1. இந்த நபிமொழி தெள்ளத் தெளிவானதாய், தீர்க்கமானதாய், திட்டவட்டமானதாய் இருக்கின்றது. முஸ்லிம்களுக்கு இடையிலான தொடர்புகளும் உறவுகளும் சகோதரர்களுக்கு இடையிலான தொடர்பையும் உறவையும் போன்றதாகவே இருத்தல் வேண்டும். முஸ்லிம்கள் ஒருவர் மற்றவரின் கண்ணியம், மானம், மரியாதை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே இயங்க வேண்டும். தம்முடைய எந்தவொரு சகோதரருக்கும் எந்தவிதமான இழப்பும் ஊறும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் அவர் விழிப்பாக, கண்ணும் கருத்துமாக இருத்தல் வேண்டும்.
2. இறையச்சம் உண்மையில் இதயத்தோடு தொடர்புடையதாகும். அது வெறுமனே சில புறத்தோற்ற அடையாளங்களோடும் குறிப்பிட்ட சில செயல்களோடும் மட்டுமே தொடர்புடையதல்ல. அதற்கு மாறாக முஸ்லிம்கள் தங்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் சீர்படுத்திக் கொள்வதில் எந்நேரமும் கவனம் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
3. எந்தவொரு மனிதரும் நல்லவராக, மக்களுக்கு நன்மை அளிப்பவராக இருக்கவே விரும்புவார். அதற்குப் பதிலாக தீயவராகிவிட எவருமே விரும்ப மாட்டார். இந்த நிலையில் ஒருவர் நல்லவராவதற்குப் பதிலாக தீயவராவதற்கான செயல்களில் வலிந்து ஈடுபடுகின்றார் எனில் அது மிகவும் வருத்தத்துக்குரியதாகும். "ஒருவர் தீயவராவதற்கு தம்முடைய சகோதரரைக் கேவலமாக நினைப்பதே போதுமானதாகும்; அவரிடம் வேறு எந்தவொரு தீமையும் இல்லையானாலும் சரியே' என்று நபிகளார்(ஸல்) எச்சரித்திருக்கின்றார்கள். அந்த மனிதர் தீயவராவதற்கு தம்முடைய சகோதரரைக் கேவலமாக நினைக்கின்ற அந்தக் கெட்ட எண்ணமே போதுமானதாகும்.