மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • EWS இடஒதுக்கீடு சமத்துவத்திற்கு எதிரான தீர்ப்பு, உண்மையை உலகறியச் செய்த பத்திரிகையாளர், யூசுஃப் நபியின் ஏழாண்டு பசுமைப் புரட்சித் திட்டம் போன்ற புதுமையான தலைப்புகளுடனும் செய்திகளுடனும் வெளிவருகிறது டிசம்பர் 1-15 இதழ்.
  • டிசம்பர் 1-15 இதழில் வரலாற்றாய்வாளர் செ.திவான் அவர்களின் சிறப்பு நேர்காணலும் வெளிவருகிறது.

முழுமை

அழியும் வட்டியும் பெருகும் ஜகாத்தும்!
தஃப்ஹீமுல் குர்ஆன் · மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : கூ. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், 16-31 July 2022


எனவே (நம்பிக்கையாளனே!) உறவினர்க்கு அவருடைய உரிமையை வழங்கிவிடு; மேலும், வறியவருக்கும் பயணிகளுக்கும் (அவர்களின் உரிமையையும் தந்துவிடு).57 அல்லாஹ்வின் திருப்தியைப் பெற விரும்புவோர்க்கு இதுவே மிகச் சிறந்த வழிமுறையாகும். மேலும், அவர்களே வெற்றியாளர்களாவர்.58 மக்களுடைய பொருள்களுடன் கலந்து பெருக வேண்டும் என்பதற்காக நீங்கள் வட்டிக்கு விடும் பணம் அல்லாஹ்விடத்தில் பெருகுவதில்லை.59 ஆனால், அல்லாஹ்வின் உவப்பைப் பெற வேண்டுமென நாடியவர்களாய் நீங்கள் வழங்கும் ஜகாத்  அதனை வழங்குவோர்தாம் உண்மையில் தம்முடைய செல்வத்தைப் பெருக்கிக் கொள்பவர்களாவர்.

· அத்தியாயம் 30 அர்ரூம் · திருவசனங்கள் : 38  39

57. உறவினருக்கும் வறியவருக்கும் பயணிக்கும் தானம் அளித்துவிடு என்று இங்கு சொல்லப்படவில்லை. அதற்கு மாறாக, அவர்களுக்கு நீ கொடுத்தாக வேண்டிய அவர்களின் உரிமைதான் அது. எனவே அவர்களுக்குரியதைத் தருகின்றோம் என்று நினைத்தே கொடுத்துவிடு என்றே சொல்லப் பட்டுள்ளது. அவர்களுக்குத் தருகின்றபோது நீ அவர்களுக்கு ஏதோ பேருதவியைச் செய்து கொண்டிருக்கின்றாய் என்கிற எண்ணமோ, தானம் செய்கின்ற பெரிய ஆளுமைதான் நான்; அவர்களோ நீ கொடுத்ததைத் தின்கிற அற்பமான பிறவிகள் என்கிற எண்ணமோ உன்னுடைய மனத்துக்குள் வந்துவிடக் கூடாது. அதற்கு மாறாக "உண்மையான அதிபதி உனக்குச் சற்றே அதிகமான செல்வத்தைக் கொடுத்திருக்கின்றான்; தன்னுடைய மற்ற அடிமைகளுக்குச் சற்றே குறைத்துக் கொடுத்திருக்கின்றான் என்றால் உனக்குக் கூடுதலாகத் தரப்பட்டிருக்கின்ற செல்வம் உன்னைச் சோதித்துப் பார்க்கின்ற நோக்கத்து டன்தான் உன்வசம் தரப்பட்டுள்ளது. நீ அவர்களின் உரிமையை மதிக்கின்றாயா, அவர்களுக்கு உரியதை அவர்களுக்குத் தருகின்றாயா, இல்லையா என்றே உன்னுடைய அதிபதி உன்னைச் சோதித்துப் பார்க்க விரும்புகின்றான்' என்பதை உன்னுடைய நெஞ்சத்தில் அழுத்தமாகப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த இறைவாக்கினையும் இதன் உண்மையான உட்பொருளையும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கின்ற எவரும் மனிதர்களின் ஒழுக்க, ஆன்மிக வளர்ச்சிக்காகக் குர்ஆன் பரிந்துரைக்கின்ற பாதையில் பயணிக்க வேண்டுமெனில் ஒரு சுதந்திரமான சமூகமும் சுதந்திரமான பொருளாதாரமும் (Free Economy) இருந்தாக வேண்டிய அவசியத்தை உணர்ந்துகொள்வார்.  குடிமக்களின் சொத்துரிமை மறுக்கப்பட்டு, அரசாங்கமே எல்லா வளங்களுக்கும் ஏகபோக உரிமை யைக் கொண்டாட, மனிதர்கள் மத்தியில் வாழ்வாதாரத்தைப் பகிர்ந்து தருகின்ற ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் அரசாங்கமே ஏற்றுக்கொண்டு விட, அதற்கும் மேலாக எந்தவொரு மனிதரும் மற்ற மனிதர்களின் உரிமையை அங்கீகரித்து அவர்களுக்கு உரியதைத் தர முடியாத, மற்றவர்களிடமிருந்து ஏதேனும் பெற்றுக் கொண்டு அவர்களுக்காகத் தன்னுடைய மனத்தில் நலம் நாடுகின்ற உணர்வை வளர்த்துக்கொள்ள முடியாத இறுக்கமான சமூகச் சூழலில் இந்த ஒழுக்க, ஆன்மிக வளர்ச்சிக்கான வாய்ப்பே இல்லை.

இது போன்ற அப்பட்டமான "கம்யூனிஸ பண்பாட்டு, பொருளாதாரக் கட்டமைப்பு'  இன்று நம்முடைய நாட்டில் "குர்ஆனிய இøறபரிபாலித்தலுக்கான கட்டமைப்பு' என்கிற மனத்தை மயக்குகின்ற பெயர் சூட்டப்பட்டு வலுக்கட்டாயமாக குர்ஆனிய போர்வை போர்த்தப்பட்டு பேசப்படுகின்ற இந்தக் கட்டமைப்பு  குர்ஆன் எடுத்துரைக் கின்ற கட்டமைப்புக்கு முற்றிலும் நேர்எதிரõனதாகும்.

ஏனெனில் அப்படிப்பட்ட சமூகக் கட்டமைப்பில் தனிமனிதரின் ஒழுக்க வளர்ச்சிக்கும், தனிப்பட்ட ஆளுமைகள் மலர்ந்து செழித்தோங்குவதற்கும் இட்டுச் செல்லும் பாதைகள் முழுமையாக மூடப்பட்டு விடும். தனிமனிதர்கள் ஓரளவுக்கேனும் செல்வ வளங்களுக்கு உரிமையாளர்களாய் இருந்து, அவற்றைச் சுதந்திரமாகச் செலவிடு கின்ற அதிகாரமும் பெற்றிருந்து, அந்தச் செல்வ வளங்களிலிருந்து இறைவனுக்கும் இறைவனின் அடியார்களுக்கும் உரியதை மகிழ்வோடும் விருப்பத்தோடும் மனமொப்பிக் கொடுப்பதற்கு முன்வருபவர்களாய் இருந் தால் மட்டுமே, அத்தகைய தனிமனிதர்களைக் கொண்ட சமூகத்தில் மட்டுமே குர்ஆன் சொல்கின்ற கட்டமைப்பால் இயங்க முடியும்.

இது போன்ற சமூகச் சூழலில்தான் ஒவ்வொரு தனிமனிதரிடமும் ஒரு பக்கம் பரிவு, மனிதநேயம், பாசம், தன்னலம் பாராமை, தியாகம், அர்ப்பணிக்கும் பண்பு, மற்றவர்களின் உரிமைகளை மதித்து அவற்றை அளித்துவிடும் குணம் போன்ற உயர்ந்த ஒழுக்கப் பண்புகள் மலர்வதற்கான சாத்தி யங்கள் உருவாகின்றனவெனில், மறுபக்கம் எவர்களுக்கு நன்மைகளும் பேருதவிகளும் செய்யப்படுகின்றதோ அவர்களின் மனங் களில் தமக்குப் பேருதவி செய்தவர்களின் நலம் நாடுகின்ற உணர்வும், நன்றியுணர்வும், நன்மை செய்தவர்களுக்கு நன்மை செய்கின்ற தூய உணர்வுகளும் செழித்தோங்குவதற்கான வாய்ப்புகளும் பிறக்கின்றன. இது எங்கு போய் முடிகின்றதெனில் தீமையைத் தடுப்பதற்கும் நன்மையை ஏவுவதற்கும் அதிகாரத் தலையீட்டைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லாத, அதற்கு மாறாக, மக்களின் இதயத்தூய்மையும், அவர்களின் தூய்மை யான எண்ணங்களுமே அந்தப் பொறுப்பை ஏற்று நிறைவேற்றுகின்ற முன்மாதிரியான சமூகச் சூழல் உருவாகி விடுகின்றது.

58. உறவினர்கள், வறியவர்கள், பயணிகள் போன்றோரின் உரிமையை நிறைவேற்றுவதாலே ஃபலாஹ் என்கிற வெற்றி கிடைத்துவிடும்; வெற்றி பெறுவதற்கு இதனைத் தவிர வேறு எதுவும் தேவைப்படாது என்று இதற்குப் பொருள் அல்ல. அதற்கு மாறாக, மனிதர்களில் எவர்களெல்லாம் இந்த உரிமைகளை மதிப்பதில்லையோ, இவற்றை நிறைவேற்றுவதில்லையோ அவர்களுக்கு ஃபலாஹ் என்கிற வெற்றி கிடைக்காது. அதற்கு மாறாக, இறைவனின் உவப்பைப் பெறுகின்ற நோக்கத்தோடு இந்த உரிமைகளை மதித்து இவற்றை நிறைவேற்றுபவர்களுக்கே வெற்றி கிடைக்கும் என்றே இதற்குப் பொருள் ஆகும்.

59. வட்டியைத்  தடை  செய்வது தொடர்பாக அருளப்பட்ட முதல் வசனம் தான் இது. நாம் வட்டி என்கிற பெயரில்கூடுதலாகத் தருகின்ற பணத்தால் அதனைப் பெற்றுக்கொள்பவரின் செல்வம் பெருகும் என்கிற நினைப்புடன்தான் நீங்கள் வட்டியைத் தருகின்றீர்கள். ஆனால் இறைவனிடத்தில் உண்மையில் வட்டியால் செல்வவளம் பெருகுவதில்லை; அதற்கு மாறாக ஜகாத்தால்தான் செல்வவளம் பெருகுகின்றது என்கிற கருத்து மட்டுமே இங்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சிறிது காலத்திற்குப் பிறகு மதீனா மாநகரில் வட்டி தடை செய்யப்படுவதாகக் கட்டளை அருளப் பட்டபோது அதில் கூடுதலாக (அல்லாஹ் வட்டியை அழித்துவிடுகின்றான். இன்னும் தானதர்மங்களை வளரச் செய்கின்றான்  அத்தியாயம் 2:276) என்கிற கருத்து அருளப் பட்டது. (பிற்பாடு அருளப்பட்ட சட்டங்களுக்காகப் பார்க்க: அத்தியாயம் 2:275281; அத்தியாயம் 3:130).

இந்த வசனத்திற்கு குர்ஆன் விரிவுரை யாளர்கள் இரண்டு விதமாக விளக்கம் அளித்திருக்கின்றார்கள். ஒரு சாராரின் கூற்றுப்படி இங்கு ரிபா என்கிற சொல் ஷரீஅத்தால் தடை செய்யப்பட்ட வட்டியைக் குறிக்கவில்லை. அதற்கு மாறாக, அன் பளிப்பை  அதுவும் வாங்கிக்கொள்பவர் பிற்பாடு இன்னும் கூடுதலாகவோ சிறப் பாகவோ திருப்பி அளிப்பார் என்கிற எண்ணத்துடனோ, கொடுப்பவருக்கு ஏதேனுமொரு பயனுள்ள சேவையை ஆற்றுவார் என்கிற எண்ணத்துடனோ, பெற்றுக்கொள்பவர் நல மும் வளமும் பெறுவதால் கொடுப்பவருக்கு இலாபம் கிடைக்கும் என்கிற எண்ணத்துடனோ தரப்படுகின்ற அன்பளிப்பைக் குறிக்கும்.

இந்தக் கருத்தை இப்னு அப்பாஸ்(ரலி), முஜாஹித்(ரலி), ளஹ்ஹாக்(ரலி), கத்தாதா, இக்ரிமா, முஹம்மத் பின் கஅப் அல்குரஸீ, ஷஅபி ஆகியோர் வெளியிட்டிருக்கின்றார்கள். இந்த வசனத்தில் இந்தச் செயலின் விளைவாக இறைவனிடத்தில், அந்தச் செல்வத் தில் எந்தவிதமான பெருக்கமும் ஏற்படாது என்பதோடு நிறுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.

ஷரீஅத் தடை செய்திருக்கின்ற வட்டியைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்குமேயானால் இறைவனிடத்தில் இந்தச் செயலின் விளைவாகக் கடுமையான தண்டனைக்கு ஆளாவீர்கள் எனத் திட்டவட்டமாக எடுத்துரைக்கப்பட்டிருக்கும் என்கிற சிந்தனையின் அடிப்படையில்தான் இந்தப் பெரியார்கள் இந்த வசனத்திற்கு இந்த விளக்கத்தைத் தந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. இரண்டாவது சாராரோ, ஷரீஅத்தால் தடை செய்யப்பட்டுள்ள ரிபாவைத்தான் இது குறிக்கும் என்று விளக்கம் அளித்திருக்கின்றார்கள். இந்தக் கருத்தை ஹஸன் பஸ்ரி, சுத்தி ஆகியோர் உரைத்திருக்கின்றார்கள்.

அல்லாமா ஆலூஸி அவர்களின் எண்ணப்படியும் இந்த வசனத்தின் வெளிப்படையான பொருள் இதுவே. ஏனெனில் அரபி மொழியில் ரிபா என்கிற சொல் இந்தப் பொருளில்தான் ஆளப் படுகின்றது. இதே விளக்கத்தையே குர்ஆன் விரிவுரையாளர் நிஸாபூரி அவர்களும் பதிவுசெய்திருக்கின்றார்.

இந்த இரண்டாவது விளக்கம்தான் சரியானது என்பதே நம்முடைய நிலைப் பாடாகும். ஏனெனில் நன்கு அறியப்பட்ட பொருளில் அல்லாமல் வேறு பொருளில் இந்தச் சொல் ஆளப்பட்டிருக்கின்றது என்பதற்கு முதல் விளக்கத்தைச் சொன்ன விரிவுøரயாளர்கள் எடுத்துரைத்துள்ள ஆதாரம் போதாது. அத்தியாயம் அர்ரூம் அருளப்பட்ட காலகட்டத்தில் வட்டி தடை செய்யப்பட்டிருக்கவில்லை.

பல்லாண்டுகளுக்குப் பிறகுதான் தடை பற்றிய சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஏதேனும் ஒன்றைத் தடை செய்ய வேண்டியிருந்தால் முதலில் அது தொடர்பாக மக்களின் மனங்களைப் பக்குவப்படுத்தத் தொடங்கிவிடுவதுதான் குர்ஆன் கடைப் பிடிக்கின்ற வழிமுறையாக இருந்து வந்துள்ளது. மது விஷயத்திலும் முதலில் அது தூய்மையான உண்பொருள் இல்லை என்று மட்டுமே சொல்லப்பட்டது. (பார்க்க: அத்தியõயம் 16:67). பிறகு அதனால் ஏற்படும் பாவம் அதன் பயனைவிட அதிகமாக இருக்கின்றது என்று சொல்லப் பட்டது (பார்க்க: அத்தியாயம் 2:219). இதனைத் தொடர்ந்து போதையோடிருக்கும் நிலையில் தொழுகையை நெருங்காதீர்கள் (பார்க்க: அத்தியாயம் 4:38) என அறிவுறுத்தப்பட்டது.

அதன் பிறகு அது முழுக்க முழுக்க தடை செய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டது. இதே போன்று இங்கு செல்வத்தைப் பெருக்குவதற்குத் துணை நிற்கின்ற பொருள் இதுவல்ல என்றும் அதற்கு மாறாக ஜகாத் மூலமாக மட்டுமே உண்மையான வளர்ச்சியை ஈட்ட முடியும் என்றும் அறிவிப் பதோடு நிறுத்திக்கொள்ளப்பட்டது. இதன் பிறகு கூட்டு வட்டி தடை செய்யப்பட்டது. (பார்க்க: அத்தியாயம் 3:130).

இறுதியாக வட்டி அறவே தடை செய்யப்பட்டது. (பார்க்க: அத்தியாயம் 2:275)

(தொடரும்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்