மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

வாழ்க்கைப் பாடங்கள்

மக்கா வெற்றி
மௌலவி முஹம்மது சித்தீக் மதனி, September 16-30, 2023


மக்கா வெற்றி

போருக்கான காரணம்

நபி(ஸல்) அவர்களுக்கும் குறைஷிகளுக்கும் இடையில் ஹுதைபியா என்னும் இடத்தில் ஓர் உடன்படிக்கை ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு நடந்தது. அதில் பல நிபந்தனைகள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் மிக முக்கியமானது ‘எவர்கள் முஹம்மது(ஸல்) அவர்களுடைய அணியில் இணைய விரும்புகின்றார்களோ, அவர்கள் நபியவர்களின் அணியில் இணைந்து கொள்ளலாம். எந்தக் குலங்கள் குறைஷிகளுடைய அணியில் இணைந்து கொள்ள விரும்புகிறதோ அவர்கள் அந்த அணியில் இணைந்து கொள்ளலாம்’. இந்த அடிப்படையில் நபி(ஸல்) அவர்களுடைய அணியில் குஸாஆ குலம் இணைந்து கொண்டது.பக்ரு குலம் குறைஷிகளுடன் இணைந்து கொண்டது.

இரண்டு ஆண்டுகள் நகர்ந்தது. சில காரணங்களால் பக்ரு, குஸாஆ குலங்களுக்கு இடையில் போர் மூண்டது. அப்போது குறைஷிகள் குஸாஆ குலத்திற்கு எதிராக பக்ரு குலத்திற்கு உதவி செய்தார்கள். இதன் மூலமாக அவர்கள் ஹுதைபியாவில் முஸ்லிம்களுக்குச் செய்து கொடுத்த உடன்படிக்கையை மீறி விட்டார்கள் குஸாஆ குலத்தின் தலைவர் அம்ரு பின் சாலிம் மதீனாவை நோக்கி விரைந்தார்.

‘அல்லாஹ்வின் தூதரே! எங்களைக் காப்பாற்றுங்கள்! பக்ரு குலமும் குறைஷிகளும் எங்களைத் தாக்குகின்றன. எங்கள் மீது வன்முறை செய்கின்றன.’ என்று சாலிம் முறையிட்டார். அதற்கு நபியவர்கள், ‘அம்ரு பின் சாலிமே! நிச்சயம் நாம் உதவி செய்வோம்’ என்று பதிலளித்தார்கள்.

மக்காவை நோக்கி..

நபி(ஸல்) அவர்கள் படையை ரகசியமாகத் திரட்டினார்கள். ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு ரமளான் மாதம் எட்டாவது பிறையில் முஸ்லிம்களின் படைகள் மக்கா நோக்கி நகர்ந்தது. வழியில் அஸ்லம், முஸைனா, கத்ஃபான் ஆகிய குலங்களிலிருந்து பெரும் கூட்டம் இப்படையில் இணைந்து கொண்டது.

இப்படையில் பத்தாயிரம் போர்வீரர்கள் இணைந்துவிட்டார்கள். தொடர்ந்து பயணித்தார்கள். ஏழு நாள்களுக்குப் பின்னரே மக்காவிற்கு அருகில் உள்ள மர்ருள் ளஹ்ரான் எனும் இடத்தை அடைந்தார்கள். இது இப்போது வாதி ஃபாத்திமா என்று அழைக்கப்படுகின்றது. படை இறங்கியது. முகாமிட்டது.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் படையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபரும் தமது இடத்தில் நெருப்பை மூட்டும் படி கட்டளை-யிட்டார்கள். இதன் மூலமாக இஸ்லாமியப் படையின் வலிமை மக்கத்து மக்களுக்குத் தெரிய வேண்டும்.

மேலும் அவர்களுடைய உள்ளங்களில் அச்சமும் பீதியும் கலக்கமும் ஏற்பட வேண்டும். இதனால் அவர்கள் விரைந்து அடிபணிய வேண்டும் என்று விரும்பினார்கள்.

இஸ்லாத்தை ஏற்ற அபூசுஃப்யான்

குறைஷிகளின் தலைவர் அபூசுஃப்யான் பின் சக்ரு பின் ஹர்ப் மக்காவில் பரவலாகப் பேசப்பட்டு வந்த செய்தியின் உண்மை நிலையை அறிந்து வர வெளியில் புறப்பட்டார். அப்போது இரவில் முஸ்லிம்கள் தங்கி இருந்த முகாம்களுக்கு மிக அருகில் அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபைச் சந்தித்தார். அப்போது அவரிடத்திலே அபூ சுஃப்யான், ‘நீர் என்ன செய்தி கொண்டு வந்துள்ளீர்’ என்று கேட்டார். அப்போது அப்பாஸ் கூறினார்: ‘அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நீங்கள் இதுவரை பார்த்திராத ஒரு பெரும் படையை அழைத்துக் கொண்டு உங்களுடன் போர் செல்வதற்கு வந்துள்ளார்கள்’. அதனைக் கேட்ட அபூ சுஃப்யான் ‘இப்போது இதிலிருந்து தப்பிப்பதற்கு என்ன வழி இருக்கிறது’ என்று வினவினார்.

உடனே அப்பாஸ் அவரைத் தமது வாகனத்தின் பின்னால் அமர்த்திக் கொண்டு நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்றார். அவருக்குப் பாதுகாப்பு அளிக்கும்படி நபியவர்களிடம் வேண்டினார். நபி(ஸல்) அவர்கள், அவருக்குப் பாதுகாப்பு அளித்தார்கள். பின்னர் அவரை இஸ்லாத்தின் பக்கம் அழைத்தார்கள். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அப்பாஸ்(ரலி) அவர்கள் நபியவர்களிடம் இவ்வாறு கூறினார்: ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அபூசுஃப்யான் மதிப்பு, மரியாதை, பெருமை, கௌரவம் ஆகியவற்றை விரும்பக் கூடியவர். ஆகவே அவர் மதிப்பு உயரும் படி தாங்கள் ஏதாவது செய்ய வேண்டும்’.

அப்போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘முஸ்லிம்களின் படைகள் மக்காவினுள் நுழைகின்ற போது, மக்காவாசிகளில் எவர்கள் அபூசுஃப்யான் வீட்டில் புகுந்து கொண்டார்களோ அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும். அவர்களை முஸ்லிம்களின் படைகள் தொடாது. எவர்கள் மஸ்ஜிதுல் ஹராம் உள்ளே நுழைந்து கொண்டார்களோ அவர்களுக்குப் பாதுகாப்பு நல்கப்படும்.

கொல்லப்பட மாட்டார்கள். எவர்கள் தத்தமது வீட்டில் நுழைந்து கொண்டு வாசல்களை அடைத்துக் கொண்டார்களோ அவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்’ என்று கூறி நபி(ஸல்) அவர்கள் அபூசுஃப்யானுக்கு மரியாதை கொடுத்துக் கௌரவித்தார்கள்.

இதன் மூலம் மக்கத்துத் தலைவர்களுக்கு மத்தியிலே அவருடைய மதிப்பு மரியாதை உயர்ந்தது. அவருக்கு முஸ்லிம்களின் படைகள் சுற்றிக் காட்டப்பட்டது. பின்னர் அவர் குறைஷிகளிடம் திரும்பிச் சென்ற போது, முஸ்லிம்களின் படை வலிமை, எண்ணிக்கை குறித்து விரிவாகக் கூறினார். குறைஷிகள் இந்த மாபெரும் படைகளை எதிர் கொண்டு தோற்கடிக்க முடியாது எனும் கருத்தை எடுத்துரைத்தார்.

மக்காவில் முஸ்லிம்கள்

நபி(ஸல்) அவர்கள், 10000 வீரர்களை உள்ளடக்கிய தமது படையை நான்கு அணிகளாகப் பிரித்தார்கள். ஒவ்வொரு படைக்கும் ஒரு தளபதியை நியமித்தார்கள்.

முதலாவது படைக்கு ஸுபைர் பின் அல்அவாம்(ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள். இந்தப் படை நகரத்தின் மேல் பகுதியிலிருந்து மக்காவுக்கு உள்ளே நுழைய வேண்டும். இரண்டாவது படைக்கு காலித் பின் வலீத்(ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள். இந்தப் படை நகரத்தின் கீழ்ப்பகுதியிலிருந்து மக்காவின் உள்ளே பிரவேசிக்க வேண்டும்.

மூன்றாவது படைக்கு அபூ உபைதா பின் அல்-ஜர்ராஹ்(ரலி) அவர்கள் தளபதியாக உறுதி செய்யப்பட்டார். இப்படை கிழக்கு வழியாக மக்காவினுள் புகவேண்டும். நான்காவது படைக்கு கைஸ் பின் சஃது பின் உபாதா(ரலி) தளபதியாகத் திகழ்ந்தார். இப்படை மக்கா நகரினுள் மற்றொரு நடைபாட்டு வழியாக உள் செல்ல வேண்டும்.

நபியவர்கள் தமது ஒட்டகமான கஸ்வாவில் ஏறினார்கள். படைத் தளபதிகளுக்கு இவ்வாறு கட்டளையிட்டார்கள்: ‘நீங்கள் மக்கத்து மக்கள் யாருடனும் போரிடக் கூடாது; சண்டையிடக் கூடாது. அவர்கள் எதிர்த்து போரிட்டாலே தவிர!’

படைகள் மக்காவின் நான்கு திசைகளிலிருந்தும் உள்ளே சென்றது. பெரிய அளவில் மக்காவாசிகள் யாரும் எதிர்த்துப் போரிடவில்லை. சிறிய மோதல்கள் ஏற்பட்டன. இதை காலித் பின் வலீத் சமாளித்துக் கொண்டார். இந்தச் சின்னச் சின்ன மோதல்களில் 20 மக்காவாசிகள் இறந்தார்கள்.

இரண்டு முஸ்லிம்கள் ஷஹீதானார்கள். இறுதியில் மக்காவை முஸ்லிம்கள் வெற்றி கொண்டார்கள். இப்போது மக்கா மாநகரம் முஸ்லிம்களின் கைகளில் பிரகாசமாக ஜொலித்தது.

நபி(ஸல்) அவர்கள் இறைவனுக்குப் பணிந்தவர்களாக, தமது தலையைக் கீழே தாழ்த்தியவர்களாக புனித மக்காவினுள் நுழைந்தார்கள். ‘(நபியே!) நாம் உமக்கு வெளிப்படையான வெற்றியை அளித்துவிட்டிருக்கிறோம்’. (திருக்குர்ஆன் 48:1) எனும் வசனத்துடன் தொடங்கும் அல்ஃபத்ஹ் எனும் திருமறை அத்தியாயத்தின் வசனங்களை ஓதிக் கொண்டே நகர்ந்தார்கள். இறுதியில் புனித கஅபாவை வந்தடைந்தார்கள். ஏழு முறை கஅபாவை வலம் (தவாஃப்) வந்தார்கள். தவாஃப் செய்யும் மக்கள் கூட்ட நெரிசல் அதிகம் இருந்தது.

ஆகவே நபி(ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத் கல்லைத் தமது கம்பால் தொட்டு முத்தமிட்டார்கள். ஏனெனில் நபியவர்கள் மக்களுக்குச் சிரமம் தருவதை வெறுத்தார்கள். இதுபோன்ற நேரங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கற்பித்தார்கள்.

நபியவர்கள் கஅபத்துல்லாஹ்வின் உள்ளே நுழைந்தார்கள். அதன் அகத்தையும் புறத்தையும் தூய்மைப்படுத்த கட்டளையிட்டார்கள். ஓதினார்கள்: ‘மேலும், பிரகடனம் செய்வீராக: சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. திண்ணமாக அசத்தியம் அழியக் கூடியதே!’ (திருக்குர்ஆன் 17:81)

வெற்றிக்குப் பின்..

நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் வாசலில் நின்றார்கள். நபியவர்களை எதிர்பார்த்தும் அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்பதை எதிர்பார்த்தும், அவர்களுக்கு முன்பாக குறைஷிகள் அணிவகுத்து நின்றார்கள். நபியவர்கள் அவர்களைப் பார்த்துக் கேட்டார்கள்: ‘குறைஷிகளே! மக்காவாசிகளே! நான் உங்களை என்ன செய்யப் போகிறேன் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்!’ அப்போது அவர்கள் கூறினார்கள்: ‘நல்லதையே தாங்கள் செய்வீர்கள்! தாங்கள் கண்ணியமிக்க சகோதரர். கண்ணியமிக்க சகோதரரின் மகனார்’.

அப்போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நீங்கள் அனைவரும் செல்லுங்கள்! நீங்கள் அனைவரும் விடுதலை பெற்றவர்களாக!’ சுருக்கமான இந்த உரையின் மூலமாக மக்காவாசிகளுக்கு நபி(ஸல்) அவர்கள் பொது மன்னிப்பு அறிவித்தார்கள்.

இவ்வாறாக மக்கா மாநகரம் முஸ்லிம்களின் கைகளில் வந்தது. அன்றைய நாள் ஜூம்ஆவின் நாள். ரமளான் பிறை 20. ஹிஜ்ரி ஆண்டு எட்டு.

நபி(ஸல்) அவர்கள் பாங்கு ஒலிக்கும் படி கட்டளையிட்டார்கள். உடனே பிலால்(ரலி) கஅபாவின் மேலே ஏறினார். ‘அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்..!’ என முழங்கினார். நபியவர்கள் 19 நாள்கள் மக்காவில் தங்கினார்கள். அங்கிருந்து அழைப்புப் பணி செய்ய சிறு சிறு குழுக்களை அனுப்பினார்கள்.

இந்த மக்கா வெற்றி அரபுகள் மனங்களில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியது. மக்கள் அணி அணியாகத் திரள் திரளாகக் கூட்டம் கூட்டமாகக் குலம் குலமாக இஸ்லாத்தை ஏற்றனர். இறைவன் அதை இவ்வாறு பதிவிடுகிறான்; ‘அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் வந்து விடும்போது, மேலும் (நபியே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் திரள்திரளாக நுழைவதை நீர் காணும்போது, நீர் உம் இறைவனைப் புகழ்ந்து கொண்டு அவனைத் துதிப்பீராக! மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன், பாவமன்னிப்புக் கோரிக்கையை பெரிதும் ஏற்பவனாக இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 110 : 1-3)

இறைமறுப்பிற்கும் இணைவைப்பிற்கும் மையமாக இருந்த மக்கா, இஸ்லாத்திற்கும் ஏகத்துவத்திற்குமான மாநகரமாக மாறியது!

தொடரும்..


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தொடர்

மேலும் தேடல்