நாங்கள் ரப்தாவில்1 அபூதர்தாவிடம் சென்றோம். அவர் போர்வை ஒன்றைப் போர்த்திக் கொண்டிருந்தார். அவருடைய அடிமையும் அதே போன்றதோர் போர்வையைப் போர்த்திக் கொண்டிருந்தார். ‘அபூதர்தா அவர்களே! நீங்கள் இந்த இரண்டு போர்வைகளையும் ஒரு சேர தைத்திருந்தீர்களெனில் ஒரு ஆடை கிடைத்திருக்குமே’ என்று நாங்கள் அபூதர்தா(ரலி) அவர்களிடம் சொன்னோம்.
அபூதர்தா(ரலி) சொன்னார்: ‘(ஒரு முறை) எனக்கும் என்னுடைய சகோதரருக்கும் இடையில் காரசாரமான பேச்சு வெடித்து விட்டது.2 அவருடைய தாயார் அஜமியாக (அரபி அல்லாதவராக) இருந்தார். நான் அவரிடம் அவருடைய தாயாரைக் குறித்து சுட்டிக்காட்டி அவருடைய மனம் புண்படும் வகையில் பேசிவிட்டேன். அவர் என்னைக் குறித்து நபிகளாரிடம் முறையிட்டு விட்டார். நான் நபிகளாரைச் சந்தித்த போது நபிகளார்(ஸல்) என்னிடம் கூறினார்கள்: ‘அபூதர்தா அவர்களே! உம்மிடம் இன்னும் ஜாஹிலிய்யத் அறியாமை எஞ்சி இருக்கின்றதே’.3
நான் சொன்னேன்: ‘இறைத்தூதரே! எந்தவொரு மனிதரும் மக்களைத் திட்டுகின்ற போது அவர்களின் தாய், தந்தையரைத்தானே திட்டுவார்கள்’. நபிகளார் (ஸல்) கூறினார்கள்: ‘அபூதர்தா அவர்களே! உம்மிடம் இன்னும் அறியாமை எஞ்சி இருக்கின்றது. அவர் உம்முடைய சகோதரர் ஆவார்.
அல்லாஹ் அவரை உமக்குக் கீழ் வாழும்படிச் செய்திருக்கின்றான். நீர் என்ன உண்கின்றீரோ அவற்றையே அவருக்கும் உண்பதற்குத் தாரும். நீர் அணிகின்றவற்றையே அவருக்கு அணிவியும். மேலும், அவருடைய சக்திக்கு மீறி அவரிடம் வேலை வாங்காதீர். அப்படியும் அந்த மாதிரியான வேலை வாங்க வேண்டிய சந்தர்ப்பத்தில் அவருக்கு ஒத்தாசையாக இருந்து உதவுங்கள்’.4
அறிவிப்பாளர் : மஅரூர் பின் சுவைத்(ரலி) நூல் : முஸ்லிம்
1. அது ஒரு ஊரின் பெயர்.
2. இந்த நபிமொழியின் பிந்தைய வாசகங்களிலிருந்து இங்கு அபூதர்தா(ரலி) அவர்கள் எவரைக் குறித்து ‘சகோதரர்’ என்று குறிப்பிடுகின்றாரோ அவர் உண்மையில் அவருடைய அடிமை என்பது தெரிகின்றது. நபிகளார்(ஸல்) தமக்குக் கீழ் பணியாற்றுகின்றவர்களையும் தம் வசம் இருந்த அடிமைகளையும் சகோதரர் என்றே அழைத்திருக்கின்றார்கள். இதனால் அபூதர்தா(ரலி) அவர்களும் தம்முடைய அடிமையை தம்முடைய சகோதரர் என்றே குறிப்பிடுகின்றார்.
3. இஸ்லாத்தை வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்ட பிறகு அதற்கு முந்தைய காலத்து அறியாமையின் எச்சங்கள் கொஞ்சம் கொஞ்சம் உம்மிடம் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. தம்முடைய பிறப்பு குறித்தும் தமது குலம், கோத்திரம் குறித்தும் பெருமைப்படுவதும் மற்றவர்களின் தாய், தந்தையரைத் திட்டுவதும், குறிப்பாக அவர்கள் அரபி அல்லாதவர்களாக அஜமிகளாக இருந்தால் அவர்களை இழிவாக நினைப்பதும் அறியாமைக் காலத்து வழக்கங்களாகும். இந்த மாதிரியான சிந்தனைகளுக்கும் நடத்தைக்கும் இஸ்லாத்தில் ஒருபோதும் இடமில்லை.
4. ஒருவர் உங்களைத் திட்டினால் நீங்களும் அவரைத் திட்டலாம். ஆனால் அதற்கும் மேலாக அவருடைய தாய், தந்தையரை இழிவாகப் பேசுவதற்கு ஒருபோதும் அனுமதி இல்லை. உம் வசம் உம்முடைய ஆளுகையின் கீழ் இருக்கின்ற உம்முடைய அடிமையுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அவர் எவரோ அந்நியர் அல்லர். அவர் உம்முடைய சகோதரர் ஆவார். அவருடைய சக்திக்கு மீறிய வேலையை அவர் மீது சுமத்துகின்ற போது அவருக்கு ஒத்தாசையாக நீங்களும் உடன் இருந்து பணியாற்றுங்கள். அவருக்குக் கூடுதல் வேலை கொடுத்து தவிக்க விட்டுவிடாதீர்கள்.