மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

முழுமை

வலியுறுத்தப்பட்ட விஷயங்கள்
மௌலானா மௌதூதி (ரஹ்), 16-31 ஜனவரி 2023


29. இந்தச் சொற்றொடரில் இந்த விஷயத்தின் பக்கம் நுட்பமானதொரு சுட்டுதல் உள்ளது. அதாவது நன்மை செய்யும்படி ஏவும் பணியை, தீமையிலிருந்து தடுக்கும் பணியை யார் செய்கிறாரோ அவரைத் துன்பங்கள் துரத்துவது தவிர்க்க முடியாததாகும். உலகம் பிற அனைத்தை விட்டும் கவனத்தைத் திருப்பிக்கொண்டு இத்தகைய மனிதரை அவசியம் கூர்ந்து கவனிக்கத் தொடங்குகிறது. மேலும் ஒவ்வொரு வகையான தொல்லைகளை அவர் எதிர்கொள்ளும் நிலை தொடர்ந்த வண்ணமாகவே இருக்கிறது.

30. இப்படி ஒரு கருத்தும் கொடுக்கலாம்; அதாவது இது பெரும் ஊக்கம் நிறைந்த பணியாகும். மக்களைச் சீர்திருத்துவதற்காகப் பொங்கியெழுவதும், அதனால் எதிர்படும் கஷ்டங்களைச் சகித்துக் கொள்வதும் ஊக்கம் குன்றிய மனிதர்களால் செய்ய இயலும் காரியமல்ல. அதிக மனஉறுதியும் ஊக்கமும் தேவைப்படும் பணிகளில் ஒன்றாக இது உள்ளது.

31. அசல் வாக்கியம் லா துஸஅஇர் கத்தக்க லின்னாஸ் என்பதாகும். அரபு மொழியில் ஒட்டகத்தின் கழுத்தில் ஏற்படும் ஒருவகை நோய்க்கு ஸஅர் என்று சொல்கிறார்கள். அதனால் அந்த ஒட்டகம் எந்நேரமும் தனது கழுத்தை ஒரே பக்கமாகச் சாய்த்து வைத்துக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து ஸஅஇர் கத்தஹு ஃபுலான் எனும் சொல் வழக்கு வந்தது. அதன் பொருள்: இன்ன மனிதன் ஒட்டகத்தைப் போல் தனது கன்னத்தைத் திருப்பிக் கொண்டான். அதாவது ஆணவத்துடன் நடந்து கொண்டான். முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு பேசினான். இது தொடர்பாகவே பனூ தஃக்லப் எனும் குலத்தைச் சேர்ந்த அம்ர் பின் ஹுயை எனும் கவிஞர் ஒருவர் இவ்வாறு பாடுகிறார்:

"நாங்கள் எப்படி நடந்துகொள்பவர்களாய் இருந்தோம் எனில், முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் ஒருவன், முகத்தை ஆணவத்துடன் திருப்பிக்கொண்டு பேசினான் எனில், அவனது(ஆணவக்) கோணலை நாங்கள் சரிபடுத்தி விடுவோம், அது நேராகிவிடும்.'

32. அரபு மூலத்தில் முக்தாலுன்  ஃபகூருன் எனும் இரு வார்த்தைகள் உள்ளன. முக்தால் என்பதன் பொருள், தனது சிந்தையில் தன்னைத்தானே பெரிதாகக் கருதிக்கொண்டிருக்கும் மனிதன் என்பதாகும். மேலும் தானே பெரியவன் என்பதாகப் பிறரிடம் வெளிக்காட்டிக் கொள்ளும் மனிதனுக்கு ஃபகூர் என்று சொல்கின்றனர். ஒரு மனிதனின் நடையில் தற்பெருமை, அகம்பாவம், கர்வம், ஆணவம் ஆகிய போக்குகள் எப்பொழுது ஏற்படுகிறது எனில், எப்பொழுது அவனது மூளையில் ஆணவக்காற்று நிரம்பிவிடுகிறதோ மேலும் தானே பெரியவன் என்பதாக மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டுமென எப்பொழுது விரும்புகிறானோ அப்பொழுதுதான் ஏற்படுகிறது.

33. விரிவுரையாளர்களில் சிலர் கூறுகிறார்கள்: வேகமாகவும் நடக்காதே, மெதுவாகவும் நடக்காதே. மாறாக நடுநிலையான நடையை மேற்கொள் என்பதாக இதற்குக் கருத்துக் கூறுகிறார்கள். ஆனால் வாக்கியத்தின் போக்கில் இருந்து தெளிவாகத் தெரியவருவது என்னவெனில், இங்கு வேக நடையோ சோம்பல் நடையோ ஆய்வுக்குரிய விஷயம் அல்ல. மெதுவான நடையோ வேக நடையோ, குணவொழுக்க அழகை, அழகின்மையை தன்னுள் வைத்திருக்கவில்லை. மேலும் அதற்கென எந்த ஒரு பொதுநியதியையும் நிர்ணயிக்க முடியாது.

மனிதனுக்கு அவசர வேலை இருந்தால் வேகமாக நடக்கத்தான் செய்வான். மேலும் அவன் மனமகிழ்வுக்காக நடந்து கொண்டிருக்கிறான் எனில், மெதுவாக நடப்பதில் என்ன தவறு இருக்க முடியும்.

நடுநிலைக்கென ஓர் அளவுகோல்கூட இருக்கிறது எனில், ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு மனிதனைப் பொறுத்தும் அதனைப் பொதுவானதொரு நியதியாக எப்படி ஆக்க முடியும்! உண்மையில் இங்கு சொல்லவரும் கருத்து இதுதான்  அதாவது மனத்தில் எழும் எந்த ஓர் எண்ணத்தின் தாக்கத்தினால் அவனது நடையில் ஆணவம், அடக்கம் வெளிப்படுகிறதோ அந்த எண்ணத்தைச் சீர்படுத்துவதுதான் இங்கு நோக்கம் ஆகும்.

பெருமையின் செருக்கு மனதினுள் இருந்தால் அது ஒரு குறிப்பிட்ட நடையில் அமைந்து வெளிப்படுகிறது. அதைக் காணும் பொழுது மனிதன் ஏதோ ஒரு பெருமையில் உழன்றுகொண்டிருக்கின்றான் என்பதை மட்டுமல்ல, மாறாக அது போன்ற நடை, எத்தகையதொரு பெருமைக்கு அவன் உள்ளாகியிருக்கிறான் என்பதைக் காண்பித்துக் கொடுத்து விடுகிறது. செல்வம், அதிகாரம், அழகு, கல்வி, ஆற்றல் ஆகியவை போன்ற பிற விஷயங்கள் மனிதனுள் பெருமையை ஏற்படுத்திவிடுகிறதோ அவற்றில் ஒவ்வொன்றின் பெருமை அவனது நடையில் ஒரு குறிப்பிட்ட விதத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இதற்கு நேர்மாறாக நடையில் அப்பாவித்தனம் வெளிப்படுவதும்கூட மனத்தின் ஏதேனும் இழிவான தன்மையின் தாக்கத்தினால்தான் ஏற்படுகிறது. சிலபொழுது மனித மனத்தினுள் மறைந்திருக்கும் பெருமை என்பது, ஒருவிதமான பகட்டுப் பணிவின் சாயலாகப் படிகிறது. முகஸ்துதிக்காக மேற்கொள்ளும் துறவுத்தனத்தின் பக்தி முதிர்ச்சியின் சாயலாகப் படிகிறது. இவ்விஷயம் அவனது நடையில் தெளிவாகத் தெரியவருகிறது.

மேலும் சிலபொழுது மனிதன் நிகழ் உலகத்தினால், அதன் சூழ்நிலைகளினால் தோல்விகண்டு, அதனால் (தனது நிலை பற்றிய) தனது பார்வையில் தன்னைத்தானே இழிவாகக் கண்டு, நலிந்து மெலிந்த நடையில் நடக்கத் தொடங்குகிறான்.

லுக்மான் தரும் அறிவுரையின் நோக்கம் இதுதான்: உங்களின் மனதினுள் படிந்திருக்கும் இத்தகைய தன்மைகளை அகற்றுங்கள். ஒரு சாமானிய மனிதனின், அறிவுள்ள, அந்தஸ்துள்ள ஒரு மனிதனின் நடையை மேற்கொள்ளுங்கள். அதில் கர்வமோ, ஆணவமோ இருக்காது. போலித்தனமான எளிமையோ பகட்டோ இருக்காது. துறவித்தனமோ குழைவுத்தனமோ இருக்காது.

இந்த விவகாரத்தில் நபித்தோழர்களின் சுவையுணர்வு எவ்வாறு இருந்தது என்பதை இந்நிகழ்ச்சியிலிருந்து கணித்துக் கொள்ளலாம்: ஒருமுறை ஒரு மனிதர் தலையைத் தாழ்த்தியபடி நடந்து சென்றுகொண்டிருந்ததை உமர்(ரலி) அவர்கள் பார்த்தார்கள். அவரை அழைத்துக் கூறினார்கள்: "தலையை நிமிர்த்தியபடி நடந்து செல். இஸ்லாம் என்பது நோய்பிடித்த ஒன்றல்ல.'

பலவீனமாக நடந்து சென்ற இன்னொரு மனிதரை உமர்(ரலி) அவர்கள் கண்டபொழுது, கூறினார்கள்: "அநியாயக்காரன் நமது மார்க்கத்தை ஏன் அடித்து வீழ்த்துகிறான்.'

இவ்விரு நிகழ்ச்சிகளில் இருந்து தெரிய வருகிறது: உமர்(ரலி) அவர்களின் பார்வையில் மார்க்கப் பற்றின் நோக்கம் மனிதன் நோயாளிகளைப் போல் மூச்சுப்பிடித்து மூச்சுப்பிடித்து நடக்க வேண்டும், எப்படியேனும் அப்பாவியாகிக் கொண்டு நடந்து செல்ல வேண்டும் என்பதல்ல. இவ்வாறு நடந்து செல்வதைப் பார்த்து யாரேனும் இந்த நடை பிறருக்கு முன்னிலையில் இஸ்லாத்தைப் பற்றிய தவறானதொரு கருத்தை ஏற்படுத்துகிறது என்கின்ற அபாயம் ஏற்படுகிறது. ஏன் முஸ்லிம்களிடத்திலேகூட வாட்டத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இவ்வாறான ஒரு நிகழ்ச்சி ஆயிஷா(ரலி) அவர்களின் முன் நடந்தது. ஒரு மனிதர், மிகவும் பலவீனமான மனிதராக நடந்து சென்றதை அவர்கள் பார்த்தார்கள். "இந்த மனிதருக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். காரிகள் எனப்படுவோரில் (அதாவது குர்ஆனை ஓதக்கூடிய ஒருவர், கற்பிப்பதிலும் இறைவழிபாட்டிலும்  ஈடுபடக்கூடியவர்களில்) இவரும் ஒருவர் என்று பதில் அளிக்கப்பட்டது.

அது குறித்து ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்: "உமர்(ரலி) காரிகளின் தலைவராக இருந்தார்கள். ஆனால் அவர்கள் நடந்து செல்லும்பொழுது வேகத்துடன் நடப்பார்கள்; பேசினார்கள் எனில், உறுதியுடன் பேசுவார்கள். உட்காரும் பொழுது நன்றாக உட்காருவார்கள்.' (மேலும் விவரங்களுக்கு பார்க்க: தஃப்ஹீமுல் குர்ஆன் பனூ இஸ்ராயீல் அத்தியாயம் அடிக்குறிப்பு 43, அல்ஃபுர்கான் அத்தியாயம் அடிக்குறிப்பு 79)

34. மனிதன் எப்பொழுதுமே மெதுவாகவே பேச வேண்டும், என்றைக்குமே வேகமாகப் பேசக்கூடாது என்பதல்ல. மாறாக கழுதையின் சப்தத்துடன் ஒப்பீடு செய்து இவ்விஷயம் அதாவது பேச்சு எந்தத் தொனியில் இருக்கக்கூடாது, எந்தக் குரலில் பேசக்கூடாதெனத் தடுப்பது நோக்கம் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பேச்சுப் பாணியின் குரலின் ஒருவகையான இறக்கமான நிலை, உரத்த நிலை, கடுமை, மென்மை ஆகியன உள்ளன எனில், அவையெல்லாம் இயற்கையான  இன்றியமையாத தேவைகளைக் கவனித்து அமைந்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக அருகிலுள்ள மனிதரை நோக்கி அல்லது குறைந்த எண்ணிக்கையிலான மக்களை நோக்கிப் பேசுவதாயின் பேச்சு மெதுவாக இருக்கும். தூரத்திலுள்ள மனிதரிடம் பேசுவதாயின் அல்லது பெருந்திரளான மக்கள் கூட்டத்திடம் பேசுவதாயின் அந்தப் பேச்சு அவசியம் உரத்த பேச்சாகத்தான் இருக்கும்.

தொனிகளிலும்கூட இடம், சூழ்நிலையைக் கவனித்து இத்தகைய வித்தியாசம் அவசியம் ஏற்படத்தான் செய்கிறது. புகழும் தொனி, இகழும் தொனிக்கு வித்தியாசமாகத்தான் இருக்கும். மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தொனி, அதிருப்தியை வெளிப்படுத்தும் தொனியை விட்டும் வித்தியாசமாக இருக்கத்தான் வேண்டும். இந்த விஷயம் எந்த நிலையிலும் எந்தத் தரத்திலும் ஆட்சேபணைக்கு உரியது அல்ல.

அறிஞர் லுக்மானின் அறிவுரையின் நோக்கம்கூட இதுவல்ல. அதாவது மனிதன் இந்த வித்தியாசத்தை இல்லாதொழித்துவிட்டு இனி எப்பொழுதுமே மென்மையான குரலிலேயே சன்னமான தொனியிலேயே பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல. ஆட்சேபணைக்குரிய விஷயம் என்னவெனில், மனிதன் பெருமையை வெளிப்படுத்துவது, பயமுறுத்திப் பேசுவது, பிறரைக் கேவலப்படுத்துவதற்காக பீதிக்குள்ளாக்குவதற்காக வாய்கிழியப் பேசுவது, கழுதையைப் போன்ற குரலில் பேசுவதுதான் ஆட்சேபணைக்குரியது ஆகும்.

(தொடரும்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்