மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

இறைவனின் எதிரிகள்
நபிமொழி விளக்கம் * மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா , 1 - 15 OCTOBER 2022


நபிகளார் (ஸல்) கூறினார்கள்:

"வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ் கூறுகின்றான்: "மூன்று வகையான மனிதர்களுக்கு நாளை மறுமையில் நான் எதிரியாக இருப்பேன்.1 அவர்கள் எப்படிப்பட்டவர்கள் எனில், முதலாமவன், என்னுடைய பெயரைச் சொல்லி வாக்குறுதி அளித்துவிட்ட பிறகு அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்தவன். இரண்டாமவன், ஒரு சுதந்திரமான மனிதரை அடிமை என்று சொல்லி விற்றுவிட்டு அதன் பணத்தைச் சாப்பிட்டவன்.2 மூன்றாமவன் எவரேனும் ஓர் உழைப்பாளியை வேலைக்கு அமர்த்தி, அவனிடம் முழுமையாக வேலையை வாங்கி விட்ட பிறகு அவனுக்குரிய கூலியைக் கொடுக்க மறுத்தவன்.'3 

அறிவிப்பாளர் : அபூஹûரைரா(ரலி) நூல் : புகாரி

 

1. இறைவனே ஒருவனுக்கு எதிரியாக இருந்து விட்டால் அந்த மனிதன் அழிவதிலும் நாசமடைவதிலும் ஐயம் என்ன இருக்கப் போகின்றது?

2. அந்த மனிதருக்கு இறைவனின் மகத்துவம், மாண்பு, வல்லமை ஆகியவற்றைக் குறித்து இம்மியளவுகூட அக்கறை இருக்கவில்லை. அவற்றை அவன் கிஞ்சிற்றும் பொருட்படுத்தவே இல்லை. மேலும் அவன் எந்த அளவுக்கு ரோஷம் இல்லாதவனாக தாழ்ந்து கிடந்தான் எனில் சொற்ப பணத்துக்காக ஒரு சுதந்திரமான மனிதரை அடிமை என்று பொய் சொல்லி விற்றுவிடவும் துணிந்தான். பிறகு அதில் கிடைத்த பணத்தைத் தின்று தீர்த்தான்.

அந்தப் பணத்தைத் தின்பதிலே அவனுக்கு இம்மியளவுகூட தயக்கமோ தடுமாற்றமோ வரவில்லை. மோசடி செய்து கயமைத்தனமாக ஒருவரை அடிமை நிலையில் தள்ளிவிட்டோமே என்கிற உறுத்தல் கிஞ்சிற்றும் அவனுக்கு இருக்கவில்லை. அதற்குப் பதிலாக அதன் மூலம் கிடைத்த பணத்தில் உல்லாசமாக இருக்க முடிகின்ற அளவுக்கு அவனுடைய மனசாட்சி செத்துப் போயிருந்தது. இது போன்ற கீழ்த்தரமான மனிதர்கள் மீது இறைவனின் கோபம் வெடிக்கவில்லை எனில் யார் மீதுதான் இறைவன் கோபம் கொள்வான்?

3. இது அப்பட்டமான அநீதியும் அக்கிரமமும் ஆகும். உழைப்பாளியிடம் முழுமையாக வேலையை வாங்கிவிட்ட பிறகு அவனைச் சக்கையாகப் பிழிந்து விட்ட பிறகு அவனுக்குத் தரவேண்டிய கூலியைத் தர மறுப்பதை விட பெரும் அக்கிரமம் உண்டா? எவர் நீதிக்கும் நியாயத்துக்கும் எதிராக நடந்து கொள்கின்றாரோ அவர் சாதாரணமான குற்றவாளி அல்லர். அதற்கு மாறாக அவனுடைய அந்த நடத்தை அவனை இறைவனின் எதிரியாக ஆக்கிவிடுகின்றது. அதைப் பற்றிய உணர்வு அவனுக்கு இல்லாமல் போனாலும் சரி, அவனுடைய நடத்தை இறைவனுக்கு எதிராகக் கலகம் செய்வதற்கு ஒப்பானதாகும்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்