மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

அவதூறுக்கான வரைவிலக்கணம்
மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : கூ. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், செப்டம்பர் 16-30, 2025


எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் தொல்லை கொடுக்கின்றார்களோ அவர்களை இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் சபிக்கின்றான். மேலும் இழிவுபடுத்தும் வேதனையையும் அவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கின்றான்.107 மேலும் நம்பிக்கை கொண்ட ஆண்கள், பெண்களுக்கு அவர்கள் குற்றம் புரியாதிருக்கவே எவர்கள் துன்பம் அளிக்கின்றார்களோ, அவர்கள் ஒரு மாபெரும் அவதூறையும்108 வெளிப்படையான பாவத்தின் விளைவையும் தம்மீது சுமந்து கொள்கின்றார்கள்.

நபியே! உம்முடைய மனைவிகள், உம்முடைய புதல்விகள், நம்பிக்கை யாளர்களின் மனைவியர் ஆகியோரிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் முந்தானையைத் தங்களின் மீது தொங்கவிட்டுக் கொள்ளட்டும்.109 அவர்களை அறிந்து கொள்வதற்கும், அவர்கள் தொல்லைக்கு ஆளாகாமல் இருப்பதற்கும் இதுவே மிகவும் ஏற்ற முறையாகும். அல்லாஹ் பெரிதும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.

· அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் · திருவசனங்கள் : 57 - 59


107. அல்லாஹ்வுக்குத்  தொல்லை கொடுப்பதற்கு இரண்டு பொருள்கள் உண்டு. ஒன்று, அவனுக்கு மாறுசெய்வது, அவனைப் பொருட்படுத்தாமல் இறை மறுப்பிலும்  இணைவைப்பிலும்  ஈடுபடுதல், அவன் ஹராமாக்கியவற்றை ஹலாலாக ஆக்கிக் கொள்ளுதல். இரண்டு, அவனுடைய தூதருக்குத் தொல்லை கொடுத்தல். ஏனெனில்  இறைவனின்  தூதருக்குக்  கீழ்ப்படிந்து நடத்தல் எவ்வாறு அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடத்தலாக இருக்கின்றதோ, அவ்வாறே  நபி(ஸல்)  அவர்கள்  மீதுவசைசபாடுதலும் அல்லாஹ் மீது வசைபாடுதலாகும். நபிகளாரை எதிர்ப்பது அல்லாஹ்வை எதிர்ப்பதாகும். நபிகளாருக்கு மாறு செய்வது அல்லாஹ்வுக்கு மாறு செய் வதாகும்.

108. இந்த வசனம் எது அவதூறு என்பதற்கான வரைவிலக்கணத்தை வரையறுத்துள்ளது. அதாவது ஒருவரிடம் இல்லாத ஒரு குறையை, ஒருவர் செய்யாத பிழையை அவர் மீது சாற்றுவதுதான் அவதூறு ஆகும். நபிகளாரும் இதனைத் தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள். அபூதாவூத், திர்மிதி ஆகியவற்றில் பதிவாகியிருக்கின்ற அறிவிப்பில் நபிகளாரிடம், ‘புறம் பேசுதல் என்பது எது?’ என்று வினவப்பட்டது. ‘உம்முடைய சகோதரரைக் குறித்து அவர் மனம் நோகும்படிப் பேசுவது’ என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். ‘அவரிடம் அந்தக் குறை இருந்தாலுமா?’ என்று  தொடர்ந்து  வினவப்பட்டது. நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள்:

‘நீர் அவரிடம் இருப்பதாகக் குறிப்பிட்டுச் சொல்கின்ற குறை அந்தச் சகோதரரிடம் இருக்குமேயானால் நீர் அவரைப் பற்றிப் புறம் பேசியவர் ஆவீர். அந்தக் குறையே அவரிடம் இல்லையெனில் நீர் அவரைக் குறித்து அவதூறு பேசியவர் ஆவீர்’. இந்தச் செயல் மறுமையில் தண்டனையைத் தேடித் தருகின்ற ஒழுக்கக்கேடான செயல்களில் ஒன்று  என்பதோடு  இதனை  முடித்துக் கொள்ளக் கூடாது. அதற்கும் மேலாக இந்த வசனத்தின் ஒளியில் இஸ்லாமிய அரசாங்கம் சட்டத்தின் துணை கொண்டு பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துபவரை தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.

109. பெரிய போர்வையை அரபி மொழியில் ஜில்பாப் என்று சொல்வார்கள். மேலும், ‘இத்னஅ’ என்பதன் உண்மையான பொருள் நெருக்கமாக்கிக் கொள்கின்ற, போர்த்திக் கொள்கின்ற என்பதõகும். ஆனால் அது ‘அலா’ என்கிற வினையெச்சத்துடன் வருகின்ற போது அதில் ‘இர்கஅ’ அதாவது ‘மேலே  தொங்க  விட்டுக்கொள்கின்ற’ என்கிற பொருள் உருவாகிவிடுகின்றது. மேற்கத்திய விமர்சனங்களுக்குப் பலியான சில மொழிபெயர்ப்பாளர்களும் விரிவுரை யாளர்களும் இந்தச் சொல்லுக்கு வெறுமனே ‘போர்த்திக் கொள்கின்ற’ என்கிற பொருள் கொள்கின்றார்கள்; இவ்வாறாக ஏதேனுமொரு வகையில் முகத்தை மறைக்கின்ற கட்டளையிலிருந்து தப்பித்துவிடப் பார்க்கின்றார்கள்.

ஆனால் இவர்கள் சொல்ல விரும்புகின்ற பொருளை எடுத்துரைப்பதுதான் வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ்வின் நோக்கமாக இருந்ததெனில் அவன் ‘யுத்னீன அலைஹின்ன’ என்று சொல்லியிருப்பான். அரபி மொழியை அறிந்த எந்தவொரு மனிதரும் ‘யுத்னீன அலைஹின்ன’ என்பதற்கு ‘போர்த்திக் கொள்கின்ற’ என்று மட்டுமே பொருள் என ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார். அது மட்டுமின்றி ‘ஜலாபீபி ஹின்ன’ என்கிற சொற்கள் இப்படி குறுகிய பொருள் கொள்வதற்குத் தடையாக இருக்கின்றன.

அதற்கும் மேலாக இங்கு ‘மின்’ என்கிற முன்னிடைச் சொல் துப்பட்டியின் ஒரு பகுதியை குறிப்பதற்காகத்தான் ஆளப்பட்டிருக்கின்றது. போர்த்தப்படுகின்ற போது முழு துப்பட்டியும் போர்த்தப்படுமே தவிர துப்பட்டியின் ஒரு பகுதி அன்று என்பதும் வெளிப்படை. எனவே வசனத்தின் தெள்ளத் தெளிவான உள்பொருள் என்னவெனில் பெண்கள் தங்களின் துப்பட்டியை நல்ல முறையில் போர்த்திக் கொண்டவாறு அதன் நுனிப்பகுதியை தம் மீது மேலிருந்து தொங்க விட்டுக் கொள்ளுங்கள். இதனை நம்முடைய பேச்சு வழக்கில் முக்காடு என்றே சொல்கின்றோம்.

நபித்துவத்துவக்  காலகட்டத்துக்கு நெருக்கமான நாள்களில் முன்னோடி விரிவுரையாளர்கள் இதற்கு இந்தப் பொருளைத்தான் தந்திருக்கின்றார்கள். இப்னு ஜரீர், இப்னு அல்முன்ஸிர் ஆகியோரின் அறிவிப்பின் படி ஒருமுறை முஹம்மத் பின் ஸீரீன்(ரஹ்) அவர்கள் உபைதா அல்ஸல்மானி அவர்களிடம் இந்த வசனத்தின் பொருளைக் கேட்டார்கள். (நபிகளாரின் காலத்திலேயே இஸ்லாத்தை  ஏற்றுக்  கொண்டவர்தாம் உபைதா அல்ஸல்மானி. ஆனால் நபிகளாரை நேரடியாகச் சந்தித்ததில்லை. உமர்(ரலி) அவர்களின் காலத்தில்தான் அவர் மதீனாவிற்கு வந்தார். அங்கேயே நிலையாகத் தங்கிவிட்டார். ஃபிக்ஹு, மார்க்கத் தீர்ப்பு போன்ற விவகாரங்களில் காஸி ஷûரஹ் அவர்களுக்கு இணையானவராகக் கருதப்படுபவர்தõம் உபைதா அல்ஸல்மானி).

உபைதா அல்ஸல்மானி இந்த வசனத்தின் பொருள் இன்னது என எதையும் சொல் வதற்குப் பதிலாக தம்முடைய போர்வையை எடுத்தார். அதனை தம் மீது எவ்வாறு போர்த்திக் கொண்டார் எனில் மொத்த தலையும், நெற்றியும், முகமும் போர்த்தப்பட்டுவிட ஒரே ஒரு கண் மட்டுமே வெளியில் தெரிந்தது. இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் கூட சற்றொப்ப இதே விளக்கத்தைத்தான் தருகின்றார்கள்.

இப்னு ஜரீர், இப்னு அபி ஹாதிம், இப்னு மர்தூயா போன்றோர் பதிவு செய்துள்ள அவருடைய அறிவிப்பின் விவரம் வருமாறு: ‘வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ் பெண்களுக்கு அவர்கள் ஏதேனுமொரு வேலைக்காக வீட்டை விட்டு வெளியே செல்ல நேர்கின்ற போது தம்முடைய துப்பட்டிகளின் முந்தானையைத் தம்மீது தொங்க விட்டுக் கொண்டு தம்முடைய முகத்தை மறைத்துக் கொள்ளுமாறும் கண்களை மட்டுமே தெரியவிடுமாறும் கட்டளையிட்டிருக்கின்றான்’. கதாதா, சுத்தி போன்றோரும் இந்த வசனத்திற்கு இதே விளக்கத்தைத்தான் தந்திருக்கின்றார்கள்.

நபித்தோழர்கள், தாபியீன்கள் காலகட்டத்துக்குப் பிறகு இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய பெரும் பெரும் விரிவுரையாளர்கள் அனைவருமே இந்த வசனத்திற்கு இந்த விளக்கத்தையே ஒருமித்துக் கூறியிருக்கின்றார்கள். இமாம் இப்னு ஜரீர் தபரி சொல்கின்றார்:‘கண்ணியமான பெண்கள் வீடுகளை விட்டு வெளியே வருகின்ற போது அடிமைப் பெண்களைப் போன்று தங்களின் முகத்தையும் தலைமுடியையும் வெளிப்படுத்தியவாறு வர வேண்டாம். அதற்கு மாறாக கெட்ட எண்ணம் கொண்ட எந்தவொரு மனிதரும் அவர்களைச் சீண்டுவதற்குத் துணியாத வகையில் தம் மீது துப்பட்டியின் ஒரு பகுதியைத் தொங்க விட்டுக் கொள்ள வேண்டும்.’ (ஜாமிவுல் பயான் தொகுதி 22 பக்கம் 33)

அல்லாமா அபூபக்கர் ஹஸ்ஸாஸ் கூறுகின்றார்: ‘இளம் பெண் தம்முடைய முகத்தை அந்நிய ஆண்களிடமிருந்து மறைத்துக்கொள்ள வேண்டும்; மேலும் அவள் வீட்டை விட்டு வெளியே வருகின்ற போது தன்னை நன்றாக மறைத்துக் கொண்டவாறு தன்னுடைய கண்ணியத்தையும் தூய்மையான நடத்தையையும் வெளிப்படுத்த வேண்டும்; இதனால் ஐயத்துக்குரிய நடத் தையைக் கொண்ட மனிதர்கள் அவளைப் பார்த்து  எந்தவொரு  மோகத்துக்கும் ஆளாவது தடுக்கப்படும் என்கிற சட்டத்தை இந்த  வசனம் நிறுவுகின்றது’.   (அஹ்காமுல் குர்ஆன், மூன்றாம் தொகுதி, பக்கம் 458).

அல்லாமா  ஜமக்ஷரி  கூறுகின்றார்: ‘அவர்கள்  தம்முடைய  துப்பட்டியின் ஒரு பகுதியைத் தொங்க விட்டுக் கொள்ளட்டும். மேலும் தம்முடைய முகத்தையும் தம்முடைய உடலையும் நல்ல முறையில் போர்த்திக் கொள்ளட்டும்’. (அல்கஷ்ஷாஃப் இரண்டாம் தொகுதி, பக்கம் 221)

அல்லாமா நிஜாமுத்தீன் நிஷாபூரி கூறுகின்றார்: ‘தம்மீது துப்பட்டியின் ஒரு பகுதியைத் தொங்க விட்டுக் கொள்ளட்டும். இவ்வாறாக பெண்களுக்குத் தங்களின் தலையையும் முகத்தையும் மறைத்துக்கொள்வதற்கான சட்டம் வழங்கப்பட்டது’. (கராயிப் அல் குர்ஆன் இருபத்தியிரண்டாம் தொகுதி, பக்கம் 32)

இமாம் ராஜி கூறுகின்றார்: ‘இதன் மூலமாக இன்ன பெண்கள் கெட்ட நடத்தை கொண்டவர்கள் அல்லர் என்பது மக்களுக்குத் தெரிந்துவிடும். ஏனெனில் மறைக்க வேண்டிய பகுதியில் முகம் இல்லாத நிலையிலும் ஒரு பெண் தன்னுடைய முகத்தை மறைத்துக் கொள்கின்றார் எனில் எந்த மனிதர்தான் அந்தப் பெண் தன்னுடைய மறைக்க வேண் டிய பகுதிகளை அந்நியர்களுக்கு முன்னால் வெளிப்படுத்த ஒப்புக் கொள்வாள் என்று எதிர்பார்ப்பார்? இவ்வாறாக இவர்கள் பர்தாவைப் பேணி நடக்கின்ற கண்ணியமான பெண்கள் ஆவர்; இவர்களிடம் விபச்சாரச் செயல்களை எதிர்பார்க்க முடியாது என்பதை எல்லா மனிதர்களும் அறிந்து கொள்வார்கள். (தஃப்சீர் கபீர், ஆறாம் தொகுதி, பக்கம் 591)

(தொடரும்)

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்