மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

நட்சத்திர முற்றம்

தள்ளிப் போடாதீர்!
அஷ்ஷெய்க் A.C. அகார் முஹம்மது, 16 - 29 பிப்ரவரி 2024


தள்ளிப் போடாதீர்!

ஒருவரது வாழ்வின் வெற்றிக்குத் துணை புரிகின்ற முக்கியமான ஒரு பண்பு தான் செய்ய வேண்டிய காரியங்களை, செய்ய வேண்டிய காலத்திலே நேரத்திலே தவறாமல், தள்ளிப் போடாமல், காலம் தாழ்த்தாமல் செய்வதாகும். வாழ்க்கையில் சாதிக்க விரும்புவோர், உயர விரும்புவோர். சிறப்படைய வேண்டும் என்று ஆசைப்படுவோர் காரியங்களைத் தள்ளிப்போடும் மனோநிலையிலிருந்து விடுபட வேண்டும்.

நமது ஆன்மிக வாழ்க்கையிலும் நாம் நோக்கக்கூடிய ஒரு பிரச்னைதான் நற்காரியங்களைத் தள்ளிப் போடுகின்ற மனோநிலை! நற்காரியங்களை உரிய நேரத்தில் உடனுக்குடன் செய்யாமல் தள்ளிப் போடும் மனோநிலையை உருவாக்கு பவன் சைத்தான். இதனால் தான் தள்ளிப் போடும் மனோநிலை சைத்தானின் தடைகளில் ஒன்று என்று நமது முன்னோர்கள் சொல்வார்கள்.

நற்செயல்களைச் செய்ய வேண்டாம் என்று அவன் பெரும்பாலும் சொல்வதில்லை மாறாக அவற்றை இன்று செய்யாதே. நாளை செய்! அடுத்த வாரம். அடுத்த மாதம், இந்த வேலை முடிந்த பிறகு, அந்தப் பொறுப்பு முடிந்த பிறகு செய் என்று தான் சொல்வான். அத்தகைய தள்ளிப்போடும் மனோநிலையைத்தான் சைத்தான் எப்போதும் வளர்ப்பான். இது அடியார்களை வழிகெடுப்பதற்கான அவனது ஒரு வியூகம்.

நாம் செய்ய விரும்பிய போதும் தாமதப் படுத்திய, தள்ளிப் போட்ட ஆனால் இதுவரை செய்ய முடியாமல் போன நற்காரியங்களை நினைத்துப் பாருங்கள். ஒரு பட்டியலே தயாராகிவிடும்.

இங்குச் சைத்தான் எப்படி வெல்கின்றான்? நாம் எப்படி அவனால் ஏமாற்றப் பட்டுத் தோற்றுப் போகின்றோம் என்பதைக் கவனியுங்கள். நற்காரியங்களைத் தள்ளிப் போடுபவர் இறுதியிலே கைசேதப்பட வேண்டி இருக்கும். அந்தக் கைசேதமும் கவலையும் அவருக்கு எந்தப் பயனையும் தரப்போவதில்லை.

இத்தகைய மனிதனின் நிலையை திருக்குர்ஆன் இப்படிச் சொல்கின்றது 'முடிவிலே அவர்களில் ஒருவருக்கு மரணம் வரும். அப்போது 'என் இறைவா! நான் நன்மை செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்' என்று அவன் கூறுவான். அவ்வாறு இல்லை. இது அவன் சொல்லும் வெறும் வாய் வார்த்தை தான். அவர்கள் உயிர்ப் பிக்கப்படும் நாள்வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது'.

மேலும் நற்செயல்களை அவ்வப்போது செய்து முடிக்காமல், தள்ளிப் போடும்போது சுமை கூடும். மலைப்பும் தயக்கமும் உருவாகும். காரியங்கள் சிரமமாகும். நாமும் நொந்து, வேதனைப்பட வேண்டிவரும்.

இறுதியிலே நற்காரியங்களைச் செய்ய முடியாமல் போய் நன்மைகளை இழந்த நஷ்ட வாளியாக மாற வேண்டி இருக்கும்.

நற்காரியங்களைத் தள்ளிப்போடும் மனோநிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும். இதற்கு என்ன வழி? நற்காரியங்களைத் தள்ளிப் போடுவது ஒரு பலவீனம், இயலாமை என்பதை அடிக்கடி நினைவுபடுத்த வேண்டும். ஒவ்வொரு காரியத்தையும் அந்தந்த சந்தர்ப்பத்திலே உரிய நேரத்திலே செய்து முடிப்பது தான் மனோபலத்தின், திட உறுதியின் வெளிப்பாடாக இருக்கும் என்ற உண்மையை உணர வேண்டும்.

சோம்பேறிகளின் சகவாசத்தைத் தவிர்த்து ஊக்கத்தோடு உற்சாகமாகச் சுறுசுறுப்பாக இயங்குகின்ற நன்மக்களோடு பழக வேண்டும். மரணம் வரலாம் என்ற எதார்த்தத்தை எப்போதும் உள்ளத்திலே பசுமையாக வைத்துக் கொள்ள வேண்டும். மரண சிந்தனையோடு வாழ்பவர் நற்காரியங்களைத் தள்ளிப் போட மாட்டார். மாறாக உடனுக்குடன் செய்து முடிப்பார்.

உலக விவகாரங்களுக்காக நாம் நடந்து செல்லலாம். ஆனால் மறுமையில் நமக்கு நன்மை அளிக்கும் விவகாரங்களிலே நற்காரியங்கள் செய்வதிலே நாம் விரைந்து செயல்பட வேண்டும் என்பதே அல்லாஹ்வின் எதிர்பார்ப்பு.

திருக்குர்ஆன் பின்வருமாறு சொல்கின்றது 'உங்களது இறைவனின் மன்னிப்பை நோக்கியும் இறை நம்பிக்கையாளர்களுக்காக தயார்படுத்தப்பட்டிருக்கின்ற வானங்கள் பூமியின் அளவுக்கு விசாலமான சுவனத்தை நோக்கியும் விரைந்து வேகமாகச் செல்லுங்கள்'.

எனவே நற்காரியங்களைத் தள்ளிப் போடும் ஆபத்தான பழக்கத்தை விட்டொழிப்போம். நன்றே செய்வோம்! அதை இன்றே செய்வோம்!


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தொடர்

மேலும் தேடல்