நம்பிக்கை கொண்டவர்களே!117 மூஸாவுக்கு தொல்லை அளித்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் இட்டுக்கட்டிக் கூறிய விஷயங்களிலிருந்து அல்லாஹ் அவரை விடுவித்துவிட்டான். மேலும், அல்லாஹ்விடத்தில் அவர் கண்ணியத்துக்குரியவராய் இருந்தார்.118 நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், நேர்மையான சொல்லை மொழியுங்கள். அல்லாஹ் உங்களுடைய செயல்களைச் சீர்திருத்திவிடுவான்; மேலும், உங்களுடைய குற்றங்களை மன்னிக்கவும் செய்வான். எவன் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகின்றானோ, அவன் மகத்தான வெற்றி அடைந்துவிட்டான்.
அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் · திருவசனங்கள்: 69 - 71
117. இங்கு ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மகத்துவமும் மாண்பும் நிறைந்த குர்ஆனில் ‘இறைநம்பிக்கை கொண்டவர்களே!’ என்கிற சொற்களுடன் சில இடங்களில் வாய்மையான இறைநம்பிக்கையாளர்களை விளித்து செய்தி எடுத்துரைக்கப்பட்டுள்ளது; சில இடங்களில் முஸ்லிம் களின் ஜமாஅத்தை வாய்மையான இறைநம்பிக்கையாளர்கள், நயவஞ்சகர்கள், பலவீனமான நம்பிக்கையாளர்கள் என எல்லாத் தரப்பினரையும் உள்ளடக்கிய மக்கள் திரளை விளித்து செய்தி சொல்லப்பட்டுள்ளது.
சில இடங்களில் நயவஞ்சகர்களை மட்டுமே குறிப்பாக விளித்து கருத்துரைக்கப்பட்டுள்ளது. நயவஞ்சகர்களையும் பலவீனமான இறைநம்பிக்கையாளர்களையும் விளித்து ‘அல்லதீன ஆமனூ’ என்கிற சொற்களைக் கொண்டு செய்தி சொல்லப்படுவதன் நோக்கம், ‘என்ன மக்கள் நீங்கள்? இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாகச் சொல்லிக் கொள்கின்றீர்களே! உங்களின் செயல்பாடுகள் இப்படிக் கந்தகோலமாக இருக்கின்றனவே என அவர்களை வெட்கப்பட வைப்பதே’. முந்தைய, பிந்தைய வசனங்கள், விவாதப்பொருள் ஆகியவற்றை ஆய்ந்து பார்த்தாலே ‘அல்லதீன ஆமனூ’ என்கிற சொற்கள் எந்த இடத்தில் எந்த வகையான நம்பிக்கையாளர்களை விளித்து ஆளப்பட்டிருக்கின்றன என்பதை எல்லா இடங்களிலும் எளிதாக விளங்கிக் கொள்ள முடியும்.
இந்த இடத்தில் பொதுவான முஸ்லிம்களை விளித்துத்தான் செய்தி சொல்லப்படுகின்றது என்பதை உரைத்தொடரே தெள்ளத்தெளிவாக உணர்த்தி விடுகின்றது.
118. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், ‘ஓ! முஸ்லிம்களே! நீங்கள் யூதர்களைப் போன்று நடந்துகொள்ளாதீர்கள். பனூ இஸ்ராயீல்கள் மூஸா(அலை) அவர்களுடன் நடந்து கொண்டதை ஒத்ததாக உங்களின் நடத்தை இருந்துவிடக் கூடாது’ என்று இதற்குப் பொருள்.
பனூ இஸ்ராயீல்கள் மூஸா(அலை) அவர்களைத் தங்களின் மிகப் பெரும் நல விரும்பியாகத்தான் பார்த்தார்கள். பனூ இஸ் ராயீல் சமூகம் உருவானதும், அது செழித் தோங்கியதும் மூஸா(அலை) அவர்களின் பெருமுயற்சிகளால்தான் நடந்தேறின என்பதையும் இல்லையேல் இந்திய மண்ணில் சூத்திரர்களின் நிலைமையைவிட மிக மோசமான கதிக்கு அது ஆளாகியிருக்கும் என்பதையும் அவர்கள் உணர்ந்தே இருந்தார்கள்.
என்றாலும் அவர்கள் தங்களின் மாபெரும் நலவிரும்பியுடன், மிகப் பெரும் பேருபகாரியுடன் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்குக் கீழ்க்கண்ட பைபிள் விவரணைகளை ஒரு பார்வை பார்த்தாலே போதுமானது:
விடுதலைப் பயணம் : 5:20-21; 14:11 12; 17:35
எண்ணிக்கை : 11:1-15; 14:1-10
பனூ இஸ்ராயீல்களின் இந்த நன்றிகெட்ட தனத்தைச் சுட்டிக்காட்டித்தான் முஹம்மத் நபிகளாருடன் அது போன்ற நடத்தையை மேற்கொள்வதிலிருந்து விலகி இருக்குமாறும், இல்லையேல் அந்த யூதர்கள் அடைந்த அதே கதிக்கு நீங்களும் உள்ளாவீர்கள் என்று முஸ்லிம்களை மகத்துவம் மிக்க குர்ஆன் எச்சரிக்கின்றது.
இதே விஷயத்தை ஏகப்பட்ட சந்தர்ப்பங்களில் நபிகளாரும் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். ஒருமுறை நடந்த நிகழ்வு. நபிகளார்(ஸல்) முஸ்லிம்கள் மத்தியில் பொருள்களைப் பங்கிட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த அவையிலிருந்து மக்கள் வெளியேறத் தொடங்கிய போது ஒரு மனிதர் சொன்னார்: ‘இன்று பொருள்களைப் பங்கிட்டுக் கொடுக்கின்ற போது முஹம்மத்(ஸல்) இறைவனையும் மறுமை நாளையும் சற்றும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை’. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் இதனைச் செவியேற்றதும் நபிகளாரிடம் இதனைக் குறித்துச் சொன்னார்கள். ‘இறைத்தூதரே! உங்களைக் குறித்து இன்று இப்படியெல்லாம் புனைந்து பேசினார்கள்’. அதனைக் கேட்டதும் நபிகளார்(ஸல்) சொன்னார்கள்: ‘மூஸா(அலை) மீது அல்லாஹ்வின் அருள் நிலவட்டுமாக! இதனைவிட மிக அதிகமான சுடுசொற்கள் அவர் மீது வீசப்பட்டன. அவர் பொறுமை காத்தார்.’ (முஸ்னத், அஹமத், திர்மிதி, அபூதாவூத்)
(தொடரும்)