மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

மனிதன் ஏற்றுக் கொண்ட அமானிதம்
மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : கூ. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், நவம்பர் 16-30, 2025



நாம் இந்த அமானிதத்தை வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றின் முன்பாக வைத்த போது அவை அதனை ஏற்கத் தயாராகவில்லை. மேலும், அதனைக் கண்டு அஞ்சின. ஆனால், மனிதன் அதனை ஏற்றுக்கொண்டான். திண்ணமாக, அவன் பெரிதும் அநீதி இழைப்பவனாகவும் அறியாதவனாகவும் இருக்கின்றான்.119 ஏனெனில், (இந்த அமானிதம் எனும் பொறுப்பை அவன் ஏற்றுக்கொண்டான். அதன் தவிர்க்க முடியாத விளைவு இதுதான்:) நயவஞ்சகம் கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும், இணைவைக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்லாஹ் தண்டனை அளிக்க வேண்டும். மேலும், இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள், பெண்களின் பாவ மன்னிப்புக் கோரிக்கையை அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.


அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் · திருவசனங்கள்: 72, 73


119. உரையை முடிக்கின்ற போது வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ் இந்த உலகத்தில் மனிதனின் உண்மையான அந்தஸ்து என்ன என்பதை உணர்த்துகின்றான். மேலும், அந்த அந்தஸ்தில் இருந்துகொண்டே அவன் உலக வாழ்வை வெறுமனே விளையாட்டாக நினைத்து எந்தவிதமான கவலையும் இல்லாமல் தவறான நடத்தையை மேற்கொள்கின்றான் எனில் அது தன் கையாலேயே தன்னுடைய எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்வதாகும் என்பதையும் அவனுக்கு உணர்த்துகின்றான்.

இந்த இடத்தில் ‘அமானிதம்’ என்பது மகத்துவம் மிக்க குர்ஆனின் கூற்றுக்கேற்ப மனிதனுக்கு இந்தப் பூமியில் தரப்பட்டுள்ள ‘கிலாஃபத்’தையே குறிக்கும். வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ் மனிதனுக்கு கீழ்ப்படிந்து நடப்பதற்கும், மீறி மாறு செய்வதற்கும்  சுதந்திரம்  அளித்திருக்கின்றான். மேலும், அந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்காக எண்ணற்ற படைப்புகளையும் மனிதனுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான்; அவற் றைப்  பயன்படுத்திக்  கொள்கிற அதிகாரங்களை சுயமாகத் தீர்மானித்துச் செயலாற்றுகின்ற அதிகாரங்களை அளித்திருக்கின்றான்.

இதன் கட்டாயமான விளைவாக தன்செயல்களுக்குப் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு மனிதன் மீது விழுகின்றது. மேலும் அவன் சரியான முறையில் செயல்பட்டால் நற்கூலிக்கும் தவறாக நடந்துகொண்டால் தண்டனைக்கும்  அவன்  உரித்தானவனாகின்றான்.

இந்த அதிகாரங்களை மனிதன் சுயமாக ஈட்டிக் கொள்ளவில்லை என்பதாலும், அதற்கும் மேலாக அவற்றை அல்லாஹ்தான் அவனுக்கு வழங்கியிருக்கின்றான் என்பதாலும் அவற்றின் சரியான, தவறான பயன்பாடு தொடர்பாக அவன் அல்லாஹ்வுக்குப் பதில் சொல்ல வேண்டியவனாகின்றான். இதனால்தான் மகத்துவம் மிக்க குர்ஆனில் மற்ற இடங்களில் இவற்றை உணர்த்துவதற்காக ‘கிலாஃபத்’ என்கிற சொல் ஆளப்பட்டுள்ளது. மேலும், இங்கோ அவற்றை விவரிப்பதற்காக ‘அமானத்’ என்கிற சொல் ஆளப்பட்டுள்ளது.

இந்த ‘அமானிதம்’ எந்த அளவுக்கு முக்கியமான, பாரம் நிறைந்த பெரும் சுமையாக இருக்கின்றது என்பதை உணர்த்துவதற்காக திரும்பும் திசையெங்கும் நிறைந்திருக்கின்ற வானங்களும் பூமியும் பேருரு வத்துடனும் பிரம்மாண்டமாகவும் உயர்ந் தோங்கி  நிற்கின்ற  மலைகளும்  கூட அதனை சுமப்பதற்கான வலிமையையோ, துணிவையோ பெற்றிருக்கவில்லை என்று வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ் விவரிக்கின்றான். மேலும் அவற்றின் முன்பு பலவீனங்களையும்  போதாமைகளையும் கொண்ட மனிதனோ அந்தப் பெரும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் துணிந்துவிட்டான் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றான்.

வானங்களுக்கும் பூமிக்கும் முன்னால் இந்தப் பெரும் சுமையான அமானிதம் வழங்கப்படுதலும், அவை அதனை சுமப்பதற்கு ஆயத்தமாகாமல் ஏற்க மறுத்ததும், பயந்து போனதும் உண்மையிலேயே நடந்திருப்பதற்கான சாத்தியமும் இருக்கின்றது. உருவகமாக இவ்வõறு விவரிக்கப்பட்டிருப்பதற்கும் வாய்ப்பு இருக்கின்றது. வல்லமையும்  மாண்பும்  நிறைந்த  அல்லாஹ் தன்னுடைய படைப்புகளுடன் எத்தகைய தொடர்பை வைத்திருக்கின்றான் என்பதும் நமக்குத் தெரியாது; அதனை நம்மால் புரிந்துகொள்ளவும் முடியாது. இந்தப் பூமியும் சூரியனும்  சந்திரனும்  நட்சத்திரங்களும் விண்ணை முட்டும் மலைகளும் நமக்கு உயிரற்றவையாய் ஊமைகளாய் இருப்பதைப் போன்றே அல்லாஹ்வுக்கு முன்னாலும் இருந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. அல்லாஹ் தன்னுடைய படைப்பு ஒவ்வொன்றோடும் பேசுகின்ற வல்லமையைக்  கொண்டவன்  ஆவான். மேலும் அவை அவனுக்குப் பதில் சொல்லும் ஆற்றல் கொண்டவைதாம். இதன் இயல்பை புரிந்துகொள்வது நம்முடைய திறனுக்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டதாகும்.

எனவே, உண்மையிலேயே அல்லாஹ் அவற்றுக்கு முன்னால் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியிருப்பதற்கும் அவை அதனைப் பார்த்து நடுநடுங்கி மனம் பதைத்துப் போய் இருப்பதற்கும், தம்மைப் படைத்தவனும் தங்களின் அதிபதியுமான அல்லாஹ்விடம், ‘நாங்கள் உனக்கு முன் எத்தகைய அதிகாரமும் இல்லாத அடிமையாக, சேவகனாக இருப்பதில்தõன் எங்களுக்கு நன்மை இருப்பதாக உணர்கின்றோம்.

இறைவனுக்கு மாறு செய்கின்ற சுதந்திரத்தை ஏற்றுக் கொண்டு அதனைச்  சரியாகப்  பயன்படுத்துகிற துணிவோ, அதில் தோற்றுப் போகின்ற போது உன்னுடைய தண்டனையை ஏற்றுக் கொள்கிற தைரியமோ எங்களுக்கு இல்லை’ எனச் சொல்லியிருப்பதற்கும் சாத்தியம் இருக்கின்றது.

இதே போன்று நம்முடைய தற்போதைய வாழ்வுக்கு முன்பு நம் அனைவருக்கும் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ் வேறு ஏதோவொரு வடிவத்தில் இருப்பை வழங்கி, நம்மை தனக்கு முன்னால் வரவழைத்திருந்த போது இந்த அதிகாரங்களை ஏற்றுக் கொள்வதற்கு நம்முடைய ஆயத்தத்தை வெளிப்படுத்தி இருப்பதற்கான சாத்தியமும் இருக்கின்றது. இதனை சாத்தியமற்றது என அறிவிப்பதற்கு நம்மிடம் எந்தச் சான்றும் இல்லை. தம்முடைய அறிவாற்றலைக் குறித்தும் சிந்தனைத் திறனைக் குறித்தும் தவறாகக் கணித்துவிட்ட மனிதர்தான் இதனை சாத்தியங்களின் வட்டத்திலிருந்து அப்பாற்பட்டது எனத் தீர்மானிப்பார்.

அதே சமயம் வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ் இதனை வெறுமனே உருவகமாகச் சொல்லியிருப்பதற்கும் விவகாரத்தின் அசாதாரணமான முக்கியத்துவத்தை மனக் கண்ணில் கொண்டு வருவதற்காக இது போன்ற சித்திரத்தை எடுத்துரைத்திருப்பதற்கும் சாத்தியம் இருக்கின்றது. அதாவது ஒரு பக்கம் வானங்களும் பூமியும் இமயம் போன்ற பெரும் மலைகளும் நின்று கொண்டிருக்க, மறுபக்கம் 5 அல்லது 6 அடி மனிதன் நிற்க, அல்லாஹ் பொதுவாகக் கேட்கின்றான்:

‘நான் என்னுடைய படைப்புகள் அனைத்திலும் ஏதேனுமோர் படைப்புக்கு அவன் என்னுடைய இறையாண்மைக்கும் இறையாட்சிக்கும் கீழ் இருந்தவாறே அவன் விரும்பினால் தன்னுடைய முழுமையான மன விருப்பத்தோடும், மனநிறைவோடும் என்னுடைய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கவும், நான் விதிக்கின்ற சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவும் செய்யலாம்; அல்லது செய்யாமலும் இருக்கலாம். அதற்கும் மேலாக அவன் என்னை நிராகரிக்கவும் செய்யலாம். மேலும் எனக்கு எதிராக கலகக் கொடி ஏந்தியவாறு எதிர்த்தும் நிற்கலாம் என்கிற சுதந்திரத்தை வழங்க விரும்பு கின்றேன். இந்தச் சுதந்திரத்தை அளித்த பிறகு நான் அவனுடைய பார்வையிலிருந்து மறைந்து விடுவேன். எங்குமே இல்லையோ என்கிற அளவுக்கு எங்குமே தென்பட மாட்டேன். மேலும் அவனுக்கு நான் அளித்துள்ள இந்தச் சுதந்திரத்தின் படிச் செயல் படுவதற்காக அவனுக்கு எல்லா விதமான அதிகாரங்களையும் தருவேன். மிகப் பெரும் ஆற்றல்களையும் திறமைகளையும் தருவேன். என்னுடைய எண்ணற்ற இதர படைப்புகள் அனைத்தையும் அவனுக்கு வசப்படுத்தித் தந்து விடுவேன்.

இந்தப்  பேரண்டத்தில்  என்னென்ன குழப்பங்களை வேண்டுமானாலும் செய்வதற்கு அத்துணையும் தருவேன். அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட நாளில் நான் கணக்குக் கேட்பேன். விசாரிப்பேன். எவர்கள் எல்லாம் நான் வழங்கிய சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தத் துணிந்தார்களோ அவர்களுக்கு இதுவரை எந்தப் படைப்புக்கும் நான் தந்திராத கடுமையான தண்டனையை விதிப்பேன். எவர்கள் எல்லாம் மாறுசெய்வதற்கான அத்துணை சுதந்திரங்களையும் வாய்ப்புகளையும் பெற்ற பிறகும் எனக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்களோ அவர்களுக்கு இது வரை எந்தப் படைப்புக்கும் வாய்த்திராத மிக மிக உயர்ந்த அந்தஸ்துகளை அளிப்பேன். இப்போது சொல்லுங்கள், உங்களில் இந்தத் தேர்வுக்களத்தில் இறங்குவதற்கு யார் தயார்?’

இந்த உரையைக் கேட்டதும் முதலில் ஒட்டுமொத்த  பேரண்டத்திலும்  மிகக் கடுமையான நிசப்தம் கவிழ்ந்துவிட்டது. பிறகு வலிமையிலும் ஆற்றலிலும் சக்தியிலும் ஒருவரையொருவர் விஞ்சி நின்ற படைப்புகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக முட்டிக் காலிட்டு இந்தத் தேர்விலிருந்து தமக்கு விதிவிலக்கு தருமாறு மன்றாடத் தொடங்கிவிட்டன. இறுதியில் இந்த 5 அடி உயர மனிதன் எழுகின்றான். ‘என்னுøடய அதிபதியே! நான் இந்தத் தேர்வுக்கு ரெடி!’ என்று உரத்துச் சொல்கின்றான். ‘இந்தத் தேர்வில் வெற்றி பெற்றதும் உன்னுடைய ஆட்சியின் கீழ் கிடைக்கக் கூடிய மிகப் பெரும் அந்தஸ்தையும் சிறப்பிடத்தையும் பெறுகின்ற சாத்தியத்துக்காக நான் இந்தச் சுதந் திரத்திலும் அது தருகின்ற அதிகாரங்களிலும் பதிந்திருக்கின்ற இந்த ஆபத்துகள் அனைத் தையும் முறியடித்தவாறு முன்னேறிச் செல் வேன்’ என்றும் அறிவிக்கின்றான்.

இந்தச் சித்திரத்தை தம்முடைய மனக் கண்ணில் கொண்டு வந்தாலே எந்தவொரு மனிதராலும் தாம் இந்தப் பேரண்டத்தில் எத்தகைய இக்கட்டான இடத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம்  என்பதைத் தெள்ளத்தெளிவாக விளங்கிக் கொள்வார். இனி இந்தத் தேர்வுக் களத்தில் எந்தக் கவலையும்  இல்லாது  இயங்குகின்ற மனிதரைப் பார்த்து, தம் மீது இருக்கின்ற பொறுப்பு எத்துணை பாரம் நிறைந்தது என்கிற உணர்வில்லாமலும், உலக வாழ்வில் தமக்கான வழிமுறையைத் தேர்வு செய்கின்ற வேளையில் தாம் எடுக்கின்ற முடிவு சரியாக இல்லாதபோது எத்தகைய கதிக்கு ஆளாக நேரிடும் அல்லது சரியானதாய் அமைந்து விடுகின்ற போது எத்தகைய நற்பேறுகள் கிடைக்கும் என்கிற தெளிவோ அக்கறையோ இல்லாமலும் இயங்குகின்ற மனிதரைப் பார்த்துதான் இறைவன் இந்த வசனத்தில் ‘பெரிதும் அநீதி இழைப்பவன்’ என்றும் ‘அறியாதவன்’ என்றும் சொல்கின்றான்.

அவன் ‘அறியாதவன்’தான். ஏனெனில் அந்த முட்டாள் தன்னை எந்தப் பொறுப்பும் இல்லாதவனாக நினைத்துக் கொண்டிருக்கின்றான். மேலும் அவன் ‘பெரும் அநீதி இழைப்பவனும்’தான். ஏனெனில் அவன் தன்னுடைய அழிவுக்கான வழிவகைகளை தாமாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றான். மேலும் தன்னுடன் இன்னும் எத்தனை எத்தனை மனிதர்களை அழிவுப் படுகுழியில் இழுத்துக் கொண்டு விழுகின்றான் என்பது யாருக்குத் தெரியும்?

அத்தியாயம் அல்அஹ்ஸாப் நிறைவுபெற்றது

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்