மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • EWS இடஒதுக்கீடு சமத்துவத்திற்கு எதிரான தீர்ப்பு, உண்மையை உலகறியச் செய்த பத்திரிகையாளர், யூசுஃப் நபியின் ஏழாண்டு பசுமைப் புரட்சித் திட்டம் போன்ற புதுமையான தலைப்புகளுடனும் செய்திகளுடனும் வெளிவருகிறது டிசம்பர் 1-15 இதழ்.
  • டிசம்பர் 1-15 இதழில் வரலாற்றாய்வாளர் செ.திவான் அவர்களின் சிறப்பு நேர்காணலும் வெளிவருகிறது.

முழுமை

அத்தியாயம்: 31 லுக்மான்
16-30 SEPTEMBER 2022


பெயர்: இந்த அத்தியாயத்தில் வசனம் 12 முதல் 19 வரையில் அறிஞர் லுக்மான் தம் மகனுக்கு வழங்கிய அறிவுரைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இதனை முன்னிட்டே இந்த அத்தியாயத்திற்கு லுக்மான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இறக்கியருளப்பட்ட காலம்: இதன் கருத்துகளை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது.

அதாவது எந்தக் காலகட்டத்தில், இஸ்லாமிய அழைப்பை நசுக்குவதற்காக, தடுப்பதற்காக பலவந்தமும் கொடுமைகளும் தொடங்கியிருந்ததோ ஒவ்வொரு வகையான தந்திரங்களும் பயன்படுத்தப்பட லானதோ; ஆயினும் அந்த எதிர்ப்புப் புயல் முழு வேகத்தை அடையாதிருந்ததோ அப்படிப்பட்ட காலகட்டத்தில் இந்த அத்தியாயம் அருளப்பட்டது என்று தெரிகிறது. இதற்கான அறிகுறி வசனம் 14,15இல் காணப்படுகிறது.

புதிதாக இஸ்லாத்தில் சேர்ந்த இளைஞர்களுக்கு அவ்விரு வசனங்களில் இவ்வாறு அறிவுறுத்தப்பட் டுள்ளது: அதாவது இறைவனுக்கு அடுத்தபடியாக அனைத்தையும்விட முக்கியத்துவம் வாய்ந்தது தாய் தந்தையருக்குச் செலுத்த வேண்டிய கடமைகள்தாம் என்பதில் ஐயமில்லை. ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள விடாமல் தாய் தந்தையர் உங்களைத் தடுத்தால், இணைவைப்புக் கொள்கைக்குத் திரும்புமாறு உங்களைக் கட்டாயப்படுத்தினால், அவர்களின் அந்தப் பேச்சை ஒருபோதும் நீங்கள் ஒப்புக்கொள்ளாதீர்கள்.

இதே விஷயம் அல்அன்கபூத் எனும் 29ஆம் அத்தியாயத்திலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து  இவ்விரு அத்தியாயங்களும் ஒரே காலகட்டத்தில் அருளப்பட்டன என்பது தெரியவருகிறது. ஆனாலும் இவ்விரு அத்தியாயங்களின் ஒட்டுமொத்த விளக்கும் பாணியையும்  கருத்துகளையும் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் லுக்மான் அத்தியாயம் ஆரம்ப காலத்தில் அருளப்பட்டுள்ளது என்பதைக் கணிக்க முடிகிறது. இதனால் அதன் வரலாற்றுப் பின்னணியில் எவ்விதக் கடும் எதிர்ப்பிற்கான அடையாளமும் காணக் கிடைக்கவில்லை.

இதற்கு மாறாக அல்அன்கபூத் அத்தியாயத்தைப் படிக்கும் பொழுது இந்த அத்தியாயம் அருளப்பட்ட காலத்தில் முஸ்லிம்களின் மீது கடுமையான அநீதியும் துன்புறுத்தலும் நிகழ்ந்துகொண்டிருந்தன என்பது தெரியவருகிறது. விவாதப் பொருளும் கருத்துகளும்: இந்த அத்தியாயத்தில் இணைவைப்புக் கொள்கை வீணானது; அறிவுக்கு ஒவ்வாதது என்றும் ஏகத்துவக் கொள்கைதான் உண்மையானது, அறிவுப்பூர்வமானது என்றும் மக்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது.

மேலும் முன்னோர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதை விட்டுவிடுங்கள்; இறைவன் தரப்பிலிருந்து முஹம்மது நபி(ஸல்) அவர்கள், சமர்ப்பித்துக்கொண்டிருக்கும் அறிவுரையைத் திறந்த மனத்துடன் சிந்தித்துப் பாருங்கள். அந்த அறிவுரைகள் உண்மையானவை என்று பேரண்டத்தின் எல்லாத் திசைகளிலும் காணப் படும்  ஏன், தங்களின் உடலமைப்பினுள்ளேயும் கூட காணப்படும் தெளிவான அறிகுறிகள் சான்று பகர்ந்துöகாண்டிருக்கின்றன என்பதைப் பற்றி கண்திறந்து பாருங்கள்.

இந்தத் தொடரில் இதுவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது: இந்த முழக்கம், உலகத்தில் அல்லது அரபு நாட்டில் முதன்முறையாக எழுகின்ற புதியதொரு முழக்கம் அல்ல; மக்களைப் பொறுத்து முற்றிலும் அறிமுகமில்லாத முழக்கமும் அல்ல! மாறாக இன்றைக்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்திக் கொண்டிருக்கும் இதே கருத்துகளைத்தான் இதற்கு முன்பும்கூடஅறிவுஞானம், பகுத்தறிவு, விவேகம், மதிநுட்பம் பெற்றிருந்தவர்கள் எடுத்துரைத்துக்கொண்டிருந்தார்கள் என்றும் எடுத்துரைக்கப் பட்டுள்ளது. உங்களது சொந்த நாட்டிலேயே லுக்மான் எனும் ஓர் அறிஞர் வாழ்ந்து மறைந்திருக்கின்றார்.

அவரது விவேகம், மதிநுட்பம் தொடர்பான வரலாறு உங்களிடையேகூட பிரபலமானவைதான். அவர் தொடர்பான பழமொழிகளையும், அவரது தத்துவார்த்தமான பொன்மொழிகளையும் நீங்கள் உங்களுடைய பேச்சுகளில் மேற்கோள் காட்டுகிறீர்கள். உங்களிடையே உள்ள கவிஞர்களும் சொற்பொழிவாளர்களும் அவற்றை அதிகம் பயன் படுத்துகிறார்கள். லுக்மான் எனும் அந்த அறிஞர் எந்தக் கொள்கைகளை  எந்த குணவொழுக்கங்களைப் போதித்துக் கொண்டிருந் தார் என்று இப்பொழுது நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்