நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பணமும் பொருளும் சம்பாதிக்க வேண்டும் என்றும் வணிகர் ஆக வேண்டும் என்றும் எனக்கு வஹி அறிவிக்கப்படவில்லை. என்னுடைய ரப் ஆகிய அதிபதியின் புகழ் பாட வேண்டும்; அவனைத் துதிக்க வேண்டும்; அவனுக்கு முன் சிரம் பணிகின்றவர்களோடு நானும் சேர்ந்துகொள்ள வேண்டும்; என்னுடைய அதிபதியை வணங்கி வழிபட்டுக் கொண்டே இருத்தல் வேண்டும்; அவனுக்குக் கீழ்ப்படிந்தும் அடிபணிந்தும் வாழ வேண்டும்; எதுவரையெனில், யார் உண்மையானவனாக இருக்கின்றானோ அவன் எனக்கு முன்னால் வந்துவிடும் வரையில் என்றே எனக்கு வஹி அருளப்பட்டது.
அறிவிப்பாளர் : ஜுபைர் பின் நுஃபைர்(ரலி)
நூல் : ஷரஹ் சுன்னா
(உம்மைக் குறித்து) இவர்கள் கூறும் கூற்றுக்களால் உமது உள்ளம் வருந்துவதை திண்ணமாக நாம் அறிவோம். (அதற்கான காரணம் இதுதான்) ‘உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! அவன் முன் சிரம் பணிபவராய்த் திகழ்வீராக! மேலும், கட்டாயம் வரக்கூடிய அந்த இறுதி நேரம் வரை உம் இறைவனுக்கு அடிபணிந்து கொண்டிருப்பீராக!’(திருக்குர்ஆன் 15:97-99)
இந்த நபிமொழியில் மேற்படி வசனத்தை மேற்கோள் காட்டி மனித வாழ்வில் நிலையான மதிப்புக்கும் மாண்புக்கும் சிறப்புக்கும் உரியது எது என்பது தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
பணம், பொருள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் இருக்கத்தான் செய்கின்றது. வணிகமும் வாழ்வில் மிகவும் விரும்பப்படுகின்ற, விருப்பத்திற்குரிய ஒன்றுதான். ஆனால் வாழ்வின் நோக்கமும் இலக்கும் உலகம் சார்ந்தவையாக ஆகி விடக்கூடாது. உலக வாழ்வு தொடர்பான யாதொன்றும் வாழ்வின் இலக்காகி விடக்கூடாது என்பதை மறந்துவிடக் கூடாது.
இறைவனைப் புரிந்துகொண்டு அவனுடன் தொடர்பையும் உறவையும் ஏற்படுத்திக் கொள்வதுதான் மனித வாழ்வின் உண்மையான பொருள் ஆகும். இறைவன் யார் என்பதில் நமக்குத் தெளிவு இருக்க வேண்டும். அவனுடைய பண்புகள் என்ன, அவனுடைய சிறப்பு, மகிமை, மேன்மை, உயர்வு பற்றிய விழிப்பு உணர்வு இருத்தல் வேண்டும். பண்பட்ட மனிதனுக்கு மனநிறைவும், நிலையான நற்பேறும் அந்தத் தெளிவிலும் புரிதலிலும்தாம் கிடைக்கும்.
நம்முடைய வாழ்வு இறைவனுக்கு மாறு செய்வதில் கழியக்கூடாது. நம்முடைய வாழ்வு இறைவனுக்கு அடிபணிந்தும் அவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தும் வாழ்வதிலும்தாம் கழிய வேண்டும். வாழ்வின் இறுதித் தருணங்கள் வரை நாம் அதிலேயே நிலைத்திருக்க வேண்டும்.