நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அண்டை வீட்டாருடன் நல்ல விதமாக நடந்து கொள்ளுதல் குறித்து ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்னிடம் தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்கள். எது வரையெனில் அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக (அண்டை வீட்டாருக்குச் சொத்திலும் பங்கு உண்டு என்று) அறிவித்துவிடுவார்களோ என்று எனக்கு ஐயம் வரத் தொடங்கிவிட்டது’.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா(ரலி) நூல் : புகாரி
அண்டை வீட்டாரின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு அவற்றை உரிய நேரத்தில் உரிய முறையில் தவறாமல் நிறைவேற்றி விடுவது எந்த அளவுக்கு இன்றியமையாதது என்பதை இந்த நபிமொழி தெளிவுபடுத்தி விடுகின்றது. அண்டை வீட்டாரை சொத்துகளின் வாரிசுகளாக ஷரீஅத்தில் அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு அறிவிக்கப்படுவாரேயானால் அவர் அண்டை வீட்டாராக இருக்க மாட்டார்; குடும்பத்தில் ஒருவராக ஆகிவிடுவார். அதனால் பல்வேறு மாறுபட்ட சிக்கல்களும் சிரமங்களும் உருவாகிவிடும்.
அண்டை வீட்டாருக்குரிய உண்மையான தகுதிநிலையைத் தக்க வைத்தவாறு அவர்களுடன் எல்லா வகையிலும் நல்ல விதமாக, நன்மையைத் தருகின்ற, பலன் அளிக்கின்ற, பக்கபலமாக இருக்கின்ற வகையில் நடந்துகொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்றே ஷரீஅத் அறிவுறுத்தியுள்ளது.
ஒருவர் நல்லவர்; பண்பாளர் என்பதற்கான அடையாளம் அவருடைய அண்டை வீட்டுக்காரர் அவருடன் மகிழ்வோடு இருப்பதாகும். அவர் வேறு இடத்திற்கு மாற்றலாகிச் செல்ல இருக்கின்றார் என்பதை அறிந்ததும் அவருடைய அண்டை வீட்டுக்காரர் தவித்துப் போகின்றார்; துயருற்று விடுகின்றார் எனில் அதுதான் அவர் நல்லவர், பண்பாளர் என்பதற்கான அடையாளமாகும்.
இதற்கு நேர்மாறாக ஒருவரின் இருப்பை அவருடைய அண்டை வீட்டுக்காரர் தீராத தொல்லையாக, துன்பமாகப் பார்க்கின்றார் எனில், அவர் வீட்டை விற்றுவிட்டோ, காலி செய்துவிட்டோ வேறு ஊருக்கோ இடத்துக்கோ போக இருக்கின்றார் என்கிற செய்தி அறிந்ததும் அவருடைய அண்டை வீட்டுக்காரர் மிகவும் மகிழ்கின்றார்; இனிப்பு கொடுத்து கொண்டாடுகின்றார் எனில் அத்தகைய மனிதர் இறைவனின் பார்வையில் ஒருபோதும் இறைவனுக்கு விருப்பமான அடியான் ஆகவே மாட்டார்.
அண்டை வீட்டுக்காரர் தீயவராக, தீராத தொல்லை கொடுப்பவராக, துன்பம் இழைப்பவராக இருந்தாலும் அவருக்கு எந்த மனக்கசப்பும் ஏற்பட்டுவிடாத அளவுக்கும் அவர் மனம் நோகாத வகையிலும், எந்தவொரு புகாருக்கும் இடம் தராமலும் அதற்கும் மேலாக அவர்களின் நலம் நாடியும் துன்பங்களைத் துடைக்கின்ற வகையிலும் நடந்து கொள்பவர்தான் இறைநம்பிக்கையாளர் ஆவார்.
அண்டை வீட்டுக்காரரைக் குறித்து ஒருபோதும் கெட்ட எண்ணத்தை வளர்த்துக் கொள்ளக் கூடாது. அப்படியே அவரிடம் ஏதேனும் குற்றம் குறை இருந்தாலும் அதனை மறைத்துவிட வேண்டும். இது அண்டை வீட்டாருக்கு நம் மீதுள்ள உரிமையாகும். அது மட்டுமல்ல, ஒருவரைச் சீர்திருத்ததுவதற்கான மிகச் சிறப்பான வழிமுறையே அவருடன் கண்ணியத்துடன் நடந்துகொள்வதாகும்.