வாழ்க்கைப் பாடங்கள் 54
ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி மேம்படுத்த நான்கு வழிகள் உண்டு. அவையாவன: பசித்திருத்தல், தனித்திருத்தல், மௌனம் காத்தல், விழித்திருத்தல்.
ஆன்மாவைத் தூய்மைப்படுத்த உதவும் வழிகளில் விழித்திருத்தல் முக்கியமான ஒன்றாகும். பொதுவாக இரவில் உறங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் விழித்திருப்பது உடல் ஆரோக்கியத்திற்கும் உள ஆரோக்
கியத்திற்கும் உகந்ததல்ல. இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பது ஆன்மாவையும் பாதிக்கக்கூடியது.
இதனால்தான் நபி(ஸல்) அவர்கள் இஷா தொழுகைக்குப் பின்னர் கூடிப் பேசிக் கொண்டிருப்பதை வெறுத்தார்கள். நமது முன்னோர்கள் இஷா தொழுகையைத் தொடர்ந்து தூங்கச் சென்று விடுவார்கள். எனவே நியாயமான காரணங்கள் இல்லாமல் இஷா வுக்குப் பிறகு கண் விழித்திருப்பது வரவேற்கத்தக்கதல்ல.
ஆயினும் இரவின் மூன்றாம் பகுதியில் ஒருவர் கண் விழித்து ஃபஜ்ர் வரை அமல், இபாதத்களில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது மாத்திரமல்ல ஆன்மிக மேம்பாட்டுக்குப் பெருமளவில் உதவக் கூடியதுமாகும்.
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் விழித்திருத்தல் என்பது இரவின் முதல் பகுதியில் தூங்கி ஓய்வெடுத்து அதன் மூன்றாம் பகுதியான இறுதிப் பகுதியில் கண் விழிப்பதையே குறிக்கும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இவ்வாறு கண் விழிப்பதன் நோக்கம் கியாமுல் லைல் எனும் இரவு வணக்கங்களில் ஈடுபடுவதாகும்.
பின்னிரவு வணக்கங்கள் தஸ்கியத்துன் நப்ஸ் எனும் உளத் தூய்மையைப் பெற்றுக்கொள்வதற்கான மிகச் சிறந்த வழியாகும். பகல் பொழுதில் நிறைவேற்றும் வணக்க வழிபாடுகளை விட இரவு வேளையில், நடுநிசிக்குப் பின்பான நேரத்தில் ஒருவர் தனித்திருந்து நிறைவேற்றும் வணக்கங்கள் தாக்கம் மிக்கவை; ஆத்மாவைப் பரிசுத்தப்படுத்த வல்லவை. ஒப்பீட்டு ரீதியில் இரவு வணக்கத்தில் இக்லாஸ் எனும் உளத்தூய்மை மிகைத்திருக்கும். அவ்வாறே அந்த வேளையில் ஓதப்படுகின்ற திருக்குர்ஆன் உடைய வசனங்கள் உள்ளத்தில் ஆழமான தாக்கத்தை விளைவித்து அதனைத் தூய்மைப்படுத்த துணைபுரியும்.
திருக்குர்ஆன் இறை விசுவாசிகளைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
‘அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும்’.
உண்மையான இறையச்சம் உடைய முத்தகீன்களைப் பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது: ‘இரவில் குறைவாகவே அவர்கள் தூங்கிக் கொண்டிருப்பார்கள்’. ‘இரவின் இறுதி நேரங்களில் அவர்கள் பாவமன்னிப்பும் தேடுவார்கள்’
ஒருவர் ஃபஜ்ருக்கு முன்பு நேரத்தோடு கண் விழித்தெழுந்து கியாமுல் லைல் எனும் இரவு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது எல்லோராலும் முடியுமான காரியமல்ல.
அது சிரமமானது. ஒருவர் கியாமுல் லைல் உடைய பாக்கியத்தைப் பெற விரும்பினால் அதற்குத் துணைபுரியும் சில விஷயங்களை வாழ்வில் கடைப்பிடித்து வர வேண்டும். அவற்றில் முக்கியமான சில விஷயங்களை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.
முதலில் பாவங்களிலிருந்து விலக வேண்டும். பாவங்கள் இரவு வணக்கத்தில் ஈடுபடும் பாக்கியத்தை ஓர் அடியானுக்கு இல்லாமல் செய்துவிடும் என்று சொல்கின்றார்கள் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள்.
இதே கருத்தை இமாம் ஹஸனுல் பஸரி(ரஹ்) அவர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
உணவைக் குறைத்துக்கொள்வதும் ஹலாலான உணவையே உட்கொள்வதும் ஒருவருக்கு பின்னிரவு வணங்கும் பாக்கியத்தைப் பெற்றுக் கொடுக்கும். ஒருவர் இரவின் பிந்தைய பகுதியில் கண்விழித்து பின்னிரவு வணக்கத்தில் ஈடுபட பகல் பொழுதில் சற்று நேரம் தூங்கி ஓய்வெடுத்துக் கொள்வது துணைபுரியும். மேலும் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்து துஆ இறைஞ்சுவதற்கூடாகவும் அதிகமதிகம் திக்ர் அவ்ராதுகளை (பிரார்த்தனைகளை) ஓதி வருவதன் மூலமாகவும் ஒருவர் பின்னிரவு வணக்கத்திற்காக எழுந்து நிற்கும் பேற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.
இரவின் இறுதிப் பகுதியில் அல்லாஹ் அடிவானத்திற்கு இறங்கி ‘என்னை அழைப்பவர்கள் இருக்கிறார்களா? அவர்களுக்கு நான் பதிலளிக்கத் தயாராக இருக்கின்றேன்; என்னிடம் கேட்பவர்கள் இருக்கின்றார்களா? அவர்களுக்குக் கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன்; என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர்கள் இருக்கின்றார்களா? அவர்களை மன்னிக்க நான் தயாராக இருக்கின்றேன்’ என்று சொல்வான் என நபியவர்கள் கூறியுள்ள வாக்கை மனதிற்கொண்டு இரவு நேரங்களில் விழித்திருந்து நல்லறங்களைச் செய்வோம்; அதன்மூலம் தஸ்கியத்துன் நப்ஸ் எனும் உளத்தூய்மையைப் பெற்ற தூய நல்லடியார்களாக மாறுவோம்.