நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஆயிஷா! அற்பமானவையாய், மிகச் சாதாரணமானவையாக் கருதப்படுகின்ற பாவங்களிலிருந்தும் விலகி இருப்பீராக! ஏனெனில் அவற்றைக் குறித்தும் இறைவனின் அவையில் விசாரிக்கப்படும்’.
அறிவிப்பாளர் : ஆயிஷா(ரலி)
நூல் : இப்னு மாஜா, தாரமி, பைஹகி
சிறு பாவங்களிலிருந்தும் முற்றாக விலகியிருத்தல் வேண்டும் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. ஒருவர் அற்பமான, சாதாரணமான பாவங்களில் ஈடுபடுகின்ற போது கூட அவருடைய இதயம் துருப் பிடித்துவிடுகின்றது. இதயத்தில் சிறு புள்ளியாய்க் கறை விழுந்துவிடுகின்றது. இன்னும் சொல்லப்போனால் சிறு பாவங்கள்தாமே என்கிற அலட்சியம் ஒருவரின் மனதில் பதிந்துவிடுகின்ற போது அவர் தம்மையும் அறியாமல் அவற்றை மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருப்பார். இது எங்கு போய் முடியுமெனில் இறுதியில் பெரும் பாவங்கள் என்கிற படுகுழியில் அவரைக் கொண்டு போய்த் தள்ளிவிடும்.
எந்தவொரு பாவத்தையும் அற்பமானது என்றோ சின்னப் பாவம் என்றோ ஒருவர் நினைப்பதையும், அதனைச் செய்யத் துணிவதையும் அறிவார்ந்த நடத்தை என்றோ, பொருத்தமான செயல் என்றோ சொல்லி விட முடியாது.
இது தொடர்பாக ஹாஃபிஸ் இப்னு கய்யூம்(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்: ‘பாவம் என்று வருகின்ற போது அது சின்னதாக இருக்கின்றது என்றோ, மிகச் சாதாரணமானதுதானே என்றோ நினைத்துக் கொள்ளாதீர்கள். அதற்கு மாறாக எந்த இறைவனின் கட்டளையை மீறுகின்ற துணிகர முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதோ அந்த இறைவனின் மகத்துவத்தை, பேராற்றலை, வல்லமையை நினைத்துப் பாருங்கள்.’
இறைவனின் மகத்துவம், மாண்பு, பேராற்றல், வல்லமை ஆகியவற்றைப் பற்றிய எண்ணமும் தெளிவும் இருக்கும்போது சிறு பாவங்களும் கடுமையானவையாய்த்தான் தோற்றமளிக்கும்.