மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • அன்பிற்குரிய சமரசத்தின் டிஜிட்டல் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
  • இதுநாள் வரைக்கும் சமரசத்தின் இணையத்தில் முற்றிலும் இலவசமாக நீங்கள் வாசித்து வந்தீர்கள். ஆனால் வருகின்ற ஏப்ரல் மாதத்திலிருந்து டிஜிட்டல் வாசிப்பிற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய சமரசம் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. விவரங்கள் விரைவாய் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
  • ஆகவே, இன்றுபோல் என்றும் ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழுமை

இணைவைப்பது மாபெரும் அக்கிரமம்!
· மௌலானா மௌதூதி (ரஹ்), 16-31 டிசம்பர் 2022


18. அல்லாஹ் வழங்கிய இந்த அறிவுஞானம், அறிவுக்கூர்மை, நுண்ணறிவு ஆகியவற்றின் முதன்மைத் தேட்டம் என்னவெனில், மனிதன் தனது இறைவனின் திருமுன் நன்றி செலுத்தும் போக்கை இறைப்பேருதவியை ஒப்புக்கொள்ளும் போக்கினை மேற்கொள்ள வேண்டுமே தவிர, நன்றிகொல்லும் போக்கை உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யும் போக்கை மேற்கொள்ளக்கூடாது என்பதுதான். மேலும் நன்றி செலுத்துதல் என்பது, நாவால் சொல்வதுடன் மட்டும் சுருங்கிவிடக் கூடாது, மாறாக சிந்தனை, சொல், செயல் எனும் மும்முறைகளின் மூலமும் இருக்க வேண்டும்.

என்னென்ன வசதிவாய்ப்புகள் வாழ்க்கைச் சாதனங்கள் எனக்கு வாய்க்கப் பெற்றிருக்கின்றனவோ அவை அனைத்தும் இறைவனால் வழங்கப்பட்டவை என்பது பற்றிய உறுதியையும் உணர்வையும் தனது இதய ஆழத்தில் அவன் வைத்திருக்க வேண்டும். தன்னுடைய இறைவனின் பேருதவிகளை எப்பொழுதும் அவனது நாவு ஏற்று மொழிந்துகொண்டிருக்க வேண்டும். செயல் ரீதியிலும்கூட இறைக்கட்டளைகளுக்கு அவன் கீழ்ப்படிந்துவர வேண்டும்.

இறைக்கட்டளைகளுக்கு மாற்றமாக நடப்பதிலிருந்து விலகியிருக்க வேண்டும். இறைவனின் திருப்பொருத்தத்தைத் தேடுவதில் தீவிரமாக ஈடுபட்டு, அவனால் வழங்கப்பட்ட அருட்கொடைகளை அவனுடைய அடியார்கள் வரையில் சேர்க்க வேண்டும். அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வோரைத் தீவிரமாக எதிர்த்து நிற்க வேண்டும்.  இவ்வாறெல்லாம் செய்வதன் மூலம் உண்மையில் அவன் தன்னுடைய இறைவனுக்கு நன்றியுள்ள அடியான்தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.

19. ஒரு மனிதன், இறைமறுப்பை மேற்கொள்கிறான் எனில், அவனது அந்த நிராகரிப்புப் போக்கு அவனுக்குத்தான் கேடு விளைவிக்குமே தவிர, உயர்வுமிக்க அல்லாஹ்வுக்கு அதனால் எந்தக் கேடும் ஏற்படுவதில்லை. அல்லாஹ், எவரிடத்தும் தேவை உடையவன் அல்லன். எவருக்கும் நன்றி செலுத்த வேண்டிய நிலை அவனுக்கு இல்லை. யாரேனும் அவனுக்கு நன்றி செலுத்துவது அவனது இறைமையில் எதையும் அதிகப்படுத்துவதில்லை. ஒருவரின் இறைமறுப்புப் போக்கு மனிதர்களுக்கு வாய்க்கப் பெறுகின்ற எந்த ஓர் அருட்கொடையானாலும் அது இறைவனால் வழங்கப்பட்டதெனும் உண்மை நிகழ்வை மாற்றப்போவதில்லை. இறைவனோ தனக்குத்தானே புகழுக்குரியவன்; யாரேனும் அவனைப் புகழ்ந்தாலும் சரி, புகழாவிட்டாலும் சரியே! மேலும் அவனுடைய நிறைமையழகு  முழுமையழகு குறித்து  அவனுடைய படைப்பாற்றல், உணவளிக்கும் ஆற்றல் குறித்து பேரண்டத்தின் ஒவ்வோர் அணுவும் சாட்சியம் அளித்துக் கொண்டிருக்கின்றது. (பேரண்டத்தின்) ஒவ்வொரு படைப்பினமும் தனது எதார்த்தம் எனும் நாவினால் அவனுடைய புகழைப் பாடிக்கொண்டே இருக்கிறது.

20. லுக்மானின் தத்துவார்த்தமான பொன்மொழிகளில் இருந்து, இந்த அறிவுரை இரண்டு கருத்துப் பொருத்தங்களின் அடிப்படையில் இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது.

1. லுக்மான் இதனைத் தம்முடைய புதல்வருக்கு எடுத்துரைத்திருந்தார். ஒரு மனிதன் உலகில் அனைவரைக் காட்டிலும் அதிகமாக சிலர் விஷயத்தில் வாய்மையுடன் நலன் நாடுகிறார் எனில், அவர்கள் அவருடைய பிள்ளைகளாகத்தான் இருக்கமுடியும் என்பது வெளிப்படையானதாகும். ஒரு மனிதன் பிறரை ஏமாற்றலாம், நயவஞ்சகத்தனமான பேச்சுகளைப் பிறரிடம் பேசலாம். ஆனால் மிக மிக மோசமான மனிதன்கூட தன்னுடைய பிள்ளைகளை ஏமாற்றுவதற்கு எப்பொழுதும் முயற்சி செய்வதில்லை.

ஆகையினால் லுக்மான் தம்முடைய புதல்வருக்கு இப்படி அறிவுரை கூறுவது உண்மையில் ஷிர்க் (எனும் பலதெய்வ வழிபாடு) என்பது மிக மோசமான செயலாக இருந்தது என்பதற்குத் தெளிவான ஆதாரமாகும். இந்த அடிப்படையில்தான் லுக்மான்  இந்த வழிகேட்டில் இருந்து விலகி வாழ்ந்திட வேண்டும் என்று அனைத்திற்கும் முதலில் தமது ஈரல் குலையான புதல்வருக்கு எடுத்துரைத்தார்.

இதனை இங்கு கூறியதற்கான இரண்டாவது கருத்துப் பொருத்தம் இதுதான்: மக்கா நகரின் இறைமறுப்பாளர்களாய் இருந்த பெரும்பாலான தாய் தந்தையர் அந்நேரத்தில் தங்களுடைய பிள்ளைகளை ஷிர்க் எனும் பலதெய்வக் கோட்பாட்டில் நிலைத்திருக்கவே கட்டாயப்படுத்தினார்கள். முஹம்மது நபியின் ஏகத்துவ அழைப்பைப் புறக்கணிக்கத்தான் கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள். பின்வரும் இறைவசனங்கள் இதையே எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றன.

இதனால்தான் அந்த அறிவிலிகளுக்கு இவ்வாறு எடுத்துச் சொல்லப்படுகிறது: உங்களது நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற தத்துவமேதை தம்முடைய பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்தும் கடமையை இவ்வாறு நிறைவேற்றினார். ஷிர்க் எனும் பலதெய்வ வழிபாட்டில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுரை கூறினார். ஆனால் நீங்களோ  ஷிர்க் (எனும் பல தெய்வ வழிபாடு) செய்யுமாறு உங்கள் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்துகிறீர்கள் எனில், அது பிள்ளைகளின் விஷயத்தில் நலம்நாடுதலா? அல்லது கேடு நாடுதலா?

21. ழுல்ம் (அக்கிரமம்) என்பதன் உண்மையான பொருள், ஒருவரின் உரிமையைப் பறிப்பதாகும். நியாயத்திற்கு எதிராகச் செயல்படுவதாகும்.

ஷிர்க் எனும் பலதெய்வ வழிபாடு என்பது பெரிய அக்கிரமமாகும் என்று சொல்வதன் காரணம் இதுதான்: மனிதனைப் படைப்பதில் எந்தெந்த (போலி) தெய்வங்களுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லையோ, ரிஜ்க் எனும் வாழ்வாதாரங்கள் அவனுக்குக் கிடைக்கச் செய்வதில் எந்தத் தலையீடும் எந்தத் தெய்வங்களுக்கு இல்லையோ, மனிதன் இவ்வுலகில் பயன்படுத்தி வாழும் அருட்கொடைகளை வழங்குவதில் எந்தப் பங்களிப்பும் இல்லையோ அப்படிப்பட்ட (போலித்) தெய்வங்களை தன்னைப் படைத்த உண்மையான இறைவனுக்கு நிகராகக் கொண்டுவந்து மனிதன் நிறுத்துகின்றான்; தனக்கு உணவு அளித்துக் கொண்டிருக்கின்ற, தன் மீது அருள் மாரிப்பொழிந்து  கொண்டிருக்கின்ற உண்மையான இறைவனுக்கு நிகராக ஆக்குகிறான்! இது எத்தகைய அநியாயம் எனில், இதைக் காட்டிலும் வேறோர் அநியாயத்தைக் கற்பனை செய்து பார்க்கவே முடியாது.

பிறகு தன்னைப் படைத்த அந்த இறைவனை மட்டுமே வணங்குவதும் அவனுக்கு அடிபணிவதும் மனிதனின் மீது கடமையாகிறது. ஆனால் மற்றவர்களை வழிபடுவதன் மூலம் இறைவனுக்குச் செலுத்தும் கடமையை மனிதன் பாழ்படுத்துகின்றான்.

அத்துடன் பிறரை வழிபடும் சங்கிலித் தொடரில்  மனிதன் எந்த ஓர் அமலை(வழிபாட்டை) செய்தாலும் அந்த அமலில் தனது மனம், உடல் ஆகியவை முதற்கொண்டு வானங்கள்,  பூமி வரையில் எண்ணற்ற பொருள்களையும் மனிதன் பயன்படுத்துகின்றான். உண்மை யாதெனில் இந்த அனைத்துப் பொருள்களும் இணையற்ற ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனால் படைக்கப்பட்டவை, அவற்றில் எந்த ஒரு பொருளையும்  அல்லாஹ்வை விடுத்து மற்றவர்களை வழிபடுவதற்காகப் பயன்படுத்தும் உரிமை மனிதனுக்குக் கிடையாது.

பிறகு மனிதனின் மீது தன்னைப் பொறுத்து நிறைவேற்றும் கடமையாகவும் இது அமைந்துள்ளது. அதாவது அவன் தன்னைத்தானே இழிவுபடுத்தாதிருப்பதும், (இறைத்)தண்டனைக்குத் தன்னை ஆளாக்காதிருப்பதும் அவன் மீதான கடமையாக உள்ளது. ஆனால் அவன் தன்னைப் படைத்த இறைவனை விட்டுவிட்டு (தன்னைப் போன்ற) பிற படைப்பினத்தை வணங்கி வழிபடுவதன் மூலம் தன்னைத்தானே இழிவுபடுத்தவும் செய்கிறான், (இறைத்) தண்டனைக்குத் தகுதியானவனாகவும் தன்னை ஆக்கிவிடுகிறான்.

இவ்வாறாக (முஷ்ரிக் எனும்) பல தெய்வ வழிபாட்டுக்காரனின் வாழ்க்கை முழுவதும், எல்லா வகையிலும் எந்நேரமும் அக்கிரமமாக ஆகிவிடுகிறது. அவனது வாழ்க்கையின் எந்த ஒரு மூச்சும் அக்கிரமத்திலிருந்து நீங்கியதாக இருப்பதில்லை.

(தொடரும்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்