மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

முழுமை

துன்புறுத்தும் வேதனையும் அருள் நிறைந்த சுவனமும்..!
மௌலானா மௌதூதி (ரஹ்), 1-15 நவம்பர் 2022


7. எவ்வித அறிவுமின்றி என்பது, விலைக்கு வாங்குகிறார்கள் எனும் வினைச் சொல்லுடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம். அல்லது (அல்லாஹ்வின் வழியை விட்டும்) பிறழச் செய்கிறார்கள் எனும் வினைச் சொல்லுடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம். (இவ்விரண்டாவது முறைப்படியே இங்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது)

விலைக்கு வாங்குகிறார்கள் எனும் சொற்றொடருடன் தொடர்புடையதாகும் என்று ஏற்றுக் கொண்டால், அதன் கருத்து இப்படி அமையும்: மூடனாகவும், விவரம் கெட்டவனாகவும் உள்ள இந்த மனிதன், மனமயக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இவ்விஷயங்களை விலை கொடுத்து வாங்குகிறான்; ஆனால் விலைமதிப்பற்ற எத்தகைய உன்னதப் பொருளை விட்டு விட்டு இத்தகைய அழிவுக்குரிய பொருளை வாங்கிக் கொண்டிருக்கிறான் என்பதைப் பற்றி அவன் சிறிதும் அறிந்துணர்வதில்லை.

ஒருபுறம் விவேகமும் வழிகாட்டலும் நிறைந்த இறைவேதத்தின் வசனங்கள் இலவசமாகவே அவனுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றிலிருந்து அவன் தனது முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கிறான். மறுபுறம் சிந்தனையையும் குணவொழுக்கத்தையும் பாழ்படுத்திக் கொண்டிருக்கும் இவ்வீணான விஷயங்கள் உள்ளன. அவன், தனது செல்வத்தைச் செலவுசெய்து அவற்றை விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கின்றான்.

வழிபிறழச் செய்கிறார்கள் எனும் பிந்தைய சொற்றொடருடன் தொடர்புடையது என்று அர்த்தம் கொடுத்தால், அதன் பொருள் இப்படி அமையும்: அந்த மனிதன், எவ்வித அறிவுமின்றி மக்களுக்கு வழிகாட்டப் புறப்பட்டிருக்கின்றான். இறைவனின் படைப்பினங்களை இறைவழியிலிருந்து பிறழச் செய்வதற்கு முயற்சி செய்வதன் மூலம் எத்துணைப் பெரிய அநீதியைத் தனது கழுத்தின் மீது போட்டுக் கொண்டிருக்கிறான் என்பதைப் பற்றிய உணர்வே அவனுக்கு இல்லை.

8. கதைகள் கேட்பதிலும் பாட்டிசைப் பதிலும் மக்களை ஈடுபடுத்தி அல்லாஹ்வின் வேத வசனங்களைக் குறித்து அவர்களை வெறுப்படையச் செய்ய வேண்டும் என்று எந்த மனிதன் விரும்புகின்றானோ அந்த மனிதன் குர்ஆன் விடுக்கும் இந்த அழைப் பைக் கேலி கிண்டலுக்கு உள்ளாக்க முயற்சி செய்கிறான். இப்படிப்பட்ட மனிதன், இறைமார்க்கத்துடன் போர் செய்வதற்குத்தான் இவ்வாறானதொரு போர் வரைபடத்தைத் தயாரிக்க விரும்புகின்றான்: ஒருபுறம்  முஹம்மது நபி(ஸல்) அவர்கள் குர்ஆன் வசனங்களை ஓதுவதற்காகப் புறப்பட வேண்டும்; மறுபுறம் ஓரிடத்தில் நல்ல உடற்கட்டான, இனிய குரலில் பாட்டிசைக்கக்கூடிய பெண்களின் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்க வேண்டும்; அத்துடன் அங்கும் இங்கும் உள்ள கதைகள் எடுத்துரைக்கப்பட வேண்டும். பிறகு மக்கள் இந்த (இசை, நடனம் போன்ற) கலாச்சார நிகழ்ச்சிகளில் மூழ்கி, இறைவனையும் மறுமையையும் பற்றிய பேச்சுகளை குணவொழுக்கப் பேச்சுகளைக் கேட்கிற விருப்பமே இல்லாமலாகி விட வேண்டும்(என்கின்ற போர் வரைபடத்தைத் தயாரிக்க விரும்புகின்றான்).

9. இந்தத் தண்டனை அவர்களின் குற்றத்திற்குப் பொருத்தமாக அமைந்துள்ளது. இறைமார்க்கத்தையும் இறைவசனங்களையும் இறைத்தூதரையும் இழிவுபடுத்த அவர்கள் விரும்புகிறார்கள். அதற்குப் பகரமாக கடும் இழிவுக்குரிய தண்டனையை இறைவன் கொடுப்பான்.

10. சுவனத்தின் அருட்பேறுகள் அவர்களுக்கு உண்டு என்று கூறவில்லை. மாறாக அவர்களுக்கு அருட்பேறுகள் நிறைந்த சுவனத்தோப்புகள் உண்டு என்று அல்லாஹ் கூறியுள்ளான். முதலாவது வாசகம் கூறப்பட்டிருந்தால், அதன் கருத்து  அந்த அருட்பேறுகளின் மூலம் அவர்கள் அவசியம் இன்பம் அனுபவிப்பார்கள்தாம். ஆனால் சுவனங்கள் அவர்களுக்குரியவையாக இருக்காது எனும் கருத்து தொனிக்கும்.

இதற்கு மாறாக அவர்களுக்கு அருள் நிறைந்த சுவனங்கள் உண்டு என்று கூறிய பொழுது அதிலிருந்து  சுவனங்கள் முழுக்க முழுக்க அவர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டு விடும் எனும் கருத்து  ஓர் உரிமையாளன் தனது உடைமையிலிருந்து பயன்பெறுவதைப் போல் அவர்கள் அந்த அருட்கொடைகளிலிருந்து பயன்பெறுவார்கள் எனும் கருத்து தானாகத் தெளிவாகிவிடுகிறது.

இந்தக் கருத்து அதாவது ஒருபொருளைத் தனக்கெனச் சொந்தமாக்கிக் கொள்ளும் உரிமையை மனிதனுக்குக் கொடுக்காமல் அதிலிருந்து வெறுமனே பயன் அனுபவிக்கும் வாய்ப்பை மட்டும் அவனுக்கு வழங்குவதைப் போன்ற கருத்து தொனிக்காது.

11. தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதில் இருந்து எந்த சக்தியும் அல்லாஹ்வைத் தடுத்திட முடியாது. மேலும் எது ஒன்றை அவன் செய்தாலும் மிகச் சரியாகவே செய் கிறான்; தத்துவத்தின் நீதியின் தேட்டங்களுக்கு ஏற்பவே செய்கின்றான்.

இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும் என்று கூறிய பிறகு, உயர்வுமிக்க அல்லாஹ்வின் இவ்விரு தன்மைகளையும் குறிப்பிட்டுச் சொல்வதன் நோக்கம், இதனை எடுத்துரைப்பதுதான்: உயர்வுமிக்க அல்லாஹ் தனது வாக்குறுதிக்கு மாற்றமாக  சுயமாகவும் நடப்பதில்லை; இந்தப் பேரண்டத்தில் அவனது வாக்குறுதி நிறைவேறுவதற்குத் தடையாக எந்தவொரு சக்தி இருக்கவும் முடியாது. எனவே இறைநம்பிக்கை கொள்ளல், நற்செயல் புரிதல் ஆகியவற்றிற்குரிய பரிசாக எது ஒன்றை வழங்குவதாக அல்லாஹ் வாக்களித்திருக்கின்றானோ அது யாருக்கும் கிடைக்காமல் போய்விடுமோ எனும் எந்தப் பயமும் இருக்க முடியாது.

இதற்கும் மேலாக பரிசு பற்றிய அவனது அறிவிப்பு முழுக்க முழுக்க அவனது தத்துவத்தின் அவனது நீதியின் அடிப்படையில் அமைந்ததாகும். அவனிடத்தில் எதுவொன்றும் தவறுதலாக வழங்கப்படலாம் என்பதே இல்லை. அதாவது தகுதியுடையவனுக்கு எதுவும் வழங்காமல் அவனை விலக்கிவைத்தல் என்பதோ, தகுதியற்றவனுக்கு வழங்குதல் என்பதோ கிடையாது. எந்த மக்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்து வருகிறார்களோ அவர்கள், அல்லாஹ்வின் பரிசுக்குத் தகுதியுடையவர்களே ஆவர். இந்தப் பரிசுகளை அவர்களுக்குத்தான் அல்லாஹ் வழங்குவான்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்