மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

நட்சத்திர முற்றம்

அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொள்வோம்!
அஷ்ஷெய்க் A.C. அகார் முஹம்மது, 1-15 மார்ச் 2024


அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொள்வோம்!

 

அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொள்வது ஒரு வணக்கம், இபாதத். ஓர் உண்மையான இறைவிசுவாசி எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டவராக இருப்பார். அவன் மீது தப்பெண்ணம் கொள்ள மாட்டார். அவனது அருளிலே நிராசை அடைய மாட்டார், நம்பிக்கை இழக்க மாட்டார். அல்லாஹ் எனக்குக் கை கொடுப்பான், உதவுவான், வழிகாட்டுவான், எனது பாவங்களை மன்னிப்பான், பிழை பொறுப்பான், எனது பிரார்த்தனைகளை ஏற்றுப் பதில் சொல்வான் என்ற நம்பிக்கை ஒவ்வொரு இறைவிசுவாசியின் உள்ளத்தின் ஆழத்தில் இருக்க வேண்டும்.

இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் சொல்வதைப் பாருங்கள் ‘எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீது சத்தியமாக! ஓர் இறைவிசுவாசி பெற்றிருக்கக் கூடியவைகளில் அல்லாஹ்வின் மீதான நல்லெண்ணத்தை விடச் சிறந்த மற்றொன்று இருக்க முடியாது. எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீது சத்தியமாக! ஓர் அடியான் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைத்தால் அவனது எண்ணத்தை, எதிர்பார்ப்பை அவன் நிறைவேற்றாமல் இருப்பதில்லை. ஏனென்றால் நன்மை களெல்லாம் அவன் கையிலே தான் இருக்கின்றன.’

‘எனது அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ! அப்படியே அவன் என்øனக் கண்டு கொள்வான்’ என்ற பிரபலமான ஹதீஸ் குதுசி இங்கு நினைவு கூரத்தக்கது.

ஒருவர் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொள்கின்ற போது, நம்பிக்கை வைக்கின்ற போது அல்லாஹ் அவருக்குத் தனது அருட்பேறுகளை அள்ளிக் கொடுப்பான். அல்லாஹ் தன்னைப் பற்றி அடியார்கள் எப்படி நினைக்கின்றார்களோ அப்படியே அவர்களோடு நடப்பான். அதற்கு மேலும் நடப்பான். அல்லாஹ்வின் மீதும், அவனது தீர்ப்புகள், முடிவுகள் மீதும் நல்லெண்ணமும் திருப்தியும் கொள்வதில் தான் உண்மையான மகிழ்வும் மனநிறைவும் இருக்கிறது.

துன்பத்திற்குப் பிறகு இன்பம் வரும், கவலைக்குப் பிறகு மகிழ்ச்சி வரும், கஷ்டத்தைத் தொடர்ந்து இலகு வரும், நோயை அடுத்து சுகம் கிடைக்கும். மரணம் வந்துவிட்டால் அதனைத் தொடர்ந்து வானங்கள் பூமியின் அளவு விசாலமான சுவனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் அல்லாஹ்வின் மீதான நல்லெண்ணமும் ஒருவர் வாழ்வாங்கு வாழ, வளமாக வாழ என்றும் எப்போதும் துணை செய்யும். 

எனவேதான் அல்லாஹ்வின் மீது கொள்ள வேண்டிய இந்த நல்லெண்ணத்தை விளக்கும் வகையில் இப்படிச் சொல்வார்கள் ‘நீங்கள் எதிர்பார்த்ததை, கேட்டதை அல்லாஹ் தந்தால் ஒருமுறை மகிழுங்கள். நீங்கள் கேட்டதை அவன் தராத போது பத்து முறை மகிழுங்கள்.

ஏன் தெரியுமா? முதலாவது உங்களது தெரிவு, இரண்டாவது அவனது தெரிவு. உங்களுக்கு எது தேவையானது, எது நன்மையானது என்பதை உங்களைவிட அவனே நன்கு அறிந்தவன். இப்படி நம்புவது தான் அல்லாஹ்வின் மீதான அன்பின் வெளிப்பாடு.

வாழ்க்கையிலே கஷ்ட நஷ்டங்கள், துன்பதுயரங்கள், சோதனைகள், வேதனைகளின் போதும் சரி, தனது தேவைகளுக்காகக் கையேந்தி பிரார்த்திக்கின்ற போதும் சரி, தான் செய்த பாவங்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோரும் போதும் சரி, மரணப் படுக்கையில் இருக்கும் போதும் சரி, எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வின் மீது அளவில்லாத நம்பிக்கையும் எதிர்பார்பும் சுப எண்ணமும் நிறைவாக இருக்க வேண்டும்.

ஒரு மனிதர் மரணப் படுக்கையிலே இருக்கின்ற போது இப்படிச் சொன்னார். ‘நான் எனது வீட்டில் இருக்கும் போதே என்னைக் கவனித்த அவன், அவனது வீட்டுக்குச் சென்றால் எப்படி எல்லாம் கவனிப்பான்’. எப்படிப்பட்ட நல்லெண்ணம், எதிர்பார்ப்பு, சுபமான பார்வை.

இறுதியாக ஒரு நபிமொழியை உங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறேன் ‘உங்களில் ஒருவர் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்ட நிலையில் இல்லாமல் மரணிக்கக் கூடாது’.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தொடர்

மேலும் தேடல்