகின்ற தாக்கத்தையும் எவராலும் மறுக்க முடியாது. சொற்களின் தவறான பிரயோகம் ஏற்படுத்துகின்ற துன்பத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. இறைவன் கொடுத்த இந்த ஆற்றலை இறைவனின் விருப்பத்திற்கு எதிராகப் பயன்படுத்தி இறைவனின் படைப்புகளை இறைவனுக்கு எதிரான கலகத்தில் தள்ளிவிடுவதை விட சொற்களின் தவறான பிரயோகம் ஏற்படுத்துகின்ற துன்பத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. இறைவன் கொடுத்த இந்த ஆற்றலை இறைவனின் விருப்பத்திற்கு எதிராகப் பயன்படுத்தி இறைவனின் படைப்புகளை இறைவனுக்கு எதிரான கலகத்தில் தள்ளிவிடுவதை விடப் பெரும் குற்றம் வேறு உண்டா? அந்த ஆற்றலைக் கொண்டு சமுதாயத்தில் சீர்திருத்தத்தையும் நன்மையையும் தழைத்தோங்கச் செய்வதற்குப் பதிலாக குழப்பத்தையும் கலகத்தையும் உண்டுபண்ணுவதை விடப் பெரிய கொடுமை வேறு உண்டா?
நம்முடைய ஆளுமையைப் பிரதிபலிப்பது நாம் மொழிகின்ற சொற்களே. தற்öசயலாக, நம்மையும் அறியாமல் ஒரு சொல்லைத் தப்பித்தவறிச் சொல்லி விட்டாலும் அது நம்முடைய உள்மனதின் அடிக் குரலாகத்தான் எடுத்துக் கொள்ளப்படும். நாம் மொழிகின்ற சொற்கள் நம்மை சுவனத்தின் உயர் நிலைகளில் உயர்த்திக் கொண்டிருக்கும். நமக்குத் தெரியாமலே இது நடந்திருக்கும். அதே போன்று நாம் சொன்ன ஒரு தவறான சொல், அல்லது தீய சொல் நம்மை மிகப் பெரும் பின்னடைவுக்குள்ளாக்கி விடும். நமக்குத் தெரியாமலே இது நடந்திருக்கும் என நபிமொழிகளில்
சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
நாம் எதனை சாதாரணமான சொல்லாக, எவ்வித இழப்பையும் ஏற்படுத்தாதவொன்றாக நினைத்துச் சொல்லி விட்டோமோ அந்தச் சொல்லே நம்மை மோசமானவர்களின் பட்டியலில் சேர்த்துவிடும் என்றும் நபிமொழிகளில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து நாவைப் பயன்படுத்துவதில் நாம் எந்த அளவுக்கு விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது.
பேச்சு, நாவு தொடர்பானவற்றுக்கே இந்த நிலைமை எனில் நம்முடைய செயல்கள், நடவடிக்கைகள் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஊகித்துப் பாருங்கள். நாம் ஒரு செயலை மிகச் சாதாரணமான செயலாக நினைத்துச் செய்திருப்போம். ஆனால் அதுவே இறை உவப்பைப் பெறுவதற்கு அடிப்படையாக அமைந்துவிடுவதற்கும் வாய்ப்பிருக்கின்றது. ஒரு செயலைச் சர்வ சாதாரணமாக எவ்வித மன உறுத்தலும் இல்லாமல் செய்திருப்போம். ஆனால் அதுவே இறைவனின் கோபத்திற்கு உள்ளாக்கிவிடுவதற்கும் வாய்ப்பிருக்கின்றது.