தன்னுடைய சகோதரருடன் ஒருவர் எவ்வாறு நடந்துகொள்கின்றாரோ முழுக்க முழுக்க அதே போன்றே அல்லாஹ்வும் அவருடன் நடந்து கொள்வான்.
ஒருவர் தம்முடைய சகோதரர் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றபோது, அவமதிப்புக்கும் அவமரியாதைக்கும் ஆளாகிக் கொண்டிருக்கின்றபோது அத்தகைய சந்தர்ப்பத்தில் அவருக்கு அரணாக நின்று, அவரைப் பாதுகாப்பதற்காக முயல்கின்றார் எனில், இறைவனும் (இம்மையிலும் மறுமையிலும்) இதே போன்று அவர் உதவியையும் ஆதரவையும் மற்றெல்லாவெற்றையும் விட அதிகமாக வேண்டி நிற்கின்ற சந்தர்ப்பத்தில் அவருக்கு உதவுவான்.
ஆனால் தன்னுடைய சகோதரரின் கண்ணியம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுக் கொண்டிருக்க இவர் அவருக்கு ஆதரவாக எழுந்து நின்று குரல் கொடுக்கவில்லையெனில், அவருக்கு அரணாக நின்று அவரைப் பாதுகாப்பதற்காக முயலவில்லை எனில், அவர் இதே போன்ற கதிக்கு ஆளாகி, உதவியையும் ஆதரவையும் வேண்டி நிற்கின்றபோது அல்லாஹ்வின் உதவி தனக்குக் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பை அவர் வளர்த்துக் கொள்ளக்கூடாது.
எந்த மனிதர் இக்கட்டான நேரத்தில் தம்முடைய சகோதரருக்கு ஆதரவாகக் களம் இறங்கவில்லையோ அவர் உண்மையில் இது போன்ற சந்தர்ப்பங்களில் இறைவனின் உதவி கிடைக்கின்ற தகுதியை இழந்து விடுகின்றார்.