கொடுக்கல் வாங்கலின் போதும் கடன் தருகின்ற போதும், திருப்பித் தருகின்ற போதும், அதனைப் பெறுகின்ற போதும் வாங்கப்பட்ட, கொடுக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் கூடுதலாகக் கொடுக்கப்படுகின்ற, வாங்கப்படுகிற தொகைதான் வட்டி ஆகும்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை வட்டியின் மூலமாக தம்முடைய செல்வத்தைப் பெருக்கிக் கொள்வது முழுக்க முழுக்க ஹராமாகும். திட்டவட்டமாக தடை செய்யப்பட்ட நடவடிக்கை ஆகும். மனிதநேயத்தைப் பறிக்கின்ற, இறைக் கோபத்தைக் கிளறுகின்ற கடுமையான குற்றச் செயல்; பாவம்தான் வட்டி.
தம்மிடம் கடன் வாங்கியவரிடமிருந்து தாம் கடனாகக் கொடுத்ததை விட கூடுதலான ரொக்கத்தை விரும்புவதற்கு எந்தவொரு மனிதருக்கும் உரிமை இல்லை. இதே போன்று எந்தவொரு நியாயமும் இல்லாமல் தம்முடைய முஸ்லிம் சகோதரரின் கண்ணியத்தைக் குலைப்பதற்கும், அந்த நோக்கத்துடன் தடித்த வார்த்தை பேசுவதற்கும் எவருக்கும் எந்த உரிமையும் கிடையாது. இவ்வாறு தடித்த வார்த்தை பேசுவது உண்மையில் மிக மிக மோசமான வட்டி ஆகும்.
பணத்தைக் கொடுத்து அதன் மீது வசூலிக்கப்படுகின்ற வட்டியினால் மனிதனுக்கு பொருளாதார ரீதியாகத்தான் வலியும் சுமையும் இழப்பும் ஏற்படுகின்றது. ஆனால் இந்த வார்த்தை வடிவ வட்டி எத்தகையதெனில் இதனால் மனிதனின் தன்மானம், மரியாதை, கண்ணியம் ஆகிய அனைத்துக்கும் ஊறு நேர்கின்றது.
பொருளாதார இழப்பைக் காட்டிலும் கண்ணியமும் மானமும் பறிபோகின்றபோது ஏற்படுகின்ற இழப்பும் வலியும் வேதனையும் பன்மடங்கு கூர்மையானவை. இதனால்தான் எந்த நியாயமுமின்றி ஒருவரின் கண்ணியத்தைக் குலைக்கின்ற வகையில் பிரயோகிக்கப்படுகின்ற வார்த்தை வீச்சுகளை மிக மிக மோசமான வட்டியாக நபிகளார்(ஸல்) அறிவித்திருப்பது முழுக்க முழுக்க பொருந்திப் போவதாகும்.