அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்கள்: "மனிதன் இறந்து விடும்போது
அவனுடைய செயல்களும் முற்றுப் பெற்றுவிடுகின்றன. ஆனால்
மூன்றை விதிவிலக்காகச் சொல்லலாம். அவை (பின்வருமாறு): ஸதகா
ஜாரியா1 (நிலையான கொடை), நன்மை தருகின்ற கல்வி2, அவருக்காகப்
பிரார்த்திக்கின்ற நன்னடத்தை மிக்க குழந்தைகள்'.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி) நூல் : முஸ்லிம் (3358)
1. வக்ஃப் செய்யப்பட்ட சொத்துகள், பள்ளிவாசல்களைக் கட்டுதல், பொதுக் கிணறு வெட்டுதல், கால்வாய்களை அமைத்துத் தருதல் முதலியன. இவற்றிலிருந்து மற்ற மனிதர்கள் பயனீட்டுகின்ற வரை அதற்கான நன்மை இவற்றைச் செய்தவருக்குச் சேர்ந்துகொண்டே இருக்கும்.
2. எடுத்துக்காட்டாக எவருக்காவது கற்றுக் கொடுப்பது. அல்லது பயனுள்ள நூலை எழுதுவது. எழுத்தாளர் இறந்து போன பிறகும் அந்த நூலை வாசிப்பவர் அதிலிருந்து பயனீட்டிக் கொண்டே இருக்கின்றார்.
தீராத தேட்டங்கள்
அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்கள்: "இறைநம்பிக்கையாளனின் வயிறு
நன்மையால் (அறிவு, ஞானம் நிறைந்த பேச்சுகளால்) என்றைக்குமே
நிறைவதில்லை. அவன் அதனைக் கேட்டுக்கொண்டே இருக்கின்றான்.
எதுவரையெனில் இறுதியில் சுவனத்திற்குச் சென்று சேர்ந்து விடுகின்றான்'
அறிவிப்பாளர் : அபூஸயீத் குத்ரி(ரலி), நூல் : திர்மிதி
மனிதனின் நலனோடும் வெற்றியோடும் ஏதாவதொரு வகையில் தொடர்புடையது தான் கல்வி. நன்மை, வெற்றி தொடர்பானவற்றைக் குறித்துக் கேட்பதில் இறைநம்பிக்கையாளன் என்றைக்குமே களைப்படைய மாட்டான். அதில் அவனுக்குக் கட்டுக்கடங்காத ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும். இன்னும் கேட்க வேண்டும்; இன்னும் கேட்க வேண்டும் என்கிற அறிவுத்தாகமும் தவிப்பும் அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். உலக மோகம் கொண்டவன் பணத்தாசை பிடித்து அலைவதைப் போன்று, எவ்வளவுதான் கோடிகோடியாகச் சம்பாதித்துக் குவித்தாலும் மனம் நிறைவடையாமல் மேலும் மேலும் சம்பாதிக்கின்ற பேராசை கொண்டவனாக இருப்பதைப் போன்றுதான் இறைநம்பிக்கையாளனும் நன்மையான கருத்துகளை அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் தணியாத தாகம் கொண்டவனாய் இருப்பான்.