வாழ்க்கைப் பாடங்கள் 52
உலக வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும். துன்பத்தின் போது அடுத்து வருவது இன்பமாக இருக்கும் என்ற உண்மையை நினைத்து மன ஆறுதல் பெற வேண்டும். இன்பத்தின் போது அடுத்து வருவது துன்பமாக இருக்கலாம் என்பதை நினைத்து அடக்கமாக இருக்க வேண்டும்.
துன்பம் வரும்; இனி வாழ்க்கையில் இன்பமே வராது என்று நினைக்கத் தூண்டும் அளவிற்கு அது பெரும் துன்பமாக இருக்கும். இன்பம் வரும்; இனி வாழ்வில் துன்பமே தலைகாட்ட மாட்டாது என்று நம்பும் அளவிற்குப் பேரின்பமாக இருக்கும்.
ஆனால் இந்தப் பார்வைகள் எண்ணங்கள் உண்மை அல்ல. வெறும் பிரமை மட்டுமே! இன்பத்தைத் தொடர்ந்து துன்பமும் துன்பத்தை அடுத்து இன்பமும் மாறி மாறி வரும் என்பதே உண்மை, எதார்த்தம்.
இந்த உண்மையை திருக்குர்ஆன் இப்படிச் சொல்கின்றது ‘நிச்சயமாக துன்பத்தைத் தொடர்ந்து இன்பம் இருக்கின்றது. துன்பத்தைத் தொடர்ந்து இன்பம் இருக்கிறது.’
இன்பத்தின் போதும் சரி, துன்பத்தின் போதும் சரி ஓர் இறைநம்பிக்கையாளன் எப்படி நடந்து கொள்ள வேண் டும் என்பதைத் திருக்குர்ஆன் இப்படிச் சொல்கிறது ‘உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றுக்காக நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காகவும் அவன் உங்களுக்குத் தந்ததற்காக, தந்ததை வைத்து நீங்கள் அதிகம் மனம் மகிழாமல் இருப்பதற்காகவும் இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான். இழந்ததை நினைத்து அதிகம் கவலைப்படலாகாது. கிடைத்திருப்பதை வைத்துத் துள்ளிக் குதிக்கவும் கூடாது. எல்லா நிலைகளிலும் மிதமாகவும் அடக்கமாகவும் நடந்து கொள்ள வேண்டும். இதுவே அல்லாஹ்வின் வழிகாட்டல்.
இதற்கான வழி என்ன? கவலைகளின் போது ‘ஸபர்’ பொறுமை கொள்ள வேண்டும். மகிழ்ச்சியின் போது ‘ஸுக்ர்’ நன்றி செலுத்துவதற்கும் நம்மை நாம் பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும். அப்போது இன்பம் - துன்பம் இரண்டு நிலைகளிலும் நாம் நலமாக இருக்கலாம், மன அமைதியோடு இருக்கலாம். சலனமோ, சபலமோ, சஞ்சலமோ இல்லாமல் வாழலாம்.
ஓர் இறைநம்பிக்கையாளனுடைய இந்த அற்புதமான மனோநிலையை நபி(ஸல்) அவர்கள் இப்படி வர்ணிக்கிறார்கள் ‘ஓர் இறைநம்பிக்கையாளனுடைய காரியம் வியப்பானது. அவனது காரியங்கள் அனைத்தும் அவனுக்கு நல்லதாகவே, நன்மையானதாகவே அமைகின்றது. இந்த நிலை இறைநம்பிக்கையாளனைத் தவிர வேறு யாருக்கும் ஏற்படாது. அவனுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நிகழ்வு ஏற்பட்டால் அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நன்மையாக அமைகின்றது. அவனுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அவன் பொறுமையைக் கைக் கொள்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையாகவே அமைந்து விடுகின்றது.’
இன்றைய நாளும் வருகின்ற நாள்களும் எனக்கும் உங்களுக்கும் ஸப்ருடனும் ஸுக்ரு டனும் கூடிய நாள்களாக அமையட்டும்!