அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபியின் மீது ஸலவாத் எனும் நல்வாழ்த்துகளை அனுப்புகின்றார்கள். நம்பிக்கை கொண்டவர்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள்.106
· அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் · திருவசனம் : 56
106ஆம் விளக்கக் குறிப்பின் கடந்த இதழ் தொடர்ச்சி
நபி(ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்துள்ள தரூத்கள்(ஸலவாத் எனும் நல்வாழ்த்துகள்) ஒவ்வொன்றிலும், ‘இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும் ஆலே இப்ராஹீம் (அலை) மீதும் எந்த அளவுக்குக் கருணையும் கிருபையும் பொழியப்பட்டதோ அதே அளவுக்கு நபிகளார்(ஸல்) மீதும் பொழி யப்பட வேண்டும்’ என்கிற விவரமும் இருப்பதைப் பார்க்கலாம். இந்த விஷயத்தைப் புரிந்து கொள்வதில் மக்கள் ரொம்பத்தான் சிரமப்பட்டிருக்கின்றார்கள். இதற்கு வெவ்வேறு விளக்கங்களை எடுத்துரைத்திருக்கின்றார்கள். ஆனால் அவற்றில் எதுவுமே மனதைத் தொடுவதாக இல்லை.
என்னைப் பொறுத்தவரை இதற்கான சரியான விளக்கம் என்னவெனில் (உண்மையான அறிவு அல்லாஹ்விடம்தான் உள்ளது), இப்ராஹீம்(அலை) மீது இறைவன் செய்துள்ள மிகப் பெரும் அருளும் சிறப்பும் இதுவரை எந்தவொரு இறைத்தூதருக்கும் இல்லாத சிறப்பு என்னவெனில், நபித்துவத்தையும் வஹீ, வேதம் ஆகியவற்றை வழிகாட்டுதலுக்கான மூலமாகவும் ஏற்றுக்கொள்கின்ற மனிதர்கள் அனைவருமே அவர்கள் கிறித்தவர்களாக இருந்தாலும் சரி, யூதர்களாக இருந்தாலும் சரி, முஸ்லிம்களாக இருந்தாலும் சரி இப்ராஹீம் நபியின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்கின்றார்கள். வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ் இப்ராஹீம்(அலை) அவர்களை எவ்வாறு வெவ்வேறு நபிமார்களைப் பின்பற்றுபவர்களாலும் பெரிதும் போற்றப்படுகின்ற ஆளுமையாக ஆக்கியிருக்கின்றானோ அவ்வாறே தம்மையும் ஆக்கிவிடு! நபித்துவத்தை ஏற்றுக் கொள்கின்ற மனிதர் எவராக இருந்தாலும் அவருக்கு என்னுடைய நபித்துவத்தின் மீது நம்பிக்கை கொள்கிற நற்பேறு கிடைக்காமல் போய் விடக் கூடாது என்பதுதான் நபிகளாரின் இறைஞ்சுதலின் நோக்கமாக இருக்க வேண்டும்.
நபிகளாருக்கு ஸலவாத் சொல்வது இஸ்லாமிய வழிமுறை என்பதிலும், நபி களாரின் பெயர் உச்சரிக்கப்படுகின்றபோது ஸலவாத் ஓதுவது விரும்பத்தக்க செயல் என்பதிலும் குறிப்பாக தொழுகையின்போது ஸலவாத் ஓதுவது நபிகளாரின் வழிமுறை என்பதிலும் ஒட்டுமொத்த மார்க்க அறிஞர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து நிலவுகின்றது. வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ்வின் திட்டவட்டமான கட்டளையாக இருப்பதால் வாழ்நாளில் ஒரு முறையாவது நபிகளார் (ஸல்) மீது ஸலவாத் சொல்வது கடமை என்பதிலும் ஒருமித்த கருத்து காணப்படுகின்றது. ஆனால் இவற்றைத் தவிர பிற விவகாரங்களில் ஸலவாத் தொடர்பாக அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகளும் காணப்படுகின்றன.
தொழுகையில் இறுதியாக அத்தஹியாத் இருப்பின் போது நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வது ஃபர்ளு ஆகும் என்றும், ஒருவர் இதனைச் சொல்லத் தவறினால் அவருடைய தொழுகை ஆகாது என்றும் இமாம் ஷாஃபி(ரஹ்) கூறியிருக்கின்றார்கள். நபித்தோழர்களில் இப்னு மஸ்ஊத்(ரலி), இப்னு உமர்(ரலி), ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி) ஆகியோரும் தாபியீன் களில் ஷஅபி, இமாம் முஹம்மத் பாக்கர், முஹம்மத் பின் கஅப் குர்ஸயீ, முகாதில் பின் ஹய்யான் ஆகியோரும் ஃபிக்ஹு வல்லுநர்களில் இஸ்ஹாக் பின் ராஹ்வியா அவர்களும் இந்த நிலைப்பாட்டைக் கொண்டவர்கள்தாம். மேலும் இறுதியில் இமாம் அஹ்மத் பின் ஹம்பல்(ரஹ்)அவர் களும் இதே வழிமுறையை மேற்கொண்டார்கள்.
இமாம் அபூஹனீஃபா(ரஹ்), இமாம் மாலிக்(ரஹ்) ஆகியோரும் பெரும்பாலான அறிஞர்களும் ‘வாழ்நாளில் ஒரு முறை ஸலவாத் சொல்வது ஃபர்ளு ஆகும்; இது கலிமா ஷஹாதத் போன்றதே; ஒருவர் ஒருமுறை இறைவனின் ஏகத்துவத்தையும் நபிகளாரின் தூதுத்துவத்தையும் பிரகடனம் செய்த மாத்திரத்தில் அந்த ஃபர்ளை நிறைவேற்றியவராகிவிடுகின்றார் என்பதைப் போன்றதுதான் இதுவும்; இதே போன்று ஒருவர் தம்முடைய வாழ்நாளில் ஒரு முறை ஸலவாத் ஓதிவிட்டாலே தம் மீதான ஃபர்ளை நிறைவேற்றியவர் ஆகிவிடுகின்றார்.
இன்னொரு குழுவினர் தொழுகையின் போது ஸலவாத் ஓதுவதைத் திட்டவட்டமான வாஜிப் என்றே அறிவித்திருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் அதனை அத்தஹியாத்துடன் பிணைக்கவில்லை. இன்னொரு குழுவினர் நீங்கள் ஒவ்வொரு முறையும் இறைவனிடம் பிரார்த்திக்கின்ற போதெல்லாம் ஸலவாத் ஓதுவது வாஜிப் என்று அறிவித்திருக்கின்றார்கள். இன்னும் சிலர் நபிகளாரின் பெயர் உச்சரிக்கப்படுகின்ற போதெல்லாம் ஸலவாத் ஓதுவது வாஜிப் ஆகும் என்று சொல்லி இருக்கின்றார்கள். மற்றுமோர் குழுவினர் ஓர் அவையில் நபிகளாரின் பெயர் எத்தனை முறை உச்சரிக்கப்பட்டாலும் சரியே ஒரு முறை ஸலவாத் ஓதுவது வாஜிப் ஆகும் என்று கூறியிருக்கின்றார்கள்.
இந்த வேறுபாடுகள் அனைத்தும் அது எந்த அளவுக்கு வாஜிப் என்கிற விவகாரத்துடன் மட்டுமே பிணைந்துள்ளன. ஸலவாத் ஓதுவதன் சிறப்பு, அது எந்த அளவுக்கு நன்மையும் வளமும் புண்ணியமும் நிறைந்த செயல் என்பதிலும், அது ஒரு மிகப்பெரும் நன்மையான செயல் என்பதிலும் ஒட்டுமொத்த சமுதாயமும் ஒருமித்த கருத்து கொண் டிருக்கின்றது. அல்லாஹ்வுக்கு அடுத்ததாக நபி(ஸல்) அவர்கள் தாம் நம் மீது மிகப்பெரும் பேருபகõரங்களையும் நன்மைகளையும் செய்திருக்கின்றார்கள் என்கிற உணர்வும் தெளிவும் பெற்ற எந்தöவாரு முஸ்லிமுடைய உள்ளத்தி லிருந்தும் இயல்பாகவே ஸலவாத் வாசகங்கள் வெளிவந்துவிடும் என்பதுதான் உண்மை.
இஸ்லாம் பற்றியும் ஈமான் குறித்தும் ஒருவரின் உள்ளத்தில் எந்த அளவுக்கு மதிப்பும் மாண்பும் நிறைந்திருக்கின்றதோ அந்த அளவுக்கு அவருடைய உள்ளத்தில் நபிகளாரின் பேருதவிகள் பற்றிய மாண்பும் மதிப்பும் நிறைந்திருக்கும். மேலும் ஒருவர் எந்த அளவுக்கு அந்தப் பேருதவிகளை மதிப்பவராக இருக்கின்றாரோ அந்த அளவுக்கு அவர் நபிகளார்(ஸல்) மீது அதிகமாக ஸலவாத் ஓதுபவராக இருப்பார். ஸலவாத் ஓதுவதில் ஒருவருக்கு இருக்கின்ற ஆர்வமும் ஈடுபாடும் உண்மையில் அவர் முஹம்மத் நபிகளாரின் மார்க்கத்துடன் எந்த அளவுக்கு ஆழமான பிணைப்பு கொண்டிருக்கின்றார் என்பதை உணர்த்துகின்ற அளவுகோல் எனலாம்.
இதனால்தான் நபிகளார்(ஸல்) கூறினார்கள்: ‘ஒருவர் என் மீது ஸலவாத் சொல்கின்றபோது வானவர்கள் அவர் மீது ஸலவாத் சொல்கின்றார்கள். அவர் என் மீது ஸலவாத் சொல்கின்ற வரை அவர்கள் அவர் மீது ஸலவாத் சொல்வதும் நீடிக்கின்றது’(அஹ்மத், இப்னு மாஜா)
‘ஒருவர் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்கின்றார் எனில் அல்லாஹ் அவர் மீது பத்து முறை ஸலவாத் சொல்கின்றான்’.(முஸ்லிம்)
‘என் மீது மற்றெல்லாரை விடவும் மிக அதிகமாக ஸலவாத் சொல்லியவர் மறுமை நாளில் எனக்கு மிக நெருக்கமாக இருப்பதற்கு அதிகமான தகுதி படைத்தவர் ஆவார்’.(திர்மிதி).
‘தனக்கு முன்னால் என்னுடைய பெயர் உச்சரிக்கப்படுகின்ற போது எனக்கு ஸலவாத் சொல்லாதவர்தான் கஞ்சன் ஆவார்’. (திர்மிதி)
நபிகளார்(ஸல்) அல்லாமல் மற்றவர்களுக்காக அல்லாஹும்ம ஸல்லி அலா ஃபுலான் அல்லது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றோ அல்லது இதைப் போன்ற வேறு வாசகங்களைக் கொண்டோ ஸலவாத் சொல்லுவது கூடுமா, இல்லையா என்பதில் மார்க்க அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. ஒரு குழுவினர் (இதில் காஜி அயாஸ் மற்ற அனைவரையும் விட முன்னணியில் நிற்கின்றார்) இதனைக் கூடும் என்று உறுதியாகச் சொல்கின்றனர். இவர்கள் தருகின்ற சான்று என்னவெனில் குர்ஆனில் வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ்வே இறைத்தூதர் அல்லாத பிறருக்காகவும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஸலவாத் என்கிற சொல்லை ஆண்டிருக்கின்றான். எடுத்துக்காட்டாக,
‘அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துகளும், நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர்தாம் நேர்வழி பெற்றவர்கள்!’ (திருக்குர்ஆன் 2:157)
‘(நபியே!) அவர்களுடைய பொருள்களிலிருந்து தானத்தை வசூல் செய்துகொண்டு அதன் மூலம் அவர்களைத் தூய்மையாக்குவீராக; (நல்வழியில்) அவர்களை முன்னேறச் செய்வீராக!’ (திருக்குர்ஆன் 9:103)
‘அவனுடைய வானவர்களும் உங்கள் மீது கருணை புரியும்படி இறைஞ்சுகின்றார்கள்.’ (திருக்குர்ஆன் 33:43)
இதே போன்று நபிகளாரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இறைத்தூதர் அல்லாத மக்களுக்காகப் பிரார்த்திக்கின்ற போது ஸலவாத் என்கிற சொல்லையும் சேர்த்தே பிரார்த்தித்திருக் கின்றார்கள். எடுத்துக்காட்டாக நபித்தோழர் ஒருவருக்காக ‘அல்லாஹும்ம ஸல்லி அலா ஆலி இன்னி அவ்ஃபி’ என்று பிரார்த்தித்துள்ளார்கள். ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி) அவர்களின் மனைவியின் விண்ணப்பத்தைக் கேட்டதும் சொன்னார்கள் : ‘ஸல்லல்லாஹு அலைக்கி வ அலா ஜவ்ஜிஹி.’
இதே போன்று ஜகாத் பணத்தைக் கொண்டு வந்து கொடுத்த மக்களைப் பார்த்து நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹும்ம ஸல்லி அலைஹிம்’
மேலும் சஅத் பின் உபாதா(ரலி) அவர்களுக்காகப் பிரார்த்திக்கின்ற போது நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ‘அல்லாஹும்ம அஜ்அல் ஸலவாதி(க்)க வ ரஹ்மதி(க்)க அலா ஆலி சஅத்பின் உபாதா’
இறைநம்பிக்கையாளனின் ஆன்மா தொடர் பாகச் சொல்லும் போது வானவர்கள் அந்த ஆன்மாவுக்காக ‘ஸல்லல்லாஹு அலைக்க வ அலா ஜஸதி(க்)க’ எனப் பிரார்த்திப்பதாகவும் நபி(ஸல்) அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.
ஆனால் இவ்வாறு சொல்வது அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் பொருந்தும். ஆனால் நமக்கு அது பொருந்தாது என்பதுதான் சமுதாயத்தின் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் கருத்து ஆகும். இன்று முஸ்லிம்கள் அனைவருமே ஸலவாத் சொல்வதை நபிகளாருக்கு மட்டுமே உரித்தாக்கி அதனை அதற்கான அடையாளமாகவே ஆக்கி இருக்கின்றார்கள். எனவே இறைத்தூதர்கள் அல்லாத பிறருக்காக அதனைச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று இவர்கள் சொல்கின்றார்கள்.
இதனால்தான் உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் ஒரு முறை தம்முடைய ஆளுநருக்கு எழுதினார்: ‘அங்கு சில சொற் பொழிவாளர்கள் நபிகளாருக்கு ஸலவாத் சொல்லிய பிறகு அதே போன்று தம்முடைய புரவலர்களுக்காக, ஆதரவாளர்களுக்காகப் பிரார்த்திக்கின்ற போதும் ஸலவாத் என்கிற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாக அறிகின்றேன். என்னுடைய இந்தக் கடிதம் சேர்ந்த பிறகு அவர்களை அவர்களின் அந்தச் செயலை விட்டுத் தடுத்து நிறுத்துங்கள். இறைத்தூதர்களுக்கு மட்டுமே ஸலவாத் சொல்லப்பட வேண்டும் என்றும் மற்ற முஸ்லிம்களுக்காகப் பிரார்த்தனைதான் செய்ய வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்துங்கள்’. (ரூஹுல் மஆனி)
நபிகளாரைத் தவிர பிற மக்களுக்காக ஸலவாத் சொல்வது பொருந்தாது என்பதுதான் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடு ஆகும்.
(தொடரும்)