றிருக்கும் குல்ஹப்ஸா ஒருநாள் சாலிஹா-விடம் வந்தாள்.
‘அம்மி! உங்கள் வீட்டில் யாரெல்லாம் இருக்கின்றார்கள்?’
‘ஏன் குல்லுமா?’
‘இல்லை! நீங்கள் வந்ததிலிருந்து யாரும் உங்களைப் பார்க்க வரவில்லையே? போன் கால் மட்டும் வருகிறதே?’
சாலிஹா சிரித்தாள்.
‘பெரிய மனுசி மாதிரி கேட்கின்றாயே, உங்கள் வீட்டில் யாரெல்லாம் இருக்காங்க?’
குல்ஹப்ஸாவின் முகம் சடாரென்று மாறிவிட்டது. நின்று கொண்டிருந்த அவளை அருகில் இழுத்து அமர்த்தினாள். முகத்தை நிமிர்த்தி கன்னத்தில் முத்தமிட்டாள்.
‘எதற்கெடுத்தாலும் இறுகக்கூடாதுமா! இதயம் சுருங்கிவிடும். ரிலாக்ஸா இரு ஹப்ஸாமா! நான் கேட்டது தப்பென்றால் மன்னித்துக்கொள்ளம்மா!’
‘ஓய் மம்மி! என்ன வார்த்தை சொல்கின்றீர்கள். நீங்கள் மன்னிப்புக் கேட்பதா?’
இவர்கள் உணர்ச்சி வசப்பட்டால் ‘ஓய்’ என்று ஒரு சப்தம் எழுப்புவார்கள். ஏண்டி ‘குருவிக்காரிங்க’ மாதிரி கத்துறீங்க என்பாள் சாலிஹா!
‘நான் சொன்னால், உங்கள் தூக்கம் காணாமல் போய்விடும். எங்கள் கதை நூலருந்த பட்டம் போன்றது.’
‘ஆஹா! உவமையெல்லாம் அழகாக
சொல்கிறாயே?’
‘அம்மி! என் அக்கா இங்கேதான் இருக்கா!’
‘அப்படியா? எங்கே?’
‘தி.நகரில் ஹிமாயத்தே அஞ்சுமன் (அநாதைகள் இல்லத்தில்) எத்தீம்கானாவில்! அவளுக்கு ‘நிஹார் ஆண்ட்டி’ ஸ்பான்சர் பண்ணி வளக்குறாங்க! அக்கா ரொம்ப அழகாயிருப்பா! நாங்கள் தமிழ்நாடு வரும்போது என் இரண்டு வயது தம்பியை இழந்துவந்தோம். அவன் இருக்கானா?
இல்லையா? தெரியவில்லை.’
‘அம்மா, அப்பா?’
‘எங்க மம்மி! எங்க பப்பா....... ஆ’
விம்மினாள், விசும்பினாள். கண்ணீர் தாரையாக வடிந்தது.
சாலிஹா, அவள் முதுகை ஆதரவாகத் தடவிக் கொடுத்தாள்.
‘அன்றைக்கு இரவு நேரம் வீட்டிற்குள் நான்கைந்துபேர் திபுதிபு வென்று நுழைந்-தார்கள். முகத்தை மப்ளரால் மறைத்-திருந்-தார்கள். எங்கள் பப்பா தூங்கப் போனவர் பைஜாமா பனியனோடு, ‘யாரப்பா நீங்கள்’ என்று கேட்டுக்கொண்டு ஹாலுக்கு வந்தார்.
வந்தவர்களில் இருவர் எங்களைக் கேள்வி கேட்கின்றாயா? நாயேன்னு காதைச் சேர்த்து அறைந்தான். பூஞ்சை போன்ற ஒல்லி-யான அப்பா, அப்படியே விழுந்து மூர்ச்சையாகி விட்டார்கள். அதுதான் நான் அவரை இறுதியாகப் பார்த்தது.
நானும் அக்காவும் தூங்கிக்கொண்டிருந்த தம்பியின் அருகில் நின்றோம். என்ன நடக்கின்றது என்றே புரிவில்லை.
அறையில் மம்மியின் குரல் வீலென்று வீரிட்டது.
‘ச்சோடோ பைய்யா! ச்சோடோ பைய்யா!’ (விடுங்க சகோதரா! விடுங்க சகோதரா) அவலக்குரல் எழுப்பினாள்
மம்மி!
வந்தவர்கள் நாங்கள் கேட்டறியாத கெட்ட வார்த்தைகளெல்லாம் பேசினார்கள், மம்மியின் அப்படியான அலறலை நான் எப்போதும் கேட்டதேயில்லை. அதுதான் நாங்கள் கேட்ட இறுதிக் குரல்.
‘யா அல்லாஹ்! முஜே பச்சாவ்’
(யா அல்லாஹ் எங்களைக் காப்பாற்று!)
‘லடுக்கியோ! பாகோ! பாஹர் பாகோ!’
(பெண் பிள்ளைகளே ஓடுங்கள்! வெளியே ஓடுங்கள்!! )
நாங்கள் தம்பியை மறந்தோம்.
என் கையைப் பிடித்து, அக்கா திறந்த வாசல் வழியாக இழுத்துக்கொண்டு ஓடினாள். நாங்கள் அறையைக் கடந்தபோது என் பார்வை கொஞ்சம் திரும்பியது.
என் மம்மி...
அவர்கள்... அவர்கள்...
குல்ஹப்ஸா சொன்னதைக் கேட்டவுடன், சாலிஹாவிற்குச் சடலமெல்லாம் ஆடியது. என்ன இது கொடுமை. பெண்ணினத்தின் துன்பங்கள் நீங்கவில்லையா? இந்தப் பெண்-டாளும் பாவிகளுக்கு, கோரக் காமுகர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகுமே!
‘அழாதேம்மா! அல்லாஹ் இருக்கிறான்.அநாதைகளை இரட்சிக்கக் கூடியவன்.’
குல்ஹப்ஸா தொடர்ந்தாள், ‘நாங்கள் ஓடினோம், ஓடினோம், தெருவெல்லாம் தீப்-பந்தங்கள் ஏந்தியவர்கள், எங்கே எங்களைப் பார்த்து விடுவார்களோ என குறுக்கே உள்ள சந்திலெல்லாம் கண், மண் தெரியாமல் ஓடினாம். ஓர் இருட்டுச் சந்தில் நுழைந்து, ஒருவாசலில் உட்கார்ந்தோம். வீதியெல்லாம் அடி! விடாதே! பிடி! கொல்! வெட்டு! என்ற அதிகாரக் குரலும், பயத்துடன் கூடிய அழுகைச் சப்தங்களும்..! எங்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
நாங்கள் உட்கார்ந்த வீட்டின் வாசல் படீரென்று திறந்து ஒரு கை நீண்டு எங்களை உள்ளே இழுத்தது.
‘அரண்டவன் கண்ணுக்கு இருண்ட-தெல்-லாம் பேய்’ என்பதுபோல், எங்களை விட்டு விடுங்கள் என்று அலறினோம். உடனே கதவை அடைத்து, வாயைப் பொத்தியது சந்தன வாசத்துடனான கைகள். வாயோ சப்தம்- போடாதீர்கள்! என்று காதருகே கிசுகிசுத்தது. விளக்குகள் அணைக்கப்பட்ட இருட்டான அறைக்குள் இழுத்துப்போனார்.
‘மங்கள்ஜீ’ என்று அழைத்தார்.
‘இதர் ஹூ பப்பா! என்ற (இங்கே இருக்கிறேன் அப்பா) குரல் அறையின் மூலை-யிலிருந்து வந்தது.
அப்போதுதான் புத்திக்குக் கொஞ்சம் தெளிவு கிடைத்தது. இது கணேஷ் அங்கிளின் குரல்மாதிரி இருக்கே, நான் நினைத்துக்கொண் டிருக்கும்போதே அக்கா ‘கணேஷ் அங்கிள்’ என்று ஓடிப்போய் அவர் இடுப்பைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
‘அழாதீங்க மக்கா! அழாதீங்க மக்கா!
சத்தம் காட்டாதீங்க’ என்று சன்னமான
குரலில் கூறினார்.
கதவு படபடவென்று தட்டும் ஓசை கேட்டது. சப்த நாடிகளும் அடங்கியது போல் உணர்ந்தோம். அங்கிள் எங்களிருவரையும் கட்டிலுக்கும் சுவருக்கும் இடையில் மூலையில் உட்கார வைத்தார். எங்கள் முன்னால் ஸ்டூலைக் கொண்டுவந்து வைத்தார். ஸ்டு-லோடு எங்களை யும் பெட்ஷீட் போட்டு போர்த்-தினார். மேலே தலையணைகளை அடுக்கி வைத்தார்.
‘சத்மா! இங்கே படுங்கள்’ அப்போது தான், அந்த இருட்டறையில் ஆண்ட்டியும் இருப்-பது தெரிந்தது. வீட்டின் கதவு இன்னும் வேகமாகத் தட்டப்பட்டது.
‘யாரது’ என்று கேட்டுக்கொண்டே போய் கதவைத் திறந்தார்.
‘உள்ளே யார் இருக்காங்க’
‘இங்கே யாரும் இல்லை’
‘கதவைத் திறங்கள்’
இரும்புத் தாழ்ப்பாள் நீக்கும் சத்தமும் வீட்டிற்குள் ஆட்கள் நடந்துவரும் அரவமும் கேட்டது.
ஒவ்வொரு அறையையும் முரட்டுத்தனமாகத் திறந்து மூடினார்கள். அங்கிளை அதட்டினார்கள்.
‘கபர்தார்! யாருக்காவது அடைக்கலம் கொடுத்தால், உங்கள் குடும்பத்தையே கொலை செய்துவிடுவோம்.’
‘கடவுள் மேல் சத்தியம் இங்கே யாரும் இல்லை.’
எதையோ உருட்ட செம்புப் பானைகள் உருண்டுவிழும் சப்தம் கேட்டது.
எங்களை ஒழித்து வைத்துள்ள அறைக்குள் நுழைந்தார்கள். இருட்டில் காலை மிதித்துவிட சத்மா ஆண்ட்டி ஆவென்று அலறினாள்.
‘கடவுளுக்குப் பயப்படுங்கள்.’
‘ராத்திரி நேரத்தில், தூங்கும் மனிதர்களை இப்படித் தொந்தரவு பண்ணுகிறீர்களே!’ கத்தினாள்.
‘வாயை மூடு, மேலிடத்து உத்தவு! இந்த நாய்களைக் கண்டம் துண்டமாக வெட்டிப் போடச் சொல்லி!’
நிறைய வீடுகளிலிருந்து வெளியேறி
விட்ட நாய்களை உயிரோடு விடக்கூடாது. யாராவது இங்கு வந்தால் எங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். பேசிக் கொண்டே எங்களை ஒழித்து வைத்திருந்த கட்டிலருகில் உட்கார்ந்தார்கள்.
‘பாணி லேக்கே ஆவ்! (தண்ணீர் கொண்டு வா) என்று சொல்லிக்கொண்டே கையில் வைத்திருந்த கனத்த தடியால் அடுக்கி வைத்-திருந்த தலையணைகளை ஓங்கி அடித்தார்கள். நாங்கள் வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டோம். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டோம். இதயம் வாய்க்கு வந்துவிட்டதுபோல் மூச்சுவிடவும் மறந்தோம்.
தடியால் அடித்த அடியில் தலையணைகள் எங்கள் மீது சரிந்தன. நல்லவேளை உள்ளே நாங்கள் இருப்பது அவர்களுக்குத் தெரிய வில்லை. எனக்கு எந்தநேரமும் தும்மல் வரலாம் என்று நாசி முன்னெச்சரிக்கை விடுத் தது. மீண்டும் கணேஷ் அங்கிளை மிரட்டி ‘வார்ன்’ பண்ணிவிட்டுப் போய்விட்டார்கள்.
அவர்கள் போனபின் கதவைத் தாழ்போட்டு பாய்ந்து வந்த கணேஷ் அங்கிள் விளக்கைப் போட்டு முதலில் எங்களை வெளிக்கொண்டு வந்தார்.
‘அவர் எப்படி உங்களுக்குப் பழக்கம்’ என்று சாலிஹா கேட்டாள்.
‘அங்கிள், அப்பாவின் கீழ் வைரம் தீட்டும் வேலையில் இருந்தார். அப்பா மயக்கம் தெளிந்து எழுந்து எங்களைக் காணாமல் கணேஷ் அங்கிளுக்கு ஃபோன் போட்டு பிள்ளைகளைத் தேடி பாதுகாப்பு கொடு’ என்றாராம். எங்களைப் போன்ற முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்த பலரில் அவரும் ஒருவர். மனிதாபிமானமும், இரக்கமும் கொண்ட இந்துக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பிறகு நான்கைந்து நாள்கள் எங்களை ஒளித்து வைத்திருந்தார். தும்ம, இரும, கார, கணைக்கக்கூட பயந்து கிடந்தோம். எங்களைப் பாதுகாக்க கணேஷ் அங்கிள் பட்டபாட்டை நாங்கள் ஆயுள் உள்ளவரை மறக்கமுடியாது அம்மி!
சாலிஹா திக்பிரமை பிடித்து உட்கார்ந்-திருந்தாள். படித்த காலத்தில் பள்ளி மைதானத்தில் பிரேயரில் (ப்ளட்ஜ்) உறுதிப் பிரமாணம் செய்த நினைவு வந்தது.
‘என்னுடைய தாநாடு இந்தியா. இந்தியர்கள் அனைவரும் என்னுடன் பிறந்தவர்கள்! என் தாய்த்திருநாட்டை நான் உளமார நேசிக்கிறேன். வளமும் வேறுபாடும் நிறைந்த அதன் மாண்பினை எண்ணி இரும்பூதெய்கிறேன்.’
இது வெறும் வாய்ச்சொல்தானா? வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் வீண் பேச்சா? எதிர்காலத்தில் இந்தப் பிள்ளைகளின் கதி? வேகமாக ஒடும் மனக்குதிரையை லக்கான் போட்டு இழுத்து நிறுத்தினாள்.
அதன்பிறகு சாலிஹா, குல்ஹப்ஸாவிடம் ஏதும் கேட்பதில்லை. பிறகு பெற்றோர்களைப் பார்த்தாயா? என்று கேட்க நினைத்து வாயை மூடிக்கொண்டாள். ஒவ்வொன்றும் ‘கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாக இருந்தது. பிஞ்சு உள்ளங்கள் ‘நீருபூத்த நெருப்பாய்’ உழல்வது புரிந்தது.
அதன்பிறகு சாலிஹா தனி அறையில் உறங்குவதில்லை. நடுஹாலில் பாய் விரித்துப் படுப்பாள். அவளைச் சுற்றிப் பூனையை அணைத்துப் படுத்திருக்கும் குட்டிகளாய் நாற்பது பிள்ளைகளும். அவர்களுக்குத் தான் அதில் எவ்வளவு மகிழ்ச்சி. ஐந்து வயது முதல் பதினெட்டு வயதுவரை உள்ள நாற்பது பிள்ளைகளும் சாலிஹா
சொன்னதையெல்லாம் கேட்டார்கள்.
அதில் ஒரு பெண். எல்லோரையும் விடப் பெரியவள். பதினெட்டுவயது பருவ மங்கை. கருப்பென்றாலும் களையான முகம். இந்தப் பிள்ளைகளுக்குத் தலை வார, மேற்பார்வை செய்ய, இரவு மாவு பிசைந்து ரொட்டிபோட நியமிக்கப்பட்டவள். பெயர் முபீன். சாலிஹா-விற்கு அவள்தான் பணிவிடை செய்வாள். அந்த ஹோமைப் பெருக்க, துடைக்க, பாத்ரூம் கழுவ என்று சீத்தா என்ற பெண் வருவாள். ஆனால் சாலிஹாவின் அறையை முபீன்தான் பெருக்குவாள். துடைப்பாள். மேசையின் மேல் உள்ள புத்தகங்களை ஒழுங்கு படுத்துய்வாள். சாலிஹாவிற்குத் தனியாக டீ போட்டுத் தருவாள். அதிகம் பேசமாட்டாள்.
‘ஆண்ட்டி! இந்த குஜராத் பசங்களிடம் அதிகம் ஒட்டாதீர்கள். இங்கு இதற்குமுன் வந்த எந்த வார்டனும் உருப்படியாக இருந்த-தில்லை. ஏதாவது ஒன்னுன்னா இந்தப் பிள்ளைகள் ‘சைதா மேடம்’ பக்கம் சாய்ந்து விடுவார்கள். நாளைக்கு ஹாஸ்டலுக்கு மாதாந்-திர பொருள் வரும். நாளைக் காலையில் மேடம் வருவார்கள். கவனமாகப்
பேசுங்கள்.’
அளந்து பேசும் முபீன், ஒரு கட்டுரையே வாசித்தாள். சாலிஹா வந்து பதினைந்து நாளாகிவிட்டது. இந்தப் பிள்ளைகளைப் பத்திரமாகப் பாதுகாக்கும் அந்த இரக்க
முள்ள மேடத்தைப் பார்க்கும் ஆவல் அதிகரித்தது.
(தொடரும்)