மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

தொல்லைக்கு ஆளாகமலிருக்க..!
மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : கூ. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், 1-15 அக்டோபர் 2025


நபியே! உம்முடைய மனைவிகள், உம்முடைய புதல்விகள், நம்பிக்கையாளர்களின் மனைவியர் ஆகியோரிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் முந்தானையைத் தங்களின் மீது தொங்கவிட்டுக் கொள்ளட்டும். அவர்களை அறிந்து கொள்வதற்கும், அவர்கள் தொல்லைக்கு ஆளாகாமல் இருப்பதற்கும் இதுவே மிகவும் ஏற்ற முறையாகும்.110 அல்லாஹ் பெரிதும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.


அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் · திருவசனம்: 59


110. ‘அறிந்துகொள்வதற்கும்’  என்பது ‘அவர்களை அந்த எளிமையான, நாணமும் கண்ணியமும் நிறைந்த உடுப்பில் பார்த்து, பார்ப்பவர்கள்  அனைவரும்  இவர்கள் கண்ணியமான, மானமும் பேணுதலும் நிறைந்த பெண்மணிகள் என்றும் இவர்களைப் பார்த்து கெட்ட நடத்தை கொண்ட தீயவர்கள் தம்முடைய இச்சையைத் தீர்த்துக் கொள்கின்ற எதிர்பார்ப்பை இவர்கள்மீது உருவாக்கிக் கொள்வதற்கு இவர்கள் ஒன்றும் வேடிக்கையும்  கேளிக்கையும்  நிறைந்தவர்கள் அல்லர் என்றும் அறிந்து கொள்வார்கள்’ என்பதைக் குறிக்கும். ‘தொல்லைக்கு ஆளாகாமல் இருப்பதற்கும்’   என்பது ‘அவர்கள் சீண்டப்படாமல் இருப்பது’ எனப் பொருள்படும்.

இந்த  இடத்தில்  சற்றே  நிதானித்து குர்ஆனின் இந்தச் சட்டமும் கருணைமிக்க இறைவனே  விவரித்திருக்கின்ற  இந்தச் சட்டத்தின் நோக்கமும் சமூகவியலுக்கான இஸ்லாமியச்  சட்டத்தின்  உயிரோட்டமாக எதனை வெளிப்படுத்துகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முயல வேண்டும். இதற்கு முன்பு அத்தியாயம் அந்நூரில் வசன எண் 31 இல் பெண்கள் தங்களின் அழகையும் ஒப்பனை யையும் இன்னின்ன வகையான ஆண்கள், பெண்கள் ஆகியோரின் முன்னிலையிலன்றி வேறு  எவருக்கு முன்னாலும் வெளிப்படுத்தக்கூடாது என்கிற வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருந்தது.   மேலும்,  தாங்கள்  மறைத்து வைத்திருக்கும் தங்களின் அழகை மக்கள் தெரிந்துகொள்கின்ற அளவுக்குத் தங்களுடைய கால்களைப் பூமியில் அடித்துக் கொண்டு நடக்க வேண்டாம் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

அந்தக்  கட்டளையுடன்  அத்தியாயம் அல்அஹ்ஸாபின்  இந்த  வசனத்தையும் இணைத்து வாசிப்போமேயானால் இங்கு துப்பட்டிகளின் முந்தானையைத் தங்களின் மீது தொங்கவிட்டுக் கொள்ளட்டும் என்கிற கட்டளை அருளப்பட்டிருப்பதன் நோக்கம் அந்நியர்களிடமிருந்து அழகை மறைப்பதுதான் என்பது தெள்ளத்தெளிவாக விளங்கிவிடும். மேலும் இவ்வாறு போர்த்திக் கொள்கின்ற துப்பட்டா எளிமையானதாக இருந்தால்தான் இந்த நோக்கம் முழுமையாக நிறைவேறும் என்பது வெளிப்படை. இல்லையேல் அழகும் நளினமும் பார்ப்பவரைச் சுண்டியிழுக்கும் கவர்ச்சியும் நிறைந்த துணியைப் போர்த்திக் கொள்வதால் இந்த நோக்கமே அடிபட்டுப் போகும். அதற்கும் ஒரு படி மேலாக இங்கு அல்லாஹ் துப்பட்டாவைக் கொண்டு போர்த்தியவாறு அழகை மறைக்கும்படி கட்டளையிட்டதோடு நின்றுவிடவில்லை; அந்தத் துப்பட்டாவின் ஒரு பகுதியைத் தம் மீது தொங்க விட்டுக் கொள்ளுமாறும் ஆணையிட்டிருக்கின்றான்.

உடலின் அழகும் உடையின் எழிலும் மறைக்கப்படுவதுடன்  முகத்தையும் மறைக்கின்ற வகையில் முக்காடு இட்டுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த இறைக்கட்டளைக்குப் பொருள் என்பதை அறிவார்ந்த முறையில் எதனையும் அணுகுகின்ற எந்தவொரு மனிதரும் எளிதில் விளங்கிக் கொள்வார். மேலும் முஸ்லிம் பெண்கள்  அறிந்துகொள்ளப்படுவதற்கும் அவர்கள் தொல்லைக்கு ஆளாவதிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கும் இதுவே மிகவும் ஏற்ற முறையாகும் என்று வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ்வே இந்தக் கட்டளையின் நோக்கத்தையும் பயனையும் விவரித்திருக்கின்றான்.

இதிலிருந்து  ஆண்களின்  சீண்டல்களையும் தொல்லைகøளயும் இச்சை கலந்த பார்வைகளையும் இதயத்தை நொறுக்குகின்ற தொல்லைகளாய்,  மனதை  முள்ளாகத் தைக்கின்ற அருவருப்பான செயல்களாய் உணர்கின்ற பெண்களுக்கு, கண்ணியமும் தூய்மையான ஒழுக்கமும் நிறைந்த பெண்களாய், ஒழுக்கம் நிறைந்த மகளிராய் சமூகத்தில் அடையாளம் காணப்பட விரும்புகின்ற பெண்களுக்கு இந்த வழிகாட்டுதல் தரப்படுகின்றது என்பது வெளிப்படை.

இத்தகைய கண்ணியமான, நன்னடத்தை நிறைந்த இலட்சிய மங்கைகளுக்கு, அவ்வாறு அறியப்படுவதுதான்  உங்களின் விருப்பம் எனில் ஆண்களின் காமம் நிறைந்த பார்வைகளுக்கு இலக்காவதிலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டுமெனில், வீட்டை விட்டு வெளியே கிளம்புகின்ற போது சீவிச் சிங்காரித்து அழகுப் பதுமைகளாய், அழகையும் ஒப்பனையையும் வெளிப்படுத்துபவர்களாய் வெளியே செல்ல வேண்டாம். அதற்கு மாறாக ஓர் எளிமையான துணியைக் கொண்டு உங்களை நல்ல முறையில் போர்த்திக் கொண்டு உங்களின் அழகு, வனப்பு, ஒப்பனை ஆகிய அனைத்தையும் மறைத்துக் கொண்டு, உங்களின் முகத்தின் மீது முக்காடைப் போட்டுக் கொண்டு எவருடைய கவனத்தையும் ஈர்க்காத வகையில் நடந்து செல்லுங்கள். மேலும் தங்களின் அழகு மக்களுக்கு வெளிப்படாதவாறு நகைகளின் சத்தம்கூட பிறரின் கவனத்தை ஈர்க்காத வகையில் நிதானமாக, கண்ணியமாக நடந்து செல்ல வேண்டும்.
பெண்கள் சீவிச் சிங்காரித்துக் கொண்டு தங்களின் அழகை வெளிப்படுத்தியும் ஆண்களின் கவனத்தையும் சபலத்தையும் உசுப்பிவிட்டவாறு பொது வீதிகளில் ஓய்யாரமாக நடந்து செல்வார்களேயானால் இந்த நோக்கமே  அடிபட்டுப்  போகும்.  அவர்கள் தங்களை முழுமையாகப் போர்த்தியவாறு அதன் ஒரு பகுதியைக் கொண்டு தங்களின் தலையையும் முகத்தையும் மறைத்தவாறு, தாம் அணிந்துள்ள நகைகளின் சத்தம் மக்களுக்குக் கேளாதவாறு வீதியில் சென்றால்தான் அந்த நோக்கம் நிறைவேறும்.

ஆனால் அதே சமயம் வீட்டை விட்டு வெளியே  கிளம்புவதற்கு  முன்னால் தங்களைச் சீவிச் சிங்காரித்துக் கொள்வதில் கணிசமான நேரத்தைச் செலவிடுகின்ற, பார்ப்பவரைச் சுண்டியிழுக்கின்ற வகையில் அழகு ஆடைகளை அணிந்தவாறு வெளியே வருகின்ற பெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.  ஆண்களுக்கு  முன்னால் தங்களின் அழகை வெளிப்படுத்த வேண்டும், அவர்களின் கவனத்தைத் தம் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதைத் தவிர அவர்களுக்கு வேறு என்ன நோக்கம் இருக்கப் போகின்றது?

ஒருவரின் தனிப்பட்ட கருத்து குர்ஆனின் கருத்துக்கு இசைவானதாக இருந்தாலும் சரி, அதற்கு முரணானதாக அமைந்தாலும் சரி, அவர் தம்முடைய அனைத்துச் செயல்பாடுகளுக்கும் அடிப்பøடயாகக் குர்ஆனிய வழிகாட்டுதலை  ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி, எந்த நிலையிலும் அவர் குர்ஆனின் கருத்தை விளங்கிக் கொள்வதில் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளாதவராக இருப்பாரேயானால் குர்ஆனின் நோக்கத்தைப் புரிந்து கொள்வதில் அவரால் எந்தத் தவறும் இழைக்க முடியாது. அவர் நயவஞ்சகர் இல்லையெனில் மேலே விவரிக்கப்பட்டதுதான் குர்ஆனின் நோக்கம் என்பதைத்  தெள்ளத்தெளிவாக  ஏற்றுக் கொள்வார். அதன் பிறகு அதற்கு எதிராக அவர் செயல்பட்டாலும் தாம் குர்ஆனுக்கு எதிராகச் செயல்படுவதையும் குர்ஆனின் வழிகாட்டுதலைத் தவறானதாய் நினைப்பதாகவும் அவர் ஒப்புக் கொள்வார்.
(தொடரும்)

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்