மறுநாள் காலை விடிந்தது. வழக்கம் போல பிள்ளைகள் அவரவர் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். மெய்ன் கேட்டின் முன் படகு போன்ற கார் வந்து நின்றது. பொறுமையின்றி காரின் ஹாரன் தொடர்ந்து அடித்தது. முபீன் பதறி, பதறி கேட் சாவியை எடுத்துக் கொண்டு ஓடினாள். பிள்ளைகளெல்லாம் ஒருவிதமான இறுக்கத்தில் இருப்பது போல் தெரிந்தது சாலிஹாவிற்கு! கேட்டைத் திறக்கவும், சீறிவந்த கார் ஹோமின் அகலமான படிகள் முன் வட்டமடித்து நின்றது.
தன் அறையின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள் சாலிஹா! தன் கண்களையே நம்ப முடிவில்லை. காரின் முன்கேட்டைத் திறந்து இறங்கிய பெண்மணியைப் பார்த்தவுடன் கற்பனைக் கோட்டை கொஞ்சம் ஆடியது. இந்த ஹோமை நடத்தும் ‘சைதா மேடம்’ பற்றிய கற்பனைக் கோட்டை சரிவது போலிருந்தது.
லூசான பனியனும், தொள தொளவென்ற பைஜாமா பேண்டும், கழுத்தளவு வெட்டிவிடப்பட்ட கூந்தலுமாக உள்ளே நுழைந்த பெண்ணுக்கு ஐம்பது வயதாவது இருக்கும். நல்ல கலர், வாட்டசாட்டமாக கட் ஷý போட்ட காலோடு உள்ளே நுழைந்தாள்.
‘ஹாய் ஹௌ ஆர் யூ?’
‘குட்மார்னிங் மேடம்!’ பிள்ளைகள் கோரஸாகப் பாடினார்கள்.
ஹாலில் பிள்ளைகள் அனைவரும் அமர்ந்தார்கள். நாற்காலியில் அமர்ந்த சைதா மேடம் பிள்ளைகளிடம் ஏதேதோ கேள்விகள் கேட்டாள். பிள்ளைகள் ஒரே பதிலைக் கூறினார்கள்.
‘நன்றாக படிக்கின்றீர்களா?’
‘ஹா மேடம்!’
‘விளையாடுகின்றீர்களா?’
‘ஹா மேடம்!’
‘தூங்குகின்றீர்களா?’
‘ஹா மேடம்!’
கோரஸாக ‘எஸ்’ மேடம் என்பதைத் தவிர எந்த ஒருபதிலும் பேச்சும் இல்லை.
முபீன் சமையல் அறையிலிருந்து கப், சாசரில் காப்பி கொண்டு வந்து கொடுத்தாள். அதைக் குடித்த சைதா மேடம் எல்லா அறையையும் நடந்துபோய் பார்த்தாள். ‘இன்று உணவுப்பொருள் வரும், கோழிவரும். பிள்ளைகளுக்கு நல்லா செய்து கொடுங்கள்!’
தான் ஒருத்தி நிற்பதையும், அங்கு வார்டனாக நியமிக்கப்பட்டதை அறியாதது போலும் நடந்து கொண்டவிதம் சாலிஹாவின் பார்வையில் அடுத்த சுவரும் சரிந்தது.
முபீன், ‘மேடம்! ஆண்ட்டி வந்த பிறகு, எங்களுக்கு எல்லாம் ஈஸியாக உள்ளது.’ அப்போதுதான் புதிதாகப் பார்ப்பதுபோல
சாலிஹாவைத் திரும்பிப் பாத்தாள் மேடம்.
‘அஸ்ஸலாமு அலைக்கும்.!’
‘ம்.. ம்’ ஒற்றை பதிலாடிளாள் மேடம்.
அந்தப் பார்வை சாலிஹாவிற்குப் பிடிக்கவில்லை. சிறிய கண்கள், இடுங்கிய பார்வை. இவளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உள்மனம் எச்சரித்தது.
‘நீ வந்து எவ்வளவு நாளானது?’
‘பதினைந்து நாள்கள் கழிந்தது.’
‘இங்கு வந்து என்ன கற்றுக்கொண்டாய்?’
‘நான் கற்றுக் கொடுக்கின்றேன்.’
‘இவர்களைப் பற்றி என்ன தெரிந்து கொண்டாய்?’
‘இனிமேல் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.’
‘ஷிட்..!’ துள்ளியெழுந்து வேகமாக ஹாலைக் கடந்தாள்.
போகும் போக்கில் ‘பாடத்தைத் தவிர
வேறு எதையும் கற்றுக்கொடுக்காதே! இதுமாதிரி’ என்று சாலிஹாவின் தலையிலிருந்த ஸ்கார்ஃபைச் சுட்டிக்காட்டினாள்.
சாலிஹாவிற்கு சுரீறென்று கோபம் வந்தது. அடக்கிக் கொண்டாள். இது ஆளும் வர்க்கம். ஆணவம் கொண்டு பேசுவது அவர்களின் வழக்கம்.
‘நான் காலையில் ஜாக்கிங் போகும்போது வருவேன். எல்லாம் சரியாக இருக்க வேண்டும். முபீன் வருகிறேன்’ என்று போய்விட்டாள்.
சிலையாக நின்றாள் சாலிஹா!
இத்தனை பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ள தன்னை நியமனம் செய்த சாஜிதா அக்காவை நினைத்தாள். மகன் அமெரிக்காவிலும், மகள் கத்தாரிலும் இருந்தாலும், வீடு நிறைய தெருப் பிள்ளைகளைச் சேர்த்து அரபியும், ஒழுக்க
மும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும்
அவர்கள் எங்கே..! தலையிலும் மார்பிலும் துணியின்றி ஆம்பிள்ளைபோல் வந்து அட்டகாசமாகப் பேசி, அதட்டிப் போகும் இவள் எங்கே?’
எங்கோ பொறியில் மாட்டிக்கொண்ட எலியின் நிலையில் தன்னை உணர்ந்தாள்
சாலிஹா!
‘ஆண்ட்டி! ஆண்ட்டி!’
திகைத்து நின்றிருந்த சாலிஹாவின் முகத்தின் முன் மேலும்கீழும் கைககளால் கோலம் போட்டாள் முபீன்.
‘ஆ! என்ன முபீன்.’ சுயநினைவிற்கு வந்தாள் சாலிஹா.
‘ஆண்ட்டி, இதுக்கே இப்படின்னா, இன்னும் எவ்ளோ இருக்கு?’
‘என்ன சொல்றே முபீன்?’
முபீன் சிரித்தாள். கருத்த முகத்தில் வெளீரென்று பற்கள் மின்னலிட்டது. கன்னத்தின் குழிகள் தொட்டுப்பார் என்றது.
‘ஆமாம் ஆண்ட்டி! நாங்களெல்லாம் எத்தனை ஆண்டுகள் இதை அனுபவிக்கிறோம்.’
‘ஆமாடி, உன்தலையெழுத்து நீ அனுபவிக்கிறாய். எனக்கென்ன ‘சோசியல் ஒர்க்’ எங்கு வேண்டுமானாலும் செய்வேன்.’
‘ஆண்ட்டி! இவங்களெல்லாம் இப்படித்
தான் யாராவது ஏப்ப சாப்பையான ஆள் கெடச்
சாப் போதும் கூடையைப் போட்டு, கோழியை அமுக்குவதுபோல் அமுக்கிடுவாங்க.
வெளியில் போவது அவ்வளவு ஈசியில்லை! அவங்களாக விரட்டினால்தான் உண்டு.’
‘போதும் முபீன்! எனக்கு இந்தக் காலை நேரத்தில் படபடப்பாக வருது.’
‘இந்தாங்க ஆண்ட்டி, தண்ணீர் குடிங்க!’
‘முபீன் நீ எப்படி இங்கே வந்தாய்?’
‘ஆண்ட்டி என் கதையைக் கேட்டு உங்களுக்கு என்ன ஆவப்போகுது? உங்க மனபாரம் கூடுமே தவிர குறையாது.’
‘பரவாயில்லை சொல்லு முபீன். காலம் முழுவதும் யாருடைய வேதனைக் கதையையாவது சுமந்தே வந்துள்ளேன். எதையும் தாங்கும் இந்த இதயம்.’
‘ஆண்ட்டி பிள்ளைகளுக்கெல்லாம் தலை வாரி, சாப்பாடுகொடுத்து அனுப்பி வருகிறேன்.’
முபீன் போய்விட்டாள்.
தனக்காக பிளாஸ்கில் வைக்கப்பட்ட ‘டீ’யை ஊற்றிக் குடித்தாள். தனக்கென்று தனியாகச் சமைத்துக்கொள்ளலாம் என நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால் சாலிஹா அதற்கு உடன்படாமல் பிள்ளைகள் உண்பதையே தானும் உண்டாள்.
சரோஜா அம்மா கேட்பாள், ‘அம்மா! முன்னே உள்ள வார்டன்கள் பொடி அரிசி வாங்கி, தனியே சமைத்துச் சாப்பிடுவாங்க!
நீங்க ஏம்மா இப்படி?’
‘இல்லை சரோஜாமா! எனக்கு அப்படியிருக்கப் பிடிக்கவில்லை. யார் பெற்ற பிள்ளைகளோ, அவர்களே சாப்பிடும்போது எனக்கு மட்டும் என்ன’ என்று கூறிவிட்டாள்.
மனம் ஏதோ சொல்லிக்கொண்டே
இருந்தது. யாரோ நகங்கொண்டு பிராண்டி விட்டாற் போல வலித்தது. குட்டிபோட்ட பூனையைப் போல இங்கும் அங்கும் உலாவினாள்.
பிள்ளைகள் ஒவ்வொருவராக வந்து ‘பை மம்மி’ என்று விடைபெற்றார்கள்.
சுவாரஸ்யமில்லாமல் உட்கார்ந்திருந்த
சாலிஹாவிடம் முபீன் வந்தாள்.
‘ஆண்ட்டி சாப்பிட வாங்க!’
‘முபீன் என் மனமெல்லாம் ஏதோ ஏமாந்து விட்டதுபோலவும், யாரோ என்னை தோற்கடித்து விட்டது போலவும் உள்ளது. எனக்கு டிபன் வேண்டாம். மதியம் சாப்பிடலாம்.’
‘ஆண்ட்டி! உங்களுக்காவது போக ஓர் இடம் உள்ளது. ஆனால் என்னைப் போல அநாதைகள் ரோசப்பட்டு எங்கே போவோம்? தொழுவத்தில் கட்டிய மாடு போல இங்கேயே சுற்றிவர வேண்டியதுதான்.’
‘பரவாயில்லையே முபீன், உவமையெல்லாம் நன்றாகச் சொல்கிறாயே? எங்கு என்ன படித்தாய்?’
‘படிப்பா? பள்ளிக்கூட வாசலையே நான் மிதித்ததில்லை ஆண்ட்டி.’
‘இங்லீஸ்லயெல்லாம் பேசுகிறாய்.’
‘ஆண்ட்டி, சைதா மேடம் வீட்டில், பரிதõ மேடம் வீட்டிலெல்லாம் நான் இருந்திருக்கேன். அவங்க பிள்ளைகள் வீட்டில் பேசுவார்களே, அப்படியே நான் பழகிக்கொண்டேன்.’
‘ஓ!’
‘எனக்குத் தெரிந்த ஒரு பெண் ஆங்கிலோ இந்தியன் வீட்டில் வேலை செய்தாள்.
அவளும் படிக்கவில்லை. ஆனால் சூப்பராக இங்கிலீஸ் பேசுவா.’
‘உங்க அப்பா, அம்மா எங்கே இருக்காங்க? என்ன பண்ணுறாங்க?’
அங்கே ஒரு கனத்த மௌனம் நிலவியது.
கட்டிலில் உட்கார்ந்திருந்த சாலிஹாவின் கால்களருகில் மண்டியிட்டு அமர்ந்த முபீன் மடியில் முகம் புதைத்தாள்.
‘ஆண்ட்டி! என் அப்பா அம்மா யாரென்றே தெரியாது. நான் தாய் முகம் கண்டதில்லை. தந்தை முகம் பார்த்ததில்லை. எங்கெல்லாமோ இருந்து இரண்டு ஆண்டாக இங்கே வந்திருக்கிறேன். இதற்கடுத்து எங்கே போவேனோ, வாழ்க்கையெனும் கடலில் அடித்துச்செல்லும் துரும்பு போல!’
அவள் அழவில்லை. முபீன் சொன்ன ஒவ்வொரு செய்தியும், இதயத்தில் ஐஸ் கத்தியைச் சொருகியதுபோல சில்லென்று உரைந்தது.
முபீன் சொல்லப்போகும் கதையைக் கேட்க தன் மனதைத் தயார்படுத்தினாள்
சாலிஹா.
(தொடரும்)