மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

மறுமை நாள் எப்போது வரும்?
மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : கூ. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், அக்டோபர் 16-31, 2025


நபியே!  உம்முடைய  மனைவிகள்,  உம்முடைய  புதல்விகள்,  நம்பிக்கையாளர்களின் மனைவியர் ஆகியோரிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் முந்தானையைத் தங்களின் மீது தொங்கவிட்டுக் கொள்ளட்டும். அவர்களை அறிந்து கொள்வதற்கும், அவர்கள் தொல்லைக்கு ஆளாகாமல் இருப்பதற்கும் இதுவே மிகவும் ஏற்ற முறையாகும். அல்லாஹ் பெரிதும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.111

நயவஞ்சகர்களும் எவர்களின் உள்ளங்களில் பிணி படிந்துள்ளதோ அவர்களும்112 மதீனாவில் கொந்தளிப்பை உருவாக்கும் வதந்திகளைப் பரப்பக் கூடியவர்களும்113 (தங்களின் செயல்களிலிருந்து) விலகிக் கொள்ளாவிடில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு உம்மை வீறுகொண்டு எழச் செய்வோம். பிறகு அவர்களால் இந்நகரத்தில் சொற்பகாலமே உம்முடன் வசிக்க முடியும்.

(எல்லாத் திசைகளிலிருந்தும்) அவர்கள் சரமாரியாய் சபிக்கப்படுவார்கள்; காணுமிடமெல்லாம் அவர்கள் பிடிக்கப்படுவார்கள். மேலும் மோசமான முறையில் கொல்லப்படுவார்கள். இது அல்லாஹ்வின் நியதியாகும். இத்தகையவர்களின் விவகாரத்தில் இந்நியதி முன்பிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது! மேலும், அல்லாஹ்வுடைய நியதியில் நீர் எவ்வித மாற்றத்தையும் காணமõட்டீர்.114

மறுமைநாள் எப்போது வரும் என்று மக்கள் உம்மிடம் கேட்கின்றார்கள்.115 நீர் கூறும்; ‘அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது.’ உமக்குத் தெரியுமா என்ன? அந்நாள் நெருங்கி வந்திருக்கலாம். எவ்வாறாயினும் நிராகரிப்பாளர்களை அல்லாஹ் திண்ணமாக சபித்துவிட்டான். மேலும் அவர்களுக்காக, கொழுந்து விட்டெரியும் நெருப்பைத் தயார் செய்துவிட்டிருக்கின்றான். அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள். எந்த ஓர் ஆதரவாளரையும் உதவியாளரையும் அவர்கள் பெற மாட்டார்கள்.

எந்நாளில் அவர்களுடைய முகங்கள் நெருப்பில் புரட்டி எடுக்கப்படுமோ அந்நாளில் அவர்கள் கூறுவார்கள்: ‘அந்தோ! நாங்கள் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்தோமில்லையே!’ மேலும், கூறுவார்கள்: ‘எங்கள் இறைவனே! நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும், பெரியோர்களுக்கும் கீழ்ப்படிந்தோம். அவர்கள் எங்களை நேரிய வழியிலிருந்து பிறழச் செய்துவிட்டார்கள். எங்கள் இறைவனே! இவர்களுக்கு இருமடங்கு வேதனையைக் கொடுப்பாயாக! மேலும், இவர்களைக் கடுமையாகச் சபிப்பாயாக!’116


அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் · திருவசனங்கள்: 59- 68


111. முந்தைய அறியாமைக் காலத்தில் என்னென்ன தவறுகளெல்லாம் இழைக்கப்பட்டு வந்தனவோ அல்லாஹ் தன்னுடைய கருணையாலும் கிருபையாலும் அவற்றை மன்னித்துவிடுவான். ஒரே ஒரு நிபந்தனை என்னவெனில் இப்போது தெள்ளத் தெளிவான வழிகாட்டுதல் கிடைத்துவிட்ட பிறகு நீங்கள் உங்களின் செயல்பாடுகளைத் திருத் திக் கொள்ள வேண்டும். வேண்டுமென்றே வலிந்து அதற்கு எதிராகச் செயல்படக் கூடாது.

112. உள்ளங்களில் பிணி என்பது இங்கு இரண்டு விதமான சீர்கேடுகளைக் குறிக்கும். ஒன்று மனிதன் தன்னைத்தானே முஸ்லிம்களில் ஒருவனாகச் சொல்லிக் கொள்கிற அதே வேளையில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் கேடு விளைய வேண்டும் என விரும்புதல். இரண்டாவதாக, உள்நோக்கத்துடன் செயல்படுதல், சபலப் புத்தி கொண்டு அலைதல்,  குற்றமயமான  மனோபாவம் ஆகியவற்றில் திளைத்தல். மேலும் இந்த அருவருப்பான,  கேவலமான  சிந்தனைப் போக்குகள்  அவருடைய  செயல்களிலும் நடத்தையிலும்  வெளிப்படுதலையும்  இது குறிக்கும்.

113. முஸ்லிம்களில்  பதற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகின்ற நோக்கத்தோடும், அவர்களின் மனத் திடத்தைக் குலைக்கின்ற எண்ணத்துடனும் நாள்தோறும், ‘இன்ன இடத்தில் முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது’, ‘இன்ன இடத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப் பெரும் வலிமை வாய்ந்தவர்கள் ஒன்று திரண் டிருக்கின்றார்கள்; மதீனாமீது திடீர் தாக்குதல் தொடுக்கப்பட இருக்கின்றது’ என்பன போன்ற செய்திகளைப் பரப்பிக் கொண்டிருந்தவர்களை இது குறிக்கும்.

அது மட்டுமின்றி இவற்றோடு அவர்கள் மற்றுமொரு  கேவலமான  பொழுதுபோக்கிலும் ஈடுபட்டிருந்தார்கள். அதாவது நபி களாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் குடும்ப வாழ்வு குறித்தும் மதீனத்து கண்ணியமான குடும்பத்தாரின் குடும்ப வாழ்வு பற்றியும் இல்லாததும் பொல்லாததும் சொல்லி விதவிதமான கதைகளைப் பரப்பி வந்தார்கள். மதீனத்து மக்கள் மத்தியில் அவநம்பிக்
கைகள் துளிர்விட வேண்டும், முஸ்லிம்களின் ஒழுக்கச் சூழல் சீர்குலைய வேண்டும் என்பது தான் அவர்களின் திட்டமாக இருந்தது.

114. இஸ்லாமிய சமுதாயத்திலும் நாட்டிலும் இதுபோன்ற கலகக்காரர்கள் செழித்தோங்குவதற்கு ஒருபோதும் வாய்ப்பளிக்கப்படாது என்பது அல்லாஹ்வின் ஷரீஅத்தின் நிலையான நியதியாக இருந்து வந்துள்ளது. இறைச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு சமுதாயமும் நாடும் கட்டமைக்கப்பட்டு நிறுவப்படும் போதெல்லாம் அதில் இது போன்ற மனிதர்களுக்கு அவர்கள் தம்முடைய நடத்தையைத் திருத்திக் கொள்வதற்காக முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும். அதன் பிறகும் அவர்கள் மாறவில்லையெனில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

115. நபிகளாரிடம்  இறைமறுப்பாளர் களும் நயவஞ்சகர்களும் இந்தக் கேள்வியைத்தான்  மீண்டும்  மீண்டும்  எழுப்பி வந்தார்கள். அறிவைப் பெருக்கிக் கொள்வதோ, கற்றுக்கொள்வதோ அவர்களின் நோக்கமாக  இருக்கவில்லை.  அதற்கு மாறாக  வேடிக்கைக்காக,  நகைச்சுவைக்காகத்தான் அவர்கள் இந்த விஷயத்தைக் கேட்டு வந்தார்கள்.

உண்மை என்னவெனில் அவர்களுக்கு மறுமை நிகழும் என்பதில் நம்பிக்கை இருக்க வில்லை. மறுமைக் கருத்தோட்டத்தையே அவர்கள் வெற்று மிரட்டலாகத்தான் பார்த்தார்கள். மறுமை வருவதற்கு முன்னால் தம்முøடய விவகாரங்களைச் சீர்செய்து கொள்கின்ற எண்ணத்துடன் அவர்கள் மறுமை நிகழ்கின்ற தேதியைக் குறித்து வினவவில்லை. அதற்கு மாறாக, ‘முஹம்மத்(ஸல்) அவர்களே! நாங்கள் உம்மை மட்டம் தட்டுவதற்கான இத்துணை காரியங்களைச் செய்து முடித்திருக்கின்றோம். இன்றுவரை உம்மால் எங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இப்போது நீங்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன். இறுதியில் இந்த மறுமை நிகழ்வது எப்போது? எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது எப்போது?’ என்பது அவர்களின் அந்தக் கேள்வியின் உண்மையான நோக்கமாகும்.

116. இதே கருத்து குர்ஆனில் ஏகப்பட்ட இடங்களில்  எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக பின்வரும் வசனங்களைச் சொல்லலாம்: திருக்குர்ஆன் 7:187; 79:42 46; 34:35; 67:2427; 83:1017; 15:23; 25:2729; 41:2629.
(தொடரும்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்