துஃபைல்(ரலி) அவர்களும் அவருடைய தோழரும் நபி(ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார்கள்: ‘இறைத்தூதரே! தவ்ஸ் கோத்திரத்தார் இறைமறுப்புப் போக்கினை மேற்கொண்டிருக்கின்றார்கள். எனவே நீங்கள் அவர்களைச் சபித்துவிடுங்கள்!’.
இதனைக் கேட்டதும் சிலர் சொன்னார்கள்: ‘தவ்ஸ் கோத்திரத்தார் அழிந்தார்கள்’.
நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்: ‘இறைவா! தவ்ஸ் கோத்திரத்தாருக்கு நேர்வழிகாட்டுதலை அருள்வாயாக! அவர்களை என் பக்கம் கொண்டு வருவாயாக!’.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : முஸ்லிம்
மக்கள் மீது நபி(ஸல்) அவர்கள் எந்த அளவுக்குப் பரிவும் நேசமும் கொண்டிருந்தார்கள் என்பதை இந்த நபிமொழி உணர்த்துகின்றது. தவ்ஸ் கோத்திரத்தாரைச் சபிக்க நபி(ஸல்) அவர்களுக்கு மனமும் வரவில்லை; அதற்கும் மேலாக அந்த எண்ணத்தையே அவர்களால் ஏற்கமுடியவில்லை.
தவ்ஸ் கோத்திரத்தாரைச் சபிப்பதற்குப் பதிலாக அவர்களுக்கு நேர்வழி கிடைப்பதற்காக இறைவனிடம் நெஞ்சம் நெகிழப் பிரார்த்தித்தார்கள். ‘இறைவா! அவர்களுக்கு நேர்வழியைக் காண்பித்தருள்வாயாக! இறைத்தூதரிடம் மீள்கின்ற நல்லருளையும் நற்பேற்றையும் அவர்களுக்குத் தந்தருள்வாயாக!’ என்று இறைஞ்சினார்கள்.
கண்ணியமான அறிவுரை!
எப்போதாவது எவரைப் பற்றியாவது கெட்ட செய்தி ஏதேனும் தெரிய வருகின்ற போது நபி(ஸல்) அவர்கள், ‘இன்னாருக்கு என்ன ஆகிவிட்டது? அவர் இப்படிப் பேசுகின்றாரே’ என்று (பெயர் குறிப்பிட்டுச்) சொல்ல மாட்டார்கள். அதற்கு மாறாக, ‘மக்களுக்கு என்ன ஆகிவிட்டது? அவர்கள் இன்னின்னவற்றைச் சொல்கின்றார்களே!’ என்று (பொதுப்படையாகச்) சொல்வார்கள்.’
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா(ரலி)
நூல் : அபூதாவூத்
நபி(ஸல்) அவர்கள் எவரைக் குறித்தும் பெயரைச் சொல்லி இடித்துரைக்கவோ, கண்டிக்கவோ எச்சரிக்கவோ மாட்டார்கள். அதற்கு மாறாக, பொதுப்படையாக அறிவுரை கூறுவார்கள். தொடர்புடைய மனிதர் அவமானப்படக் கூடாது என்பதற்காகவும் அவர் தம்மைத்தாமே திருத்திக் கொள்வதற்கு ஆயத்தமாகிவிட வேண்டும் என்பதற்காகவும் குறிப்பிட்ட தீமையிலிருந்தும் பலவீனத்திலிருந்தும் விலகி இருக்க வேண்டும் என மற்றவர்களையும் எச்சரிக்கின்ற நோக்கிலும்தாம் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு பொதுப்படையாக அறிவுரை கூறுவார்கள்.
நபி(ஸல்) அவர்கள் எந்த அளவுக்குப் பெருந்தன்மை மிக்கவர்கள் என்பதை இதிலிருந்து எளிதாகக் கணித்துக்கொள்ளலாம். அறிவுரை கூறும்போதும் வழிகாட்டி நெறிப்படுத்தும் போதும் மிக மிக கண்ணியமான, மேன்மையான வழிமுறைகளையே நபி(ஸல்) அவர்கள் மேற்கொண்டார்கள். மேம்போக்கான, பாமரத்தனமான முறையில் எதனையும் சொல்வது நபிகளாரின் பாணி அல்ல.