மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • EWS இடஒதுக்கீடு சமத்துவத்திற்கு எதிரான தீர்ப்பு, உண்மையை உலகறியச் செய்த பத்திரிகையாளர், யூசுஃப் நபியின் ஏழாண்டு பசுமைப் புரட்சித் திட்டம் போன்ற புதுமையான தலைப்புகளுடனும் செய்திகளுடனும் வெளிவருகிறது டிசம்பர் 1-15 இதழ்.
  • டிசம்பர் 1-15 இதழில் வரலாற்றாய்வாளர் செ.திவான் அவர்களின் சிறப்பு நேர்காணலும் வெளிவருகிறது.

முழுமை

இவை இறைவனின் படைப்புகள்
மௌலானா மௌதூதி (ரஹ்), நவம்பர் 16-30


12. மேலே சொல்லப்பட்ட அடிப்படை சொற்றொடர்களுக்குப் பிறகு இப்பொழுது ஷிர்க் எனும் பலதெய்வ வழிபாட்டை மறுதலித்தல், ஓரிறைக் கொள்கைக்கு அழைப்பு விடுத்தல் எனும் அசல் கோரிக்கையை எடுத்துரைப்பது தொடங்குகிறது.

13. அரபு மூலத்தில் உங்கள் பார்வையில் படக்கூடிய தூண்கள் எதுவுமின்றி எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது. இதற்கு இரண்டு கருத்துகள் உண்டு. 1. வானங்கள் எந்தத் தூண்களுமின்றியே நிலை கொண்டுள்ளன என்பதை நீங்களே பார்க்கிறீர்கள். 2. உங்களுக்குப் புலப்படாதிருக்கும் தூண்களின் மீது அவை நிலைகொண்டுள்ளன.

இப்னு அப்பாஸ்(ரலி), முஜாஹித்(ரஹ்) இருவரும் இரண்டாவது விளக்கத்தையே கூறுகிறார்கள். ஆனால் ஏனைய விரிவுரையாளர்கள் அனைவரும் முதல் விளக்கத்தைக் கூறுகிறார்கள்.

தற்கால இயற்பியலின்படி இதனை விளக்குவதாயின் இவ்வாறு கூறலாம்: கோளங்களின் முழு உலகத்திலும் எல்லையற்ற, எண்ணற்ற பிரமாண்டமான நட்சத்திரங்களும் கோளங்களும் தத்தம் மண்டலங்களில்  ஓடுபாதைகளில் கண்ணுக்குப் புலப்படாத தூண்களின் மீது நிலைப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்றை மற்றொன்றுடன் இணைத்து வைத்திருக்கக்கூடிய எவ்விதத் தொடர்புச் சாதனமும் அங்கில்லை; அத்தகைய எவ்வகையான அதிகாரங்களும் இல்லை. ஒன்று மற்றொன்றின் மீது விழுந்திடாதவாறு தடுத்து வைத்திருக்கக்கூடிய இரும்புத் தூண்கள் எதுவும் இல்லை. ஈர்ப்புவிதி மட்டும்தான், (கோளங்களின்) இந்த அமைப்பைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்று கூறலாம்.

இந்த விளக்கம் தற்போதைய நமது அறிவியல் தகவலின்படி அமைந்ததாகும். நாளைக்கு நமது அறிவியலில் கூடுதல் விளக்கம் கிடைக்கலாம். அதன் மூலம் இவ்வுண்மைக்கு இன்னும் நுட்பமான கூடுதல் விளக்கங்கள் அளிக்கப்படலாம்.

14. மேல் விவரத்திற்குப் பார்க்க: தஃப்ஹீமுல் குர்ஆன் பாகம் 2 அந்நஹ்ல் அத்தியாயம் அடிக்குறிப்பு எண் 12.

15. அவனை விடுத்து மற்றவர்கள் என்பது (யாரைக் குறிக்கிறது எனில்) எந்தச் சக்திகளை உங்களின் கடவுளர்களாக நீங்கள் ஆக்கி வைத்திருக்கிறீர்களோ, உங்களின் தலை விதியை அமைக்கக்கூடியவை அல்லது கெடுக்கக்கூடியவை என்று எந்தச் சக்திகளை நீங்கள் கருதிக் கொண்டிருக்கிறீர்களோ, எவற்றை வழிபடுவதில் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறீர்களோ அத்தகைய சக்திகளைக் குறிக்கிறது.

16. இந்தப் பேரண்டத்தில் அல்லாஹ் அல்லாதவர்களால் படைக்கப்பட்ட படைப்பு இதுதான் என்று எதையும் இந்த மக்களால் இனங்காட்ட முடியவில்லை எனும் பொழுது அப்படி இனங்காட்ட முடியாதென்பது வெளிப்படையான விஷயம் எனும் பொழுது, எதையும் படைக்காத அந்தப் பொருள்களை இறைமையில் கூட்டாக்குவதும் அவற்றிற்கு முன்னால் தலைகுனிந்து பணிவதும் அவற்றிடம் பிரார்த்தனைகள் செய்வதும் தேவைகளைக் கேட்டு முறையிடுவதும் தெளிவான மடத்தனமாகும்; மதிகேடான இந்தச் செயலை நியாயப்படுத்திட எந்த விளக்கமும் அளிக்க முடியாது.

முற்றிலும் மூடனாகிவிடாத ஒரு மனிதனிடம் இருந்து இத்தனை பெரிய மடத்தனம் நிகழ்ந்திட முடியாது: தமது கடவுளர்கள் எதையும் படைக்காதவர்கள்; ஏக இறைவன் மட்டும்தான் எல்லாவற்றையும் படைத்தவன் என்பதை உங்களின் முன்னிலையில் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்துவிட்டு, அதன் பிறகும் அவற்றையே கடவுளர் என்று நம்புவதில் அவன் பிடிவாதமாக இருக்கும் மடத்தனம் நிகழ்ந்திட முடியாது.

அணுஅளவேனும் அறிவுள்ள ஒரு மனிதன், நிச்சயம் இப்படிச் சிந்திப்பான்: எதுவொன்றையும் படைக்கும் ஆற்றலில்லாத ஒன்று நமது கடவுளாக ஏன் ஆக வேண்டும்? வானங்கள், பூமியில் எதுவொன்றையும் படைப்பதில் பெயருக்குக்கூட எந்தப் பங்களிப்பும் இல்லாத ஒன்றைக் கடவுள் என்று ஏன் ஏற்க வேண்டும்? அதன் முன்னிலையில் நாம் ஏன் தலைதாழ்த்த வேண்டும்? அல்லது அதற்கு பாத பூஜையும் கருவறை பூஜையும் ஏன் செலுத்திக் கொண்டு திரிய வேண்டும் என்று அவன் நிச்சயம் சிந்தித்துப் பார்ப்பான்.

நமது முறையீட்டைச் செவிமடுக்கவோ நமது தேவைகளை நிறைவேற்றித் தரவோ அதனிடம் என்ன சக்திதான் இருக்க முடியும் என்று நிச்சயம் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்க்கத்தான் செய்வான்.

அது நமது பிரார்த்தனைகளைச் செவிமடுக்கிறது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால்கூட, அதனால் என்னதான் நடவடிக்கை எடுத்திட முடியும்? எதையும் படைப்பதற்கான அதிகாரத்தை அது பெற்றிருக்கவில்லையே? எதையும் ஆக்குவதற்கு அதனால் முடியும் என்றிருந்தால்தானே ஏதேனும் கெடுதியை அது (நமக்குக்) கொடுத்திடலாம் என்று சொல்லமுடியும்! அதுகூட எந்தப் பொருளாகவும் இல்லாதிருக்கிறதே! (என்று அவன் சிந்திக்கத்தான் செய்வான்).

(தொடரும்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்