வாழ்க்கைப் பாடங்கள் - 58
அல்லாஹ்வை நெருங்குவதற்கும் அவனுடன் உணர்வுப்பூர்வமானதோர் உறவை வளர்த்துக் கொள்வதற்கும் இலகுவான ஒரு வழி உண்டு. அதுதான் அவன் நம் மீது சொரிந்துள்ள அருட்கொடைகளை அவ்வப்போது நாம் எண்ணிப் பார்ப்பதாகும்.
கண்பார்வையை இழந்து எத்தனையோ பேர் பார்வையற்றவர்களாக இருக்க நான் கண் பார்வையுடையவனாக இருக்கின்றேன்; செவிப்புலனை இழந்து காதுகேளாதோர் பலர் இருக்கும் போது நான் செவியேற்கின்றேன்; வாய் பேச முடியாமல் பலர் இருக்கும் போது நான் பேசுகின்றேன்; நடக்க இயலாமல் பலர் இருக்கும் போது நான் நடமாடிக் கொண்டும் இயங்கிக் கொண்டும் இருக்கின்றேன்; பலர் நோயாளிகளாகப் படுத்தபடுக்கையில் இருக்கும் நிலையில் நானோ ஆரோக்கியமுடன் இருக்கின்றேன்.
இன்னும் எத்தனை எத்தனை அருட்கொடைகளை அனுதினமும் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றேன். இப்படி அல்லாஹ் நம் மீது பொழிந்துள்ள அருட்கொடைகளை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து, சீர்தூக்கிப் பார்க்கும் போது நம்மில் அல்லாஹ் மீது அன்பு பிறக்கும்; அது பிரவாகம் எடுத்து ஓடும் என்பதில் ஐயம் இல்லை. நமது வாழ்வில் சந்திக்கும் சில துன்பங்களை நாம் அலட்டிக் கொள்கின்றோம். ஆனால் நம் வாழ்வில் நாம் அனுபவிக்கும் எண்ணிலடங்கா இன்பங்-களையும் அருட்பேறுகளையும் கண்டு கொள்ளத் தவறி விடுகின்றோம். ரோஜாவுக்குக் கீழ் இருக்கும் முள்ளைப் பார்க்கும் நாம் முள்ளுக்கு மேல் இருக்கும் அழகிய, அற்புதமான ரோஜாவைக் காணத் தவறிவிடுகின்றோம்!
‘அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ணிட முயன்றால் அவற்றை உங்களால் எண்ணவே முடியாது. திண்ணமாக அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.’
(திருக்குர்ஆன் 16:18)