மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

நட்சத்திர முற்றம்

ஆபத்தை விளைவிக்கும் மனித சகவாசம்
அஷ்ஷெய்க் A.C. அகார் முஹம்மது, September 16-30, 2023


அஷ்ஷெய்க் அ.இ. அகார் முஹம்மது

நமது உடல் ஆரோக்கியம் முக்கியமானது என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. ஆனால் அதைவிட உள, ஆன்மாவின் ஆரோக்கியம் மிக மிக முக்கியமானது என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உடலில் ஒரு சதைத்துண்டு இருக்கின்றது. அது சீரானால் முழு உடலும் சீராகிவிடும். அது சீர் கெட்டால் முழு உடலும் சீரழிந்துவிடும். அதுதான் உள்ளம்’.

எப்போதும் நம் உள்ளத்தைச் சுத்தமாகவும் ஆரோக்கியமானதாகவும் வைத்துக் கொண்டால் தான் நமது ஈருலக வாழ்வும் வளமாக அமையும். இந்த வகையில் நமது உள்ளங்களைத் தூய்மைப்படுத்தத் துணை புரியும் அம்சங்களை நாம் தெரிந்து கொள்வது அவசியம். பசித்திருத்தல், விழித்திருத்தல், தனித்திருத்தல், மௌனம் காத்தல் ஆகியவை எப்படி உள்ளத்தைத் தூய்மைப்படுத்தத் துணை புரிகின்றன என்பதை ஏற்கனவே இந்தத் தொடரில் வாசித்திருப்பீர்கள். நமது உள ஆரோக்கியத்தைக் கெடுக்கின்ற, அதனை மாசுபடுத்திச் சீர்குலைக்கின்ற அம்சங்களையும் அடையாளம் கண்டு அவற்றைத் தவிர்க்க முயல வேண்டும். உள்ளத்தையும் ஆன்மாவையும் சீர்கெடுக்கின்ற அம்சங்களில் ஒன்றுதான் மிஞ்சிய மனித சகவாசம்.

மித மிஞ்சிய மனித சகவாசம் எப்படி ஒருவரின் ஆன்மிக வாழ்க்கையைக் கெடுக்கும் என்பது குறித்து இமாம்களான அபூஹாமித் அல் கஜ்ஜாலி, இப்னு கைய்யூம் உட்படப் பல அறிஞர்கள் அற்புதமாக விளக்கி இருக்கிறார்கள்.

மனிதன் ஒரு சமூகப் பிராணி. அந்த வகையிலே அவன் சமூகமயமாக வேண்டும் என்பது தவிர்க்க முடியாத ஒன்று! ஆயினும் மனிதர்களுடனான உறவும் சகவாசமும் அளவோடு இருக்க வேண்டும்; கட்டுப்பாடாக இருக்க வேண்டும். படைப்பாளனுடனான உறவை மிஞ்சியதாகப் படைப்புகளுடனான உறவு அமைந்து விடலாகாது.

இமாம் இப்னு கைய்யூம் அவர்கள் கூறினார்கள்: ‘மித மிஞ்சிய மனித சகவாசம் பயங்கரமான ஒரு நோயாகும். அது பல தீமைகளை விளைவிக்கும். மனித சகவாசத்தினால் எத்தனை எத்தனை அருட்கொடைகள் பறிக்கப்படுகின்றன; எத்தனை எத்தனை பகைமைகள் விதைக்கப்படுகின்றன; குரோதங்களும் விரோதங்களும் உருவாகின்றன. வீணான மனித சகவாசம் இம்மை, மறுமையில் இழப்புகளை ஏற்படுத்தும். எனவே இறையடியான் எப்போதும் மனிதர்களுடனான உறவுகளை அளவோடு அமைத்துக் கொள்ள வேண்டும்.’ இது இமாம் அவர்களின் உபதேசம். அளவு கடந்த மனித சகவாசம் பல பாவங்களுக்கு இட்டுச் செல்லும்; வீண் பேச்சு, கோள், புறம், பொய் முதலான பாவங்களுக்கு அது வழி வகுக்கும். அடுத்தவர்கள் விவகாரங்களிலே தலையிடுவது, தப்பெண்ணம் கொள்வது, முதலான தீமைகள் நடக்கவும் அது காரணமாக அமையும்.

வணக்க வழிபாடுகளில் பொடுபோக்காக நடந்து கொள்ளும் நிலையும் இதனால் உருவாகும். ஆயினும் நல்ல நட்பும் சாலிஹான மனிதர்களுடன் ஆன உறவுகளும் நமது ஆன்மிக வாழ்க்கைக்கு அவசியமானவை என்பது மறுக்கவியலாதது. நன்மைகளை வளர்ப்பதற்கும் தீமைகளைக் களைவதற்கும் மனிதர்களுடன் பழக வேண்டிய கடப்பாடு நம் அனைவருக்கும் உண்டு.

நன்மையான காரியங்களில் ஈடுபடும் நோக்கத்தோடு அமைகின்ற சந்திப்புகள் தேவையானவை. ஜமாஅத், ஜூம்ஆ, பெருநாள் போன்றவற்றுக்கான ஒன்றுகூடல்கள், அதேபோல அறிவு போதிக்கப்படுகின்ற சபைகள் குர்ஆன் திக்ருடைய மஜ்லிஸ்கள் போன்றவற்றில் அடுத்தவர்களைச் சந்திப்பது எல்லாம் தேவையான அம்சங்கள். ஆனால் உலக வாழ்க்கைக்கு அல்லது மறுமை வாழ்க்கைக்குப் பயன்தராத சந்திப்புகளும் சபைகளும் தவிர்க்கப்பட வேண்டும்.

குறிப்பாகப் பாவமான காரியங்களும் பேச்சுகளும் இடம்பெறும் சபைகள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட ஆகுமான விஷயங்கள் இடம்பெறும் சபைகளாக இருந்தாலும் அங்கு இம்மை மறுமை வாழ்வுக்கு நன்மை பயக்கக்கூடிய எந்த விஷயங்களும் இடம்பெறவில்லை என்றால் அத்தகைய சபைகளும் தவிர்க்கப்பட வேண்டியவை தான்.

வீதியோரங்களில், தெருக்களில், மைதானங்களில் கடற்கரைகளில் கூட்டம் கூட்டமாகக் கூடி அரட்டை அடிப்பதும் வீண் பேச்சுகளில் ஈடுபட்டு கால நேரத்தை வீணாக்குவதும் நமது ஆன்மிக வாழ்வை மட்டுமின்றி உலக வாழ்க்கையையும் பாழாக்கிவிடும்.

இவை அனைத்திற்கும் மேலாக இன்று சமூக வலைதளங்களின் ஊடாக அறிமுகமான அறிமுகம் இல்லாத பலரோடு தொடர்புகளை உருவாக்கிக் கொண்டு நமது உடல், உள்ளம், ஆன்மா உட்பட அனைத்தையும் தினந்தோறும் தொலைத்துக் கொண்டிருப்பவர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.

இந்த அனாவசியமான மனித சகவாசத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குறைந்தபட்சம் குறைத்துக் கொள்ளவாவது வேண்டும். மனித சகவாசத்தை அளவோடு, கட்டுப்பாடாக வைத்துக் கொள்வோம். அது நமது ஈருலக ஆன்மிக ஆரோக்கியத்தையும் பேணிக் கொள்ளப் பெரிதும் துணையாக அமையும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தொடர்

மேலும் தேடல்