நாள்தோறும் பல்வேறு பொதுக்கூட்டங்கள், அரங்குக் கூட்டங்கள், கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகின்றன. வாரம்தோறும் பள்ளிவாசல்களில் ஜூம்ஆ உரைகள் நிகழ்த்தப்படுகின்றன. அந்த உரைகளில் சிறந்தவற்றை இப்பகுதியில் தொடர்ந்து பிரசுரிக்க உள்ளோம். உரை நிகழ்த்தியவரோ, கேட்டவர்களோ இப்பகுதிக்கு உரைகளை அனுப்பலாம். உரையுடன் புகைப்படத்தையும் உரை இணைப்பையும் samarasam.article@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். இந்த இதழில் சமரசம் பொறுப்பாசிரியர் வி.எஸ்.முஹம்மத் அமீன் ஜனவரி 26ஆம் நாள் சென்னை ஒருமா பள்ளியில் ஆற்றிய ஜூம்ஆ உரையிலிருந்து…
1947 ஆகஸ்ட் 15ஆம் நாள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்தியா விடுதலை பெற்றபிறகு அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் இந்திய அரசியலமைப்புச் சபையால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் இந்தியா குடியரசு நாடாக மலர்ந்தது.
ஜனநாயகத் தத்துவம், மன்னராட்சி, எதேச்சதிகாரம் என்ற மூன்று வகையாக நாடுகளின் ஆட்சிகள் இருக்கின்றன. இஸ்லாமிய நாடுகளில் மன்னராட்சி நிலவுவதால் இஸ்லாம் மன்னராட்சித் தத்துவத்தைத்தான் வலியுறுத்துகிறது என்று பலரும் பிழையாகக் கருதிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் இஸ்லாம் மன்னராட்சியை வலியுறுத்தவில்லை.
எதேச்சதிகாரத்தையும் இஸ்லாம் அடியோடு வெறுக்கிறது. ஒரு நாட்டை ஆக்கிரமித்து ஒரு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி, ஆட்சிக் கவிழ்ப்பு செய்துவிட்டு அங்குள்ள ஆட்சியாளரை அகற்றிவிட்டு ஆட்சியில் அமர்வதும் இஸ்லாமிய வழிமுறை அல்ல. இஸ்லாம் ஜனநாயகத் தத்துவத்தை வலியுறுத்துகிறது. நபி(ஸல்) அவர்களின் இறப்பிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலீஃபாக்கள் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்டார்கள்.
அதுபோல மொழியின் அடிப்படையில், நிலத்தின் அடிப்படையில் ஒருவர் ஆட்சிக்குத் தகுதியானவராகிவிட முடியாது. தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆளவேண்டும் என்ற சிந்தனை சிலரிடம் இருக்கின்றது. நபி(ஸல்) அவர்களின் இறப்பிற்குப் பிறகு பொறுப்பேற்றுக் கொண்ட கலீஃபா எனும் புகழ்பெற்ற நான்கு ஆட்சியாளார்களில் ஒருவர்கூட மதீனாவைச் சார்ந்தவர் அல்ல. மக்காவிலிருந்து புலம் பெயர்ந்து வந்த மக்காவாசிகள்தான் நால்வரும்.
உலகில் யாருக்கும் வழங்கப்படாத ஒரு வாய்ப்பு இந்திய முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது. 'இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் வேண்டுமா? அல்லது மதச்சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியா வேண்டுமா?' என்ற வாய்ப்புகள் எங்கள் முன்னோர் முன் வைக்கப்பட்டபோது அவர்கள் இஸ்லாமிய நாட்டைத் தேர்ந்தெடுக்கவில்லை. மதச்சார் பற்ற இந்தியாவையே தேர்வு செய்தார்கள். எனவே இந்தியக் குடியரசு தினத்தைக் கொண்டாடுவதில் இந்திய முஸ்லிம்களுக்கு முதல் உரிமை இருக்கின்றது.
ஆனால் முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு விரோதமானவர்கள் என்ற திட்டமிட்ட வெறுப்பு பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்கள் இந்தியாவிற்கு விசுவாசமாக இருப்பதை விட பாகிஸ்தானுக்கு விசு வாசமாக இருப்பார்கள் என்ற போலிச் சித்திரம் கட்டமைக்கப்படுகிறது. உண்மையில் இந்த மண்ணின் வளத்திற்கும், விடுதலைக்கும் வித்திட்டதில் முஸ்லிம்களின் பங்கு அளப்பரியது. இந்த மண்ணின் தவிர்க்க இயலாத அங்கமாக முஸ்லிம்கள் இருக்கின்றார்கள்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தீவிரவாதப் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் முஸ்லிம்கள் என்ற அவதூறும் களங்கமும் இந்திய முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. முஸ்லிம்கள் தங்களின் நேர்மையை நிரூபித்துக் கொண்டே இருக்க நிர்பந்திக்கப் படுகின்றோம். உண்மையில் இஸ்லாத்திற்கும் தீவிரவாதத்திற்கும் எள்முனையளவும் தொடர்பில்லை என்பதை சகோதரச் சமுதாயங்கள் உணர வேண்டும். அதற்கான உரையாடல் காலத்தை நாம் உருவாக்க வேண்டும்.
முஸ்லிம் பெண்களெல்லாம் அரபு தேசத்தின் உடையான ஹிஜாபை அணிகின்றார்கள் என்ற கருத்துருவாக்கமும் நிலவுகின்றது. உண்மையில் ஹிஜாப் என்பது அரபுதேச உடை என்பதால் அணிவதில்லை. இது முஸ்லிம்களை அடையாளப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் அணியப்படுவதில்லை. ஹிஜாப் என்பது பெண்களுக்குப் பாதுகாப்பான ஆடை அவர்களின் கண்ணியம் அடங்கியிருக்கின்றது. ஹிஜாப் உண்மையில் முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமான ஆடை அல்ல. அனைத்துப் பெண்களுக்கும் இந்த ஆடை கண்ணியத்தையும், பாதுகாப்பையும் வழங்குகிறது.
இன்றைய காலம் இந்திய முஸ்லிம்களுக்கு சவால் நிறைந்த நாள்களாக இருக்கின்றன. நாம் ஆகஸ்ட் 15, ஜனவரி 26 என்ற நாள்களை மனதில் குறித்து வைத்திருக்கின்றோம். ஆனால் 2024 ஜனவரி 22 புதிய யுகத்தின் தொடக்கம் என்ற குரல் இன்று எழுந்திருக்கிறது. இந்தியா எல்லாருக்குமானது. நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சி அமைத்த போது அங்கு முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல. யூதர்களுக்கும், கிறித்தவர்களுக்குமான உரிமைகள் வழங்கப்பட்டன.
அரசியல் அமைப்புச் சட்ட முகவுரையில் கூறப்பட்டுள்ள சமத்துவம், நீதி, சகோதரத்துவம், ஒற்றுமை அனைத்தையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.இஸ்லாம் வழங்கும் நீதி முஸ்லிம்களுக்கானது மட்டுமல்ல. அனைவருக்குமான நீதியை இஸ்லாம் வழங்குகிறது. நீதியில் பாகுபாடு கூடாது என்கிறது இஸ்லாம். 'நீங்கள் நீதி செலுத்துங்கள். அது உங்கள் பெற்றோருக்கோ, நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே!' என்று திருமறைக் குர்ஆன் வலியுறுத்துகிறது.
இஸ்லாம் சகோதரத்துவத்தை வெறும் தத்துவமாக வலியுறுத்தவில்லை. மக்காவிலிருந்து புலம்பெயர்ந்த முஹாஜிர்களையும், மதீனாவைச் சேர்ந்த அன்ஸாரிகளையும் சகோதரர்களாக்கினார்கள். இது வெறும் வார்த்தை அல்ல. புலம்பெயர்ந்து வந்த முஹாஜிர்களுக்கு அன்ஸாரிகள் தங்களின் சொத்தில் பாதியைக் கொடுத்தார்கள். இதுதான் இஸ்லாம் வழங்கும் சகோதரத்துவம்.
வழிபாட்டில் முழு உரிமையையும், நீதியையும் முகவுரை வலியுறுத்துகிறது. ஆனால் இன்று அயோத்தியில் பள்ளிவாசலைத் தகர்த்துவிட்டு கோயில் கட்டப் பட்டிருக்கின்றது. அங்கு சிலை வைக்கப் பட்டதையும், மஸ்ஜித் இடிக்கப்பட்டதையும், தொல்லியல் ஆய்வில் கோயில் இருந்ததற்கான அடையாளம் இல்லை என்பதையும் நீதிமன்றம் ஒப்புக்கொண்டு கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் அநீதியான தீர்ப்பை வழங்கியிருக்கின்றது.
தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தும். தங்கள் கண்முன்னே பள்ளிவாசல் இடிக்கப்பட்டதையும் முஸ்லிம்கள் சகித்துக் கொள்கின்றார்கள். முஸ்லிம்கள் சுயமாகவே அமைதி காத்தனர். இது அச்சத்தினால் அல்ல, இதற்கு ஏற்றுக் கொண்டோம் என்பது பொருளல்ல. தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டபோதும் அமைதி காப்பது எதற்காகவெனில் இந்திய அரசமைப்புச் சட்ட முகவுரை கூறிய அந்த ஒருமைப் பாட்டிற்கு இடையூறு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். நாம் ஏற்றுக் கொண்ட சகிப்புத்தன்மையின் அடையாளம்தான். தங்களுக்கு என்றாவது ஒருநாள் நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் முஸ்லிம்களை ஆற்றுப்படுத்துகின்றது.
எனவே இந்த குடியரசு தினநாளில் நாம் இந்தியாவை எல்லாருக்குமான இந்தியாவாகக் கட்டமைப்பதில் உறுதி ஏற்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும்.