மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

கொஞ்சம் தண்ணீர் குடித்துக் கொள்ளுங்கள் பிரதமரே..! உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது

அன்னை ஹாஜிராவின் கண்ணீர்!
மௌலவி இஸ்மாயீல் இம்தாதி, ஜூன் 16-30





நாள்தோறும் பல்வேறு பொதுக்கூட்டங்கள், அரங்குக் கூட்டங்கள், கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகின்றன. வாரம்தோறும் பள்ளிவாசல்களில் ஜும்ஆ உரைகள் நிகழ்த்தப்படுகின்றன. இணையவெளியில் ஏராளமான உரைகள் நிரம்பிக் கிடக்கின்றன.

அந்த உரைகளில் சிறந்தவற்றை இப்பகுதியில் தொடர்ந்து பிரசுரித்து வருகிறோம். உரை நிகழ்த்தியவரோ, கேட்டவர்களோ இப்பகுதிக்கு உரைகளை அனுப்பலாம். உரையுடன் புகைப்படத்தையும் உரை இணைப்பையும் samarasam.article@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

கடந்த ஆண்டு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பெரம்பூர் கிளை நடத்திய இணையவழி நிகழ்வில் மௌலவி இஸ்மாயீல் இம்தாதி ஆற்றிய உரை இந்த இதழின் மேடையை அலங்கரிக்கிறது.


உலக முஸ்லிம்களுடைய தொழுகையின் முன்னோக்குத் தலம் மக்கமா நகரம்! அந்த நகரத்துக்குச் செல்லுகின்ற எவராலும் அந்த மாநகரத்தின் தாயை மறக்க முடியாது.

ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் எனும் புனிதக் கடமையை நிறைவேற்றச் செல்லுகின்ற இலட்சக்கணக்கான புனிதப் பயணிகள் மக்கமா நகரத்தின் தாயான அன்னை ஹாஜிரா(அலை) அவர்களின் காலடித் தடங்களைப் பின்பற்றி ஸஃபா - மர்வா எனும் இரு குன்றுகளுக்கிடையில் பலமுறை நடை மேற்கொள்கின்றார்கள். ஹஜ் மட்டுமல்ல; உம்ரா எனும் கடமையை நிறைவேற்றுகின்றவர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.

இந்த நடைமுறை இன்று நேற்று தொடங்கியதல்ல! அவ்வளவு ஏன், அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நபியாக நியமிக்கப் பட்டதைத் தொடர்ந்து நடைமுறைக்கு வந்தது கூட அல்ல. பல நூற்றாண்டு கால நடைமுறையாகும் அது. அதனாலேயே ஒரு செய்தியை நம்மால் தைரியமாகச் சொல்ல முடியும்; உலகத்தில் அதிகமாக நினைவு கூரப்படும் ஒரே பெண்மணி அன்னை ஹாஜிரா(அலை) அவர்கள் தான் என்று!

அந்தளவுக்கு அன்னை ஹாஜிரா(அலை) அவர்களுக்கு என்ன மகத்துவம் இருக்கிறது? அவர் கறுநிறம் கொண்டவராகவே இருந்தார். பெரும் பணக்காரியாக இருக்கவில்லை; மாறாக, அவர் அடிமை வம்சத்தைச் சேர்ந்தவராகவே
இருந்தார். நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் மனைவி ஸாரா அவர்களுக்கு உதவியாளராக - பணிப்பெண்ணாக நைல் நதிக்கரையோரத்திலிருந்து அழைத்து வரப்பட்டவர்.

இப்ராஹீம் நபியின் அன்பு மனைவி ஸாரா பொதுவாக பெண்கள் பிரசவிக்கின்ற பருவத்தைக் கடந்து விட்டிருந்தார். இருந்தும் ஒரு பிஞ்சுப் பாதத்தைக் கண்குளிரப் பார்க்க முடியவில்லையே என்கிற ஏக்கம் அவரை மிக அதிகமாக சஞ்சலப்படுத்திக் கொண்டிருந்தது. அதனால் ஹாஜிராவின் மூலம் தனது கணவருக்கு ஒரு குழந்தை பிறந்தால் அது தனக்கும் ஓர் அருளாகவே இருக்கும் என்று நினைத்த ஸாரா, இப்ராஹீம் நபியிடம் ஹாஜிராவையும் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினார். அதன்படி ஹாஜிரா(அலை) அவர்களையும் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொண்ட அந்த இறைத்தூதருக்கு ஹாஜிரா மூலம் ஒரு குழந்தை பிறந்தது. அவர்கள் அந்தக் குழந்தைக்கு இஸ்மாயீல் என்று பெயரிட்டார்கள். அதற்குப்பிறகு தாமதிக்காமல் ஸாரா அவர்களும் கர்ப்பமுற்றார். அதனை அவரே கூட எதிர்பார்க்கவில்லை.

இப்படியிருக்க ஒருநாள் நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் கைக்குழந்தையுடன் அன்னை ஹாஜிரா(அலை) அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். பல நாள்கள் தொடர் பயணத்துக்குப் பிறகு அவர்கள் நாற்புறமும் மலைகள் சூழ்ந்திருந்த ஒரு பள்ளத்தாக்குக்கு வந்து சேர்ந்தார்கள். முப்பது நாள்கள் ஒட்டகப் பயணத்தின் தொலைவையே அவர்கள் கடந்து வந்திருந்தார்கள். அது ஒரு ஜன நடமாட்டமில்லாத சுட்டுப் பொசுக்கும் பாலைவனப்பகுதி. அந்தப் பகுதியில் தண்ணீர் இல்லை. அதனால் எவ்விதப் பயனும் இல்லை. அதனாலேயே அங்கு மக்கள் யாரும் இல்லை. இரை தேடும் பறவைகள் கூட பறக்கத் தயங்குகின்ற கடுமையான வெப்பம் கொண்டிருந்தது அந்தப் பள்ளத்தாக்கு. ஒரு வகையான பயங்கர அமைதி அங்கே குடி கொண்டிருந்தது.

இன்றைக்கு மக்கா என்று அழைக்கப்படுகின்ற அந்த இடத்தில் இப்ராஹீம் நபி ஒரு பாறையின் மீது அமர்ந்து சற்று நேரம் ஓய்வெடுத்தார்கள். பிறகு திரும்பிச் செல்வதற்காக எழுந்தார்கள். தானும் தனது பிஞ்சுக்குழந்தையும் தனித்து விடப்படுகின்றோம் என்கிற கசப்பான உண்மை அன்னை ஹாஜிரா(அலை) அவர்களைத் தளரச் செய்தது. திரும்பிச் செல்வதற்குத் தயாரான தனது அன்புக் கணவரிடம் அவர் கேட்டார்: ‘எங்கள் இருவரையும் இங்கே தனித்து விட்டுச் செல்லப்போகின்றீர்களா?’ ‘ஆமாம்,ஹாஜிரா!’ இப்ராஹீம் நபிக்குத் தொண்டை அடைத்தது.

சற்று தாமதித்த பிறகு அவர்கள் தொடர்ந்தார்கள்: ‘ஆனால், நீங்கள் இங்கே தனிமையில் இல்லை, உங்களுடன் அல்லாஹ்வும் இருக்கின்றான்!’, ‘அவனது கட்டளைப்படிதான் நீங்கள் எங்கள் இருவரையும் இங்கே கொண்டு வந்து விட்டிருக்கின்றீர்களா?’, ‘ஆமாம்!’ இறைத்தூதர் இப்ராஹீம் நபி பதிலளித்தார்கள். ‘அப்படியானால் நீங்கள் தாராளமாகத் திரும்பிச் செல்லுங்கள். எங்களை அவன் பாதுகாத்துக் கொள்வான்!’ அன்னை ஹாஜிரா(அலை) கூறினார். அதிக பட்சமான தைரியத்தைச் சேகரித்துக் கொண்டு இதைக்கூறினாலும் அன்னை ஹாஜிரா(அலை) அவர்களின் உதடுகள் நடுங்கின. கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அன்புக் கணவரை வழியனுப்பி வைத்தார்.

கொஞ்சம் விலகி நின்று கொண்டு நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்கள் : ‘இப்ராஹீம் இவ்வாறு பிரார்த்தனை புரிந்ததை நினைவு கூருங்கள் ; என் இறைவனே! (மக்காவாகிய) இந்நகரத்தை அமைதி அளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! மேலும், என்னையும் என் மக்களையும் சிலைகளை வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!

என் இறைவனே! திண்ணமாக இந்தச் சிலைகள் பெரும்பாலான மக்களை வழிகேட்டில் ஆழ்த்தி விட்டன. (என்னுடைய வழித்தோன்றல்களும் இவற்றால் வழி கெடலாம். எனவே, அவர்களில்) எவர்கள் என்னுடைய வழிமுறையின்படி நடந்தார்களோ அவர்கள்தாம் திண்ணமாக என்னைச் சார்ந்தவர்களாவர். எவர்கள் எனக்கு முரணான வழியினை மேற்கொண்டார்களோ - திண்ணமாக நீ பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றாய்.
எங்கள் இறைவனே! நான் என் மக்களில் சிலரை விவசாயம் இல்லாத ஒரு பள்ளத்தாக்கில் கண்ணியத்துக்குரிய உன்னுடைய இல்லத்தருகில் குடியமர்த்தி விட்டேன். எங்கள் இறைவனே! அவர்கள் (இங்கு) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்). எனவே, அவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும், இவர்களுக்கு உண்பொருள்களை வழங்குவாயாக! இவர்கள் நன்றியுடையவர்களாய்த் திகழக் கூடும்!’ (திருக்குர்ஆன் 14:35,36,37)

இப்ராஹீம் நபியின் இந்தப் பிரார்த்தனை இதனைத் தொடர்ந்து வருகின்ற நான்கு வசனங்களிலும் தொடர்கிறது. அன்னை ஹாஜிரா(அலை) அவர்களும் மகன் இஸ்மாயீல்(அலை) அவர்களும் அந்தப் பள்ளத்தாக்கில் தனித்து விடப்பட்டார்கள். ஒரு தோல்பையில் கொஞ்சம் தண்ணீரும் இன்னொரு பையில் கொஞ்சம் பேரீச்சம் பழங்களும் மட்டுமே அவர்களிடம் இருந் தன. அவை தீர்ந்து விட்டால் என்ன செய் வது? ஏதேனும் கொடிய விலங்குகள் தங்களைப் பிடித்துக்கொண்டால் என்னாவது? எவரேனும் கொள்ளைக்கூட்டத்தினர் வந்து பிடித்துக்கொண்டால் என்னாகும் நம் நிலை? இப்படி அச்சுறுத்துகின்ற எராளமான கேள்விகளால் தளர்ந்து போன அன்னை ஹாஜிரா(அலை) அவர்கள் அந்தப் பள்ளத்தாக்கில் ஒற்றையாக நின்று கொண்டிருந்த ‘சர்ஹா’ என்கிற மரத்தின் நிழலில் தனது கைக்குழந்தையுடன் சற்று கண்ணயர்ந்தார்.

சற்று நேரத்துக்குப்பிறகு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த ஹாஜிரா(அலை) அவர்களைச் சுற்றிலும் சுட்டுப் பொசுக்கும் வெய்யில். கண்களைக் கூசச் செய்கின்ற வெளிச்சம்! என்னவொரு பயங்கரமான அமைதி! ஒரு விலங்கின் மூச்சு சப்தம் கூட இல்லாத மயான அமைதி. எப்படிப்பட்ட வீரனையும் கூட பயப்படுத்தி விடுகின்ற ஏகாந்தம். பறவைகள் இல்லை. விலங்குகள் இல்லை. இரையைத்தேடி ஊர்ந்து வருகின்ற ஜீவராசிகள் கூட இல்லை. சர்ஹா என்கிற அந்த மரத்தின் கீழ் இருந்த ஒரு கல்லின் மீது அன்னை ஹாஜிரா(அலை) அவர்கள் மிகுந்த கவலையுடனும் துக்கத்துடனும் அமர்ந்திருந்தார். ‘உயிருள்ள எதையாவது பார்த்துவிட மாட்டோமா’ என்கிற அவரது ஏக்கத்தை நாம் கொஞ்சம் சிந்தனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.

ஹாஜிரா(அலை) அவர்கள் தங்களிடம் இருந்த தோல்பையிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து தனது வாயில் வைத்து சற்று மென்று அதனை எடுத்து தன் குழந்தையின் மென்மையான உதடுகளில் வைத்தார். தொண்டையை நனைத்துக் கொள்ள கொஞ்சம் தண்ணீரையும் கொடுத்தார். பிறகு தனது பசியையும் தணித்துக் கொள்ள தானும் ஓரிரு பேரீச்சம் பழங்களை உண்டார். இரவு வந்ததைத் தொடர்ந்து அன்னை ஹாஜிரா(அலை) அவர்களின் உள்ளம் நிலைகொள்ளாமல் தவித்தது என்றாலும் அவர் பதறி விடவில்லை. அல்லாஹ்வின் மீதான கொஞ்சம் கூட தடுமாற்றம் இல்லாத நம்பிக்கை அவருக்கு மிகுந்த நிம்மதியைத் தந்தது.

இரண்டு பகல்களும் இரண்டு இரவுகளும் இவ்வாறே கடந்து சென்றன. ஒவ்வொரு இரவும் பகலும் ஒவ்வொரு யுகங்கள் அளவுக்கு நீளமானவையாய் கடந்தன. திகிலடையச் செய்கின்ற நீண்ட இரவுகள்.
மூன்றாவது நாள் பகல் பொழுது பாதியானவுடனேயே தோல்பையிலிருந்த நீர் தீர்ந்து போனது. உக்கிரமான வெய்யில். கடுமையான வெப்பம். குழந்தை தாகத்தினால் அழ ஆரம்பித்தது. அழுகையைக் கேட்டவுடனேயே அன்னையின் மனம் உருகிப்போனது. குழந்தை அழுதழுது தளர்ந்து போனது. குழந்தையின் முகத்தைப் பார்க்கின்ற உறுதியும் கூட குலைந்து போனது. அவருடைய எதிர்பார்ப்பு தரையில் விழுந்து சிதறிய பளிங்குப் பாத்திரத்தைப் போலானது. அன்னை ஹாஜிரா(அலை) அவர்கள் மிகவும் பரிதவித்துப் போனார். அவர் அல்லாஹ்வை அழைத்து பிரார்த்தனை செய்தார்.

இருந்தாலும் வெறுமனே இருந்து விடவில்லை. எவரையும் ஏசவும் இல்லை. ஏதோ ஓர் உந்துதலால் உந்தப்பட்டு ஓடிச்சென்று அருகில் இருந்த ஸஃபா என்கிற குன்றின் மீது ஏறினார். எங்காவது ஏதேனும் நீரூற்று தென்படுகிறதா என்று ஏக்கத்துடன் சுற்று முற்றும் பார்வையைச் சுழற்றினார். நிராசையுடன் கீழே வேகமாக ஓடி இறங்கினார். அதேபோல் எதிர்புறத்தில் சற்று தொலைவில் இருந்த மர்வா எனும் குன்றை நோக்கி ஓடி அதன் மீதும் ஏறிப்பார்த்தார். எங்கேயும் ஒரு துளி நீரோ குடியிருப்பின் அடையாளமோ கூட தென்படவில்லை. மீண்டும் ஸஃபா குன்றை நோக்கி ஓடினார், ஏறினார். அவ்வாறு ஆறேழு முறை ஸஃபா மர்வாவுக்கிடையில் பரிதவிப்புடன் ஓட்டமாக நடந்தார். இறுதியில் உள்ளம் உடைந்து, உடல் சோர்ந்து குழந்தையின் பக்கம் திரும்பினார். தனது குழந்தையின் மூச்சு அடங்கிப் போயிருக்குமோ என்றும் கூட அஞ்சினார்.

ஆனால் குழந்தையின் பக்கத்தில் வந்த அவர் வியந்து போனார். தனது பச்சிளம் குழந்தை இஸ்மாயீல் கால்களால் உதைத்த இடத்திலிருந்து தண்ணீர் பெரும் ஊற்றாகப் பொங்கிப் பெருகிக் கொண்டிருந்தது. அதனைக் கண்ட அன்னை ஹாஜிரா(அலை) அவர்களின் கண்களும் நன்றியால் பொங்கி வழிந்தது. சிறிது நேரத்தில் அவர் தனது கண்களிலிருந்து பொங்கிய கண்ணீரைக்கட்டுப்படுத்திக் கொண்டார், ஆனால் தரையிலிருந்து பொங்கி வந்த தண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே அவர் ‘ஸம்! ஸம்! - நில்! நில்!’ என்று கூறினார். அப்படியாக, அந்தத் தாய் தனது குழந்தைக்குப் போதுமாகின்ற வரை தண்ணீர் அருந்தச் செய்தார். தானும் தாகம் அடங்க தண்ணீர் அருந்தினார்.

அன்றைக்கு அன்னை ஹாஜிரா(அலை) அவர்களுக்கும் அந்தப் பிஞ்சுக் குழந்தை இஸ்மாயீல்(அலை) அவர்களுக்கும் தாகம் தணிக்கின்ற தண்ணீராகவும் பிற்காலத்தில் புனித நீராகவும் மாறிய பாலைவனத்தின் அற்புதமாகிய அந்தக் கிணற்றுக்கு ‘ஸம் ஸம்’ என்று பெயர் அமைந்தது இவ்வாறுதான். ‘ஸம் ஸம்’ நீர் அருந்திய அந்தக் குழந்தை வளர்ந்தது. நீர் ஊற்று ஏற்பட்டதால் வியாபாரக் கூட்டங்களும் தங்களது பயணத்தை அந்தப் பகுதி வழியாக அமைத்துக் கொண்டார்கள். அதனைத்தொடர்ந்து அங்கே மக்களின் குடியிருப்புகளும் அதிகமாயின.

பிற்காலத்தில் இஸ்லாமிய பண்பாடு, நாகரிகத்தின் பிறப்புக்குக் கருவறையாக அமைந்த மக்காவுக்கும் அதில் வசிப்பவர்களுக்கும் முன்மாதிரியாகிய நபி இஸ்மாயீல்(அலை) அவர்களை, கணவன் தன்னுடன் இல்லாத நிலையிலும் மிக உயர்ந்த ஒழுக்கப் பண்புகளுடன் வளர்த்த முன் மாதிரித் தாய்தான் அன்னை ஹாஜிரா(அலை) அவர்கள். அல்லாஹ்வுக்குரிய கடமைகளை முழுமைப்படுத்துகின்றவராகவும், ஒரு மகனுக்குரிய ஒழுங்கு மரியாதைகளையும் கடைப்பிடிக்கின்றவராகவும் தனது மகனை மாற்றியெடுப்பது என்கிற மிகச் சிரமமான செயலை அவர்கள் மிக அழகாகச் செய்தார்கள்.

மக்காவுக்குச் செல்கின்ற நம்பிக்கையாளர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் ‘ஸம் ஸம்’ நீர் அருந்துகின்றனர். இந்த வரலாற்று நிகழ்வுகளின் நினைவுகளை அசை போடுகின்றவர்களால்தான் அதற்குக் காரணமானவரின் கண்ணீரின் சுவையையும் அனுபவிக்க முடியும். தாகத்தைத் தணித்துக் கொள்ள ஒரு துளி நீர் கிடைக்காமல் இறக்கும் தருவாயில் கிடக்கின்ற பிஞ்சுக்குழந்தைக்காக ஒரு துளி நீரைத்தேடி ஓடிய அன்னை ஹாஜிரா(அலை) அவர்கள் தனது இதயத்தைப் பிழிந்து தன்னுடைய கண்களின் வழியாக ஒழுக விட்ட அந்த மகத்தான நிகழ்வை நினைவு கூராமல் யாரால் ‘ஸம் ஸம்’ நீரை அருந்த முடியும்?

தாயின் உள்ளத்தில் நிறைந்திருக்கின்ற பிள்ளைப்பாசம் என்கிற வீரியமான உணர்வு கருணையின் வற்றாத நீரூற்றாக மாறி பூமியிலிருந்து பொங்கிப் பெருகியதல்லவா ‘ஸம் ஸம்’. அதில் அன்னை ஹாஜிரா(அலை) அவர்களின் கண்ணீரும் விம்மல்களும் கலந்து கரைந்திருக்கின்றது. ஸஃபா - மர்வா குன்றுகளுக்கிடையில் அமைந்துள்ள நடைபாதைகளில் அவருடைய காலடித்தடங்கள் எப்படி நிறைந்திருகின்றதோ அதைப்போலவே!

அன்னை ஹாஜிரா(அலை) அவர்கள் அன்றைக்கு ஸஃபா - மர்வா குன்றுகளுக்கிடையில் ஓடியது ஒரு வழிபாட்டை நிறைவேற்றுவதற்காக அல்ல; மாறாக, ஒரு பிஞ்சுக் குழந்தையின் தாகம் தணிப்பதற்காக ஓடினார்! ஓர் இளம் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஓடினார்! ஆனால், அவர் அப்படி ஓடிய இடங்களை இறைவன் தனது நிரந்தரமான அடையாளச் சின்னங்களாக ஆக்கிக்கொண்டு விட்டான்.

‘நிச்சயமாக, ஸஃபா, மர்வா (எனும் இரு குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும்’. (திருக்குர்ஆன் 2:158). அது மட்டுமல்ல: அவர் ஓடிய ஓட்டத்தையும் இறைவன் ஹஜ் என்கிற புனிதக்கடமையின் முக்கியமான வழிபாடாகவும் ஆக்கி விட்டான். அதற்கும் மேலாக, அதனை கியாமத் நாள் வரை வழிகாட்டுதல் பெறுகின்ற இறுதி வேதமான திருக்குர்ஆனில் பதிவும் செய்து விட்டான். அவருக்கும், அவரது செயல்பாடுகளுக்கும் ஏன் இந்தளவுக்கு இறைவன் முக்கியத்துவம் கொடுத்தான்? அதனைத் தெரிந்து கொள்ளாமல் அவர்களது நினைவுகளால் கொண்டாடப்படுகின்ற தியாகத் திருநாள் முழுமையடையாது.

ஹாஜிரா(அலை) அவர்கள் தாய்மையின் தூய்மைக்கான பிரதிபிம்பம் மட்டுமல்ல; இன்றைக்கும் நான்கு காரணங்களால் புறக்கணிக்கப்படுகின்ற ஒரு பெரும் மனித சமுதாயத்தின் பிரதிநிதியும் கூடத்தான்!
முதலில் அன்னை ஹாஜிரா(அலை) அவர்கள் ஒரு பெண்! இரண்டாவதாக, அவர்கள் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் அதாவது, வேற்று நாட்டவர், மூன்றாவதாக அவர் அடிமை வம்சத்தைச் சேர்ந்தவர், நான்காவதாக, அவர் கறுத்த நிறம் கொண்டவர்.

பெண் என்பதற்காக ஆணாதிக்கத்தின் பெயரால் புறக்கணிக்கப்படுகின்ற அதன் கோரப் பிடியில் சிக்கிச்சீரழிந்து கொண்டிருக்கும் எத்தனையெத்தனையோ அபலைப்பெண்களின் அடையாளம் அன்னை ஹாஜிரா(அலை). வேற்று நாட்டவர் அகதிகள் என்பதற்காக ஓரங்கட்டப்பட்டு கொடுமைக்குள்ளாக்கப்படும் அப்பாவிகள்தான் எத்தனையெத்தனை பேர்? அவர்கள் அனைவரின் பிரதிநிதியாக அன்னை ஹாஜிரா இல்லையா?

உலகம் முழுவதும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக, கல்குவாரிகள் - சுரங்கங்களில் கொத்தடிமைகளாக இன்றைக்கும் வதைக்கப்படுபவர்கள் எவ்வளவு பேர்? அவர்கள் அனைவரின் பிரதிநிதியாகத்தான் அடிமை இனத்தைச் சேர்ந்த அன்னை ஹாஜிரா(அலை) அவர்கள் திகழ்கின்றார். நிறவெறியால் உலகம் முழுவதும் இன்றைக்கும் சித்ரவதை செய்யப்படுபவர்கள் கொலை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை சொல்லி மாளாது. அமெரிக்காவின் கறுப்பர் இன மக்களும் நைஜீரியா, எத்தியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளும் நிறவெறியின் காரணமாக உலகத்தின் பணக்கார நாடுகளால் எப்படி எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகின்றன என்பதெல்லாம் நமக்குத் தெரியும்தானே! அவர்களுக்கும் ஓர் அடையாளமில்லையா அன்னை ஹாஜிரா(அலை).

இப்போது நாம் சிந்தனை செய்து பார்க்க வேண்டும் ஒரு விஷயத்தை! நீங்கள் ஒரு தலைவராக இருந்தாலும், அறிஞராக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும், மந்திரியாக இருந்தாலும், முதல் மந்திரியாக இருந்தாலும், ஏன், ஒரு சக்கரவர்த்தியாகவே இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் சரி, உங்களது ஹஜ்ஜுக்கடமையை, உம்ராவை நிறைவேற்ற வேண்டுமென்றால் பெண்ணாகிய, அடிமையாகிய, அகதியான, கறுநிறம் கொண்ட அன்னை
ஹாஜிரா (அலை) அவர்கள் நடந்த இடத்தில் நடந்தாக வேண்டும். ஓடிய இடத்தில் ஓடியாக வேண்டும். எப்படி ஓடினாரோ, அப்படி ஓட வேண்டும். மெதுவாக ஓடிய இடத்தில் மெதுவாக, வேகமாக ஓடிய இடத்தில் வேகமாக. அப்படிச் செய்யவில்லையென்றால் உங்களின் ஹஜ் கடமையும் உங்களது உம்ராவும் நிறைவேறாது.

காரணம் அவர்களது தியாகம், அவர்களது பிள்ளை வளர்ப்பின் பொறுப்பு, அல்லாஹ்வின் மீதான அவர்களது உறுதியான நம்பிக்கை. அனைத்துக்கும் அல்லாஹ் வழங்கிய உயர்ந்த மதிப்பு அது! அவர்களுக்கு அல்லாஹ் அளித்த கண்ணியம் அது! அவர்களது எல்லா தியாகங்களுக்குமான அங்கீகாரம் அது!


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தொடர்

மேலும் தேடல்